மதுபாலாவைப் பார்த்து விட்டு,”ரொம்பக் கியூட் ஆகப் பப்ளிமாஸ் மாதிரி இருக்கு இந்தப் பொண்ணு!”என்று தன் தம்பியிடம் புன்னகையுடன் தெரிவித்தாள் வெண்பா.
“ஆமாம்க்கா”எனத் தானும் மதுபாலாவைப் பார்த்து ரசனையாக கூறியவனை ஆராய்ச்சியாகப் பார்த்து விட்டு,
“சரி. இப்போ அவங்களை நேரில் போய்ப் பார்த்துப் பேசுவோமா?”என்றதுமே,
“போகலாம் க்கா”என்று கூறி விடவும்,
அவர்கள் இருவரும் இணைந்து மதுபாலாவின் அறையை நோக்கி நடந்தனர்.
இதே நேரத்தில் தங்களது முதலாளியின் தமக்கைக் கணவனான மித்ரன் கேட்டவற்றைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தான் வெற்றிச்செல்வன்.
அப்போது,”என் வொய்ஃப் பேசியதை நினைச்சு நீங்க இன்னும் ஃபீல் பண்றீங்களா?”எனத் தன்னிடம் அக்கறையாக கேட்டவனிடம்,
“அச்சோ! நான் மேடம் பேசியதை எப்பவோ மறந்துட்டேன் சார். ஏன்னா, நான் இந்தக் கம்பெனியில் பல வருஷமாக வேலைப் பார்த்துட்டு இருக்கேனே சார்? எனக்கு அவங்களைப் பத்தி தெரியாதா என்ன? இந்த வேலையை எல்லாம் முடிச்சிட்டுப் போனால் என் மேலே இருக்கிறக் கோபத்தை மறந்துட்டுச் சாதாரணமாகப் பேசுவாங்க மேடம்! அதுவும் எனக்கு நல்லாவே தெரியும்!”என்று விளக்கம் அளிக்கவும்,
அதைக் கேட்டதுமே அவனது முதுகைத் தட்டிக் கொடுத்து,”நீங்க என்ன தான் எங்களை விட வயசில் சின்னவராக இருந்தாலும் கூட ரொம்பவே மன முதிர்வோடப் பேசுறீங்க வெற்றி. எங்களைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்பத் தாங்க்ஸ் யூ சோ மச்”என அவனுக்கு மனதார நன்றிக் கூறினான் மித்ரன்.
“அச்சோ! பெரிய வார்த்தையை எல்லாம் சொல்லாதீங்க சார்!”என்றுரைத்து விட்டு,
அவனுக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுப்பதை தொடர்ந்தான் வெற்றிச்செல்வன்.
இதே சமயம் தங்கள் அலுவலக அறையிலிருந்து புறப்பட்டு மதுபாலாவின் அறையை அடைந்திருந்தார்கள் புகழேந்தி மற்றும் வெண்பா.
அவர்களைப் பார்த்ததுமே மிகவும் பரபரப்பாகிப் போய்,
“வாங்க சார்! மேடம்! உட்காருங்க”என அவர்கள் இருவரும் அமர்வதற்காக நாற்காலிகளை எடுத்துப் போட எத்தனித்தாள் மதுபாலாவின் வழிகாட்டிப் பெண்ணான வினோதினி.
அதை மறுத்து விட்டு,”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மேம். நீங்க எப்பவும் போலவே உங்களோட வேலையைப் பாருங்க! நாங்க சும்மா ஆஃபீஸில் எல்லாத்தையும் சுத்திப் பார்க்கத் தான் வந்தோம்!”என்று கூறி அவரை அமைதிப்படுத்தி விட்டு அவரது வேலையைத் தொடரச் சொன்னார்கள் அந்த அக்காவும், தம்பியும்.
அதற்குப் பிறகு,”நாங்கப் புதுசாக வேலையில் சேர்ந்திருக்கிற அந்தப் பொண்ணு எப்படி வேலைப் பார்க்கிறாங்கன்னு தான் மேற்பார்வையிட வந்திருக்கோம். அதை நாங்களே பார்த்துக்கிறோம்!”என்றவர்களோ,
அவருக்குச் சற்றுத் தள்ளியிருக்கும் மதுபாலாவின் அறையின் வெளியே இருந்து கொண்டு அதன் கதவைத் தட்டினர் அவ்விருவரும்.
