என் உள்ளம் கேட்குமே – 14.1

தம்பி குடும்ப சகிதமாக வந்திருப்பதை கவனித்த ரங்கராஜன் எதுவுமே பேசவில்லை. “வாங்க…” என்ற தலையசைப்போடு நிறுத்திக் கொண்டார். அவரது அழைப்பை வந்தவர்கள் ஏற்றதாய்க் கூடத் தெரியவில்லை. கோவிந்தன் மட்டும் தமையன் என்ற எண்ணத்தில் இரண்டொரு வார்த்தைகள் பேசினார்.

மற்றபடி பெரிதாய் அவரிடம் ஒட்டுதல் பேச்சுக்கள் இல்லை. இன்னும் கருத்து வேறுபாட்டின் சுவடுகள் மறையவில்லை. ஆனாலும் தம்பியின் வருகை ரங்காவை யோசிக்க வைத்திருந்தது. வாய் மொழியாய் எதையும் கேட்கவில்லை எனினும் அவரது பார்வை இவர்களைத்தான் சமீபித்திருந்தது.

“என்ன பெரியப்பா, ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?” மைதிலி அவரைக் கடந்து செல்லும்போது நக்கலாகக் கேட்டுவிட்டு செல்ல, இவரது முகம் சுருங்கியது அந்தப் பாவனையில்.

இவர் தனித்து அமர்ந்திருக்க, மற்றவர்கள் கூட்டமாய் அமர்ந்து நான்கு வருடங்கள் பேசாத கதையெல்லாம் இப்போது சுவைபட அளந்து கொண்டிருந்தனர். ராதாமணிக்கும் வனிதாவிற்கும் சில வயது வேறுபாடுகளே இருந்தன. அதனால் ஆரம்பத்திலிருந்தே அவர்களால் நல்ல நட்புறவைப் பேண முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னான கூட்டணியில் அவர்களுக்கிடையே பேச ஆயிரமிருந்தன.

இத்தனை நாட்கள் வெறிச்சோடியிருந்த வீட்டிற்கு இப்போதுதான் ஒளி வந்தது போலிருக்க, மனோஹரி இயல்பான மனநிலைக்கு தாவியிருந்தாள். நெடிய பொழுதுகளுக்குப் பின்னான மகிழ்ச்சியில் வீடே நிறைந்து வழிந்தது.

“அக்கா, இதெல்லாம் உனக்காக வாங்கிட்டு வந்தேன். நல்லா இருக்கா?” என அக்ஷயா ஒரு பை நிரம்பி வழியுமளவு பொருட்களைக் கொட்ட, இவள் அனைத்தையும் சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

“அதென்ன மனோ சித்திக்கு மட்டும் கிஃப்ட். எங்களுக்கு இல்லையா?” சின்ன சிட்டுகள் அக்ஷயாவின் இரண்டு புறமும் நின்று உதட்டைப் பிதுக்க, “சேட்டை பண்ணாம இருந்தா, உங்களுக்கும் சித்தி நிறைய கிஃப்ட் தரேன்!” என அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்றாள்.

ராதாவும் வனிதாவும் பேசிக்கொண்டே மதிய உணவை தடபுடலாக முடித்திருக்க, அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உண்டனர். செபாஸ்டின் ரங்கராஜனை எண்ணி விருந்தினர் வீட்டிலே குழந்தையுடன் இருந்துவிட, மனோதான் அவளைக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தாள்.

“அண்ணி, ஏன் நீங்க மட்டும் இங்கேயே இருக்கீங்க? வாங்க, அம்மா சமைச்சுட்டாங்க. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்!” என மனோ செபாவின் கையைப் பிடித்து அழைத்தாள்.

“நோ மனோ, எனக்குப் பசிக்கலை. யூ கைய்ஸ் கேரி ஆன்!” என அவள் புன்னகைக்க, “ஏன் அண்ணி, ஏற்கனவே உங்களால்தான் பிரச்சனை. அதனால வரவேணாம்னு நினைக்குறீங்களா?” என இவள் அழுத்தமாய்க் கேட்க, செபாவிடம் பதிலில்லை.

“ப்ம்ச்… அண்ணி, அதெல்லாம் அப்போ நடந்தது. மோர் ஓவர் எங்க வீட்டுக்கு முதல்முறை நீங்க வந்துருக்கீங்க… உங்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நானும் சொல்ல விடமாட்டேன்! என் மேல நம்பிக்கை இருந்தா அங்க வாங்க…” மனோ கூறிவிட்டு நடக்க, செபா குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவளுடன் நடந்தாள்.

இருவரும் உள்ளே வர, “வாம்மா பொண்ணு செபா, எல்லாரும் சாப்பிட்றோம். நீ மட்டும் அங்க என்ன பண்ற? வந்து சாப்பிடு!” ராதா அவளது பெயர் வாயில் நுழையாது தடுமாறினார்.

