என் உள்ளம் கேட்குமே – 14.2

அப்படியே சிரிப்பும் பேச்சுமாய் நேரம் நகர, எல்லோரும் கூடத்தில் கூடியிருக்க, திவாகரும் வந்துவிட்டான். அவனிடம் பேச்சு சில நிமிடங்கள் சென்றது. அவன் உண்டு முடித்து இவர்களுடன் சேர்ந்து கொள்ள, ரங்கா எல்லாவற்றையும் கவனித்தாலும் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

கோவிந்தன், “எல்லாரும் இருக்கும்போதே நாங்க ஏன் வந்தோம்னு சொல்லிட்றோம் அண்ணா!” என எழுந்து பேசியவரின் பார்வை ரங்காவிடம் செல்ல, மற்றவர்களின் கவனம் அவரிடம் குவிந்தது.

“மனோவுக்கும் கல்யாண வயசாச்சு. அதான் அவளுக்கு கல்யாணம் பண்ணலாம்னு தோணுச்சு. நாங்க எல்லாரும் இங்க வந்ததோம்!” என அவர் கூறவும், மனோஹரி ஒரு நொடி திகைத்துப் போனாள்.

‘என்னப் பேசுகிறார் இவர்?’ என புரியாது விழித்தாள்.
பட்டென அமர்ந்த இடத்திலிருந்து எழுந்தவள், “சித்தப்பா, எனக்கு கல்யாணம் பண்ற எண்ணம் இப்போதைக்கு இல்லை!” என படபடவென பதற்றத்துடன் உரைக்க, “மனோ, நீ சின்ன பொண்ணு. பெரியவங்க பேசும்போது இடையில வராத!” என வனிதா அவளை அடக்கிவிட்டார்.

“என் பெண்ணுக்கு எப்போ கல்யாணம் பண்ணணும்னு எனக்குத் தெரியும். அதை நான் பார்த்துக்குறேன்!” ரங்கராஜன் சுள்ளென பதிலளித்தார்.

“அதான் நீங்க அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணத்துல பேசுனதெல்லாம் எங்களுக்கும் தெரியுமே!” கோவிந்தன் குரல் உயர்ந்தது. மனோ அதிர்ந்து போய் தாயைத் திரும்பி பார்க்க, அவர் மெலிதாய் தலையை அசைத்தார்.

“கோவிந்தா, இது உனக்குத் தேவையில்லாதது. என் பொண்ணுக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நீ இதுல தலையிடாத” ரங்கா கோபமாய்ப் பேசினார்.

“அண்ணே, நடந்த எல்லாம் எனக்குத் தெரியும். உங்களோட வரட்டுக் கௌரவத்துக்காகவும், ஜாதி வெறிக்காகவும் மனோ வாழ்க்கை ஸ்பாயிலாகுறதை நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன். அண்ணன் பொண்ணும் என் பொண்ணு மாதிரிதான். பெத்த அப்பா, அவளைப் பத்தி கவலைப்படாம இருந்தா, நானும் அப்படி இருக்கணும்னு அவசியம் இல்ல. அப்பா ஸ்தானத்துல இருந்து, அவ ஆசைப்பட்ட பையனோட நானே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன்!” எனக் கூறவும், மனோஹரிக்கு விழிகள் கலங்கி கண்ணீர் திரையிட்டது. தந்தை கூடப் பிறந்த மனிதருக்கு இருக்கும் அக்கறையும் பாசமும் கூட தன்னைப் பெற்றவருக்கு இல்லாது போய்விட்டதே என்ற எண்ணம் மனதைப் பிசைந்தது‌.

“சித்தப்பா, நீங்க என்மேல இந்தளவுக்குப் பாசம் வச்சிருக்கீங்கன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. ஆனால், என் அப்பா சம்மதம் இல்லாம எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை!” எனக் கூறியவளின் விழிகள் தந்தையை ஏக்கமாய்ப் பாராத்தன. அந்தப் பேச்சு செவியில் விழுந்தாலும் ரங்கா மகளை நிமிர்ந்து கூடப் பார்க்காதிருக்க, இவளுக்கு விழி முழுவதும் உவர்நீர் தளும்பத் துவங்கியது.

