என் உள்ளம் கேட்குமே – 19.2

எழுந்துவிட்டார்.

“தூங்கிட்டு இருந்தீங்களா பா?” எனக் கேட்டவள் தந்தை மூக்கு கண்ணாடியை எடுக்கத் தடுமாற, எட்டி எடுத்து அவருக்கு அணிந்துவிட்டாள்.

“தூங்கலை மனோ, சும்மாதான் படுத்திருந்தேன்!” என அவர் பதில் இயம்பினார்.

“ஏன் பா, வெளிய வேலை எதுவும் இல்லையா? ரூம்க்குள்ளே அடைஞ்சு கிடக்குறீங்களே!” ரங்காவின் சோர்ந்த தோற்றத்தை இவளது கண்கள் வருத்தமாய் தடவிப் போயின.

“வேலை இல்ல, அதான் படுத்திருக்கேன். நீ சாப்டீயா?” அவர் வினவ, இவள் லேசாய்ப் புன்னகைத்து இல்லையென தலையாட்டினாள்.

“சாப்பிட்டு போ மா!” பேச்சு முடிந்ததென அவர் படுக்க விழைய, மனோ அறையைவிட்டு வெளியே வந்தாள். எத்தனை கம்பீரமான மனிதர். இப்படி அறைக்குள் அடைந்து கிடப்பது அவளை வாட்டியது. என்ன செய்தால் இந்த மனிதரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என எண்ணத்தோடு கூடத்திலிருந்த நீள்விருக்கையில் அமர, வெளியே சென்றிருந்த திவாகர் வந்துவிட்டான்.

இவளைப் பார்த்து அவன் புன்னகைக்க, மனோவும் சிரித்தாள். ஆனால் அது விழிகளை எட்டவேயில்லை.
“என்னாச்சு மனோ? ஏன் டல்லா இருக்க நீ?” எனக் கேட்டுக் கொண்டே தங்கையருகே அமர்ந்து அவளது தோளில் கைப்போட்டான்.

“ஒன்னும் இல்ல திவா. அப்பாகிட்டே பேசிட்டு வந்தேன்!” எனக் கூறவும் இவனுக்கும் புரிந்தது. அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்துக் கையைத் தட்டிக் கொடுத்தவன், “வெளியே எங்கேயும் போகலாமா?” என வினவினான். தங்கையை சகஜ நிலைக்கு கொண்டு வர மனம் நினைத்தது.

“எனக்கு மூட் இல்ல. நான் வரலை போ!” மனோ விட்டேற்றியாகக் கூற, “ச்சு… எனக்கு ரெண்டு ட்ரெஸ் எடுத்துட்டு வரலாமே! எல்லாம் பழைய ட்ரெஸ்ஸா இருக்கு டி. நீ வந்து செலக்ட் பண்ணிக் கொடு!” அவன் விடாப்பிடியாக நின்றான். தனக்காகத்தான் இந்த மெனக்கெடல் எனப் புரிந்தவள், “சரி போகலாம். எனக்கும் ரெண்டு ட்ரெஸ் வேணும்…” என உரிமையாய்க் கேட்டாள்.

“எடுத்துட்டா போச்சு. போகலாம்!” என திவா கூற, “எங்கப் போறதா இருந்தாலும் சாப்ட்டு போங்க. நான் சமைச்சுட்டேன்!” ராதா குரல் கொடுத்தார். இருவரும் உண்டு முடித்து கடைக்குச் சென்றனர்.

முதலில் திவாகருக்கு உடையைத் தேர்வு செய்தவள், தனக்கும் சிலவற்றை எடுத்துக் கொண்டாள். மீண்டும் அவள் ஆண்கள் உடைப் பகுதிக்குள் நுழைய, “மனோ, எனக்கு ட்ரெஸ் போதும்!” என அவளை நிறுத்தினான்.

