கனவு – 3.1

முழு முதலாய் கடந்திருந்த ஒரு நிமிடத்திற்கு பின்பு இருவரின் பார்வையும் அவசரமாய் சத்தம் வந்த திசையை நோக்கி தான் சென்றது. முழுதாக இரண்டு நிமிடங்கள் அந்த பால்கனி கதவை வெறித்து விட்டு அதன் அருகில் பிருந்தா செல்வதற்குள் எப்படி என்றெல்லாம் தெரியவில்லை அவளால் கட்டப்பட்டிருந்த கட்டுகளில் இருந்து வெகு சுலபமாகவே வெளியே வந்திருந்தான் அந்த தில்ஷத்.

அவ்வளவு தான் உள்ளுக்குள் பயந்தே போய் விட்டது பெண் மனது. இத்தனை நேரமும் அவள் நினைத்து வந்திருந்ததிற்கு மாறாக அங்கு நிகழ்ந்து கொண்டிருந்ததிலே துணைக்கு வேறு யாரையும் தன்னுடன் அழைத்து வந்திராத தன்னை மனதுக்குள் கடிந்து கொண்டிருந்தவள் இப்போது இன்னும் ஒருவன் இவனோடு சேர்ந்து கொண்டால் இவள் நிலை என்ன ஆகும் என்றெல்லாம் நினைக்கையிலே அந்த நிமிடம் அவளுக்கு அப்படியே உறைந்து நின்றது.

‘எனக்கு மட்டும் இந்நேரம் மேஜிக் தெரிஞ்சு இருந்திருந்தா இந்த கத்திய உடனே என்னுடைய செல்ஃபோனா மாத்தி இருப்பேன்’

‘அட அது கூட வேண்டாம்! அட்லீஸ்ட் இந்த ரெண்டு கல்ப்ரிட்ஸை ஸ்பைடரா மாத்திருக்கலாம். ஹாஹா எட்டு கால்ல எந்த கால யூஸ் பண்றதுன்னு தெரியாம அவங்க தவிச்சிருப்பாங்க. அந்த நேரத்துல அவங்களை நாம சுலபமா வளைச்சு பிடிச்சிருக்கலாம்’

‘அப்பவும் அவங்களை பிடிக்க தான் வழி தேடுது பாரு உன்னுடைய டிஃபென்ஸ் மைண்ட். இங்க இருந்து எப்படி தப்பிக்கணும்னு தானே நியாயமா இப்ப நீ யோசிக்கணும். அதை விட்டுட்டு, ஓவர் ஸ்வீட்ஸ் கொலஸ்ட்ராலுக்கு ஆகாதுனு பேசிட்டு இருக்க!’

தன்னுள் எழுந்த அந்நேரத்தின் பயத்தை போக்கி கொள்ள ஒரு நொடியில் ஓராயிரம் எண்ணங்கள் விரிந்தது பிருந்தாவின் மனதில். வழக்கமான அவளுடைய உள்ளத்தின் இப்படிப்பட்ட நகைச்சுவையை எல்லாம் ரசிக்கும் மனநிலையிலா இருக்கிறாள் அவள்?

ஏறக்குறைய அதே நேரத்தில் தான் திடீரென்று அவள் முன்னால் வந்து தன் முதுகை காட்டி நின்றது அந்த பெரிய மனித உருவம். அதன் தோளில் தன் கை பதித்து தனக்கு முன்பு நின்றிருந்த அந்த உருவத்தை அவள் தள்ள முயன்ற நேரம் திரும்பி அவளை ஒரு மாதிரியாக பார்த்தபடியே முறைத்த அந்த உருவம்,

“மார்வெல்! நான் தான். நானும் எவ்வளவு நேரமா உங்களை கூப்பிடுறேன். நீங்க என்னை கண்டுக்கற போலவே இல்ல. ட்ரீம் வேர்ல்டுக்கு போற நேரமா மார்வெல் இது?” என குறைபட்டுக் கொண்டது.

‘ஹுரே! என்னை காப்பாத்த அவெஞ்சர்ஸ் வந்திருக்காங்களா? தோர்(Thor) மட்டும் தான் இங்க இருக்காரு. அப்ப மத்தவங்களாம் எங்க போயிருக்காங்க?’ என்று மனதிற்குள் எழுந்த கேள்வியை சற்று சத்தமாக முனங்கி விட்ட பிருந்தாவை வினோதமாக பார்த்து,

“தோர் யாரு நானு? மார்வெல்னு சொன்னதும் நீங்க ஏதோ கற்பனை உலகத்துக்கு போயிட்டிங்க போலிருக்கு. நான் தாங்க தில்ஷத். நீங்க காப்பாத்த வந்தேனு சொல்லி பிடிச்சு வச்சுக்கிட்டு மிரட்டியது என்னை தாங்க. இப்பவாவது என்னை அடையாளம் தெரியுதா உங்களுக்கு?” என்று சிரித்துக் கொண்டே மெல்லிய குரலில் அவளை கலாய்த்தது அந்த லேவண்டர் உருவம்.

