காதல் 2.3

.

இதுதான் அகிலனின் இப்போதைய பயம். எங்கே தனக்கு அரசு கல்லூரியில் கிடைக்காவிட்டால் தன்னால் மருத்துவம் படிக்க இயலாதே‌. தந்தை மற்றும் தமக்கையின் ஆசையை நிறைவேற்ற முடியாதே என்று அச்சம் உள்ளூர பரவ துவங்கியது.

“இங்க பாரு அகி. அம்மா அப்பா இருக்காங்க. அப்படி எல்லாம் எதுவும் நடக்கவிட மாட்டாங்க. அவங்களை நல்லா மனசுல நினைச்சிக்கோ” என்று அவனுக்கு ஆறுதல் கூற, அரைமனதுடன் தலை அசைத்தான்.

பின்னர் மகி குளித்து வர நேரம் சமையலில் சென்றது. சிறியவர்கள் எழுந்துவிட அவர்களை தயாராக்குவதில் நேரம் விரைந்தோட ஓரிடத்திலே அமர்ந்திருந்த தம்பியை அதட்டி குளித்து வர செய்து உணவை சாப்பிட வைத்தாள்.

பிறகு சிறுவர்களையும் சாப்பிட வைத்து பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு வர முடிவுகள் வெளியாகும் நேரம் வந்திருந்தது.

அகிலனின் பதட்டம் அதிகமாக,

“அகி ஏன் இவ்ளோ டென்ஷன்.‌ முதல்ல ரிலாக்ஸ் ஆகு” என்று அவனை அமைதி படுத்தியவள் தனது அலைபேசியில் முடிவுகள் வெளியாகும் தளத்திற்கு சென்று அவனுடைய விபரங்களை செலுத்திவிட்டு காத்திருந்தாள்.

மகிக்கும் சற்று அச்சமாகத்தான் இருந்தது. அகிலனை நினைத்து அதனை வெளியில் காண்பித்து கொள்ளவில்லை.

இரண்டு நிமிடங்கள் காத்திருப்பிற்கு பிறகு முடிவு வந்தது.  அகிலன் பயந்தது போலவே ஒற்றை மதிப்பெண்ணில் அவனுக்கு அரசு கல்லூரி வாய்ப்பு தள்ளி போயிருந்தது.

தனியார் கல்லூரியில் தான் இடம் கிடைத்திருந்தது. தமக்கையின் முகம் கண்டே முடிவை அறிந்தவனது முகமெங்கும் ஒருவித வேதனையின் சாயல்.

“என்னக்கா நான் சொன்ன மாதிரியே ப்ரைவேட் தான் கிடைச்சிருக்கு போல” என்று கேட்க,

“ஹ்ம்ம்…” என்று மட்டும் தலையசைத்தாள் மகிழ்.

அவள் உறுதி செய்த பின் அகிலனுக்கு கண்களே கலங்கி விட்டது‌. எத்தனை வருட ஆசை கனவு லட்சியம்.

எல்லாம் ஒற்றை மதிப்பெண்ணில் இங்கே காணாது மறைந்துவிட்டதே என்று உள்ளம் வலித்தது.

தமையனின் கலங்கிய விழிகளை கண்ட மகிக்கும் விழிகள் நிறைந்தது.

மகியின் முகம் கண்டு சட்டென்று தன்னை தேற்றியவன்,

“ப்ச் விடுக்கா. மெடிசின் மட்டும் தான் படிப்பா. மெடிசின் இல்லைன்னா அக்ரி இல்லை இன்ஜினியரிங் வேற எதாவது பண்ணலாம்” என்று துக்கத்தை விழுங்கி மகியை தேற்ற,

தனக்காக சடுதியில் உணர்வுகளை மாற்றி கொண்டவனை கண்டு அவளுக்கு மேலும் விழிகள் கலங்கியது.

“அகி நீ பீல் பண்ணாத இன்னும் செகெண்ட் தர்ட் கவுன்சிலிங் எல்லாம் இருக்கு” என்க,

“அதெல்லாம் வேணாம்கா மறுபடியும் எதிர்பார்த்து ஏமாற முடியாது‌. நான் இன்ஜினியரிங் அப்ளை பண்றேன். என் கட் ஆப்க்கு இன்ஜினியரிங் கண்டிப்பா கிடைக்கும்” என்றவனது குரலில் இருந்த விரக்தி அவளை வதைத்தது.

பெற்றோர் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தாள்.‌ அவர்களும் கைவிட்டுவிட்டார்களே என்று தோன்றியது.