“மனோ, பெரியவங்க பேசும்போது உனக்கென்ன பேச்சு?” என்ற ராதா மகளின் கையைப் பிடித்திழுத்துச் சென்று அறையில் அடைத்தார்.

“அவ ஏதோ அப்பா மேல இருக்க பாசத்துல பேசுறா தம்பி. ஆனால், அந்த மனுஷனுக்கு அப்படியெதுவும் இல்லை. அவர் பிடிச்ச முயலுக்கு மூனு கால்னு நிக்கிறாரு. நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க. பெண்ணை பெத்த அம்மா எனக்கும், கூடப் பொறந்தவன் திவாகருக்கும் இதுல முழு சம்மதம்…” என்ற மனைவியை ரங்கா எரித்து விடுவதைப் போல பார்த்தார்.

“நீங்க இதுக்கும் மேல என்ன பேசுனாலும் அதை என்னால கேட்க முடியாதுங்க. ஊர்ல உலகத்துல இல்லாததையா என் பொண்ணு பண்ணிட்டா? ஆசைபட்டு ஒருத்தனைக் கை நீட்டிட்டா. நீங்க வேணாம்னு சொன்ன ஒரே காரணதுக்காக இன்னைக்கு வரை அந்த வார்த்தையை மதிக்குறா‌! அப்படிப்பட்ட பொண்ணை விட உங்களுக்கு ஜாதி முக்கியமா போய்டுச்சு. எனக்கு அப்படியில்லை, என் புள்ளை உசுரு முக்கியம். அவ எங்க இருந்தாலும் சந்தோஷமா வாழ்ந்தா போதும்!” என்றவர், “நான்தான் போன் பண்ணி உங்கத் தம்பியை வரச்சொன்னேன். உங்க இடத்துல இருந்து அவர் எல்லாத்தையும் எடுத்து செய்யட்டும். பொண்ணுக்கு அப்பான்னு எண்ணமிருந்தா, வந்து சபையில நின்னு வாழ்த்திட்டுப் போங்க. அப்படி இஷ்டமில்லைன்னா, உங்க ஜாதியைப் பிடிச்சு தொங்கீட்டு வீட்லயே இருங்க. என் பையனை வச்சு எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்!” என்ற ராதா குரலில் மகளின் திருமணத்தை முடித்தே தீருவேன் என்றொரு உறுதியிருந்தது.

இரண்டு மாதங்களாகப் பேசி பேசி அந்தப் பெண்மணியின் ஜீவனே ஓய்ந்து போயிருந்தது. ஆனால், கணவர் எதிர்வினையாய் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லையே என்ற ஆதங்கமும் கோபமும் அவரை சிந்திக்க வைத்தது. இரண்டு வீட்டுப் பெற்றவர்களும் காலனிடம் சரணடைந்திருக்க,
வேறு வழியில்லாது சிறியவரான கோவிந்தனுக்கு அழைத்துவிட்டார். முதலில் பிடிகொடுக்காது பேசியவர், பிறகு பிரச்சனையின் வீரியத்தை அறிந்ததும் நடந்த பிணக்குகள் பின்னகர்ந்திருக்க, ஒரு வாரத்தில் வேலையெல்லாம் முடித்து குடும்பத்துடன் கிளம்பி வந்திருந்தார்.

“ராதா, என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறீயா?” ரங்கா சீற, மொத்தக் குடும்பமும் அவரைத்தான் வேடிக்கைப் பார்த்தனர்.

“அக்ஷயா, நீ குழந்தைகளைக் கூட்டீட்டு உள்ள போ! செபா நீயும் போ!” என சிறியவர்களை அறைக்குள் அனுப்பி வைத்தார் வனிதா.

மனோஹரி வெளியே தன்னை வைத்து நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தையில் என்ன நடக்குமோ என்ற பதற்றம் மேலிட அமர்ந்திருந்தாள். இந்நொடி கூட தந்தை மனம் மாறி விடாதா? என்ற ஏக்கம் மனதில் பிரவாகமாகப் பொங்கியது.
விழியோரம் துளிர்த்த நீரை சிமிட்டியவளின் கவனம் முழுவதும் பெரியவர்களின் பேச்சில்தான் இருந்தது. இளையவர்கள் உள்ளே நுழைந்தனர்‌.