தனது அறைக் கதவுத் தட்டும் சத்தத்தைக் கேட்டு விட்டு,”யாரு?”எனக் கேட்கவும்,
“நான் எம். டி வந்திருக்கேன்”என்று அவளுக்குப் பதிலளித்தான் புகழேந்தி.
அந்தப் பதிலில் உடனே தன்னுடைய வேலையை அப்படியே போட்டு விட்டுத் தன்னுடைய நாற்காலியில் இருந்து எழுந்து தனது அறைக் கதவைத் திறந்தவுடன்,
அங்குத் தனது முதலாளியும், அவனுடன் சேர்ந்து, ஒரு திருமணமானப் பெண்ணும் நின்றிருப்பதைக் கண்டதுமே அவர்களைக் குழப்பத்துடன் ஏறிட்டாள் மதுபாலா.
அதைப் புரிந்து கொண்டு,”இவங்க என்னோட அக்கா. இந்த ஆஃபீஸை மேற்பார்வையிட வந்திருக்காங்க! அதே மாதிரி, நீங்கப் புதுசாக வேலைக்குச் சேர்ந்தவங்க அப்படின்றதால் உங்களையும் பார்த்து, விசாரிச்சுட்டுப் போகலாம்னு வந்திருக்காங்க! ஒருவேளை எங்கிட்டயோ, வெற்றிக் கிட்டயோ சொல்ல முடியாத நிறைகள், குறைகளை இவங்க கிட்டே சொல்லனும்னு நினைச்சா நீங்கத் தாராளமாகப் பகிர்ந்துக்கலாம்”என்று அவளிடம் தன்மையாகத் தெரிவித்தான் புகழேந்தி.
“ஓகே சார்”என்று அவனிடம் கூறி விட்டு,
“குட் மார்னிங் அண்ட் வெல்கம் மேம்”என்று அவனது தமக்கையைப் பார்த்து முகிழ்நகையுடன் வரவேற்ற அந்தப் பெண்ணை முதல் பார்வையிலேயே வெண்பாவிற்கு மிகவும் பிடித்துப் போயிற்று எனலாம்!
ஆனால் மதுபாலாவின் தோற்றத்தை விடவும், அவளது குணநலன்கள் மிகவும் முக்கியமானது தானே? என்பதாலேயே தன்னை இயல்பாக வைத்துக் கொண்டு,
“குட் மார்னிங் மேம்! தாங்க்யூ!”என்று அவளுக்குப் பதிலளித்தாள் வெண்பா.
உடனே,”நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் ஆஃபீஸில் மத்தவங்க எப்படி வேலைப் பார்த்துட்டு இருக்காங்கன்னுக் கண்காணிச்சுட்டு வர்றேன்”என அவர்கள் இருவருக்கும் தனிமையைக் கொடுத்து விட்டு அங்கேயிருந்து அகன்று விட்டான் புகழேந்தி.
உடனே,”நீங்க உட்காருங்க மேம் ப்ளீஸ்!”என்று தன் முதலாளியின் தமக்கையிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் மதுபாலா.
அதில் மெலிதாக குறுநகையை உதிர்த்து விட்டு அவளுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
“அப்பறம், உங்களுக்கு இந்த வேலைப் பிடிச்சு இருக்கா மிஸ். மதுபாலா?”என்று அவளிடம் விசாரணை நடத்தினாள் வெண்பா.
அதற்கு அவளோ,“ம்ஹ்ம். ரொம்பவே பிடிச்சு இருக்கு மேம்”என்றாள் பளிச்சென்றப் புன்னகையுடன்.
“சூப்பர்! இங்கே உங்களுக்கு யாராவது, ஏதாவது தொந்தரவு கொடுக்கிறாங்களா? அவங்கப் பையனாக இருந்தாலும், பொண்ணாக இருந்தாலும் சொல்லுங்க”என்றவளிடம்,
“இதைப் புகழேந்தி சாரும், எனக்கு வழிகாட்டியாக இருக்கிற வினோதினி மேடமும் எங்கிட்ட முன்னாடியே கேட்டுட்டாங்க மேம்! இதுவரைக்கும் அப்படி யாரும், எந்தத் தொந்தரவும் எனக்குக் கொடுக்கலை! இனிமேல் நடந்தால் நான் கண்டிப்பாக உங்க எல்லார் கிட்டேயும் தயங்காமல் சொல்லிட்றேன்”எனக் கூறி விட்டிருந்தாள் மதுபாலா.
