“உனக்குத் தெரியாது வனி, இவங்கப்பா ஒரு வகையில என்னைப்படுத்துனா, இவ வேற வகையிலபடுத்துவா. இவங்க ரெண்டு பேரோட என் நிம்மதியே போச்சு!” எனப் புலம்பியவர்,
“இங்கப் பாருடி… கடவுளா கொடுத்த வாய்ப்பு. இதை கெட்டியா பிடிச்சுக்கிட்டா உன் வாழ்க்கை நல்லா இருக்கும். இல்லை உங்கப்பன் பின்னாடிதான் போவேனா இப்போவே சொல்லிடு. வந்தவங்களுக்கு பத்துநாள் சமைச்சுப் போட்டு ஊருக்கு அனுப்பி வச்சுடுவேன்.”
“இப்போ அந்த மனுஷன் வயசுல நல்லா இருக்க திமிறுல பேசுறாரு. வயசாகி இந்தக் கட்டை நடக்க முடியாம சாஞ்சப் பிறகு அவருக்கு புத்தியில உறைக்கலாம். ஆனால், அப்போ காலம் ஓடிருக்கும். உன் வாழ்க்கை முடிஞ்சுப் போய்ருக்கும். அப்போ, அம்மான்னாலும் வராது! அப்பான்னாலும் வராது!” என்றவரை மனோ வெறித்தாள்.
“நீ இங்க ஒண்டியா கிடக்குறன்னு குமரன் அப்படியே இருக்கணும்னு அவசியம் இல்ல. கொஞ்ச வருஷம் போச்சுன்னா, அந்தப் பையனோட அம்மா அவனுக்கு கல்யாணம் பண்ணணும்னு தான் நினைப்பாங்க. நீ இருக்கது எல்லாம் ரெண்டாம்பட்சமா போய்டும்… சொல்றதை நான் சொல்லிட்டேன். முடிவெடுக்க வேண்டியது நீதான். ஒரு அம்மாவா என்னால முடிஞ்சதை நான் செஞ்சுட்டேன். அதை ஏத்துட்டு உன் வாழ்க்கையைப் பார்த்துக்கிறதோ இல்ல, ஒண்டியா கடைசிவரை அழுதுட்டே இருக்கதோ உன் விருப்பம்!” என்று கோபத்தில் இரைந்த ராதா, விறுவிறுவென வெளியேறிவிட, அக்ஷயா, மைதிலி, வனிதா என மூவரும் அமர்ந்து அவளை மூளைச் சலவை செய்தனர்.
செபா கூட இடையிடையே தன் கருத்துக்களைப் பகிர்ந்தாள்.
“இந்தா உங்கண்ணன் ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் பண்ணணும்னு வந்து நின்னப்போ கூட உங்க சித்தப்பா முழு மனசோட ஏத்துக்கிட்டாரு. ஆனால், எனக்கு நம்ம ஊர் பொண்ணைக் கட்டலையேன்னு வருத்தம்தான். ஆனால், உன் அண்ணி வந்தக் கொஞ்ச நாள்லயே அந்த எண்ணத்தை உடைச்சுட்டா. நாங்களா பார்த்து ஹரிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா கூட இவ்வளோ அனுசரனையான பொண்ணு கிடைச்சிருப்பாளான்றது சந்தேகம்தான். இப்போ என் மருமகளை நான் முழு மனசா ஏத்துக்கலையா? அது போல உங்கப்பா காலம் போக போக ஏத்துப்பாரு. அதனால கால காலத்துல கல்யாணத்தை முடிச்சுடணும் மனோ. உங்கப்பாவைப் பிறகு கூட சமாதானம் செய்யலாம்!” என்ற வனிதா பேச்சோடு பேச்சாக செபா கன்னத்தைக் கிள்ளவும் அவள் நெளிந்தாள்.
