காதல் 2.1

காதல் 2 :

கையில் இருந்த கோப்பில் மூழ்கி இருந்த‌ குரு அலைபேசியில் செய்தி வந்த ஒலியில் கவனம் கலைந்து இரண்டு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்தவன் அதனை எடுத்து பார்த்தான்.

அலைபேசி நிறுவனத்தில் இருந்து வரும் வழக்கமான செய்தி வந்திருந்தது. அதை ஒதுக்கி தள்ளியவன் நேரத்தை பார்க்க இரவு ஒன்பது மணியை தாண்டி இருந்தது.

‘நைன் ஓ க்ளாக் ஆகிடுச்சா?’ என்று நினைத்தவன் தனது கையில் இருந்த கோப்புகளை அப்படியே வைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றான்.

இவனது வரவிற்காகவே காத்திருந்த கரண், “சார்” என்றபடி வர, “நாளைக்கு மார்னிங் எதுவும் இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்கா கரண்?” என்று வினவினான்.

கரண், “நோ சார். ஆப்டர்நூன் தான் க்ளையண்ட் மீட்டிங் இருக்கு” என்று பதில் அளிக்க,
குரு, “ஓகே யு மே லீவ்” என்றிட,
“ஓகே சார்” என்ற கரண் விரைவாக வெளியே சென்று தனது இரு சக்கர வாகனத்தினை எடுக்க சென்றான்.

அவனுடைய அவசரம் அவனுக்கு. இரவு பத்து மணிக்கு மேல் சென்றால் மனைவி கதவை திறக்க மாட்டாளே. இதெல்லாம் குருவிடம் கூற இயலாது.

அப்படி கூறினால் விரைவாக வேலை முடியும் நிறுவனமாக பார்த்து வேலைக்கு செல் என்று முடித்துவிடுவானே.

அவனுக்கு எப்போது கிளம்ப வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது தான் வீட்டிற்கு செல்வான். அதுவரை கரணும் இங்கே தான் இருக்க வேண்டும். ஏன் இரவு முழுவதும் கூட குரு அலுவலகத்திலே தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையிலே இருந்து கொள்வான்.

கரணுக்கும் வேறு வழியிருக்கவில்லை. இவன் கொடுக்கும் அளவு சம்பளத்தை யாரும் கொடுக்கமாட்டார்கள்.
அதற்கு ஈடாக இங்கு பணியும் செய்தாக வேண்டும்.

குரு இப்படித்தான். யார் என்ன என்று எதுவும் பார்க்க மாட்டான். விருப்பம் இருந்தால் இரு இல்லையென்றால் கிளம்பிவிடு.

கூரை மேல் சோற்றை போட்டால் ஆயிரம் காக்கை இதுதான் அவனது வாதம். பணமிருந்தால் எதையும் செய்துவிட முடியும் என்று வலுவான எண்ணம்.

“பார்ன் வித் சில்வர் ஸ்பூன்” என்பார்களே அந்த ரகம் குரு பிரசாத். பணத்தின் செழுமை அவனுக்கு சற்று திமிரையும் கொடுத்திருந்தது. அது அவனது செய்கையிலும் அவ்வப்பொழுது வெளிப்படும்.

குரு சற்று கலகலப்பான சுபாவம் கொண்டவனாகத்தான் இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்துவிட்ட தந்தையின் இழப்பிலும் மேலும் சில நிகழ்வுகளினாலும் சற்று இறுக்கமாக மாறியிருந்தான்.

இப்போது இருக்கும் குருவிற்கும் கல்லூரி காலத்தில் இருந்த குருவிற்கும் நூறு வேறுபாடுகளை காணலாம்.

அன்றைய நாளில் புன்னகையுடன் வலம் வந்தவனது முகத்தில் இப்போது மருந்துக்கும் சிரிப்பில்லை. எப்போதும் ஒரு வித இறுக்கமான முக பாவம் தான்.

வீட்டிலும் அவனது காதலி ஹனியிடமும் மட்டும் தான் சற்று இறுக்கம் தளர்ந்து இருப்பான்.

