கவினது பார்வை தாயிடம் நிலைக்க அவள் தலை அசைத்ததும் குருவிடம் நிலைத்தது.
குருவும், “வாங்கிக்கோ கவின்” என்றிட,
புன்னகையுடன் இனிப்பை பெற்று கொண்டான்.
“பார்றா இவங்க சொன்னாதான் வாங்கிப்பியா…?” என்று சிரிக்க,
கவினும் இனிப்பு கிடைத்த மகிழ்ச்சியில் மேலும் கீழும் தலை ஆட்டினான்.
மகிழ் இதற்கு மேலும் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்று எண்ணியவள்,
“நான் வரும் போது கீழ ஒரு கார்டன் பார்த்தேன். அங்க கவினை அழைச்சி போய் காட்டிட்டு வரட்டுமா சார்…?” என்று மகிழ் தயக்கத்துடன் வினவ,
“ஹ்ம்ம்…” என்று தலை அசைத்தவனது பார்வை நொடிக்கும் அதிகமாய் அவள் மீது நிலைத்தது.
ஹனியிடமும் கூறியவள் கவினை தூக்கி கொண்டு வெளியே சென்றாள்.
மகிழ் அகன்றதும், “ஹப்பா இப்போ தான் ப்ரீயா இருக்கு. அவங்க இருக்கும் போது ப்ரைவசி இல்லாத மாதிரி ஒரு பீல்” என்று குருவின் தோளில் சாய்ந்து கொண்டவள்,
“மகிழ் ரொம்ப நல்ல பொண்ணுல்ல. நானே நினைச்சேன். கொஞ்ச நேரம் தனியா இருந்தா நல்லா இருக்கும்னு. நாம சொல்லாம அவங்களே புரிஞ்சிக்கிட்டு வெளியே போய்ட்டாங்க” என்று கூற,
குருவும், “ஹ்ம்ம் ஆமா நல்ல பொண்ணு தான். வீட்லயும் ரொம்ப சைலண்ட் தான்” என்று அமோதித்தான்.
இங்கு தரைதளத்திற்கு மின்தூக்கி மூலம் வந்தவள் அழகாய் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தோட்டத்தின் நடுவே இருந்த கல் மேசையில் அமர்ந்து கொண்டாள்.
அருகே சிறுவர்களுக்கு விளையாட சிறு பூங்கா இருந்தது கவின்,
“ம்மா அங்க போலாம்” என்று கையை காண்மித்தான்.
“பார்க்குக்கா போகலாம்” என்று அவனை தூக்கி சென்றவள் அவனை விளையாடவிட்டு தானும் அமர்ந்துவிட்டாள்.
உள்ளே ஏதோ ஒரு சோகம் மெலிதாக இழையோடியது. எல்லாம் விரைவில் சரியாகும். கவின் நல்லபடியாக குணமடைவான் என்று தனக்கு தானே கூறி கொண்டாள்.
நேரம் சென்றது அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஆனது. தொடர்ந்து விளையாடிய கவின் கூட சோர்ந்து,
“ம்மா பசிக்கிது” என்று வந்து நின்றான்.
நேரத்தை பார்த்தால் இரவுணவு நேரம் வந்திருந்தது.
‘ப்ச் யோசனையில் பிள்ளையின் வயிற்றை கவனிக்காது விட்டுவிட்டோமே’ என்று எண்ணியவள்,
“செல்லத்துக்கு பசிக்கிதா…? வாங்க போய் சாப்பிடலாம்” என்று அவனை தூக்கி கொண்டவள் அந்த தளத்திலே இருந்த உணவகத்திற்கு அழைத்து சென்றாள்.
முதலில் அவனது கை கால்களை கழுவியவள் பின்னர் இரவு நேரத்தில் எளிமையான உணவை கொடுப்போம். நாளை சிகிக்சை வேறு இருக்கிறது என்று இட்லியை எடுத்து வர கூறினாள்.
அறையில் இருந்து வரும் போதே அலைபேசி மற்றும் பர்ஸை எடுத்து வந்திருந்தாள்.
வெறும் இட்லியே அங்கு பல நூறுகளை விழுங்கி இருந்தது. அது பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.
குருவின் வாழ்விற்குள் நுழைந்த போதே இதற்கு மேல் விலை உயர்ந்த உணவகங்களை கண்டுவிட்டாள்.
இத்தனை பெரிய உணவகத்தில் விலை அதிகமாக தான் இருக்கும் என்று அவள் ஏற்கனவே கணித்திருந்தாள்.
இட்லி வந்ததும் கவினுக்கு ஊட்ட அவனும் அமைதியாக உண்டான். இந்த புது இடம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. விளையாட இடம் இருந்தது. நன்றாக வேடிக்கை பார்த்தபடி இருந்தான்.
கவின் சாப்பிட்டு முடித்ததும் என்ன செய்வதென்று மகிக்கு தெரியவில்லை.
