அதற்கு மேல் அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. குருவும் அவள் மேல் ஒரு கண் வைத்தபடி வேலையை கவனிக்க சிறிது நேரத்தில் மகியும் எடுத்து வைத்துவிட்டு படுத்தாள்.
ஆனால் உறக்கம் அண்டவில்லை. விழிகளை மூடினால் தாய் தந்தையரின் முகம் தான். ஐந்து வருடத்திற்கு முன்பு இந்நேரம் என்ன செய்து கொண்டிருந்தோம்.
பெற்றோருடன் பேசி சிரித்து உண்டுவிட்டு உறங்க சென்றிருந்தோம். முதல் நாள் தூங்க செல்லும் போது மறுநாள் தன்னுடைய வாழ்வே அழிய போகிறது என்று கிஞ்சித்தும் கனவிலும் அவள் எண்ணியிருக்கவில்லை.
விழிகளில் நீர் நிறைய திரும்பி திரும்பி படுத்தாள். அவள் அசைவிலே மகி உறங்கவில்லை என்று குருவிற்கு தெரிந்தது.
எப்போதும் படுத்தவுடனே எந்த புறமும் திரும்பாது குருவிற்கு தொந்திரவு வரக்கூடாது என்று அசையாது படுத்திருப்பாள். அது இந்த அறைக்கு வந்த நாள் முதலே அப்படித்தான்.
ஆனால் இன்று தன்னிலை இழந்திருந்தாள். தனக்குள்ளே உழன்றபடி இருந்தவள் எப்போது சயனத்திற்கு சென்றாள் என்று தெரியவில்லை.
மறுநாள் குரு எழும் போது வழக்கம் போல அவள் அருகில் இல்லை. ஆனால் குருவின் விழிகள் அவளை தான் தேடியது.
அறையிலும் அவள் இருப்பதற்கான அறிகுறி இல்லை. குரு எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு குளித்து வர மேஜையில் சூடாக தேநீர் இருந்தது.
எப்போது வந்து சென்றாள் என்று தெரியவில்லை. இளையவர்கள் இன்னும் உறகத்தில் தான் இருந்தனர்.
இன்று அலுவலகத்தில் நிர்வாகசபை கூட்டம்(போர்ட் மீட்டிங்) இருந்தது. ஆதலால் குரு சற்று விரைவாக கிளம்ப வேண்டும்.
சடுதியில் தேநீரை பருகிவிட்டு உடை மாற்றி கீழிறங்கி வர,
“வாப்பா வந்து சாப்பிடு. இன்னைக்கு உனக்கு போர்ட் மீட்டிங் இருக்குனு மகி சொன்னா. அதான் சீக்கிரமா ரெடி பண்ணிட்டேன்” என்ற தாயின் குரலுக்கு செவி சாய்த்து தலையசைத்தவனது விழிகள் மகிழினியை தான் தேடியது.
எங்கும் அகப்படாமல் காலையில் இருந்து அவனுடன் கண்ணாம்பூச்சி ஆடி கொண்டு இருக்கிறாள்.
குரு அமர்ந்ததும் தட்டில் இட்லியை வைத்த கோதை,
“மகி சீக்கிரமா சட்னியை தாளிச்சு கொண்டாம்மா. பிரசாத் சாப்பிட வந்துட்டான்” என்று குரல் கொடுக்க,
“இதோ வர்றேன்த்தை…” என்ற குரல் வர அடுத்த ஐந்து நொடிகளில் கையில் சட்னி கிண்ணத்துடன் ஒரு சாம்பல் நிற புடவையில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
முகத்தை உத்து கவனித்தான். எந்த மாற்றமும் இல்லை. நிர்மலாக இருந்தது. அது அப்படி இருந்ததா இல்லை அவள் காண்பித்து கொண்டாளா என்பது அவளுக்குத்தான் தெரியும்.
தலையில் சொட்டு சொட்டாக வடிந்த நீரை பொருட்படுத்தாது அவனுடைய தட்டில் சட்னியை வைத்தவள்,
“கார சட்னி வைக்கட்டுமா?” என்று மகிழ் வினவ,
பதிலளிக்காது நெற்றியில் சிந்தனை முடிச்சுடன் அவளையே பார்த்திருந்தான்.