குரு அனுமதி அளித்த அடுத்த நிமிடம் கரண் தனது வாகனத்தில் பறக்க அதனை எல்லாம் கருத்திலே கொள்ளாது தனது மகிழுந்தை எடுத்து கொண்டு வீட்டை நோக்கி சென்றான் குரு.

அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்தவன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து செல்ல கதவு ஒரு புறம் திறந்து தான் இருந்தது. தாய் தனக்காக முழித்து கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது.

‘ப்ச் எத்தனை முறை கூறினாலும் ஏன் இன்னும் இவர் விழித்து இருக்கிறார்’ என்று சலித்தபடி கதவை முழுதாக திறக்க முயல,

உள்ளே பேச்சுக்குரல் கேட்டதும் அப்படியே நின்றான். உள்ளே கோதையும் பிறைசூடனும் பேசி கொண்டு இருந்தனர். பேச்சில் அவனுடைய பெயர் தான் அடிப்பட்டது.

“கோதை நம்ம ஜோசியர் கிட்ட பேச சொன்னேனே பேசினியா?”என்று பிறைசூடன் வினவ, “ஹ்ம்ம் பேசிட்டேன் பா. நாளன்னைக்கு வர சொல்லி இருக்காரு. போய் பார்த்து பேசிட்டு வர்றேன்”

“ஹ்ம்ம் இவனுக்கும் இருபத்தி எட்டாகிடுச்சு. காலகாலத்துல கல்யாணத்தை முடிக்கணும்”

“ஆமப்பா நம்ம காசிண்ணா கூட அவங்க சொந்தத்துல ரெண்டு பொண்ணுங்க இருக்கதா சொன்னாங்க. ஜாதகத்தை கொண்டு வர சொல்லியிருக்கேன் அப்படியே பொருத்தத்தையும் பாத்துட்டு வந்திட்றேன்‌. அப்புறமா அவன்கிட்ட சொல்லுவோம்”

“ஹ்ம்ம் அதுவும் சரிதான். எல்லாம் ஒத்துவந்த பிறகு அவன்கிட்ட பேசுவோம். எப்படியும் இந்த வருஷத்துக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடணும்”

“ஆமப்பா நானும் அதைத்தான் நினைச்சிருக்கேன்” என்ற கோதை, “ப்பா உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன் அந்த பொண்ணு மகிழினிக்கு ஒரு வரன் வந்திருக்குனு மணிமாமா சொன்னதா சொன்னிங்களே அது என்னாச்சு ஒத்துவந்துச்சா?” என்று வினவினான்.

“மகிழினி”என்று சிந்தித்தவனுக்கு யாரென்று ஒரு நொடி புரியவில்லை. பின்னர் தான் அது இங்கு தங்களுடைய அவுட் ஹவுஸில் தங்கியிருப்பவள் என்று தெரிந்தது. குரு அவளது முகத்தினை நினைவிற்கு கொண்டு வர முயற்சிக்க அது வரவில்லை.

மகிழினி அவன் தாத்தா தொடங்கிய சாக்லேட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தான் பணிபுரிகிறாள். இருந்தும் குரு அவளை அடிக்கடி எல்லாம் பார்ப்பதில்லை.

காரணம் அவன் அந்த தொழிற்சாலைக்கு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை தான் செல்வான். அங்கே மனோகர் என்ற‌ ஒருவரை அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்ள நியமித்திருந்தான்.

மனோகர் எல்லா வேலைகளையும் திறம்பட பார்த்து கொள்வதால் குருவிற்கு மேற்பார்வை செய்வது தான் வேலை. வாரவாரம் சென்று எல்லா வேலைகளும் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்க மட்டும் செய்வான். இதில் அவளை காண்பது வெகு அரிது.

அதுவும் தொழிலாளர்கள் அனைவரையும் தன்னை நேரடியாக சந்திக்க அனுமதிப்பது இல்லை. எல்லாம் மனோகர் மூலமாக தான் வரும்.

எந்த கோப்புகளில் கையொப்பம் வாங்க வேண்டும் என்றாலும் மனோகர் வழியாக தான் நடக்கும்.‌ இதன் காரணமாகவே அவன் மகிழினியை பெரிதாக சந்தித்ததும் இல்லை அவளது முகம் நினைவிலும் இல்லை.