அறைக்கும் செல்ல இயலாது. ஹனிகா சென்றுவிட்டாளா இல்லையா? என்று தெரியாது அவள் அங்கேயே இருக்க தான் சென்று மீண்டும் தொந்திரவாக ஆகிவிடும் என்று நினைத்து அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.
ஆட்கள் வேறு நிறைய வர ஆரம்பிக்க அங்கும் அமர முடியாது எழுந்தவள் மீண்டும் வந்து தோட்டத்திலே அமர்ந்து கொண்டாள்.
கவினுக்கு அலைபேசியில் பொம்மைகள் படத்தை எடுத்து கொடுத்தவள் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்தாள்.
நேரம் சென்றதும் கவினுக்கு உறக்கம் வர துவங்க அவனை தன் மடியில் சாய்த்து கொண்டவளுக்கு அப்போது தான் கவினுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்று நினைவில் வந்தது.
கவின் உறங்கிவிட்டால் எழுப்பி மாத்திரையை கொடுக்க இயலாது என்ன செய்வது பேசாது அறைக்கு சென்றுவிடுவோமா…? என்று சிந்தித்த நேரம் குருவிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றவளிடம் மறுமுனையில் குரு,
“மகிழ் எங்க இருக்கிங்க. ரூம்க்கு வாங்க” என்று மொழிய,
“கீழ கார்டன்ல தான் இருக்கோம் சார். வர்றோம்” என்று அழைப்பை துண்டித்தவள் மகனை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு அறையை நோக்கி சென்றாள்.
இதற்குள் கவின் உறக்கத்திற்கு சென்றிருந்தான். கவினை சுமந்தபடி அழைப்பு மணியை அழுத்த,
அடுத்த விநாடியே கதவை திறந்தவன் தூங்கிய கவினை கண்டு,
“கவின் தூங்கிட்டானா…? அவன் தூங்குற வரைக்கும் என்ன பண்ண. முன்னாடியே அழைச்சிட்டு வந்திருக்க வேண்டியது தானே” என்று வினவியபடி அவர்களுக்கு வழிவிட்டான்.
கவினை மெத்தையில் கிடத்தியவள்,
“அது இவ்ளோ நேரம் முழிச்சு தான் இருந்தான். இப்போ தான் தூங்குனான்” என்றவள் பையில் இருந்து மாத்திரையை எடுத்து நீரில் கரைத்து
“செல்லக்குட்டி டேப்லெட் சாப்பிட்டு துங்குங்க” என்று கன்னத்தில் லேசாக தட்டினாள்.
“கவின் சாப்பிட்டானா?”
“ஹ்ம்ம். கீழ இருந்த ரெஸ்டாரன்ட்ல இட்லி வாங்கி கொடுத்தேன்”
“ஓ… நானும் ஹனியும் அங்கதான் சாப்பிட்டோம். உங்களை பார்க்கலையே?”
“நாங்க செவென்கே சாப்பிட்டு வந்துட்டோம்” என்றவளுக்கு உள்ளே சிறிதான ஏமாற்றம் பரவியது.
குரு சாப்பிடாது இருப்பான். தான் மட்டும் எப்படி உண்பது என்று எண்ணி தான் உண்ணாது வந்தாள்.
ஆனால் குரு கூறிய பிறகு தான் ஹனிகாவுடன் உண்டிருக்க கூடும் என்று தான் சிந்திக்கவில்லை என்று புரிந்தது. அதுவுமில்லாது தினமும் தாங்கள் இருவரும் மட்டுமா அமர்ந்து உண்டோம் தவறு தன்னுடையது தான் என்று நினைத்து கவினுக்கு மருந்தை புகட்டினாள்.
“ஹனி இப்போ தான் கிளம்பினா உன்கிட்ட சொல்லிட சொன்னா” என்றிட,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள்
கவினுக்கு நன்றாக போர்வையை போர்த்தி விட்டவள் தானும் படுக்க செல்ல குருவும் மறுபுறம் படுத்து கொண்டான்.
மறுநாள் காலையில் விரைவாகவே எழுந்து மருத்துவமனைக்கு சென்றனர்.
குருவின் நண்பன் முரளி,
“வாடா ஜெர்னி எப்படி இருந்துச்சு” என்று கேட்டு அணைத்து கொள்ள,
“குட் டா” என்று குருவும் அவனிடம் சில பல நல விசாரிப்புகளை கொடுத்து மகிழை அறிமுகம் செய்து வைத்தான்.
முரளி, “ஆப்ரேஷனுக்கு எல்லா அரேன்ஜ்மென்ட்ஸும் ரெடி. இன்னும் கொஞ்ச நேரத்தில ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்க,
மகியின் முகத்தில் அப்பட்டமான பயம். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டுமே என்கின்ற பதைபதைப்பு.
அவளது முகத்தை வைத்தே எண்ணத்தை உணர்ந்த முரளி,
“சிஸ்டர் பயப்படாதிங்க. ஆப்ரேஷன் நல்லபடியா நடக்கும். நான் பாத்துக்கிறேன்” என்று ஆறுதல் கூற,