இவள் தான் அவனது பதிலின்மையில் என்ன செய்வதென தெரியாது மாமியாரை ஒரு கணம் பார்த்துவிட்டு,
“உங்ககளைத்தான் கார சட்னி வைக்கட்டுமா…?” என்று மீண்டும் அழுத்தி வினவ,
அதில் சுயநினைவை அடைந்தவன் சடுதியில் முகத்தினை திருப்பி கொண்டு,
“ஹ்ம்ம்…” என்று மட்டும் பதில் மொழிந்தான்.
மகி அமைதியாக சட்னியை வைத்துவிட்டு நகர போக,
“என்னம்மா நீ தலையில இப்படி ஈரம் சொட்டுது அப்படியே இருக்க. வா துவட்டி விட்றேன்” என்று அவளது கூந்தலை துவட்டிவிட்டார்.
அமைதியாக உண்டு கொண்டிருந்த குருவின் மறுகையில் அலைபேசி இருக்க செவி இரண்டும் அவர்கள் பேசுவதை உள்வாங்கி கொண்டிருந்தது.
அவர்கள் இருவரும் வருவதற்குள் குரு உண்டுவிட்டு எழுந்திருந்தான்.
கோதை, “என்னப்பா அதுக்குள்ள எழுந்துட்ட. போதுமா?” என்று மகன் கை கழுவியை கவனித்துவிட்டு வர,
“போதும்மா. டைம் ஆச்சு” என்றவன் வெளியேற விழைய மகிழ் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
அவளது நினைவு தான் குடும்பத்தினரிடம் இருந்ததே…?
அவளது முகத்தை வைத்து ஓரளவு சாதரணமாக தான் இருக்கிறாள் என்று எண்ணி கிளம்பிவிட்டான்.
ஒரு வேளை மகிழ் அழுது கொண்டிருந்தாலும் தன்னால் என்ன செய்துவிட முடியும். அவளிடம் அழாதே அது இதுவென பேசிவிடவா முடியும்.
தனக்கு அது போலவெல்லாம் யாரிடமும் பேசி பழக்கமில்லை. அது போல வரவும் செய்யாது. ஹனியிடம் மட்டும் ஏதோ அவளது கண்ணீரை காண இயலாது பேசுவான் அவ்வளவு தான்.
இங்கே மகிழ் தான் அழக்கூட முடியாது அறைக்குள் முடங்கி கொண்டாள்.
வருடா வருடம் தாய் தந்தை மற்றும் அண்ணன் அண்ணி புகைப்படத்தை வைத்து வணங்கி படையல் எல்லாம் கூட தனக்கு தெரிந்த முறையில் செய்வாள்.
ஆனால் இப்போது அதெல்லாம் செய்ய மனது வரவில்லை. காரணம் உள்ளூர ஒரு உறுத்தல் இத்தனை பேரை ஏமாற்றி நடித்து கொண்டு இருக்கிறோம்.
தாய் தந்தையர் இருந்தால் நிச்சயமாக இதற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள்.
கண்டிப்பாக தான் செய்யும் காரியத்திற்கு தன் மேல் கோபத்தில் தான் இருப்பார்கள். தான் படையல் வைத்து வணங்கினாலும் ஏற்க போவதில்லை என்று அவளுக்கு புரிந்தது.
அதற்கு மேல் தான் செய்து வைத்திருந்த செயலால் அவளாலே அவளுடைய பெற்றோர் புகைப்படத்தை நேரடியாக கண்டு இப்போதெல்லாம் வணங்க முடிவதில்லை.
ஆதலால் எழுந்து குளித்துவிட்டு கடவுளை வணங்கியவள் அதோடு மனதில் தாய் தந்தையரையும் வணங்கி கொண்டாள்.
அது மகியால் இந்த வருடம் செய்ய முடிந்தது. இனியும் மற்றவைகளை செய்ய முடியுமா என்று அவளுக்கு தெரியவில்லை.
அறைக்குள் அழுது தீர்த்தவள் மதிய உணவிற்கு கூட வரவில்லை. கோதை அழைத்த போது தலைவலி என்று கூறி மறுத்துவிட்டாள்.
ஆனால் பள்ளியில் இருந்து வந்த மகியின் குழந்தைகள் அவளை விடுவதாக இல்லை.
“வா சைக்கிள் ஓட்டலாம் வாம்மா சைக்கிள் ஓட்டலாம்…” என்று அவளை இழுத்து வந்துவிட்டனர்.
குரு கூறியது போலவே இருவருக்கும் ஒரு சிறிய மிதிவண்டி வாங்கி கொடுத்திருந்தான்.
