என் உள்ளம் கேட்குமே – 13.3

“இப்பவும் உங்க மகன் மேல நீங்க வச்சிருக்க நம்பிக்கையை நினைச்சு ரொம்ப ஆச்சரியமா இருக்கு அத்தை!” என்றவள் சில நொடிகள் தயங்கிப் பின் யாரிடமாவது கொட்ட வேண்டும் என ஏங்கிய மனதின் அலைப்புறுதலில் மடை திறந்த வெள்ளமென நடந்ததைக் கொட்டிவிட்டாள். ஏனோ அந்நொடி மனதிலிருந்த பாரமெல்லாம் வற்றிய உணர்வு. கலங்கிய விழிகளும் உள்ளமுமாய் சிலவற்றை மறைத்தும் சில சொற்களை விழுங்கியும் கூறி முடித்து அவர் முகத்தைப் பார்த்தாள்.

சிந்துவிற்குமே நடந்ததைக் கேட்டதும் மனம் வருந்தியது. என்னப் பேசுவது எனத் தெரியாது அவளது தலையை ஆதுரமாகத் தடவியர், “என்னமோ உன் காதல் உனக்குக் கிடைக்க இந்தளவுக்குப் போராடணும்னு கடவுள் எழுதியிருக்காரு டா. ஒரு பொண்ணா உன்னால இந்தளவுக்குப் போராட முடிஞ்சிருக்கே, கண்டிப்பா தோல்வியில்லை இது. வெறும் சறுக்கல்தான். அதே மாதிரி உன்னைப் பெத்தவங்க நீங்க நல்லா இருக்கக் கூடாதுன்னு ஒருநாளும் நினைக்க மாட்டாங்க. சின்ன புள்ளை வாழ்க்கையில தவறான முடிவெதுவும் எடுத்து கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்குறாங்க. அதோட வெளிப்பாடுதான் இந்தக் கோபம். சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் மனோ…” என்றவர், “நானா தேடுனா கூட என் பையனை இந்தளவுக்கு நேசிக்கிற பொண்ணு கிடைப்பாளான்னு சந்தேகம். சீக்கிரம் என் மருமகளை இந்த வீட்டுக்கு கூட்டீட்டு வரேன்!” என்றவரைப் பார்த்தாள் மனோஹரி.

“நடக்குமா அத்தை?” உதட்டைக் கடித்து விழியோரம் துளிர்த்த நீரை அடக்கிக் கேட்டாள்.

“ஏன் நடக்காது, கண்டிப்பா நடக்கும் டா. என்னால என்ன முடியுமோ, அதை நான் செய்றேன் டா. உங்கப்பா, அம்மாகிட்ட நான் பேசுறேன்!” என சிந்து கூற,

“வேணாம் அத்தை, அப்பா உங்களை எதுவும் சொல்லிட்டார்னா, அதை என்னால தாங்கிக்க முடியாது. உங்கப் பையனும் கோபப்படுவாரு. பேசுறதைக் காது கொடுத்துக் கேட்குற அளவுக்குக் கூட என் அப்பாவுக்குப் பொறுமையெல்லாம் இல்லை. அவர் அவரா இல்லை, ஜாதி அவரை மிருகமா மாத்திடுச்சு!” என்றாள் மனதில் வேதனையுடன். சிந்து எதுவுமே பதில் பேசவில்லை. அவளது கையைத் தட்டிக் கொடுத்தார். நினைவு வந்தவளாக மனோஹரி தான் வாங்கிய பரிசை வெளியே எடுத்தவள், “இது உங்கப் பையனுக்காக வாங்குனேன் அத்தை. நான் கொடுத்தா, வாங்க மாட்டாரு. நீங்களே கொடுத்துடுங்க!” என்று அவரிடம் விடை பெற்றாள்.

ஏனோ மருத்துவமனைக்குச் செல்லும் மனநிலை முற்றிலும் தகர்ந்திருக்க, வீட்டை நோக்கிப் பயணப்பட்டாள். வீட்டின் முகப்பைக் கடந்து இவள் உள்ளே நுழைய, இரண்டு மகிழுந்து புதிதாய் வாயிலை நிறைத்தன.

‘யார் வந்திருப்பார்கள்?’ என மனோ யோசித்தவறே உள்ளே நுழைய, “மனோ அக்கா…” என உள்ளிருந்து குட்டைப் பாவாடையும் கையில்லாத சட்டையுமாய் பெண்ணொருத்தி ஓடிவந்து இவளைக் கட்டிக்கொண்டாள்.

ஒரு நொடி அதிர்ந்தவளின் முகம் நீண்ட நாட்களுக்குப் பிறகு புன்னகையைப் பூசிக்கொண்டது.
“அக்ஷூ, எப்போ வந்தீங்க?” என இவளது விரல்கள் அவளது தலையை அன்பாகத் தடவின.

“உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இன்பார்ம் பண்ணாம ஒரு சர்ப்ரைஸ் விசிட்!” சின்னவள் மலர்ந்து புன்னகைத்தாள்.

“சரி வா, அப்பா, அம்மா, அக்கா, மாமா, அண்ணா, அண்ணின்னு எல்லாருமே வெகேஷனுக்கு வந்திருக்கோம்” மனோவின் கையை அக்ஷயா பிடித்திழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“வாங்க சித்தப்பா, வாங்க சித்தி, இத்தனை நாள் இங்க ஒரு சொந்தம் இருந்தது மறந்துடுச்சுல்ல உங்களுக்கு?” இவளது முகம் செல்லக் கோபம் கொண்டது.

“வேலை இருந்துச்சு டி, நாங்கென்ன வேணும்னா வராம இருந்தோம்?” வனிதா கூறுவது பொய்யென தெரிந்தும் மனோ தலையை அசைத்தாள்.

“நல்லா இருக்கீயா மனோ?” கோவிந்தராஜன் வினாயெழுப்ப, “ஆங்… இருக்கேன் சித்தப்பா. நீங்க எப்படி இருக்கீங்க? எங்க அண்ணனைக் காணோம்? குழந்தை எங்க?” என மனோவின் விழிகள் வீட்டை நோட்டமிட்டன.

“அவன் கெஸ்ட் அவுஸ்ல இருக்கான் மனோ!” எனக் கொண்டையைத் தூக்கிப் போட்டவாரு கூடத்திற்கு வந்தாள் மைதிலி.

“அக்கா, பசங்களை எங்க? அத்தான் எங்க?” என மனோ கேட்டு முடிய, “ப்ரசென்ட் மிஸ்…” என லோகேஷ் வந்து நின்றான்.

“என்ன அத்தான், இத்தனை நாள் காணாம போய்ட்டு, இப்போ திரும்பி வந்துட்டீங்களா?” என மனோ கேட்க, “சும்மா கேள்வியா கேட்காத மனோ. நீ ஏன் ஹாஸ்பிடல் போகாம திரும்பி வந்த?” என ராதா மகளிடம் வினவினார்.

“லேசா தலைவலி மா, அதான் ஹாஸ்பிடல் போகலை. இப்போ எல்லாரையும் பார்த்ததும் தலைவலி பறந்துடுச்சு!” என கைகளை இருபுறமும் ஆட்டியவளின் முன்னே இரண்டு வாண்டுகள் வந்து நின்றன.

“சினேகா, கார்த்திக்…” என அவர்கள் கன்னத்தைக் கிள்ளினாள் இவள்.

“தலைவலி எந்தப் பக்கம் பறந்து போச்சு சித்தி. நாங்க ரெண்டு பேரும் போய் பிடிச்சுட்டு வரோம்!” சினேகா பல் தெரிய சிரிக்க, கார்த்திக்கும் வாய்விட்டு நகைத்தான்.

“அது எங்க போச்சு. அதான் உங்க ரூபத்துல திரும்ப வந்துடுச்சே!” என அவர்கள் காதைப் பிடித்து திருகினாள் மனோ.

“அக்கா, வா நம்ம பாப்பாவைப் பார்க்கப் போகலாம்!” அக்ஷயா அழைக்கவும் இவள் விருந்தினர் வீடு நோக்கி நகர்ந்தாள்.

காலநிலை மாற்றம், பயணக் களைப்பு, ஊர் மாற்றம் என அனைத்தும் சேர்ந்து ஹரிஓமின் இரண்டு வயது குழந்தையைப் படுத்தியதில், கத்திக் கொண்டிருந்தான் அப்பாலகன். செபாஸ்டினும் அவனும் குழந்தையை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்க, மனோ உள்ளே நுழைந்தாள்.

“வா மனோ!” ஹரி துள்ளும் குழந்தையைக் கையில் அழுத்திப் பிடிக்க, “ண்ணா, குழந்தையைக் கொடு என்கிட்ட!” என மனோ அவனைக் கைகளில் அள்ளிக் கொஞ்சி கெஞ்சி தட்டிக் கொடுத்து எனப் பத்து நிமிடங்களில் சமாதானம் செய்து உறங்க வைத்திருந்தாள்.

“தேங்க் யூ சோ மச்!” செபாஸ்டின் நன்றியுடன் குழந்தையை வாங்கி கட்டிலில் கிடத்தினாள்.

இத்தனை நேரம் அவளது செய்கையைப் புன்னகையுடன் பார்த்திருந்த ஹரி, “என் தங்கச்சிக்கு புள்ளையைப் பார்த்துக்குற அளவுக்குப் பொறுப்பு வந்துடுச்சே. பேசாம அவளுக்கொரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடலாம்!” என அவன் சிரிக்க, நொடியில் இவளது முகம் இருண்டது.