அவனை முறைத்தவள், “உனக்கு இல்லை திவா. என் புருஷனுக்கு எடுக்க வேணாமா?” என சடைத்தவாறு உள்ளே நுழைந்தாள். அவளது பதிலில் புன்னகைத்தவன்,

“ஓஹோ… உனக்கு செலவளிக்கிறது பத்தாதுன்னு உன் புருஷனுக்கு வேறயா?” என சன்னமான சிரிப்புடன் கேட்டான்.

“ஏன், எடுத்து தர மாட்டியோ நீ? மாட்டேன்னு சொல்லிப் பாரு திவா!” என்று முறுக்கிக்கொண்டே குனிந்து குமரனுக்கு எந்த நிறத்தில் எடுக்கலாம் என உடையை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

திவாகரும் ஆடையில் கவனத்தைப் பதித்தான். பத்து நிமிடங்கள் கடந்தும் மனோ உடையைத் தேர்வு செய்யாதிருக்க அவனது பார்வை சுற்றுபுறத்தில் வலம் வந்தது. எதேச்சையாக பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்தது. அப்படியே நின்றுவிட்டான். ஷெண்பாதான் நின்றிருந்தாள். அருகில் யாரோ ஒருவன் முகம் தெரியவில்லை. அவன் குனிந்து உடைக்குள் தலையை புதைத்திருக்க, இவள் சிரித்துப் பேசிக்கொண்டே அவனுக்கு உடையை எடுத்துக் கொண்டிருக்க, யாரிவன் என நொடியில் திவாவின் மனம் கேள்வியை உமிழ்ந்தது.

“திவா, இந்த ட்ரெஸ் அவருக்கு நல்லா இருக்குமா? சைஸ் ஓகே வா?” என மனோ கேட்க, அவனிடம் பதிலில்லை.

யாருடைய பார்வையோ தன்னைத் துளைப்பதை உணர்ந்த ஷெண்பா நிமிர்ந்து பார்க்க, திவாகர் கண்ணில் பதிந்தான். இவரை எங்கோ பார்த்திருக்கிறோம் என மூளையும் மனதும் கூற, சில நொடிகள் தாண்டி நினைவு வந்தது. குமரனது திருமணத்தில் கைக்குட்டையைக் கொடுத்தவன் என திவாகரைப் பார்த்து மூளை உரைக்க, அன்றே நன்றி சொல்லாது விட்டுவிட்டோம் என பிரிதொரு நேரம் எண்ணியிருக்கிறாள். இப்போது அவனைக் கண்டதும் முகத்தில் சிநேகமான பாவம். உதடுகள் லேசாய் விரிந்தன. திவாகர் அவளது முகபாவங்களை அவதானித்த வண்ணமிருந்தான். அருகிலிருந்தவன் யாரென அறிய வேண்டும் என மனம் பரபரத்தது.

“திவா, நான் உன்கிட்டதான் பேசுறேன். எங்கப் பாத்துட்டு இருக்க நீ?” என்ற மனோவின் பார்வையும் ஷெண்பாவிடம் குவிந்தது.

மனோஹரியையும் அவளருகே நின்னிருந்த திவாகரையும் மனம் அப்போதுதான் கவனிக்க, அவன் யாரெனத் தெரிந்ததும் ஷெண்பா முகத்திலிருந்த சிநேக பாவம் தொலைந்திருந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

தன் கையிலிருந்த உடைகளை திவாகரிடம் ஒப்படைத்தவள், “திவா, நீ இங்கே நில்லு. நான் அவகிட்டே பேசீட்டு வர்றேன்!” என்றவளின் தொனியே சண்டைக்கு தயாரானது.

“ஏய், மனோ… அவகிட்ட நீ என்ன பேசப் போற?” தமையன் பதறினான். இவள் சண்டையிட்டு விடுவாளோ என்ற பதைபதைப்பு அவனிடம்.

“ப்ம்ச்… வந்து சொல்றேன்!” என விறுவிறுவென அவளிடம் மனோ விரைய, திவாகரும் பின்னே சென்றான்.

