“ஓகே நாங்க அம்முவ ஹாஸ்ட்டல்ல விட்டுட்டு கிளம்புறோம்” என்று கூற,
அகிலன் சம்மதமாக தலையசைத்தான்.
மகியும் சகோதரனிடம் பத்திரம் கூறிவிட்டு செல்ல,
இரண்டு நொடிகள் கடந்து,
“மாமா…” என்ற அகிலனது குரல் குருவை அழைத்தது.
அதில் குருவின் நடை தடைபட திரும்பினான்.
வேகமாக நடந்து வந்த அகிலன் குருவை இறுக கட்டி கொண்டான்.
குரு அதிர்ந்து பார்க்க,
“தாங்க் யூ சோ மச் மாமா. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை. எனக்கு என் அக்கா அம்மா மாதிரி. கூட பிறந்ததால இப்படி பாத்துக்கிறா. பட் அப்பா மாதிரி நடந்துக்கிற ஒரு மாமா கிடைப்பார்னு நான் கனவுல கூட எதிர்பார்க்கலை. தாங்க் யூ தாங்க் யூ சோ மச். யூ மேட் மை ட்ரீம் ட்ரூ” என்றவனது கண்ணீர் துளிகள் குருவின் தோள்பட்டையை நனைக்க,
ஒரு நொடி குருவிற்கே என்னவோ போல் ஆகிவிட்டது. ஆனால் கண நேரத்தில் தன்னை மீட்டு கொண்டவன்,
“அகில் டோன்ட் கெட் எமோஷ்னல். படிக்க சான்ஸ் கிடைக்கிற எல்லாரும் அவங்க பெஸ்ட்ட கொடுக்குறது இல்லை. உன்னை படிக்க வச்சதுக்கு நான் சந்தோஷப்பட்ற மாதிரி படிச்சு காட்டு. அது தான் நீ எனக்கு செய்யணும்” என்று கூற,
அகிலனும் தன்னை மீட்டவன்,
“கண்டிப்பா மாமா. நான் நல்லா படிச்சு ஒரு பெஸ்ட் டாக்டராவேன்” என்று உறுதியுடன் மொழிந்தான்.
“ஹ்ம்ம் தட்ஸ் மை பாய்” என்று புன்னகைத்தவன்,
“பீல் பண்ணாம போ” என்று அவனை அனுப்பியவன் வர்ஷினியையும் விடுதியில் விட்டுவிட்டு விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டான்.
மகிழ் குரு இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை. குரு அவனது அலுவலக வேலையை கவனிக்க மகிழ் அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.
அவளுக்கு சென்னை புதிது. பெற்றோர் இருந்தவரை சொந்த ஊரைவிட்டு எங்கும் சென்றதில்லை. ஆதலால் சென்னை வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.
அரை மணி நேர பயணத்தில் விமான நிலையத்தை அடைந்து எல்லா பரிசோதனையையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி தங்களது இருக்கையில் அமர்ந்தனர்.
உள்ளே வந்ததுமே மகிழுக்கு கிலி பிடித்து கொண்டது. வரும் போதே முதல் முறை விமான பயணத்தில் அவ்வளவு பயமாக இருந்தது.
அப்போது வர்ஷினி அருகில் இருந்து ஆறுதல் கூறினாள். ஒன்றுமில்லை என்று சமாதானம் கூறினாள். இருந்தும் விமான கிளம்பும் சமயம் வயிற்றுக்குள் ஏதோ உருள வர்ஷியை இறுக பற்றி கொண்டாள். தலையெல்லாம் சுற்றி வாந்தி வருவது போல இருந்தது சிரமப்பட்டு சமாளித்திருந்தாள்.
இரண்டாவது முறையாக இருந்த போதும் உள்ளுக்குள் அச்சம் விரவியது.
அப்போதாவது வர்ஷி இருந்தால் அவளை பிடித்து கொண்டேன். இப்போது அதுவும் இல்லை. இவரது அருகில் கூட செல்ல முடியாது கூடாது.
என்ன ஆனாலும் சமாளித்து கொள்வோம் என்று எண்ணியவள் விமானம் கிளம்பும் அறிவிப்பு வந்ததும் விழிகளை இறுக மூடி கொண்டாள்.
இங்கு அவளருகே அமர்ந்திருந்த குருவிற்கோ அகிலனை பற்றி சிந்தனை தான். இப்போது வந்தது அல்ல.
அங்கிருந்து கிளம்பியதில் இருந்தே தான். இடையில் அலுவலக பணியை கவனித்தாலும் அவ்வ போது அகிலனது நினைவு தான்.
சட்டென்று வந்து தன்னை இறுக கட்டி கொண்ட நொடியை தான் மனது நினைத்தது. இது அவனுக்கு புதிதாக இருந்தது.
சகோதரர்கள் யாரும் உடன் பிறக்கவில்லை. வர்ஷினியுடம் சிறு வயதில் நெருக்கம் இருந்தாலும் வளர வளர அது குறைந்துவிட்டது.