மனோஹரிக்கும் அனைவரது பேச்சிலிருந்த யதார்த்தமும் புரிந்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மனம் வலித்தது. வேறுவழியில்லை, ராதா கூறியது போல குமரனுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று உள்ளதே. இன்று தன் மீது பரிதாபமும் பாசமும் காண்பிக்கும் சிந்து இந்த நிலை சில வருடங்கள் நீடித்தால், மகனின் வாழ்க்கைக்குத்தானே முக்கியத்துவம் தருவார். எனக்காக, என் முடிவிற்காக யாருடைய வாழ்க்கையும் நின்று போவதில்லையே. நான் தேங்கிவிட்டால், அனைவரும் அப்படியிருக்க வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லையே. அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு நதிபோல பாதையை நோக்கி ஓட ஆரம்பித்துவிடுவார்கள் என்னும் நிதர்சனத்தை மனதினோரம் வலியோடு ஏற்றுக் கொண்டாள்.
குமரனுடான தன் வாழ்வு கானல் நீர்தான் என எண்ணி கண்ணீர்விட்ட நாட்கள் கண்முன்னே விரிய, எதையும் பேசாது சம்மதித்திருந்தாள். ராதாவிற்கு மகளின் சம்மதத்தில் அத்தனை மகிழ்ச்சி. திவாகருக்கு அப்படியொரு ஆசுவாசம்.
மகள் சம்மதித்தக் கையோடு அனைத்தையும் விரைந்து முடித்துவிட வேண்டும் என உந்துதல் தாயிற்கு. அதனால் மறுநாளே கோவிந்தன், வனிதா, மைதிலி, லோகேஷ், திவாகர், ஹரி, செபா என அனைவரையும் திரட்டிக்கொண்டு குமரன் வீட்டிற்கு சென்றிருந்தார். ரங்கா அனைத்தையும் அழுத்தமாய்ப் பார்த்தாரொழிய, எதையும் உரைக்கவில்லை.
காலையில் பணிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் குமரன். கண்ணாடி முன்பு நின்று தலையை வாரியவன் விழிகளில் பளிச்சென மின்னிய கைக்கடிகாரம் பட, அதை எடுத்துப் பார்த்தவனின் நெற்றி யோசனையாய் சுருங்கியது.
“ம்மா, இந்த வாட்ச் ஏது?” அவன் வினவ, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த சிந்து, “நான்தான் உன் பொறந்த நாளைக்காக வாங்குனேன் டா!” என்றவரை சந்தேகமாகப் பார்த்தான். சிந்து எப்போதும் அவனுடைய பிறந்தாளுக்கு உடைகள் எடுத்து தருவதுதான் வழக்கம்.
“எப்ப போய் வாங்கிட்டு வந்தீங்க?” சந்தேகக் குரலில் வினவினான் இவன்.
“வினோத் கூடப் போய்ட்டு வாங்கிட்டு வந்தேன்!”
“எவ்வளோ இந்த வாட்ச்?” அடுத்தக் கேள்வியை குமரன் எழுப்ப,
“ஆயிரம் ரூபா டா. கேள்வியா கேட்டுட்டு இருக்காத டா!” சிந்து போலிக் கோபம் கொண்டார். அந்தக் கைகடிகாரத்தைத் திருப்பி திருப்பி பார்த்தான். அதன் விலை கண்டிப்பாக பல ஆயிரம் ரூபாய்களை விழுங்கியிருக்கும் எனத் தோன்ற, யார் கொடுத்திருப்பார்கள் என யோசித்தான். அந்த யோசனையைக் கலைக்கும் விதமாக வெளியே மகிழுந்து சப்தமும் அதன் நீட்சியாக பேச்சு சப்தமும் செவியை நிறைத்தன.
சிந்து, “யாரது?” என வினவியவாறே வெளியே வந்தவர் ஒரு நொடி திகைத்துப் போனார். வாயிலில் அத்தனைப் பேர் நின்றிருந்தனர்.
“வணக்கம் மா, உள்ள வந்து பேசலாமா?” கோவிந்தன் முகமன் கூறி புன்னைகைக்க, ராதாமணியையும் திவாகரையும் அடையாளம் தெரிந்தது அவருக்கு.