ரங்கராஜன் வீட்டின் கூடத்திலுள்ள நீள்விருக்கையில் அமர்ந்திருக்க, செபா தயங்கினாள். “அண்ணி, உள்ளே வாங்க!” என மனோஹரி அவளது கையப் பிடித்திழுத்தவள் குழந்தையைத் தொட்டிலிட்டாள். தந்தையை அழுத்தமாய்ப் பார்த்தவாறே செபாவை மேஜையில் அமர்த்தி உணவைப் பரிமாறினாள். அவரும் மகளைத்தான் அமைதியாய்ப் பார்த்திருந்தார்.

பெண்கள் இருவரும் பரிமாற, மனோவும் உணவுண்ண அமர்ந்தாள். ஹரி அவளது அருகே அமர்ந்திருக்க, “ஏன் ண்ணா, அண்ணிதான் சங்கடப்பட்டு சாப்பிட வரமாட்டேன்னு சொல்றாங்கன்னா, நீயும் அவங்களை அப்படியே விட்டுட்டு வர்றதா? ஏன் உனக்கு வயிறு இருக்க மாதிரி அவங்களுக்கு இருக்காதா? ஹம்ம்?” அடிக்குரலில் மனோ வினவ, ஒருநிமிடம் சலசலப்பு மொத்தமும் அடங்கியிருந்தது.

அவன் என்ன சொல்வது எனத்
தெரியாது, “அது… அவதான் நான் கூப்ட்டும் வர மாட்டேன்னு சொல்லிட்டா. நான் ரெண்டு தடவைக் கூப்ட்டேன் மனோ!” என்றான்.

“அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க. புது இடம், புது மனுஷங்க… மோர் ஓவர் லேங்குவேஜ் தெரியாத இடம். நீதான் அவங்களை ஒரு ஹஸ்பண்டா என்ன பண்றாங்கன்னு கவனிச்சுக்கணும்!” மனோ குரலில் கண்டனம். பேச்சு அவனைக் குற்றம் சாட்டியது.

“மனோ, இட்ஸ் ஓகே, நோ பிராப்ளம். ஹி ஆஸ்க்ட் மீ டு கம். பட், ஐ ரெப்யூஸ்ட்!” தமிழும் ஆங்கிலமும் கலந்து செபா கூற, மனோ இப்போது அவளை முறைத்தாள்.

“அண்ணி, உங்களுக்கு ஒரு இடத்துக்கு வர்ற சங்கடமா இருக்கு, அன்கம்பர்டபிளா இருக்குன்னா, நீங்க அதை அண்ணாகிட்டே சொல்லணும். மூஞ்சியை பார்த்தெல்லாம் கண்டு பிடிக்கிற அளவுக்கு இந்த ஆம்பளைங்களுக்கு அறிவில்லை!” என்றாள். கடைசி வரியில் அவளது உதடுகள் புன்னகையில் விரிய, அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஹரி தங்கை தலையில் வலிக்காது கொட்டினான்.

“கரெக்டா சொன்ன மனோ, எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான்!” வனிதாவும் அவளுடைய பேச்சை ஒப்புக் கொள்ள, கோவிந்தன் குலுங்கிச் சிரித்தார்.

சினேகாவும் கார்த்திக்கும் உணவை மற்றவர் தட்டிலிட்டு சண்டையிலிறங்க, “என்ன பண்றீங்க நீங்க ரெண்டு பேரும். சாப்பிடும்போது கூட நிம்மதியா சாப்பிடவிட மாட்டீங்களா?” என மைதிலி பல்லைக் கடித்தாள்.

“அக்கா, ஏன் டென்ஷனாகுற நீ, நான் பார்த்துக்குறேன்!” என அவளது தோளைத் தட்டிய மனோ,
“என்ன பஞ்சாயத்து உங்க ரெண்டு பேருக்கும்?” என வினவினாள்.

“சித்தி, இவன் என் பிளேட்ல ஃபுட்டை வச்சுட்டான்” சிநேகா முந்திக்கொள்ள, “நோ சித்தி, அவ பொய் சொல்றா. அவதான் முதல்ல வச்சா” எனக் கார்த்தி கூற, இரண்டு தட்டிலிருக்கும் உணவையும் ஒரு தட்டிலிட்டு அதை சரிசமமாய் பிரித்தவள்,
“இப்போ சண்டை போடாம சாப்பிடுங்க. சரியா பிரிச்சாச்சு!” எனவும், இரண்டு சிட்டுகளும் ஏமாற்றமாய் அவளது முகத்தை நோக்கின. உணவு உண்ண முடியாத சமயத்தில் இப்படி இருவரும் செய்யும்போது மைதிலி கோபத்தில் திட்டி, இருவருமே உண்ண வேண்டாம் என்றிடுவாள். அப்படி நினைத்துதான் இருவரும் சண்டையிட்டது. மனோவின் எதிர்வினை அவர்கள் எதிர்பாரதது‌.

“உங்களோட தில்லாலங்கடி வேலையெல்லாம் இங்க ஆகாது. ஒழுங்கா சாப்பிடுங்க!” மனோ மிரட்டவும், இருவரும் சாப்பிட, மற்றவர்களுக்குப் புன்னகை அரும்பியது.

error: Content is protected !!
Scroll to Top