“ஷெண்பா, இது ஓகே வா?” குனிந்திருந்த இளைஞன் நிமிர்ந்தான். அவளுடைய வயதையொத்தவன், உடன் படிப்பவானக இருக்கக் கூடும் என திவாகரின் மனம் அவனை எடை போட்டது.

மனோ அருகே வர ஷெண்பா நகரப் போனாள். “எங்கப் போறீங்க நாத்தனாரே? உங்ககிட்டே தான் பேச வந்தேன்!” என இவள் கூற, அவளின் நடை தடைபட்டது. என்னவென நிமிர்ந்து பார்த்தாள்.

“சொந்த அண்ணன் கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்து கல்யாணத்தை சிறப்பா செஞ்சு கொடுத்ததுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம விட்டுட்டோம்னு வருத்தப்பட்டேன். அதான் இப்போ நிக்க வச்சேன் பேசலாம்னு!” இவள் குரலில் ஏக நக்கல்.

“மனோ, என்ன பேசுற நீ?” திவாகர் தங்கையை அதட்டினான்.

தன்னைத்தான் குத்தலாக அவள் பேசுகிறாள் என்பதில் எரிச்சலான ஷெண்பா, “குத்திக் காட்றீங்களா?” எனக் காட்டமாய்க் கேட்டாள்.

“ஐயோ! உங்களைப் போய் நான் குத்திக் காட்டுவேனா? நடந்ததை சொன்னேன். வந்ததும் இல்லாம சிறப்பா அன்னைக்கு உங்க அண்ணனுக்கு கிஃப்ட் வேற‌. நீங்க வந்துட்டு கிளம்புனதும் உங்க அண்ணன் அப்படியே சந்தோஷத்துல சுத்துனாரு!” எனக் கூறியவளின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது. அன்று ஒரு புகைப்படம் இவள் எடுக்க சம்மதித்து இருந்தால், குமரனின் முகம் வாடியிருக்காதே என்ற எண்ணத்தில் பேசினாள். ஷெண்பாவின் அன்றைய அலட்சியமான எரிச்சலான பேச்சு மனதில் தங்கிவிட்டது. அதன் எதிரொலிப்பே மனோவின் தற்போதைய பேச்சிற்குக் காரணம்.

“அவன் என் அண்ணன், அவனைப் பேச சண்டை போட எல்லா உரிமையும் எனக்கிருக்கு!” ஷெண்பா பல்லைக் கடித்தாள்.

“எதே! பேச, சண்டை போட ஓகே மா. அதென்ன எல்லாம், வேற என்னப் பண்ணீங்க அவருக்கு. வந்து கல்யாணத்தை முன்ன நின்னு சிறப்பிச்சுக் கொடுத்ததா?” எனக் கேட்டவள், “சொந்த அண்ணன் கல்யாணத்துக்கு மூனாவது மனுஷியா வந்து நின்னுட்டுப் போனவங்களுக்குப் பேச்சு வேற!” என முணுமுணுத்தாள். தங்கையின் பேச்சு எல்லைக் கடப்பதை உணர்ந்த திவா, “மனோ, டைமாச்சு. கிளம்பலாம்…” என அவள் கையைப் பிடித்தான்.

“இரு திவா, பேசிட்டு வரேன்!” என அவனது கையைத் தட்டிவிட்டாள்.

“என்ன நடந்துச்சுன்னு தெரியாதவங்க எல்லாம் என்னைப் பேசணும்னு அவசியம் இல்ல!” ஷெண்பா சீறலாய் உரைத்தாள்.

“என்ன என்ன நடந்துச்சுன்னு எங்களுக்குத் தெரியாது… ஆதி காலத்துல நடந்ததையே கட்டி அழுதுட்டு அந்த மனுஷன் உயிரை இப்பவும் வாங்கீட்டு இருக்கீங்க… தயவு செஞ்சு அவரைப் பார்க்கவோ, பேசவோ ட்ரை பண்ணாதீங்க. அது தான் அவருக்கு நல்லது!” மனோ ஆதங்கமாய்ப் பேச,

“அவன் என் அண்ணன், நான் பார்ப்பேன், பேசுவேன்!” ஷெண்பா ரோஷத்துடன் உரைத்தாள்.

