அடுத்த விநாடியே அதனை ஒதுக்கி தள்ளியவள் அவர் மன்னிப்பை ஏற்று கொண்டதே பெரிய விடயம் இதில் உனக்கு இதெல்லாம் வேறு கேட்கிறதா என்று மனசாட்சி கேள்வி எழுப்பியது.
அதனை பொருட்படுத்தாதவள்,
“அப்புறம் சார் ரொம்ப தாங்க்ஸ் சார்…” என்றவள் இழுக்க,
“ஃபார் வாட்…?” என்று ஒற்றை வரியில் அவனிடம் கேள்வி பிறந்தது.
“அது என் சூழ்நிலை புரிஞ்சு என் வீட்டுக்கு அழைச்சிட்டு போனதுக்கு” என்று மகிழ் பதில் கூற,
“ஹ்ம்ம்…” என்று மீண்டும் ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு அலைபேசியில் புதைந்து கொள்ள,
இவளுக்கு தான் ஏதோ போலானது. வந்த நாள் முதல் இதுபோல தான் அவளை நடத்துகிறான். அவனது ஒவ்வொரு செய்கையிலும் நான் உன் முதலாளி நீ எனக்கு தொழிலாளி என்ற செய்தி ஒளிந்திருக்கும்.
அப்போது எல்லாம் எதுவும் செய்யாதது இப்போது மெலிதாக வலித்தது.
‘ப்ச் அதுதான் உன்னுடைய நன்றியை ஏற்று கொண்டாரே இனி என்ன வேண்டும் உனக்கு பேசாமல் படு…’ என்று மனதினை அதட்டி விட்டு படுத்துவிட்டாள்.
இங்கு அலைபேசியில் கண்ணை வைத்திருந்தாலும் குருவினது எண்ணம் மகியை தான் சுற்றியது.
நேற்று காலை அவளது முகம் நிர்மலாக இருக்க அவள் நன்றாக தான் இருக்கிறாள் என்று எண்ணி கிளம்பியிருந்தான்.
ஆனால் என்னவோ அங்கு வேலை ஓடவில்லை. அகிலனிடம் தான் பார்த்து கொள்வதாய் வேறு கூறியாகிற்று. ஆக என்ன செய்வது என்று தான் சிந்தனை.
அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் அழுகிறாளோ என்று எண்ணம் அவளை தான் சுற்றி வந்தது. இருந்தும் அவளிடம் அழைத்து பேசுமளவு அவனால் இறங்கி வர முடியவில்லை.
இதுவரை அது போல அழைத்து என்ன செய்கிறாய் சாப்பிடடாயா…? என்றெல்லாம் அவன் வினவியது இல்லை.
வெகுநேரம் சிந்தித்து தாய்க்கு அழைத்திருந்தான்.
அழைப்பை ஏற்ற கோதை, “சொல்லுப்பா என்ன இந்த நேரத்தில…?” என்று விசாரிக்க,
“மகிழ் என்ன பண்றாம்மா. கால் பண்ணேன் எடுக்கலை…?” என்று வினவ,
“ரூம்ல இருக்காப்பா. தூங்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன். தலைவலின்னு சொன்னா அதான் டேப்லெட் கொடுத்திருக்கேன். மதியம் சாப்பிட கூட வரலை” என்று கோதை பதில் மொழிய,
“ஓ… இப்போ ஹெட் ஏக் பரவாயில்லையாம்மா…?” என்று குரு வினவினான்.
“சரியாகிருக்கும்னு தான் நினைக்கிறேன். எதுவும் முக்கியமான விஷயமாமா…? நான் வேணா அவ எழுந்ததும் கூப்பிட சொல்லவா…?” என்றிட,
“இல்லை வேணாம் மா. நான் வந்து பாத்துக்கிறேன்” என்று முடித்திருந்தவனுக்கு அவள் உண்ண கூட வராது அழுது கொண்டிருந்தது புரிந்தது.
அதற்கு பிறகு அங்கே இருக்க முடியவில்லை. வீட்டிற்கு சென்றாலும் அவளிடம் தான் சென்று என்ன ஆறுதல் கூற முடியும் என்று தான் தோன்றியது.
ஆனால் அப்படியே விட முடியவில்லை. தன்னை நம்பிய அகிலுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்த போது தான் அவளது வீட்டிற்கு அழைத்து செல்லும் யோசனை வந்தது.
உடனடியாக அலுவலகத்தில் இருந்து கிளம்பி வந்திருந்தான். இதோ பிறந்த வீட்டிற்கு சென்று வந்த பிறகு இவளிடம் தென்பட்ட நிறைவில் குருவிற்கு ஏதோ ஒரு ஆசுவாசம் பிறந்தது.
ஏதோ தன்னால் முடிந்த ஒன்றை இந்த சிறு பெண்ணிற்கு செய்துவிட்டோம் என்று எண்ணியபடி உறங்கிவிட்டான்.
அதன் பிறகு நாட்கள் வழக்கம் போல அவர்களுக்கு நகர்ந்தது. மகிழும் ஓரளவு தேறியிருந்தாள்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு சமையலறையில் கோதைக்கு உதவி கொண்டிருந்தாள் மகிழினி.