“சரிங்க மேம். இந்தக் கம்பெனியை உங்களுக்கு யாரு பரிந்துரை செஞ்சா?”என அவளிடம் சாதாரணமாக வினவினாள் வெண்பா.
ஆனால் அவளது அந்தக் கேள்வியில் தனது முகத்தில் பதட்டம் வந்து விட்டதை உணர்ந்து கொண்டு,
“என்னோட ஃப்ரண்ட் தான் பரிந்துரை செஞ்சாள் மேம்”என்று அவளுக்குப் பதிலளித்தாள் மதுபாலா.
“அப்படியா? அதை ஏன் இவ்வளவு பதட்டமாகச் சொல்றீங்க?”என்றதுமே,
“நான் இதுக்கான காரணத்தை ஏற்கனவே சார் கிட்டே சொல்லிட்டேன். ஆனாலும் நீங்க கேட்டதால் உங்ககிட்ட சொல்றேன்”என்றவளோ,
இந்த வேலையைத் தனக்குப் பரிந்துரை செய்தது தன்னுடைய தோழி என்பதையும், அவளும் இங்குத் தான் வேலை செல்கிறாள் என்பதையும், அத்துடன் சேர்த்து அதை அறிந்ததுமே புகழேந்தி சொன்னக் கட்டுப்பாட்டையும் அவளிடம் விவரித்தாள் மதுபாலா.
அதைக் கேட்டு விட்டு,”ஓஹோ! நான் உங்க ரெண்டு பேரையும் தப்பாக நினைச்சுப்பேன்னு நீங்கப் பதட்டப்பட்டீங்களா?”எனக் கேட்டிருந்தாள் வெண்பா.
அதில் அவளைச் சங்கடத்துடன் ஏறிட்டு,”ஆமாம் மேம்”என்று ஒப்புக் கொண்டவளிடம்,
“நீங்கப் பதட்டப்படத் தேவையில்லை. ஆனால் இந்த விஷயத்தில் என் தம்பி உங்களுக்குச் சொன்னதை தான் நானும் உங்ககிட்ட சொல்றேன்! மத்தபடி உங்க வேலையில் எந்த தவறும் நடக்கலைன்னா எங்களுக்கும் உஙகளைப் பத்தி எந்தக் குறையும் தோனாது! ஓகேவா?”என்று கூறித் தெளிவுபடுத்த,
அதில் தனது குண்டுக் கன்னங்கள் குவிய,”ஓகே மேம்”என்று அவளுக்குப் பதிலளித்து விட்டவளைப் புன்சிரிப்புடன் நோக்கி,
“சரி. நீங்க உங்க வேலையைத் தொடருங்க!”என்று நாற்காலியில் இருந்து எழுந்து அவளது அறையை விட்டு வெளியேறினாள் வெண்பா.
அதே நேரத்தில், மதிய உணவு இடைவேளை ஆரம்பிக்கும் சமயத்தில் மித்ரனுக்குத் தேவையான துணிகளை அதற்குரிய பைகளில் நிரப்பி அவனிடம் சேர்ப்பித்து விட்டிருந்தான் வெற்றிச்செல்வன்.
அதில் மனம் நிறைந்து போய்,”ரொம்ப தாங்க்ஸ் வெற்றி! நீங்க இல்லைன்னா என்னோட இந்த வேலை ஈஸியாக முடிஞ்சு இருக்காது!”என்று அவனை மனதாரப் பாராட்டிப் பேச,
“தாங்க்ஸ் எல்லாம் எதுக்கு சார்? நீங்க என்னோட முதலாளியாக இருக்கும் போது, நான் நீங்க கேட்டதைச் செஞ்சிக் கொடுக்கிறது தானே என்னோட வேலையே?”என்றவனிடம்,
“நான் உங்களுக்கு முதலாளி இல்லை வெற்றி! புகழேந்தி சாரும், வெண்பா மேடமும் தான் உங்களோட முதலாளி! அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க! நீங்க எனக்கு முதலாளிக்கான மரியாதை எல்லாம் கொடுக்கத் தேவையில்லை. நியாயமான மரியாதை மட்டும் கொடுத்தால் போதும்”என அவனுக்கு அறிவுறுத்தினான் மித்ரன்.
