காதல் 21.1

காதல் 21:

நாட்கள் யாருக்கும் நிற்காமல் ஒடி கொண்டிருந்தது.

கவினின் சிகிச்சை முடிந்து குருவும் மகியும் ஊருக்கு திரும்பி சில பல மாதங்கள் கடந்திருந்தது.

மருத்துவரின் அறிவுரைப்படி சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு தான் ஊருக்கு கிளம்பினர்.

அதன் பிறகும் மகிழ் கவினை மிகவும் அக்கறையுடன் தான் கவனித்து கொண்டாள்‌.

இரண்டு மாதங்கள் கழித்து தான் பள்ளிக்கு கவினை அனுப்பினர். அப்படி இருந்தும் அவனை சற்று கூடுதல் கவனத்துடன் பார்த்து கொள்ளும் படி ஆசிரியர் லதாவிடம் கூறியிருந்தாள்.

அவ்வபோது அலைபேசியில் அழைத்து கவினது நலத்தை விசாரித்தாள்.

குருவும் அவனது பங்கிற்கு கவின் விடயத்தில் அக்கறையாக இருந்தான்.

அன்று மருத்துவமனையில் மகியின் அழுகையில் மற்றொரு முறை குரு பிரசாத் என்கிற திடகாத்திரமான அழுத்தம் நிறைந்த மனிதன் சற்று ஆடி போயிருந்தான்.

தனது கைகளுக்குள் முகத்தை புதைத்து கண்ணீரில் அனைத்தையும் கரைத்து கொண்டிருந்தவளை கண்டு உள்ளுக்குள் ஏதோ ஒன்று நழுவியது.

எத்தனை‍ நேரம் குரு அப்படியே சிலை போல் நின்றிருந்தானோ மகிழும் எவ்வளவு நேரம் அழுகையை தொடர்ந்தாளோ…?

அழுகையில் கரைந்து முழுவதையும் அவனிடத்தில் இறக்கி வைத்தவளுக்கு தான் செய்த காரீயத்தின் வீரியம் எப்போதும் போல உணர்ச்சியின் பிடியில் உணராது போக. உணர்வுகள் வடிந்த பிறகு தான் உணர்ந்தாள்.

செயலை அறிந்த நொடி சடுதியில் அவனது கரத்தை விட்டிருந்தவள் நிமிர்ந்து அவன் முகம் கண்டாள். குருவும் அசையாது அவளை தான் பார்த்திருந்தான்.

வெகு அழுத்தமான பார்வையை எதிர்க்கொள்ள இயலாது ஒரு கணம் தயங்கியவள் பின்,

“உங்களோட உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியலை. ஜெஸ்ட் அக்ரிமெண்ட் மேரேஜ்க்காக வந்தவளுக்காக யாரு இவ்ளோ பெரிய காரியம் செய்வான்னு எனக்கு தெரியலை‌‌. ஆனால் நீ… நீங்க செஞ்சிருக்கிங்க. இதுக்கெல்லாம் பதிலுக்கு என்னால என்ன பண்ண முடியும்னு தெரியலை”

“…”

“கவின் என்னோட உயிர். என் அம்மா அப்பாக்கிட்டயும் அண்ணன் அண்ணிக்கிட்டயும் தினமும் சாமி கும்பிடும் போது அவங்க மூனு பேரையும் நல்லா பாத்துக்கிறேன்னு வேண்டிக்குவேன். என்னோட உயிரை என்கிட்ட திருப்பி கொடுத்திருக்கிங்க. இதுக்கெல்லாம் நன்றின்ற ஒரு வார்த்தை எந்த காலத்திலும் ஈடாகாது. என் வாழ்க்கையில நான் எதிர்பாராம வந்த கடவுள் நீங்க. அந்த கடவுள் கூட எனக்கு இவ்வளவு தூரம் செய்வாரான்னு தெரியலை.”

“…”

“நன்றி சொல்றதை தவிர என்கிட்ட எதுவும் இல்லை. இந்த உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். நீங்க ஆசைப்பட்டபடி உங்களுக்கு ஒரு ஹனிகா மேடமோட ரொம்ப ரொம்ப நல்ல வாழ்க்கை அமையும். குழந்தை குடும்பத்தோட ரொம்ப ரொம்ப நல்லா இருப்பிங்க” என்று முடித்துவிட குரு அமைதியாக பார்த்திருந்தான்.

இது தான் முதல் முறை மகிழினி இவ்வளவு பெரியதாக பேசியது குருவிடம். ஏன் அவள் வாழ்விலே கூட இது தான் முதல் முறையாக இருக்கலாம்.

இடையிடையே முகத்தில் வழிந்த கண்ணீரை கைகளால் துடைத்தபடி பேசியவளை தான் விழிகள் அளவிட்டது.

ஒழுங்காக சீவப்படாத தலை நீர் நிறைந்த விழிகள்.‌ உறங்காததால் விழிகளை சுற்றி இருந்த கருவளையம். முகம் முழுவதும் அப்பியிருந்த சோகம் அதையும் தாண்டி விழிகளில் சிறு ஒளி தெரிந்தது. அது கவின் குணமானதால் வந்திருக்கும். உடல் கூட வெகுவாய் மெலிந்து பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமான தோற்றத்தில் இருந்தாள்.

குருவின் எதிர்வினைக்காக மகிழ் அவனது முகத்தையே பார்த்திருக்க அவனோ,

“நான் முரளியை பார்த்திட்டு வர்றேன்…” என்று விட்டு அகன்றிருந்தான்.

வழக்கமாக தலையசைப்பை மட்டும் கொடுப்பவன் இன்று அது கூட கொடுக்கவில்லை எனும் போது இவளுக்கு உள்ளுக்குள் சுரீர் என்று வலித்தது.

போகும் அவனையே வலியுடன் கண்டவளுக்கு தெரியவில்லை அவனுடைய அமைதிக்கு காரணம் தான் தான்.

தன்னுடைய அழுகை மட்டும் தான். அது குருவை அசைத்து பார்த்துவிட்டது என்று.

அதன் பிறகு சில வாரங்கள் கழித்து ஊட்டிக்கு திரும்பிவிட்டனர். பின் இவர்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தது.

இங்கு வந்ததும் குரு முன்பு போல ஆகியிருந்தான். அவளை முன்னர் போலவே தான் முதலாளி நீ தொழிலாளி என்ற எண்ணத்தில் நடத்தினான்.

அவனுடைய உறவு நெருக்கங்கள் எல்லாம் எழில் மற்றும் கவினுடன் தான். மகியும் இந்த நிகழ்விற்கு பிறகு வெகு கவனத்துடன் இருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top