காதல் 16.2

ஒவ்வொரு வருடமும் போல தனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்ந்தது. தான் மட்டும் குடும்பத்தை இழந்து தவிக்கும் அளவிற்கு என்ன பாவம் செய்தோம்.

யாருக்கும் மனதளவில் கூட தீங்கு நினைக்காத தனது குடும்பத்தினருக்கு ஏன் இப்படி ஒரு கோரமான மரணம்.

“மகிழ்…” என்ற‌ அண்ணி சுசியின் குரல் செவிக்குள் மோதியது.

எத்தனை இனிமையாக பேசுவாள். சூடாக தேநீரை கூட அருந்த மாட்டாரே அவர். அப்படிப்பட்டவருக்கா இந்த நிலை வர வேண்டும்.

எப்படியெல்லாம் வலியில் துடித்திருப்பாளோ என்று எண்ணுகையிலே நெஞ்சம் கனத்தது.

அருகில் அமைதியாக உறங்கி கொண்டிருந்த இருவரையும் கண்ட போது வேதனை பெருகியது.

இந்த சிறு வயதிலே பெற்றோர் இருவரையும் இழந்து நிற்கும் அவலம் எதற்காக இவர்களுக்கு.

பெற்றோர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர்களது விருப்பப்படி பொறியியல் படித்துவிட்டு தான் ஒரு சிறந்த பொறியாளர் ஆகியிருப்போம்.

ஏன் அவர்கள் விருப்பபடி திருமணம் கூட செய்து வைத்திருக்க கூடும். என்னவேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

ஆனால் இப்போது நடந்திருப்பது பணத்திற்காக ஆம் நிச்சயமாக பணத்திற்காக தானே ஒருவரை திருமணம் செய்வது போல நடித்து அவரது குடும்பத்தையே ஏமாற்றி இருக்கிறோம். எத்தகைய பெரிய தவறு நாளை உண்மை தெரிந்து இவர்கள் கேள்வி எழுப்பினால் தான் என்ன பதில் கூறுவது.

இவ்வளவு நாட்கள் நம்பியிருந்த ஒருவரை ஏமாற்ற போகிறோம். ஏமாற்றத்தின் விளைவால் குற்றம் சுமத்தும் விழிகளோடு இவர்கள் என்னை கண்டால் நான் என்ன செய்வேன்.

பெற்றோர் மட்டும் இச்சமயம் உயிரோடு இருந்திருந்தால் தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்ப்பட்டிருக்குமா…?

முழுதாக ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. நீங்கள் என்னை விட்டு சென்று‌ என்று மனதோடு பலவாறு பேசி கொண்டிருந்தாள்.

வாழ்க்கையில் இதுவரை கடந்து வந்த கடினமான நிகழ்வுகளை மனது வலியோடு அசை போட்டு கொண்டிருந்தது.

“மகிழ் என்ன பண்ணிட்டு இருக்க…? நான் என்ன மெயில் பண்ண சொன்னேன். நீ என்ன பண்ணி இருக்க…?” என்று வினவிய குருவின் குரலில் நினைவிற்கு வந்தவள்,

“ஹான் சார்…” என்று ஒரு நொடி திருதிருத்துவிட்டு தான் அனுப்பிய மின்னஞ்சலை போய் பார்த்தாள்.

அவன் ஒன்றை கேட்க இவள் ஒன்றை அனுப்பி இருந்தாள்.

“சா… சாரி சார். இதோ அனுப்புறேன்” என்று விட்டு அவன் கேட்டதை அனுப்பினாள்.

“மகிழ் உன்னால பார்க்க முடியலைன்னா போய் படு. நாளைக்கு பாத்துக்கோ” என்று குரு கூற,

“இல்லை சார். அது நான் கவனிக்காம அனுப்பிட்டேன்” என்றவள் அவன் கோபமாகிவிட்டான் என எண்ணி பதட்டத்துடன் தான் பதில் அளித்திருந்தாள்.

மகியின் முகத்தை ஒரு கணம் நோக்கியவன் ஏதும் கூறாது மீண்டும் கணினியில் புகுந்துவிட்டான்.

ஆனால் கவனம் முழுவதும் அவளிடம் தான். அவளது முக பாவனைகளில் தான்.

மனதில் மாலை அழைத்து பேசிய அகிலனது குரல் தான் ஓடியது.

“மாமா நாளைக்கு அம்மா அப்பா அண்ணா அண்ணிக்கு நினைவு நாள்…” என்றவனது குரல் ஒரு நொடி கரகரத்து அமைதியாகி பின்னர்,

“வருஷா வருஷம் இந்த நாள் வரும் போது மட்டும் அக்கா ரொம்ப டிஸ்டர்ப் ஆகிடுவா. எப்பவும் நான் கூட இருப்பேன். லீவ் போட்டுட்டு அம்மா அப்பாவோட வாழ்ந்த வீட்டுக்கு போய்டுவோம். இந்த வருஷம் என்னால அவ கூட இருக்க முடியலை. நீங்க அவளை நல்லா பாத்துப்பிங்கன்னு தெரியும். இருந்தும் சொல்ல தோணுச்சு. அவளை பாத்துக்கோங்க மாமா” என்று முடித்துவிட்டான்.

இதனை கேட்ட குருவிடம் சில கணங்கள் மௌனம்.

பிறகு, “நான் பாத்துக்கிறேன் அகில். நீ வொர்ரி பண்ணிக்காம ஸ்டடீஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணு” என்றுவிட,

இந்த சிறு வார்த்தையே அவனுக்கு போதுமானதாக இருக்க,

“சரிங்க மாமா” என்று உரையாடலை முடித்துவிட்டான்.

அகிலனது குரலில் இருந்த நிறைவே அவன் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பறைசாற்றியது குருவிற்கு.

அதன் காரணமாக இரவு வந்ததில் இருந்தே அவளை அவதானித்து கொண்டு தான் இருக்கிறான்.

அகில் கூறியது உண்மை தான் போலும்.‌ மகியின் முகமே சரியில்லை. வழக்கத்தை விட சுறுசுறுப்பு குறைவாக இருந்தது.

ஏனோ தானோவென‌ உண்டுவிட்டு அறைக்கு வந்து இளையவர்களை உறங்க வைத்துவிட்டு மடிக்கணினியை எடுத்து கொண்டு அமர்ந்துவிட்டாள்.

ஆனால் வேலையிலும் கவனம் இல்லை என்று அவளது முகமே கூறியது. தன்னுடைய நிலையை யாரிடமும் காண்பிக்க விரும்பாத அவளது மனமும் புரிந்தது.

இவனும் எதுவும் கேட்டு கொள்ளவில்லை. இருந்தும் அவளது நிலை உணர்ந்து தான் மகியை உறங்க செல்ல கூறினான்‌.

error: Content is protected !!
Scroll to Top