அவனுக்கு தெரிந்தது மகிழினி என்ற பெண் திடீரென விபத்தில் குடும்பத்தினரை இழந்த கஷ்டத்தினால் பிறைசூடனுக்கு தெரிந்தவர் மூலமாக பணிக்கு வந்திருக்கும் பெண். அவளை அத்தனை ஊன்றி கவனித்தது இல்லை.

ஆக குரு பிரசாத்திற்கு மகிழினியை பற்றி பெரிதாக எந்த எண்ணமும் இல்லை. அவள் தங்களிடம் பணிபுரியும் ஒரு தெழிலாளி அவ்வளவு தான்.

“இல்லைம்மா. அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிற‌ எண்ணத்துல இல்லையாம்.‌ அவளுக்கு தம்பியையும் அண்ணன் பசங்களையும் படிக்க வச்சு பெரியாளக்கணும்றது தான் முக்கியமாம்.‌ இதுல கல்யாணம் குழந்தை இது எதுக்கும் எந்த இடமும் இல்லைன்னு சொல்லிடுச்சாம்” என்று பிறைசூடன் கூற,

“அப்படியா சொல்லுச்சு. ரொம்ப நல்ல பொண்ணுப்பா. கடவுள் இந்த வயசுலயே எவ்ளோ கஷ்டத்தை அந்த பொண்ணுக்கு குடுத்திருக்க வேணாம். இவங்களை பாக்குறேன்னு அந்த பொண்ணு கடைசி காலத்தில தனியா நின்ற போகுது. நான் வேணா அந்த பொண்ணுக்கிட்ட பேசி பாக்கவா?” என்று கோதை வினவினார்.

“இல்லைம்மா வேணாம். நான் ஏற்கனவே பேசிட்டேன். என்கிட்டயும் அந்த பொண்ணு இதைதான் சொல்லுச்சு” என்க,
“ஓ… எப்பப்பா பேசுனிங்க?” என்று வினவ, சிந்தனையின் பிடியில் இருந்தவனுக்கு அதற்கு மேல் மகிழினியினை பற்றிய பேச்சை கேட்க விருப்பம் இல்லாது போக உள்ளே நுழைந்தான்.

அடுத்த கணம் இருவரும் குருவின் அரவத்தில் பேச்சை நிறுத்தியிருந்தனர்.‌ கோதை, “வாப்பா. ரொம்ப லேட் ஆகிடுச்சு” என்றவர், “போய் ப்ரெஷ் ஆகிட்டு வா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்க,

சரியென தலையசைத்து விட்டு உடை மாற்றி கை கால்களை அலம்பிவிட்டு வந்தவன் தாத்தாவுடன் அலுவலக விடயங்களை பேசியபடி உண்டுவிட்டு அறைக்கு திரும்பி இருந்தான்.

வந்தவன் தனது மடிக்கணினியை எடுத்து ஏதோ வேலை செய்ய துவங்கினான். விழிகள் திரையில் இருந்தாலும் மனது சற்று முன்பு கேட்ட விடயத்தில் தான் இருந்தது.

சிறிது நேரம் சிந்தித்தவன் சரி தன்னுடைய நேரடி பார்வைக்கு வரும் போது பேசிக்கொள்ளலாம் என்று எண்ணிவிட்டு மடிக்கணினியை எடுத்து வைத்துவிட்டு உறங்க செல்லும் நேரம் ஹனியிடமிருந்து காணொளி அழைப்பு வந்தது‌.

அவளது பெயரை கண்டதும் வழக்கம் போல மனது இலகுவாக மென்னகையுடன் தான் அழைப்பை ஏற்று தன்னெதிரில் அவளை நன்றாக பார்க்கும் வகையில் அலைபேசியை பொருத்தினான்.

மறுமுனையில் இருந்த ஹனியிடம் எந்த வித வார்த்தையும் வரவில்லை. அமைதியாக அவனை பார்த்திருந்தாள்.

அவளது இந்த நிலையிலே ஏதோ சரியில்லை என்று குருவிற்கு தெரிந்தது. காரணம் அழைப்பை ஏற்றதுமே குரு என்றவளது அழைப்பில் அத்தனை துள்ளல் இருக்கும்.

error: Content is protected !!
Scroll to Top