பள்ளி முடிந்து வந்ததும் தினமும் அதனை இளையவர்கள் பயன்படுத்துவார்கள்.
இன்றும் அதுபோல மிதிவண்டியை இயக்கினர். எழில் நன்றாக இயக்குவான். கவினுக்கு இன்னும் சரியாக வரவில்லை.
அவனை மட்டும் மிதிவண்டியை பிடித்து கொண்டு தான் இயக்கவிடுவாள்.
இன்றும் அதுபோல பிடித்திருந்தவள் ஏதோ நினைவில் இறுக்கத்தை தளர்த்திவிட கவின் மிதி வண்டியுடன் விழ சென்றான்.
மகிழ் பதறி பிடிக்க வருவதற்குள் அவளையும் சேர்த்து பிடித்திருந்தான் குரு பிரசாத்.
அவனது வரவை எதிர்பாராதவள் அதிர்ந்து நோக்க குருவும் அவளை தான் பார்த்திருந்தான்.
காலையில் இருந்து அழுததில் கண் மூக்கு கன்னம் எல்லாம் சிவந்து இருந்தது.
எல்லாம் ஒரு கணம் தான் சடுதியில் இருவரையும் தூக்கி பிடித்து நிறுத்தி இருந்தவன்,
“பாத்து பிடிக்க மாட்டியா? இந்நேரம் கவின் கீழ விழுந்திருப்பான்” என்று மொழிய,
அவன் கீழே விழவில்லை என்பதை உறுதி செய்திருந்தவள்,
“நீ.. நீங்க எதுக்கு வந்திங்க…?” என்று அவனது வினாவிற்கு விடையளிக்காது மற்றொன்றை கேட்டிருந்தாள்.
“என் வீட்டுக்கு நான் ஏன் வர்றேன்னு நீ கேள்வி கேட்கிறியா?” என்றவனது பதிலில் பதறியவள்,
“இல்லை நான் அப்படி கேக்கலை. நீங்க வழக்கமா எட்டு மணிக்கு தான வருவிங்க. அதனால கேட்டேன்” என்று பதில் அளித்திட,
ஒரு பார்வை பார்த்தானே ஒழிய பதிலளிக்காது கவினோடு உள்ளே நுழைந்துவிட்டான்.
“ப்பா சாக்லேட்…” என்று வினவிய இருவருக்கும் கையில் இனிப்புகளை கொடுத்தவன் அறைக்குள் நுழைந்து வேறு உடைக்கு மாறியிருந்தான்.
வந்தவன் என்ன நினைத்தானோ, “மகிழ்…” என்று உரக்க அழைத்தான்.
“ஹான் சொல்லுங்க சார்” என்ற வார்த்தையுடன் வந்து நின்றாள் மகிழ்.
அழுதழுது குரலே என்னவோ போல இருந்தது.
“இன்னும் டென் மினிட்ஸ்ல வெளிய போகணும். க்விக் ரெடியாகு. சிம்பிளா சேரி மட்டும் சேஞ்ச் பண்ணிக்கோ…” என்று விறுவிறுவென கூற,
“எங்கே…?” என்று கூற வாய் வந்தாலும் அதனை விழுங்கிவிட்டு,
“சரிங்க சார்” என்றவள் ஒரு புடவையை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
விரைவாக உடை மாற்றியவள் வெளியே வர அங்கே கோதை இளையவர்களுக்கு உடை மாற்றி கொண்டிருந்தார்.
மகிழ், “அத்தை நானே பாத்துக்கிறேன். நீங்க ஏன் சிரமப்பட்றிங்க” என்று தடுக்க விழைய,
“இதில என்னம்மா சிரமம். நீ தலைய பின்னி கிளம்பு டா…” என்றிட,
மகியும் சம்மதித்து தலையை பின்னலிட்டு நெற்றியில் பொட்டுடன் எளிமையாக தயாராகி இருந்தாள்.
அதற்கு மேல் அவளுக்கு தயாராக விருப்பம் இல்லை.
‘ப்ச்… நிம்மதியாக அழக்கூட இயலவில்லை. என்ன வாழ்க்கை இது. துக்கம் தொண்டையடைக்கும் நேரமும் இப்படி தயாராகி கிளம்ப வேண்டியுள்ளதே…’ என்று வெறுப்பாக இருந்தது.