அதற்குச்,“சரிங்க சார்” என்று தானும் உரைத்து விட்டான் வெற்றிச்செல்வன்.
அப்போது தன்னுடைய கண்காணிப்பு வேலையையும் முடித்துக் கொண்டு அவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் புகழேந்தி.
அவனைக் கண்டதுமே,”மாப்பிள்ளை! எனக்கு உன்னோட பி. ஏ சார் தான் ரொம்பவே உதவிச் செஞ்சார்டா”என்று தன் மனைவியின் தம்பியிடம் அவனது காரியதரிசியைப் பற்றிப் புகழ்ந்து பேசினான் மித்ரன்.
“அப்படியா மாமா? ரொம்பச் சந்தோஷம்”என்றுரைத்து விட்டு,
தன் காரியதரிசியிடம்,”குட் ஜாப் மிஸ்டர். வெற்றி!”என அவனையும் பாராட்டத் தவறவில்லை புகழேந்தி.
“தாங்க்யூ சார்”என்றவனை அவனது வேலையைப் பார்க்குமாறு கூறி அனுப்பி வைத்து விட்டு,
“இன்னும் வெண்பாவைக் காணலையே! லன்ச் டைம் ஆயிடுச்சு. கால் செஞ்சிப் பார்க்கவா?”என்று மித்ரன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
அங்குப் பிரசன்னம் ஆகி விட்டிருந்தாள் வெண்பா.
“என்னக்கா இவ்வளவு நேரமாக எங்கே இருந்த?”என அவளிடம் விசாரித்தான் புகழேந்தி.
“அந்த மதுபாலா பொண்ணுக் கிட்டே தான் பேசிட்டு இருந்தேன்டா. அதான், லேட் ஆயிடுச்சு”என்றதுமே,
அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்து,”அவங்களுக்கும், நமக்கும் அம்மா, அப்பா இல்லைன்ற ஒரு சாஃப்ட் கார்னரால் நீ அவங்க கிட்ட இந்த ஒரு தடவைப் பேசினதோட நிறுத்திக்கிறது நல்லதுன்னு எனக்குத் தோணுதுக்கா!”என்று தமக்கைக்கு எச்சரிக்கை விடுத்தான் புகழேந்தி.
அதைக் கேட்டதுமே நமுட்டுச் சிரிப்பை வெளிப்படுத்தி,”ஓஹ்! அதை நீ எனக்குச் சொல்றியா?”எனக் கேட்டு விட்டுத் தம்பியைக் கூரியப் பார்வையால் துளைத்து எடுத்தாள் வெண்பா.
தன்னுடைய தமக்கையின் அந்தக் கேள்வியும், கூரியப் பார்வையும் தடுமாறச் செய்து விட்டதை அடையாளம் கண்டு கொண்டு,”க்கும்! எனக்கு ரொம்பப் பசிக்குது. சாப்பிடப் போகலாமா?”என மற்ற இருவரிடமும் வினவ,
“ஆமாம். எனக்குமே பசி வயித்தைக் கிள்ளுது! ஏதாவது சைவ ஹோட்டலுக்குப் போவோமா?”என்றிருந்தான் மித்ரன்.
“போகலாம். வாங்க”என்றவுடன்,
தாங்கள் மூவரும் அலுவலக அறையை அடைந்து அதைப் பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு வெற்றிச்செல்வனிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு வரவேற்பு இடத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்கள் புகழேந்தி, மித்ரன் மற்றும் வெண்பா.
அப்போது தனது மதிய உணவுப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அலுவலகத்தின் சிற்றுண்டிச் சாலையில் ஒரு மேசை மற்றும் நாற்காலியைப் பிடித்து அமர்ந்திருந்த மதுபாலாவை அவர்கள் பார்க்க நேரிட்டது.
