குருவும் அவள் முகம் தான் நோக்கினான்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தாள்.
ஆனால் முகம் இன்னும் தெளிவில்லை.
“மகிழ் பயப்படாத முரளி நம்பர் ஒன் கார்டியாலஜிஸ்ட். கவின் சீக்கிரமா க்யூர் ஆகி வருவான்” என்று குரு அழுத்தமாக கூற,
அந்த ஒற்றை குரல் உள்ளுக்குள் தைரியத்தை வர வழைத்தது.
தெளிந்த முகத்துடன் தலையசைக்க இவளது முக மாற்றத்தை கண்ட முரளி,
“பார்ரா… நான் சொன்னப்போ எந்த ரியாக்ஷனும் இல்லை. சொல்றவங்க சொன்னா தான் புரியும் போல” என்று கிண்டலடிக்க,
அது புரிந்தாலும் இருவராலும் பொய்யாக கூட புன்னகைக்க இயலவில்லை.
உதடுகளை மட்டும் மெதுவாக விரித்தனர் அவ்வளவே.
மகிழ் உள்ளுக்குள் இவர் தானே எனக்கு கடவுள் என் வாழ்வில் வந்த வரும் அனைத்து துன்பங்களில் இருந்து மீட்டு வருபவர் இவர் தானே. அப்படியானால் இவர் வார்த்தைகள் எனக்கு தெம்பை தருவது இயல்பு தானே என்று தனக்குத்தானே கூறி கொண்டாள்.
அதன் பிறகு நிகழ்வுகள் எல்லாம் துரிதமாக நடந்தது. கவினை அறுவை சிகிச்சை அறைக்குள் அழைத்துச் சென்றனர்.
நிறைய மருத்துவர்கள் சில செவிலியர்கள் உள்ளே சென்றனர். சிகிச்சை ஆரம்பமானது.
மகிழ் இங்கு உயிரை கையில் பிடித்தபடி அமர்ந்துவிட்டாள். குருவும் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்தான்.
குருவிற்கும் உள்ளே பயம் பதட்டம் எல்லாம் இருந்தது தான். ஆனால் வெளியே காண்பிக்கவில்லை.
இரண்டு மூன்று மணி நேரங்கள் கடந்தது இன்னும் சிகிக்சை முடியவில்லை.
இருவருக்கும் தாகம் பசி எதுவும் தெரியவில்லை. ஏதோ சிலை போல உள்ளுக்குள் அச்சத்துடன் அமர்ந்திருந்தனர்.
மகியின் மனது தாய் தந்தையரை தான் விடாது வேண்டி கொண்டிருந்தது. விழிகளை மூடி கையில் முகத்தை புதைத்தபடி அமர்ந்திருந்தாள்.
அவளுடைய வேண்டுதலின் முணுமுணுப்பு அருகில் அமர்ந்திருந்த குருவினையும் அடைந்தது.
உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் மகியின் வேண்டுதலில் இடம் பெற்றிருந்தனர்.
முரளி முன்பே தன்னுடைய அறையில் இருக்கமாறு கூறியிருக்க இவர்கள் மறுத்து அந்த அறையின் வாயிலில் அமர்ந்தனர்.
அந்த நீண்ட காரிடாரில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். அத்தனை அமைதி.
அமைதியை கலைக்கும் விதமாக ஒரு பெண் கையில் பழச்சாறுடன் வந்து குருவிடம் கொடுக்க,
“நோ வேண்டாம்” என்று மறுத்துவிட,
மகியும், “வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.
அவர்கள் இருவருக்கும் இப்போது அறுவை சிகிச்சை நன்முறையில் முடிந்தது என்ற ஒற்றை வரி தான் அவசியமாக இருந்தது.
மேலும் சில மணி நேரம் கடந்த பிறகு முரளி வெளியே வந்தான்.
முரளியை கண்டதும் இருவரும் ஒரு சேர எழுந்து கொண்டனர்.
மகிழ் மற்றும் குரு இருவரது முகத்திலும் ஏகமாய் பதட்டம்.