அவளது கழுத்தில் கையைப் போட்டுத் தன்னருகே இழுத்தவன், “இது. செபாஸ்டின், உன்னோட அண்ணி…” என மனைவியை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“ஹாய் மனோ!” செபா அறிமுகப் புன்னகைப் பூத்தாள். சுற்றியிருந்த மூவரில் பளிச்சென மின்னிய வெண்ணிறத் தேகத்திற்கு சொந்தமானவள் தனித்து தெரிந்தாள். செபாஸ்டின், லண்டனின் பிறந்து வளர்ந்த யுவதி.‌‌ ஹரி ஓமும் இவளும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து, காதல் திருமணம் செய்து கொண்டனர்.

“ஹாய் அண்ணி, தமிழ் பேசுவீங்களா?” மனோ ஆர்வமாய்க் கேட்க, “கொஞ்சம் பேசுவேன். கத்துட்டு இருக்கேன்!”. அவள் சங்கடமாய் நெளிந்து உடைந்தத் தமிழில் கூறினாள்.

“பரவாயில்லை அண்ணி…” என அரைமணி நேரம் அமர்ந்து அவர்களிடம் பேசிவிட்டு வீட்டை நோக்கிப் பயணித்தவளின் முகத்தில் அத்தனை ஆச்சர்யம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னே தன் தந்தையுடன் ஏற்பட்ட பிணக்கில் இங்கு வரமாட்டேன் என்பது போல சண்டையிட்டு சென்ற கோவிந்தராஜன் அதன் பின் பேச்சு வார்த்தையைக் கூட துண்டித்திருந்தார். அப்படி சென்றவர், இப்போது நடுவீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாரே என இவளுக்கு ஏக ஆச்சர்யம்‌.

ரங்கராஜனும் கோவிந்தராஜனும் உடன் பிறந்த சகோதரர்கள். ரங்கராஜன் பெயரளவில் கல்லூரியை முடித்துவிட்டு தந்தையுடன் தொழில் முனையச் சென்றுவிட, கோவிந்தன் பொறியியல் முடித்துவிட்டு லண்டனில் பணியிலமர்ந்தார். அவ்வப்போது இந்தியா வந்து செல்லும் மகனைப் பிடித்து வைக்க வழியறியாது தந்தை அவனுக்கொரு திருமணத்தை முடித்தால் சரியாகிவிடும் என தங்கள் சொந்தத்திலே வனிதாவைப் பார்த்து மணம் முடித்து வைத்தார்.

ஆனால், கோவிந்தன் மனைவியுடன் வெளிநாட்டு மோகத்தில் அங்கேயே தங்கிவிட்டார். வருடத்திற்கு ஒருமுறை இந்தியா சென்று திரும்புவார். அவருக்கு
மைதிலி, ஹரி ஓம், அக்ஷயா என்று மூன்று பிள்ளைகள்.

மூத்தவள் மைதிலி திருமணம் முடிந்து கணவனுடன் கோயம்புத்தூரில் வசிக்க, ஹரி ஓம் உடன் பணிபுரியும் பெண்ணை காதலிக்கிறேன் என வந்து நிற்க, கோவிந்தன் எந்த எதிர்ப்புமின்றி ஒரு கிருஸ்துவ பெண்ணை மருமகளாக ஏற்றிருந்தார்.

ரங்கராஜனுக்கு ஜாதிப்பற்றும், மதவெறியும் அதிகம். ஆனால், கோவிந்தன் அப்படியில்லை. அவர் வாழ்ந்த சூழ்நிலையும் அதற்கொரு காரணம். இந்தப் பிரச்சனையில்தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, கடந்த முறை வந்த கோவிந்தன் சண்டையிட்டு சென்றிருந்தார். கண்டிப்பாக அவருடனான உறவு அறுந்துவிட்டது என மனோ எண்ணி கவலைப்பட்ட நாட்கள் அதிகம். அப்படி இருக்கையில் எப்படி கோவிந்தன் அந்த மனக்கசப்பை முற்றிலும் மறந்து இங்கு வந்திருக்கிறார் என இவளுக்கு சுத்தமாய்ப் புரியவில்லை.

அதிலும் மொத்தக் குடும்பமும் ஒன்றாய் வந்து நிற்க, கண்டிப்பாக ஏதோ விஷயமில்லாது வந்திருக்க மாட்டார்கள் என இவள் ஊகிக்க, அன்று மாலையே ஏனென்று தெரிந்திருந்தது மனோவிற்கு.

உள்ளம் கேட்கும்…

error: Content is protected !!
Scroll to Top