முகத்தில் எதையும் காண்பிக்காது தயாரானாள். இளையவர்களும் தயாரானதும் நால்வரும் கோதையிடம் கூறிவிட்டு சென்றனர்.
வழக்கம் போல பின்னிருக்கையில் ஏறிய மகிழ் இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடி கொண்டாள்.
இளையவர்கள் ஆர்ப்பரிப்புடன் என்னென்னவோ வினவ குரு பதில் அளித்தபடி வந்தான். இவை யாவும் செவியில் நுழைந்தாலும் கருத்தில் பதியவில்லை மகிக்கு.
அவளையும் மீறி மூடிய இமைகளின் வழியே நீர் வழிந்தது. அவ்வபோது துடைத்து கொண்டாள். எதுவும் குருவின் பார்வையில் இருந்து தப்பவில்லை.
சரியாக ஒரு மணி நேரப் பயணத்தில் மகிழுந்தை வேகமாக இயக்கியவன் வர வேண்டிய இடத்தை அடைந்திருந்தவன் திரும்பி மகியை காண அவளோ வாகனம் நின்றது கூட தெரியாது விழி திறக்காது இருந்தாள்.
இளையவர்களுடன் வெளியே இறங்கியவன்,
“மகிழினி இறங்கு நாம வர வேண்டிய ப்ளேஸ்க்கு வந்துட்டோம்” என்று கூறிட,
விழிகளை திறந்து கரத்தால் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு வெளியே இறங்கியவள் வந்திருந்த இடத்தை கண்டு அதிர்ந்து நின்றுவிட்டாள்.
சற்று முன் நின்றிருந்த விழி நீர் எதிரே தான் குடும்பத்தினருடன் சிரித்து மகிழ்ந்து வாழ்ந்த வீட்டை கண்டதும் மீண்டும் உடைப்பெடுத்தது.
ஆம் மகிழினியினுடைய கிராமத்திற்கு தான் குரு பிரசாத் அவளை அழைத்து வந்திருந்தான்.
கால்கள் அப்படியே வேரூன்றியது போல நின்றுவிட்டாள். இமைக்கவும் மறந்து விழிகள் தங்களது அழகான கூட்டத்தை தான் பார்த்திருந்தாள்.
இமைத்தால் மறைந்துவிடுமோ என்று உள்ளம் பதற விழிகயகற்றாது பார்த்தாள். விழிகள் மட்டும் வற்றாத ஜீவநதியாக வழிந்து கொண்டிருந்தது.
அவளது நிலையை உணர்ந்தவன் தானே கொண்டு வந்திருந்த சாவியை எடுத்து கொண்டு இளையவர்களுடன் சென்று கதவை திறந்தான்.
அவர்களுக்கும் இங்கு வந்ததில் மகிழ்ச்சி பிடிபடவில்லை. அடிக்கடி அழைத்து வரும் மகிழினி வெகு நாளாக இந்த பக்கமே வரவில்லையே.
“தாத்தா பாட்டி வீடு…” என்று இருவரும் ஆர்ப்பரித்து உள்ளே செல்ல,
குரு திரும்பி மகியை கண்டான். அவள் இன்னும் அதே நிலையில் தான் இருந்தாள்.
“மகிழினி உள்ள வர வா…” என்று சற்று உரத்த குரலில் அழைக்க,
அதில் சுயம் பெற்றவள் ஏதும் கூறாது உள்ளே நடந்து சென்றாள்.
வீடு சுத்தமாக இருந்தது. பிறைசூடன் ஆட்களை வைத்து அடிக்கடி சுத்தம் செய்வார். அதன் பொருட்டே அவரிடம் ஒரு சாவி இருந்தது. அதை தான் குரு இப்போது வாங்கி வந்திருந்தான்.
குருவும் அவள் பின்னே செல்ல வாசலை தாண்டியவளுக்கு சடுதியில் கூடத்தில் உடல் கருகி கிடந்த தாயின் முகம் நினைவிற்கு வர அப்படியே அருகில் இருந்த இருக்கையை பிடித்து அமர்ந்துவிட்டாள்.
குரு அவளுக்கு மயக்கம் ஏதும் வந்துவிட்டதோ என்று அருகில் வேகமாக வர அவனது அரவத்தை உணர்ந்தவள் அப்படியே அமர்ந்தவாக்கில் இடையோடு இறுக்கி கட்டி கொண்டவளது கண்ணீர் குருவின் உடையை தாண்டி உடலை நனைத்தது…