தம்பியின் நிராசையான முகத்தை காண வலித்தது. அப்படி என்ன தவறு செய்தான் இவன். மற்ற பிள்ளைகள் எல்லாம் ஓடியாடி விளையாண்ட போது இவன் மட்டும் பொறுப்பாக அமர்ந்து படித்தானே.

அப்படி இருந்தும் ஆசைப்பட்ட படிப்பை படிக்க இயலவில்லை என்று உள்ளத்தின் ஓரம் வலி விரவியது.

‘ம்ஹூம் என்ன செய்தாவது அவனது ஆசையை நிறைவேற்ற வேண்டும்’ என்று முடிவெடுத்தவள்,

“அகி நான் உன்னை படிக்க வைக்கிறேன் அகி. நாம ப்ரைவேட்ல அப்ளை பண்ணுவோம்” என்க,

அகில் அதிர்ந்து தமக்கையை பார்த்தான். என்னது தனியார் கல்லூரியிலா அதற்கு எத்தனை லட்சங்கள் செலவாகும். நாம் இருக்கும் நிலைமையில் இது எந்தவிதத்திலும் சாத்தியமில்லை என்று தோன்றியது.

“க்கா என்ன பேசுற நீ. புரிஞ்சு தான் பேசுறியா?” என்று அகி வினவ,

“நல்லா புரிஞ்சு தான் பேசுறேன்” என்றாள் திடமாக‌.

“ப்ரைவேட்ல படிக்க லட்சக்கணக்குல செலவாகும் அதுக்கெல்லாம் எங்க போக. இப்போ நாம இருக்க நிலைமையில உன்னோட சேலரிய வச்சு சாப்பிட தான் முடியும்” என்க,

“அதை பத்திலாம் நீ ஏன் கவலைப்படுற. பணத்துக்கு நான் பொறுப்பு”

“அதான் எப்படி ஏற்பாடு பண்ணுவ?”

“வீட்டு மேல லோன் வாங்கலாம். அப்புறம் அம்மாவோட நகை கொஞ்சம் இருக்கு‌ தென் நான் கம்பெனில லோன் போடுறேன்”

“வாட் வீட்டு மேலயா? அக்கா அது நம்ம எல்லாரும் சேர்ந்து வாழ்ந்த வீடு. அதுமேல லோனா? இந்த ரிஸ்க் வேணாம்‌. நமக்குனு இருக்கது அது மட்டும் தான்”

“அதெல்லாம் சீக்கிரமா கடனை அடைச்சிடலாம். நான் அடைச்சிடுவேன்”

“க்கா நீ என்னை பத்தி மட்டும் யோசிச்சிட்டு இருக்க. அடுத்து எழிலும் கவினும் இருக்காங்க”

“நீ படிச்சு டாக்கராகி அவங்களை பாத்துக்க மாட்டியா?” என்று அவனது வாயை அடைக்க,

“க்கா நான் பார்த்துப்பேன் தான் இருந்தாலும்‌…” என்று இழுக்க,

“என்ன இருந்தாலும். நீ மெடிசன் படிக்கிற அவ்ளோ தான் கடனை நான் பாத்துக்கிறேன்” என்று அழுத்தமாக முடித்துவிட்டவள் அவனுக்கு அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட தனியார் கல்லூரியில் சேர விருப்பமும் தெரிவித்திருந்தாள்.

அகிலன் தமக்கையை தடுக்க இயலாது பார்த்திருந்தான். அவனுக்கான வேலையை முடித்தவள்,

“சரி அகி நான் போய்ட்டு வர்றேன்” என்று தனது வாகனத்தில் அலுவலகம் நோக்கி சென்றாள்.

கைகள் அதன்பாட்டிற்கு பணி செய்தாலும் மனது பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது.

முதலில் தந்தை பணிபுரிந்த பள்ளி முதல்வர் மணி சாரிடம் பேசி வீட்டின் மேல கடன் வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் பின் நகைகளை விற்க வேண்டும் தன் பணிபுரியும் தொழிற்சாலையில் கடனிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தான் சுற்றி வந்தது.

எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்துவிட வேண்டும் அதன் பிறகு எப்பாடுபட்டாவது அதனை அடைந்துவிடலாம். தந்தை இந்த நிலையில் இருந்தாலும் இதை தான் செய்திருப்பார்.

அடுத்தடுத்து எதை செய்ய வேண்டும் என்று திட்டமிட துவங்கினாள்.

ஆனால் என்ன முயன்றும் தன்னால் பணத்தை திரட்ட இயலாது போகும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கமாட்டாள்.

இதோ இந்த பணம் தான் தன்னை தன் வாழ்வை முழுதாக திசை திருப்ப போகிறது என்றும் எண்ணியிருக்க மாட்டாள்…

error: Content is protected !!
Scroll to Top