“ஓ! கல்பிரிட் நம்பர் ஒன் தானா? இந்த ஜெட் அப் பார்த்துட்டு நானும் தோர் தான் என்னை காப்பாத்த வந்துட்டாரு போலனு நினைச்சுட்டேன்”

அவள் குரலில் இருந்து வெளிப்பட்ட குறும்பே அவள் வேண்டும் என்று தான் தன்னை கேலி செய்கிறாள் என்று தில்ஷத்துக்கு புரிய வைத்தது. சட்டென அங்கிருந்த ஆள் உயர கண்ணாடியில் தன்னை பார்க்கும் போது தான் அவனுக்கு பிருந்தா கூறியதின் அர்த்தம் புரிந்தது.

அவள் சல்வாரின் நிறத்தில் இருந்த ஷாலை தானே அவன் கைகளில் அவள் கட்டி விட்டிருந்தது அதை அவசரமாக அவிழ்த்திருந்தவனின் பின் உடலில் ஒரு பக்கமாக அது மொத்தமாய் தோரின் கேப்(cape) போல அழகாக தழுவி இருந்தது. அவனை அப்படி ஒரு பக்கமாய் பின்னால் இருந்த பார்ப்பதற்கு மார்வெல் படங்களில் வரும் தோர் கதாபாத்திரம் போலவே இருந்தது.

அதை கண்டு கொண்ட தில்ஷத் மீண்டும் அவள் புறம் திரும்பி அவளை பார்த்து புன்னகைக்கவும் சட்டென என்ன நேர்ந்ததோ பிருந்தாவின் முகம் கடுகடுவென மாறியது. நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கும் அவள் முகபாவனைகளின் அர்த்தங்கள் புரியாது முழித்தவன் அவசரமாக அவள் ஷாலை தன் தோளில் இருந்து உருவி அதை தன் கைகளில் சுற்றி கொண்டபடியே பால்கனி நோக்கி விரைந்தான்.

கதவுக்கு பின்னால் அவர்கள் இருவருமாக வந்து நிற்கவும் கதவை திறக்க முயன்ற தில்ஷத்தை தடுத்து, “யாரை கேட்டு எனக்கு மார்வெல்னு நேம் வச்சிங்க?” என்று அவனிடம் மெல்லிய குரலில் தாங்கள் இருக்கும் நிலையை உணராது நேரம் காலம் பார்க்காமல் கோபமாக வினவினாள் பிருந்தா.

“இஷ்! உங்க நேம் என்னனு நீங்க இன்னும் எனக்கு சொல்வே இல்லையே. அதுவும் இல்லாம நானா கேட்டாலும் நீங்க அதை சொல்லி இருக்க மாட்டிங்க. அதான் நானே உங்களுக்கு ஒரு நிக் நேம் வச்சுட்டேன். ஏன் இந்த நேம் உங்களுக்கு பிடிக்கலையா?” என்றவனின் பதில் அவளுடைய குரலுக்கு நேரெதிரான மென்மைகள் நிறைந்து வந்தது.

அவன் கண்களை கூர்மையாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தவள், ‘ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி பார்த்திருக்கற பொண்ணுகிட்ட இப்படி தான் பேசுவாங்களாமா? இவங்க கிட்ட ஏதோ ஒன்னு சரியே கிடையாது. பிருந்தா உன் மூளைக்கு வேலை வந்துருச்சு போல!’ என தனக்குள்ளாக நினைத்தாள்.

“கல்பிரிட் நம்பர் ஒன்! ஏன் கல்பிரிட் நம்பர் டூவ இப்ப இங்க வர சொல்லி இருக்கிங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா? அடுத்து உங்க பிளான் தான் என்ன?”

“…”

“சைலண்ட்டா இருந்தா என்ன அர்த்தம் என்ன மாதிரி சிக்னல் கொடுத்து அவர வர வச்சிங்க? ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கட்டிப் போட்டுட்டு இங்க எதை திருட வந்திருக்கிங்க?” என்று ஆர்வமாக வினவியவளை பார்த்து,

“மார்வெல்! ஏன் இப்படி? இன்னுமே நீங்க என்னை நம்பலையா?” வேறு என்ன கூறுவது என்று புரியாத நிலையில் இருந்தான் தில்ஷத்.

அடை மழையாய் விடாது பொழியும் அவள் குறும்பு முகத்தையே பார்த்து நின்றிருந்தான். இப்படி எல்லாம் விளையாட்டாக அவனிடம் இதற்கு முன்பு பேசியிருந்தது யாராம்? அதனாலே அவன் முகத்தில் அவளை ரசிக்கும் வாஞ்சையான பாவனை தன்னால் வந்து ஒட்டிக் கொண்டதோ?

error: Content is protected !!
Scroll to Top