“அத்தை பீன்ஸ நறுக்கிட்டேன். கழுவி எடுத்து வச்சிடவா…?” என்று மகிழ் வினவ,
“வச்சிடும்மா…” என்றவர் ஏதோ கேட்க வந்துவிட்டு நிறுத்தினார்.
சரிங்கத்தை என்று பீன்ஸை கழுவி எடுத்து தண்ணீரை வடித்தவள் குளிர்சாதன பெட்டியினுள் வைத்தவள் அப்போது தான் கோதையின் முகம் ஏதோ யோசனையாக இருப்பதை கவனித்தாள்.
“என்னத்தை ஏதோ யோசனை…? என்கிட்ட ஏதாவது கேட்கணுமா…?” என்று வினவினாள்.
என்னவோ இத்தனை மாதங்களாக கோதையுடன் தனியாக இருந்தவளுக்கு அவரிடம் ஏதோ ஒரு பிடிப்பு ஏற்பட்டிருந்தது.
பெற்ற மகளை போல கவனிக்கும் அவரிடம் பாசமும் பிணைப்பும் அதிகமாகியிருந்தது. தற்காலிக உறவு தான் என்றாலும் அவரின் அன்பில் மனது திளைத்தது என்னவோ உண்மை தான்.
இப்போது மகியும் தன்னியல்பை விட்டு கோதையிடம் நன்றாக பேச துவங்கியிருந்தாள். அதன் பொருட்டே இந்த கேள்வி.
“ஒன்னுமில்லைம்மா…” என்றவர் பிறகு தயங்கி,
“உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா எதுவும் எடுத்துக்க மாட்டியே…?” என்று மொழிய,
“கேளுங்கத்தை உங்ககிட்ட நான் என்ன தப்பா நினைக்க போறேன்” என்று மகிழ் பதிலளித்தாள்.
அதில் கோதை தயக்கத்தை விட்டு,
“இதை நான் கேக்க கூடாது தான். என்ன இருந்தாலும் உங்க ரெண்டு பேரோட பர்சனல் இது…” என்று சிறிது இடைவெளிவிட்டவர் பின்,
“குழந்தை பெத்துக்கிறதை ஏதும் தள்ளி போட்டு இருக்கிங்களா…?” என்று கேட்டுவிட,
மகிழ் தான் அந்த வினாவில் அதிர்ந்து நின்றாள். தொண்டைக்குழியில் வார்த்தை சிக்கி கொள்ள,
“அது அத்தை…” என்றவள் என்ன பதில் கூறுவது என்று தெரியாது திணறினாள்.
“கல்யாணம் ஆகி இவ்ளோ நாள் ஆச்சே இன்னும் ஏதும் விஷேசம் இல்லையான்னு என் தூரத்து பெரியம்மா ஒருத்தவங்க கேட்டாங்க. அவங்ககிட்ட நான் பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் எனக்கும் கொஞ்ச நாளா இது தோணுச்சு”
“எனக்கு பேரப்பிள்ளைகளை பார்த்துக்கணும்னு ஆசை இருக்கு மகிழ். நீங்க தள்ளி போட்டு இருக்கிங்களா என்னன்னு தெரியலை. ஆனால் குழந்தைன்றது ரொம்ப பெரிய வரம் அது நாம நினைக்கிறப்போ எல்லாம் கிடைக்காது. அப்படி தள்ளி போட்டிருந்தா அந்த முடிவை கொஞ்சம் ரீகன்சிடர் பண்ணுங்க” என்று முடித்துவிட,
மகிழுக்கு சம்மதாக தலையசைப்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை.
அதன் பிறகு கை வேலை செய்தாலும் மூளை கோதை கேட்ட விடயத்தினை தான் அசைபோட்டது.
அவர் வேறு ஏதோ கேட்க போகிறார் என்று எண்ணியிருந்தவள் இதனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
இன்று இவர் கேட்டுவிட்டார் ஏதோ கூறி சமாளித்தாகிற்று. நாளை வேறு யாராவது கேட்டால் தான் என்ன கூறுவது முதல் வேலையாக குரு வந்ததும் இதனை கூற வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
அதன் பின் மனது குருவை தான் எதிர்பார்த்து இருந்தது. வழக்கம் போல இருட்டிய பிறகு தான் வந்தான்.
குழந்தைகளை உண்ண வைத்து உறங்க வைத்தவள் மடிக்கணினியை மடியில் வைத்து அமர்ந்திருந்தவன் முன் சென்று நின்றாள்.
வேலையில் மும்முரமாக இருந்தவன் இவளது அரவத்தை உணரவில்லை.
இரண்டு நிமிடங்கள் நின்று பார்த்தவள்,
“சார்…” என்று அழைத்துவிட,
முகத்தை நிமிர்த்தியவன் என்னவென்பதாக பார்க்க,
“அது உங்க அம்மா இன்னைக்கு என்கிட்ட நாம ஏன் இன்னும் குழந்தை பெத்துக்கலைன்னு கேட்டாங்க…” என்று அவர் பேசிய அனைத்தையும் கூறி அவன் முகம் பார்த்திருந்தாள்.
குருவும் அமைதியாக அவளை தான் பார்த்திருந்தான்.