ஆனால் இவர்கள் மூவரும் தன்னைக் கவனிப்பதை அறியாமல், தனக்கு எதிரில் வந்தமர்ந்த தோழியைப் பார்த்துப் புன்னகைத்து,
“உனக்காகத் தான் காத்திருந்தேன்! நல்லவேளை சீக்கிரம் வந்துட்ட! இல்லைன்னா என்னோட வயிறுச் சத்தம் போட ஆரம்பிச்சு இருக்கும் டி!”என்றிருந்தாள் மதுபாலா.
அதற்கு அவளது தோழியான பிரேமாவோ,”நீ என்னை விட்டுட்டுச் சாப்பிட்டுத் தான் பாரேன்! உன்னைப் பிச்சுப்போடுவேன்!”என்று அவளை வழக்கம் போலவே பொய்யாக மிரட்டினாள்.
“அந்தப் பயம் இருக்கப் போய்த் தான் நான் என்னோட டிபன் பாக்ஸைக் கூடத் திறக்காமல் இருக்கேன் பார்த்தியா?”
“ம்ஹ்ம். நீ கொஞ்சம், கொஞ்சமாக என்னோட டிரெயினிங்கில் பாஸ் ஆகிட்டே வர்ற! இப்படித் தான் இருக்கனும். சரியா?”என அவளுக்கு அறிவுறுத்தினாள் பிரேமா.
“சரிம்மா. சாப்பிடலாம்மா”எனக் கூறி அவளுடன் சேர்ந்து உணவுண்ணத் தொடங்கி விட்டாள் மதுபாலா.
அவர்கள் இருவரின் சம்பாஷணைகளைக் கேட்டு முடித்து விட்டுத் தங்களுக்கும் பசி உயிர் போனதால் அலுவலகத்தில் இருந்து கிளம்பிச் சைவ உணவகத்திற்குச் சென்று விட்டனர் வெண்பா, மித்ரன் மற்றும் புகழேந்தி.
இங்கே தனது உணவை உண்டு கொண்டே,”இன்னைக்கு நம்ம முதலாளியோட அக்கா என்னைப் பார்க்க வந்திருந்தாங்கடி!”என்று தோழியிடம் ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொண்டாள் மதுபாலா.
அதைக் கேட்டதுமே,”அப்படியா? இங்கே புதுசாக வேலைக்குச் சேர்ந்தவங்களைப் பார்த்துப் பேசுவது அவங்களோட பழக்கம் டி! அதனால் தான் உன்னைப் பார்க்க வந்திருந்து இருப்பாங்க!”என அவளுக்குத் தெரிவித்தாள் பிரேமா.
“ஓஹோ சரி டி. ஆனால் அவங்களுக்கு நம்மளைப் பத்தி தெரியலை! புகழ் சாரும் அவங்க கிட்ட சொல்லலைப் போலிருக்கு”என்றவளோ,
தனக்கும், வெண்பாவிற்கும் இடையே நிகழ்ந்த உரையாடலைப் பற்றி அவளுக்கு விளக்கமாக கூறினாள் மதுபாலா.
அதில்,”அப்படியா விஷயம்? அப்படின்னா சரி டி! நமக்கு இனிமேல் இங்கே எந்தப் பிரச்சினையும் வராது!”என்று தனது மனம் இலேசாகிப் போனதை உணர்ந்து தோழியிடம் சொன்னாள் பிரேமா.
“ஆமால்ல”என்றுரைத்து விடவும்,
தங்களது சாப்பாட்டைச் சுவைக்கும் வேலையைத் தொடர்ந்தார்கள் அந்தத் தோழிகள் இருவரும்.
உயர் தர சைவ உணவகத்தில் தங்களுக்கான மேசையைத் தேர்வு செய்து அதில் அமர்ந்து கொண்டுத் தங்களது விருப்ப உணவுகளைக் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பி வைத்து விட்டு,
“இப்போ காலையில் இருந்து மதியம் வரைக்கும் ஆஃபீஸில் நீங்கப் பார்த்த நிறை, குறைகள் என்னன்னுச் சொல்லுங்களேன்!”என்று தன் அக்கா மற்றும் அவளது கணவனிடம் கேட்டுக் கொண்டான் புகழேந்தி.
- தொடரும்