“டாக்டர் ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சது தானே…” என்று கேட்டவளது இதயம் மத்தளம் கொட்டியது.
முகம் முழுவதும் வியர்வை துளிகள் முரளி பதில் சொல்வதற்குள் பயம் அவளை வெகுவாய் ஆட்டிப்படைத்தது.
“முரளி ஆபரேஷன் சக்கஸ் தானே?” என்று குருவும் வினவிட,
“எஸ் ஆப்ரேஷன் சக்சஸ் தான். நல்லபடியா ஹார்ட்ட அவனுக்கு பொருத்தியாச்சு. இனி பயப்பட எந்த அவசியமும் இல்லை” என்று மொழிய,
“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்” என்ற மகிழுக்கு போன உயிர் திரும்பி வந்திருந்தது.
விழிகளில் நீர் கூட கோர்த்திருந்தது. இந்த ஒற்றை வரியை கேட்க இத்தனை நாட்களாய் உறக்கம் தொலைத்திருந்தாள். எத்தனை நாட்கள் அழுகையில் கரைந்திருப்பாள்.
“சில் மிஸஸ் குரு பிரசாத். எதுக்கு இவ்ளோ எமோஷனல் ஆகுறிங்க. எவ்ரிதிங்க் இஸ் பைன்” என்று ஆறுதல் கூற,
கண்ணீருடன் தலை ஆட்டினாள்.
குருவோ, “தாங்க் யூ தாங்க் யூ சோ மச் டா” என்று முரளியின் கையை பிடித்துக் கொள்ள,
முரளி, “நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வர்றேன். அப்புறம் வந்து உன் நன்றியை வாங்கிக்கிறேன்” என்று சிரிப்புடன் மொழிய,
“டாக்டர் கவினை எப்போ பார்க்கலாம்?” என்று வினா தொடுத்தாள் மகிழ்.
“இன்னும் கான்சியஸ் வரலை. எப்படியும் த்ரீ ஹவர்ஸ் ஆகும். கண்விழிக்க. நான் சொல்ற வரை உள்ளே போகாதிங்க” என்று அறிவுறுத்திவிட்டு நகர மற்ற மருத்துவர்கள் செவிலியர்களும் வெளியேறினர்.
ஒரே ஒரு செவிலியர் மட்டும் உள்ளே கவினை பார்த்து கொள்ள இருந்தாள்.
கண்ணாடி தடுப்பின் வழியே மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் மயக்கத்தில் இருந்த கவினை கண்டதும் விழிகளில் இருந்து கண்ணீர் ஆறாய் வழிந்தது.
ஆனால் அதற்கு மாறாக இதழ்களில் ஒரு புன்னகை இருந்தது. கவின் திரும்பி வந்துவிட்டான். ஆம் என்னுடைய மகன் நல்லபடியாக திரும்பி வந்துவிட்டான் என்று மனது அரற்றியது.
குரு மொழியின்றி அவளது உணர்வுகளை தான் அவதானித்த படி இருந்தான்.
சில நிமிடங்கள் இமைக்காது கவினை வெறித்தவள் தளர்ந்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கியிருந்தது. அவள் அமர்ந்ததும் குருவும் வந்து கவினை கண்ணாடி தடுப்பின் வழியே பார்த்தான்.
உதடுகள் மெலிதாய் வளைந்திருக்க விழிகளில் நீர் வழிந்தபடி இருந்தவள் சடுதியில் குருவின் கையை பிடித்து அதில் முகத்தை புதைத்திருந்தாள்.
அடுத்த கணம் அவளது அழுகை பெரியதாகி குருவின் கரத்தை முழுதாய் நனைத்திருந்தது. இடையில் அவள் ஏதோ கூற முயற்சிப்பது அவளது இதழசைவில் குருவிற்கு புரிந்தது.
தன்னுடைய கரத்தில் வழிந்து தரையில் மோட்சமடைந்த கண்ணீரும் அதற்கு சொந்தமான பெண்ணின் அழுகையும் குருவை மீண்டும் ஒரு முறை அசைத்திருந்தது…