“அக்கா, ஏன் அழற? அதான் அப்பா இருக்காரு இல்ல. அவர் எல்லாத்தையும் பார்த்துப்பாரு!” என்று அக்ஷயா பெரிய மனுஷியாய் கூறவும், இவளது இதழ்களில் மெல்லிய புன்னகை.

கையிலிருந்தக் குழந்தையைக் கட்டிலில் கிடத்திய செபா, “டோன்ட் வொர்ரீ மனோ, அங்கிள் வில் ஹேண்டில் எவ்ரிதிங்க. ஜஸ்ட் என்ஜாய் யூவர் மேரேஜ். ஐ யம் டூ எக்ஸைடட் டூ சீ யுவர் மேரேஜ் ரிச்சுவல்ஸ்!” என அவளது கையைப் பிடித்தழுத்திக் கூறினாள்.

“அப்பா, அம்மா எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறாங்கப்பா. நீங்களா எதையும் செய்யப் போறதில்லைன்னு முடிவாகிடுச்சு. நீங்க உங்க கிரீடத்துல இருந்து இறங்கி வந்துடாதீங்க. அதனால ஒரு அண்ணனா, என் தங்கச்சி கல்யாணத்தை நானே நடத்தி வைக்கப் போறேன். சித்தப்பா முன்ன நிக்கட்டும்!” என்ற திவாவின் பேச்சு நீங்கள் இல்லையென்றாலும் திருமணம் நடக்கும் என்பது போல அவரைச் சாடியது. மனைவியையும் மகனையும் ஒரு நொடி பார்த்த ரங்கா வெளியேறியிருந்தார்.

“அண்ணி, அண்ணா கோபமா போறாரு. கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம்!” கோவிந்தன் தமையனின் முகத்தைப் பார்த்தவாறு கூற,

“இல்ல தம்பி, உங்களுக்குத் தெரியாது. அந்த மனுஷன் ரொம்ப அழுத்தமானவரு. அதைவிட நான் பெத்தவ அழுத்தக்காரி. இவங்க ரெண்டு பேருக்கும் இடையில சிக்கி நான்தான் கஷ்டபட்டுட்டு இருக்கேன். இதுக்கு ஒரு முடிவு வந்தாப் போதும். அவரை சமாதானம் செஞ்சுக்கலாம்!” என்றுவிட்டார்.
மனோஹரி அனைத்தையும் கேட்டவாறு அமைதியாய் அமர்ந்திருந்தாள்‌.

அறைக்குள் நுழைந்த மைதிலி, “ஏன் மனோ, இங்க பக்கத்துல தானே நான் இருந்தேன். ஒரு வார்த்தை எங்ககிட்டே சொல்லணும்னு தோணலை இல்ல. பெரியம்மாவா சொல்லித்தான் எங்களுக்குத் தெரியுது!” எனக் கேட்டுக் கொண்டே அவளருகில் அமர்ந்தாள். மனோவிடம் பதிலில்லை.

“மனோ, ஏன் ஒரு மாதிரியாக இருக்க… நாங்க எல்லாம் உன்னை அப்படியே விட்டுடுவோம்னு நினைச்சீயா? கல்யாணத்தை நல்லபடியா முடிச்சுக் கொடுத்துட்டுதான் போவோம்!” என்றவளை விழிகள் கலங்கப் பார்த்தாள்.

“அக்கா, அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ண வேணாம் கா!” மீண்டும் அதையே கூறியவளை எதைக்கொண்டு அடித்தால் தகும் என எண்ணியவாறே அறைக்குள் நுழைந்தார் ராதா.

“மனோ, பொண்ணுன்னு கூடப் பார்க்க மாட்டேன். அறைஞ்சுடுவேன்!” என அவர் பல்லைக் கடிக்க, “ஏன் கா அவளை மிரட்டுறீங்க?” என வனிதா மனோவிற்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.

error: Content is protected !!
Scroll to Top