குருவினது கண்டிப்பில் அவளும் அத்தனை தூரம் இவனுடன் ஒட்டவில்லை. சகோதரனுடன் பிறந்து வளர்ந்திராதவனுக்கு இந்த சிறுவனின் பாசம் புதிதாக இருந்தது.
அதுவும் கலங்கிய விழிகளுடன் அவன் தன்னை தந்தையாக பாவித்து கூறியது இன்னும் செவியில் ஒலித்தது.
குருவிற்கு தந்தை என்ற சொல்லே அத்தனை பிடித்தமானது. காரணம் அவனுடைய தந்தை ராஜ சேகரன் தான். குருவிற்கு அவனுடைய தந்தை மீது அதிகமான பிடித்தம் தான். அதனால் அவன் தந்தை என்று கூறிய போது இவனுக்குள் சிலிர்த்தது.
அதுவும் அகிலனின் விழிகளில் கண்ட ஆனந்தம். வாழ்வில் மிகப்பெரிய ஒன்றை அடைந்துவிட்ட நிறைவு. இவனுக்கு மருத்துவ படிப்பின் மீது இத்தனை ஆர்வமாக என்று வியக்க வைத்தது.
இவள் அகிலனது படிப்பிற்காக இந்த ஒப்பந்த திருமணமத்திற்கு ஒப்பு கொண்டது தவறில்லை என்றே ஒரு கணம் தோன்றியது.
குரு பிரசாத் பணம் பணத்திற்காக தான் யாவரும் எதையும் செய்ய கூடியவர்கள் என்ற தனது எண்ணத்தை ஒரு நொடி மறந்துவிட்டு அவர்களின் புறம் சிந்திருந்தான்.
குருவினது சிந்தையை கலைக்கும் விதமாக அவனது கையில் வந்து சரண் புகுந்தது மகியின் முகம்.
அதில் அதிர்ந்தவன் திரும்பி பார்க்க விழிகளை இறுக மூடி கொண்டு அவனோடு ஒன்றினாள் மகிழினி.
நடுங்கும் இதழ்கள் எதையோ உச்சரிக்க நெருங்கி அதனை அவதானிக்க முயல,
“கடவுளே கடவுளே…” என்று அவளது முனங்கல் கேட்டது.
விமானம் கிளம்புதவற்கு தான் இத்தனை பயமா…? என்று நினைத்தவனுக்கு அவளது உடல் நடுங்குவது தெரிந்தது. அனிச்சயாக கரம் உயர்ந்து அவளது முதுகை ஆதரவாக வருடியது.
அதில் அவளது நடுக்கம் குறைந்தது போலும். சில நிமிடங்கள் கடந்து விமானம் சீராக சென்று கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு அப்போது தான் அவனுடைய கைவளைவில் தான் இருப்பது உறைத்தது.
அவனுடைய கரங்கள் தன்னுடைய முதுகை வருடுவதும் தெரிந்தது. ஒரு நொடி உடல் தூக்கி போட சடுதியில் அவனிடமிருந்து விலகியவள்,
“சா… சாரி ஏதோ பயத்துல பண்ணிட்டேன்” என்று திக்கி திணறி அவனது முகம் பார்க்க தடுமாறி கூறினாள். முகம் வேறு லேசாக கன்றி சிவந்தது. அவனருகே செல்ல கூடாது என்று எண்ணியிருந்துவிட்டு அவனிடமே தஞ்சமடைந்ததை நினைத்து லேசான அவமானமாக கூட இருந்தது.
அவளது முகத்தை வைத்தே அவளது உணர்வுகளை படித்தவன் வெறும் தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு கையில் இருந்த ஆங்கில புத்தகத்தில் ஆழ்ந்தான்.
மகியும் மானசீகமாக தன்னை திட்டி கொண்டு சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.
புத்தகத்தை கையில் வைத்திருந்த குருவிற்கு இந்த சிறு விடயத்திற்கே இப்படி அஞ்சுகிறவள் எப்படி அவர்கள் மூவரையும் இத்தனை வருடங்களாக பார்த்து கொண்டாள் என்று தான் ஆச்சர்யம் தோன்றியது.
இங்கு மகிழோ, ‘உனக்கு அறிவே இல்லைடி. ஏற்கனவே அவர் மனசுல ரொம்ப உயர்ந்த இடத்துல இருக்க. இப்போ இது வேற. இவர் விஷயத்துல மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ…?’ என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.
ஒருவரை பற்றி மற்றொருவர் நினைத்து கொண்டிருப்பதை அவர்கள் அறியவில்லை.
இதோ இப்போது விலகி ஓடும் இவளது மனது தான் ஒரு நாள் இவனுடைய அருகாமைக்கு ஏங்கி தவிக்க போகிறது என்று அவள் கனவிலும் எண்ணியிருக்க மாட்டாள்.
இதோ எதிர்பாராத விதமாக வாழ்வில் சூழ்நிலை காரணமாக நுழைந்தவள் தன்னை சுழற்றி அடித்துவிட்டு செல்ல போவாள் என்று அவனும் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.
விதி யாரை விட்டது என்பதை மாற்றி இந்த காதல் யாரை விட்டது என்று கூறினால் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்…