“பொல்லாத அண்ணன் பாசம் அப்படியே பொங்கி வழியுது. இத்தனை வருஷமா நடந்ததையே பிடிச்சு தொங்கீட்டு, நீங்களும் சந்தோஷமா இல்லாம, அவரையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கீங்க. ஒன்னு எல்லாத்தையும் மறந்து அவரோட சந்தோஷமா பழகணும். இல்ல, வேணாம்னு அத்துவிடணும். ரெண்டும் இல்லாம, புடுச்சு தொங்காதீங்க. பெட்டர் யூ ஸ்டே அவே ஃப்ரம் மை ஹஸ்பண்ட்!”

“ஷட் அப்! அவன் எனக்குத்தான் முதல்ல அண்ணன். அப்புறம்தான் உங்க புருஷன். அதை ஞாபகம் வச்சுக்கோங்க!” ஷெண்பாவின் குரல் இடறியது. ஏனோ மனோ பேச்சிலிருந்த உண்மை சுட்டது. ஆம்! அவள் கூறிய அனைத்தும் உண்மைதானே!

திவாகர் அவளைத்தான் பார்த்திருந்தான். அந்தக் கலங்கிய குரலில் குற்றவுணர்வுடன் கவிழ்ந்த முகத்தில் தங்கை மீது கோபம் வர, “மனோ, பேசுனது போதும், கிளம்பலாம்!” என அதட்டலாய் குரலை உயர்த்தினான். அதில் ஷெண்பா அவனை நிமிர்ந்து பார்த்தாள். மனோஹரியின் அண்ணன்தானே நீயும் என அர்த்தம் பொதிய, இவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அவளிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க மனம் வரவில்லை. ‘போ…’ என விட்டுவிட்டான்.

“இரு திவா, இவங்ககிட்டே இப்படி பேசுனாதான் சரி வரும்!” என மனோஹரி விடாப்பிடியாய் நிற்க, திவாகர் அவளை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றான். வாங்கிய உடைகளை இருவரும் அப்படியே போட்டுவிட்டு செல்ல, ஷெண்பாவின் குற்றப்பார்வை திவாகரைத் தொடர்ந்தது. அவனும் உணர்ந்தான். நடந்த மூன்று சந்திப்புகளும் இப்படியாகிவிட்டதே என்ற ஆதங்கம். இனிமேல் நினைத்தாலும் எதையும் ஒட்ட வைக்க முடியாது என அவளைப் பார்த்துக்கொண்டே கடையைவிட்டு வெளியேறினான்.

மகிழுந்தை இயக்கியவனின் முகம் இறுகிப் போனது. “ஏன் நீ என்னை இழுத்துட்டு வந்த? அவகிட்ட இன்னும் நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டிருப்பேன்!” இன்னுமே மனோ புலம்பிக் கொண்டுதான் இருந்தாள்.

“ஷெண்பா, யாரது, ரிலேட்டீவா? ஆர் யூ ஓகே?” அருகிலிருந்தவன் வினவ, “ஹம்ம்… நீ பில்லைப் போடு குணா!” என்றவள் வேறெதுவும் பேசவில்லை. அவனும் நாகரீகம் தெரிந்தவனாக மேலும் தோண்டித் துருவவில்லை.
பணத்தை செலுத்தி உடையை வாங்கிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.

“ஷெண்பா, நான் உன்னை ட்ராப் பண்ணவா?” குணா வினவ, “இல்ல குணா, ஐ யம் ஓகே. நான் போய்க்கிறேன்!” என தன் இருசக்கர வாகனத்தை இயக்கி வீட்டை நோக்கிப் பயணித்தவளின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. இங்கே திவாகருக்கு ஷெண்பாவின் முகம் இம்சையைக் கூட்டிக்கொண்டு இருந்தது. அந்தக் கோபத்தை, ஆதங்கத்தை எல்லாம் மகிழுந்தின் வேகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top