காதல் 17.2

இங்கு குரு தான் அவளது அணைப்பில் அதிர்ந்து நின்றுவிட்டான்.

நிச்சயமாக மனது மகியை தவறாக எண்ணவில்லை.‌ இதோ இத்தனை மாதங்களாக ஒரே அறையில் இவளை பார்த்து வருகிறானே…?

இளையவர்களை இடையில் படுக்க வைத்திருந்தாலும் மெத்தையின் ஓரத்தில் தான் படுத்து கொள்வாள். அதுவும் போர்வையை எடுத்து கால் முதல் தலைவரை நன்றாக இழுத்து போர்த்தி கொள்வாள்.

உறக்கத்தில் கூட போர்வை விலகிவிடுமோ அல்லது குருவின் உறக்கம் கெட்டுவிடுமோ என்று நினைத்து திரும்பி கூட படுக்க மாட்டாள். அப்படியே பொம்மை போல ஒரு இஞ்ச் கூட நகராது படுத்திருப்பாளே…

உணவு வைக்கும் போது அருகே நின்றிருந்தாலும் தெரியாது கூட குருவை இவளது விரலோ உடையோ கூட தீண்டியது இல்லை. அவ்வளவு கவனமாக அவள் இருப்பாள் அதனை குருவும் கவனித்து இருந்தான்.

ஒரு முதலாளியாக அனைத்தையும் உற்று நோக்கும் அவனது குணம் இதனையும் கவனித்திருந்தது.

ஆக இவனது மனம் துளியும் மகியை தவறாக எண்ணவில்லை. அவளது நிலை குருவிற்கு புரிந்தது.

தொடர்ந்த அவளது அழுகையில் குருவிற்கு கூட மகியின் மீது பரிதாபம் பிறந்தது.

எதுவும் அறியாத இளமை பருவத்தில் எப்படி இவள் இந்த மூவரையும் வளரத்து உடன் படித்து கொண்டே வேறு இருந்திருக்கிறாள். தனது தந்தையின் இழப்பின் போது அருகில் தாய் மற்றும் தாத்தா என்று தேற்ற இருவர் இருந்த போதும் மனதின் வேதனையை தன்னால் சுமக்க இயலவில்லையே‌.

ஆனால் இவள் துக்கத்திற்கு ஆறுதல் கூற கூட ஆள் இல்லாது தவித்திருப்பாள்.‌ இதில் கை குழந்தை வேறு வாழ்க்கை எத்தனை துன்பங்களை இவளுக்கு கொடுத்திருக்கிறது என்று இவளுக்காக சிந்தித்தது.

அவளது இறுகத்தை உணர்ந்த போதும் அப்படியே தான் நின்றான். மகியின் சூடான கண்ணீர் தன்னுடலை நனைத்துவிட்டு செல்கிறது என்று புரிந்த போதும் அவன் அசையவில்லை.

ஒரு கணம் அவளது தலையை ஆதுரமாக வருட வந்த கை சடுதியில் இறங்கிவிட்டது.

நிமிடங்கள் கடந்த பிறகு தான் மகிழுக்கு தன்னுடைய செய்கை புரிந்தது. தான் குரு பிரசாத்தை வெகு இறுக்கமாக அணைத்து அவனது வயிற்றில் முகம் புதைத்திருப்பது புரிந்தது.

சடுதியில் தீ சுட்டாற் போல விலகியவள்,

“சா… சாரி சாரி சாரி…” என்று பல முறை கூறிவிட்டு அவசர கதியில் எழுந்து உள்ளே அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

கதவை பூட்டி அப்படியே மடங்கி அமர்ந்து முகத்தை புதைத்து கொண்டவளுக்கு அழுகை குறையவில்லை. வெகுநேரம் அழுது கரைந்தவளுக்கு நேரம் காலம் தெரியவில்லை.

“மகிழ் டைம் ஆகிடுச்சு. பசங்களுக்கு பசிக்கிதாம். கிளம்பணும்…” என்று கதவிற்கு பின் கேட்ட குருவின் குரல் அவளை அழைக்க,

பிள்ளைகள் என்றதும் சட்டென்று விழிகளை துடைத்துவிட்டு,

“ஹான் இதோ இதோ ஃபைவ் மினிட்ஸ்ல வந்துட்றேன்” என்றவளது குரல் என்ன முயன்றும் அழுகையில் கரகரத்தது.

எழுந்து சென்று முகத்தை அழுந்த கழுவி துடைத்தாள். இருந்தும் அழுததில் அப்படியே வீங்கி சிவந்திருந்தது.

நன்றாக துடைத்துவிட்டு வெளியே வந்தவள் வெளியே வந்து கூடத்தில் மாட்டப்பட்டிருந்த தாய் தந்தையர் மற்றும் அண்ணன் அண்ணி புகைப்படத்தின் முன் விழி மூடி நின்றாள்.

இரண்டு நிமிடங்கள் கடந்ததும் விழி திறந்தவள் குருவிடம் வந்தவள் அவனது முகம் காணாது,

“போகலாம் சார்…” என்றாள்.

அதன் பிறகு வீட்டை பூட்டும் முன் ஒரு முறை விழிகளில் நிரப்பி கொண்டவள் புறப்பட்டாள்‌.

இடையில் குழந்தைகள் பசியென கூறிவிட ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு கிளம்பினர்.

அவனிடம் இருந்து விலகிய நொடியில் இருந்தே மகிழுக்கு இதே குற்றவுணர்வு தான்.

நடந்தவற்றை இவள் நினைத்து கொண்டிருக்க இளையவர்கள் உறங்கி இருந்தனர்.

அதனை உணர்ந்தவள் குருவும் உறங்கிவிட்டானா? என்று எண்ணி தலையை உயர்த்தி பார்க்க சாய்ந்து அமர்ந்து கொண்டு அலைபேசியை பார்த்து கொண்டு இருந்தவன் இவளது செயலை உணர்ந்து திரும்பி என்னவென புருவம் உயர்த்த,

இதனை எதிர்பாராதவள் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்திருந்தாள்.

அவளது செயலில் குரு புருவத்தை சுருக்கி பார்க்க,

“அது வந்து சார் நான் அங்க வீட்ல உங்களை பி.. பிடிச்சது சாரி நான் வேணும்னே பண்ணலை. அது ஏதோ எமோஷனல்ல பண்ணிட்டேன். சா… சாரி சார்…” என்று திக்கி திணறி வார்த்தைகளை திருப்பி போட்டு சொல்ல வந்ததை கூறி முடித்தவள் பதிலுக்காய் அவன் முகம் கண்டாள்.

உள்ளே என்னவோ ஒரு படபடப்பு. மன்னிப்பை ஏற்று கொண்டால் போதும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது மனதிற்குள்.

ஒரு நொடி ஆழ்ந்த அமைதியான பார்வையை அவள் மீது வீசியவன் பின்னர் ஒரு தலையசைப்பை கொடுத்தான் அவளது மன்னிப்பை ஏற்கும் விதமாக.

மகிழுக்கு இதில் நிம்மதி பிறந்தாலும் அவன் வாயை திறந்து நான் உன்னை தவறாக எண்ணவில்லை என்று கூறியிருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கணம் தோன்றியது.

error: Content is protected !!
Scroll to Top