“வாங்க, வாங்க… உள்ளே வாங்க!” என சிந்து அனைவரையும் அழைக்க, குமரன் வெளியே வந்தான். அவர்களைப் பார்த்தவனின் நெற்றி சுருங்கியது.
நான்கு இருக்கைகள் மட்டுமே கூடத்தில் இருக்க, “குமரா, ரூம்ல இருக்க சேரை எடுத்துட்டு வா!” என சிந்து மகனைப் பணித்தார்.
“இல்ல, பரவாயில்லை. இருக்கட்டும் மா!” லோகேஷ் கூற, குமரன் நான்கு நாற்காலிகளை வெளியே எடுத்து வந்து போட, மற்றவர்களும் அமர்ந்தனர்.
“என் பேர் கோவிந்தன், இது என்னோட வொய்ஃப் வனிதா, இது என்னோட பொண்ணு, பையன், மாப்ளை, மருமகள்!” என்றவர், “அப்புறம் இவங்க என்னோட அண்ணி, அண்ணன் பையன். உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்!” கோவிந்தராஜன் கூற, சிந்து ஆமாம் என தலையை அசைத்தார். குமரனுக்கு புரிவதாய் இருந்தது அவர்கள் வருகையின் நோக்கம்.
“உங்களுக்கு நடந்த பிரச்சனை தெரியுமான்னு தெரியலை. எது நடந்தாலும், அதை மறந்துடுங்கமா. இப்போ எங்க வீட்டுப் பொண்ணுக்கு உங்கப் பையனைக் கேட்டு வந்திருக்கோம். சின்ன புள்ளைங்க விரும்பிட்டாங்க. பெரியவங்க நம்மளாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சா, அவங்க சந்தோஷமா இருப்பாங்க.
உங்களோட முடிவை நீங்கதான் சொல்லணும்!” என்று அவர் கூற, சிந்துவிற்கும் இது இன்ப அதிர்ச்சிதான். நேற்றுதான் இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என யோசித்திருக்க, இன்று வீடு தேடி இவர்கள் வரவும் அவருக்கும் மகிழ்ச்சிதான்.
அவர் அதை உணர எடுத்துக் கொண்ட சில நிமிட இடைவெளியை ராதா நிரப்பினார். “அவங்க அப்பா வரலைன்னு நீங்க எதுவும் நினைக்க வேண்டாம். அந்த மனுஷன் கொஞ்சம் கோபக்காரரு. பொண்ணு அவளா வாழ்க்கையைத் தேடிக்கிட்ட கோபத்துல இருக்காரு. அதான் அவரு எங்கக் கூட வரலை!” பெண்மணி கூறவும், குமரன் அவரை நக்கலாகப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருளுணர்ந்தாலும், அவர் எதிர்வினையாற்றவில்லை.
“எனக்கும் பொண்ணை பெத்தவரா அவரோட ஆதங்கம் புரியுது. நேத்து உங்கப் பொண்ணை கோவில்ல பார்த்துப் பேசினேன். அவளும் நடந்ததை சொன்னா, மனசுக்கு வருத்தமாதான் இருந்துச்சு. நானே உங்ககிட்ட பேசலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்களா வந்துட்டீங்க! ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் பையனுக்கு சம்மதம்னா அடுத்த முகூர்தத்துலயே கல்யாணம் வச்சுடலாம்…” என்ற சிந்து புன்னகையுடன் தன் சம்மதத்தைத் தெரிவிக்கவும் அனைவருக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் பிறந்தது.
“அதெல்லாம் ஜாம் ஜாம்னு கல்யாணத்தைப் பண்ணிடலாம்!” கோவிந்தன் கூறவும், அனைவருடைய பார்வையும் குமரனிடம்தான். அவன் ராதாவையும் திவாகரையும்தான் அழுத்தமாய்ப் பார்த்தான்.
தொடரும்…