கையிலிருந்த அலைபேசியில் ஏதோ காணொளியைப் பார்த்துக் கொண்டே காலாட்டியவாறு அமர்ந்திருந்தான் குமரன். ஏனோ அவன் செய்கையில் அலட்சியம் வெளிப்பட்டதாய் மனம் நம்ப, கோபத்தில் கடித்தப் பற்களுடன் அவன் முன்னே சமீபித்தாள் மனோஹரி.
தன் முன்னே நிழலாடுவதை உணர்ந்தாலும் குமரன் அதை அசட்டை செய்ய, “ஸ்கூட்டீயை ஏன் உடைச்சீங்க?” எனக் காட்டமாய் வினவினாள் மனைவி.
“எந்த ஸ்கூட்டீ? என்ன உடைச்சேன்?” பொறுமையாய் நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் அவள் அணிந்திருந்த கிளிச்சிறை நிறப்புடவையில் நிலைத்தன. பளபளவென மின்னிய புடவை அவளைப் பாந்தமாய்த் தழுவியிருக்க, இவனது பார்வை மொத்தமாய் மனைவியைத் தழுவியது.
முதன் முதலாக மனோவை மனைவி என்ற ஸ்தானத்தில் தூக்கி நிறுத்திப் பார்த்தான். அவனது உயரத்தில் முக்கால் பங்குதானிருப்பாள். வெண்ணையில் குழைத்தெடுத்த நிறம், கன்னம் முன்பை விட வற்றியிருந்தது. கோணலாய் வளைந்த உதட்டில் பார்வையைப் பதித்து பின் மீண்டும் அவளது விழிகளை நோக்கினான். மனோ கோபத்தில் இருந்ததால் அவளது சிந்தையில் இவனது பார்வை பதியவேயில்லை. தற்போதைய எண்ணமெல்லாம் வெளியே நின்றிருந்த உடைந்த வாகனத்தில் நிலைத்தது. அதை நினைத்து அவளது இரத்த அழுத்தம் உயர்ந்தது.
ஆனால், குமரன் முகத்திலிருந்த புரியாத பாவனையில் ஒரு நொடி குழம்பிப் போனவள், “அது… என்னோட ஸ்கூட்டீ!” எனத் தடுமாறினாள். ஒருவேளை இவன் செய்திருக்கவில்லையோ என நிதான மனம் சற்று பொறுமை காக்க உத்தரவிட்டது.
“என்ன… உன் ஸ்கூட்டீக்கு என்ன?” இன்னுமே எதுவும் அறியாத பாவனை குமரன் முகத்தில்.
“அது… என் ஸ்கூட்டீயை யாரோ உடைச்சு வச்சிருக்காங்க!” மனோ தடுமாறியபடி உரைக்க, “ஓ… அப்படியா?” என்றவன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து இருசக்கர வாகனத்தை ஒரு சுற்று சுற்றி வந்தான்.
“ச்சு… அடி ரொம்ப பலமோ?” என அவன் உச்சுக்கொட்ட,
“ஆமா! ரொம்ப அடிதான். இனிமேல் ஓட்ட முடியாது போல!” எனக் கவலை தோய்ந்த குரலில் கூறினாள் மனோஹரி.
“மெதுவாதான் அடிச்சேன். பட், ரொம்ப அடி!” நக்கலாகக் கூறியவனின் பேச்சில் புரியாது விழித்தவள், அதன் சாரம்சம் புரிந்து அவனைத் தீப்பார்வை பார்த்தாள்.
“யூ… யூ… நீங்கதான் ஸ்கூட்டீயை உடைச்சதா?” இவள் அடிக்குரலில் சீற, “ஆமா! நான்தான் உடைச்சேன். ரிப்பேர் பண்ணிக்கொண்டு வந்தாலும் மறுபடியும் உடைப்பேன்!” என்றான் சாவகாசமானக் குரலில். சொன்னதை செய்வேன் என்னும் பாங்கு குரல் முழுவதும் நிரம்பியிருந்தது.
அதில் சிலிர்த்தவள், “என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பண்ணீட்டு இருக்கீங்க? இந்த ஸ்கூட்டீ என் அப்பா எனக்கு முதன்முதல்ல வாங்கிக் கொடுத்தது. எவ்வளோ தைரியம் இருந்தா அதை உடைச்சுட்டு அலட்சியமா பதில் சொல்லுவீங்க!” கொதித்துப் போய்க் கேட்டாள்.
அவளது முகத்தை ஆழப்பார்த்தவன், “நான் சொன்னப்பவே என் கூட வந்திருந்தா, நான் இதெல்லாம் செஞ்சு இருக்க அவசியமே இல்லை மனோ. மிஸ்டேக் உன்னோடதுதான்!” எனத் தோளைக் குலுக்கினான். தன்னுடைய செயலை தவறென்ற வரையறைக்குள்ளே நுழைய விடாது குமரன் பேசிய பேச்சில் இவளுக்கு மூளை மொத்தமும் சூடானது.
‘இவனை என்ன செய்தால் தகும்?’ என நினைத்துக் கனன்றவள், “ஏன், நான் தனியா போனா உங்களுக்கு என்ன? எப்பவுமே உங்களோட கட்டுப்பாட்டுலயே இருக்கணும்னு நினைக்குறீங்களா?” என ஆத்திரம் மிகுதியில் வினவினாள்.
“ஓஹோ… அப்போ இதுக்கு முன்னாடி ஒரு வருஷம் என் கூட வந்தப்போ எல்லாம் என் கன்ட்ரோல்ல தான் இருந்தியா மனோ? எனக்குத்தான் அது தெரியலை போல!” எள்ளலைக் குரலில் தேக்கினான் குமரன்.
அவன் பதிலில் பல்லைக் கடித்தவள், “பேச்சுல மடக்கிட்டா நீங்க செஞ்சது சரின்னு ஆகிடாது!” என சீறினாள்.
“ஓ… சரி, நான் செஞ்சது தப்புன்னே வச்சுக்கலாம். நீ ஏன் என் கூட பைக்ல வர மாட்ற?” அழுத்தமாய்க் கேட்டவனின் பார்வை அவளை ஊடுருவியது.
அந்தக் கேள்விக்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியாது ஒரு நொடித் தடுமாறியவள், “அது… அது என்னோட இஷ்டம்!” என்றாள் உள்ளே சென்றுவிட்டக் குரலில்.
“எப்படி உன்னோட இஷ்டம், இந்தப் பொம்மைதான் வேணும்னு கைநீட்டி என்னைக் கல்யாணம் பண்ண மாதிரியா?” சலனமில்லாது கேட்டவனின் குரலில் மனோஹரி திகைத்துப் போனாள்.
அந்த திகைப்பை உள்வாங்கியவன், “ரைட், நான் சொல்லவா? இத்தனை நாள் நான் வெறும் ட்ரைவர். பட் இப்போ கல்யாணமானப் பிறகு எல்லார்கிட்டயும் என்னை புருஷன்னு இன்ட்ரோ பண்ண முடியலை உன்னால? சரியா?” நக்கலாகக் கேட்டான். அவளை சீண்ட வேண்டுமென்றுதான் குமரன் இப்படி பேசியது. இல்லையெனில் கோபம் என்ற பெயரில் இருவருக்கும் இடையே பெரிய சீனப் பெருஞ்சுவரை எழுப்பிவிடுவாள் இந்தப் பெண் என எண்ணி அவளை மடக்க வழியறியாது பேசினான்.
அவன் கூறியதில் மனோ அதிர்ந்து போனாள். என்ன பேசுகிறான் என விழிகள் ஒரு நொடி அவன் பாவனையை உள்வாங்க, உதடுகள், “ஜஸ்ட் ஷட் அப்!” என ஆத்திரத்தில் சீறியிருந்தது.
“வாட் தி ஹெல்… என்ன நினைச்சுட்டு இப்படி பேசுறீங்க?” எனக் கேட்டவளுக்கு மனதே ஆறவில்லை. எதையாவது அடித்து நொறுக்க வேண்டுமென வெறி கிளம்ப, “இனியொரு முறை இந்த மாதிரி பேசுனீங்க! நான் மனுஷியா இருக்க மாட்டேன்!” எனக் கடித்துக் குதறி, “இப்போ உங்கக் கூட நான் வரணும். அவ்வளோ தானே? வரேன்!” என்றாள் பற்களை நறநறத்து. குமரன் அவள் அளவிற்குப் பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை. யாரிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்க முடியும் என்ற தொழில் மூளை மனைவியையும் எடை போட்டு சீண்ட வைத்து காரியத்தை ஆக வைத்திருந்தது.
‘அவ்வளவுதான் என் பேச்சு!’ என்பதைப் போல அவன் முன்னே சென்று வாகனத்தை இயக்கினான். மனோஹரி அவன் பேசிய வார்த்தைகளிலிருந்து இன்னுமே வெளிவரவில்லை.
‘என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறான் இவன்?’ என பொங்கிய கோபத்தை எதன் மீது காட்டுவது எனத் தெரியாது உடைந்திருந்த இருசக்கர வாகனத்தை வெறித்தவள், அதை ஒரே எத்தில் கீழே தள்ளியிருந்தாள்.
குமரனும் அதை கவனித்தான். தன் மீதான கோபம்தான் அது எனத் தெரிந்தாலும் அவன் அலட்டிக்கொள்ளவில்லை. மனோஹரி அவன் பின்னே அமர, வாகனத்தை இயக்கவில்லை. கணவனது பார்வை உணர்த்திய செய்தியில் கண்ணாடி வழியே அவனை முறைத்தவாறு கையை எடுத்து அவன் தோளில் வைத்தவள், “இது ஒன்னுதான் குறை!” என முணுமுணுத்தாள். குமரன் அந்த வார்த்தைகளை காற்றில் கலக்கவிட்டவாறு பறந்திருந்தான்.
மனோஹரியின் மூளை இப்போது நிதான மனதின் கட்டுப்பாட்டின் கீழே வந்திருக்க, குமரன் அப்படி பேசுமளவு தன்னுடைய நடவடிக்கைகள் அமைந்திருக்குமோ என தனக்கும் அவனுக்குமான உரையாடல்களை மூளையின் கடைசி அடுக்கு வரை தூசி தட்டிப் பார்த்தாள். அப்படி ஏதும் அகப்படாததில் அவளறியாது பெருமூச்சு ஒன்று பிறந்தது.
மருத்துவமனையின் வாயிலில் குமரன் வாகனத்தை நிறுத்த, இறங்கியவள் எப்போதும் போல அவனைப் பார்க்காது உள்ளே நுழைந்திருந்தாள். அவன் மனோவைதான் பாராத்திருந்தான். ஏனோ அந்தப் பெண் திரும்பிப் பார்த்து சிறிய புன்னகை அல்லது ஒரு சிறு தலையசைப்பைக் கொடுக்க வேண்டும் என மனம் உண்மையாய் எதிர்பார்த்தது. ஆனால், ஏமாற்றிவிட்டுப் போனவளை இவன் முறைத்தான்.
‘ஏன் போய்ட்டு வரேன்னு சொன்னா, முத்து உதிர்ந்துடுமோ?’ மனதிற்குள் அவளை வறுத்தவனுக்கு அவளிடம் என்ன தேடுகிறோம் எனப் புரியவில்லை.
முன்பு சின்ன செய்கையை தலையாட்டலை எதிர்பார்த்தான். அப்போது நியாயவாதி மனது தலையைத் தட்டி அடக்கியிருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை. மனைவி என்ற ஸ்தானத்திற்கு வந்து மூன்று நாட்கள் கழிந்திருந்தது. அதனாலே மனம் அவளிடம் உரிமையான கோபம் கொண்டது. காலையில் நடந்த சண்டையை சலுகையாய் மறந்திருந்தான்.
முன்னுச்சியில் விழுந்த முடிகளைத் தள்ளியவன் மருத்துவமனை வாயிலை வெறித்துவிட்டு கிளம்பினான். செல்லும் பாதையில் கவனமிருந்தாலும் சிந்தை முழுவதும் மனோஹரிதான். சிந்து, ஷெண்பாவிற்கு அடுத்து தன் வாழ்வில் நுழைந்தப் பெண்.
தான்தான் வேணும் என அத்தனை பிரம்மபிரயத்தனங்கள் பட்டு ஏன் இந்தப் பெண் தன்னை திருமணம் முடித்தாள் என்ற கேள்விக்கு இன்று வரை விடை சுழியம்தான். எந்த வகையில் அவளை இவன் பாதித்தான் என்பதும் புரியாத புதிர். ஆனாலும் அந்த உறுதியில் மனம் அவள்புறம் சாய்ந்தது என்னவோ உண்மை. நடந்தப் பிரச்சனைகளில் அந்த எண்ணம் தற்காலிக விடுப்பெடுத்திருந்தது. தற்போது திருமணம் முடிந்து அனைத்தும் சரியான நிலையில் இன்றைக்குத்தான் மனைவி விழிகளுக்கு அகப்பட்டிருந்தாள்.
அவளிடம் உரிமை எடுத்துப் பேச பழக என்னவோ தடுத்தது. என்னவென ஆராய்ந்த போது சிறியதாய் அவள்மீதான கோபம்தான். தந்தைதான் வேண்டுமென மனோ மறுத்த கோபம் இன்னுமே மனதினோரம் புதைந்திருந்ததை உணர்ந்தான்.