காதல் 15:
“நீங்க தான் அவங்களுக்கு கார்டியனா?” என்று எதிரில் இருந்தவரின் கேள்விக்கு,
“ஆமா நான் தான் கார்டியன்” என்று பதில் மொழிந்துவிட்டு அவர் கொடுத்த காகிதத்தில் கையெழுத்தை போட்டான் குரு பிரசாத்.
அருகில் மகிழினியும் வர்ஷினியும் நின்றிருந்தனர். அகிலனின் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக சென்னை வரை வந்திருந்தனர்.
அகிலன் அமைதியாக குருவை தான் பார்த்திருந்தான். அவன் மனதில் குரு பல மடங்கு உயர்ந்திருந்தான்.
ஏற்கனவே அவனை நாயகன் போல பார்ப்பவன் இப்போது இன்னும் உயர்த்தி பார்த்தான். தன் தமக்கையை திருமணம் செய்ய கேட்ட போதே இவ்வளவு பெரிய பணக்காரராக இருப்பவர் தன் தமக்கையை திருமணம் செய்ய கேட்கிறாரா? என்று ஆச்சர்யப்பட்டு போனான்.
அடுத்தடுத்து வேகமாக நடந்த நிகழ்வுகளில் அது உண்மை தான் என்று புரிய குரு அகிலன் மனதிற்குள் மிகப்பெரிய இடத்தை அடைந்திருந்தான்.
அதுவும் இளையவர்கள் இருவரது பொறுப்பையும் ஏற்று கொள்கிறான் தன்னுடைய படிப்பு செலவையும் ஏற்கிறார் என்று கூறிய போது வார்த்தைகளற்று தான் போனான்.
இருந்தும் தமக்கை யின் நலன் கருதி நீ எங்களுக்காக தான் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கிறாயா? என்று கூட வினவி இருந்தான்.
மகிழினி இல்லை என்று உறுதியாக கூறிய போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
தமக்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போவது நல்ல விடயம் தான் இருந்தும் தங்களை எண்ணி தமக்கை பிடிக்காத வாழ்விற்குள் நுழைந்துவிட கூடாதே என்று அஞ்சி தான் வினவினான்.
மகிழுக்கு விருப்பம் என்று அறிந்த பிறகு அகிலனது மகிழ்வுக்கு எல்லையே இல்லை. மகிழ்ச்சியுடன் திருமண நிகழ்வில் பங்கேற்றான்.
குரு மருத்துவம் படிக்க வைக்கிறேன் என்று கூறிய போது எதாவது ஒரு சிறிய மருத்துவ கல்லூரியில் சேர்த்து விடுவார் என்று தான் எண்ணி இருந்தான்.
ஆனால் தன்னுடைய தங்கையை சேர்த்த அதே கல்லூரியில் சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை.
அத்தனை பெரிய கல்லூரி தமிழ்நாட்டிலே மிகப்பெரிய கல்லூரி தாய் தந்தையர் இருந்திருந்தால் கூட தன்னை இவ்வளவு பெரிய கல்லூரியில் படிக்க வைத்திருப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்வி தான்.
தன்னுடைய சேர்க்கை படிவத்தில் கையெழுத்திட்ட அகிலனுக்கு அந்த நொடி மனதில் உணர்வு கிளர்ந்தெழுந்தது.
எத்தனை வருட கனவு எத்தனை வருட ஆசை. ஆசை என்று சொல்வதை விட தாய் தந்தையரது ஆசைப்படி மருத்துவனாக வேண்டும் என்பது ஒரு வெறியாகவே இருந்தது.
உடல்நிலை சரியில்லாத போதும் மிகவும் மனதிடத்துடன் தான் தேர்வை எழுதினான். இருந்தும் ஒற்றை மதிப்பெண்ணில் கிடைக்காமல் போனது அவனுடைய துரதிர்ஷ்டம் தான்.
இருந்தும் மனதின் ஓரு ஓரம் தனக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் மதிப்பெண் தரவரிசை வெளியிட்ட போது மனமுடைந்து தான் போனான்.
சிறு வயதில் இருந்தே மருத்துவனாக வேண்டும் என்று மனதிற்குள் உருப்போட்டு வளர்ந்தவனால் அந்த தோல்வியை ஏற்க முடியவில்லை. மனது அவ்வளவு வலித்தது.
தாய் தந்தையர் இறந்த போது வந்த அதே வலி அவர்களது ஆசையை நிறைவேற்ற இயலாது போன போது வந்தது.
இருந்தும் தமக்கைக்காக அண்ணன் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தான் தான் அவர்களை படிக்க வைத்து முன்னேற்ற வேண்டும். தமக்கையின் மேல் இருந்து சுமையை இறக்கி வைக்க வேண்டும் என்று தான் பொறியியல் படிக்க ஒப்புக்கொண்டான்.
ஆனால் மனதின் ஓரம் மருத்துவம் படிக்க இயலவில்லையே என்ற ஏக்கம் உறுத்தி கொண்டே தான் இருந்தது. தமக்கைக்கு தெரிந்தால் வருந்துவாள் என்று மனதை தேற்றி கொண்டு சாதாரணமாக இருப்பது போல பேசினான்.
மகிழ் கடன் வாங்கி படிக்க வைக்கிறேன் என்று கூறிய போது மறுத்தாலும் உள்ளூர ஆசை இருந்தது உண்மை தான். மகியின் வற்புறுத்தலில் ஒப்பு கொண்ட போதும் மனம் மகிழ்ந்தாலும் இவ்வளவு பெரிய கடனை எவ்வாறு அடைக்க போகிறோம் என்று அச்சம் வந்தது.
தன்னால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சி கொண்டு தான் இருந்தான். ஆனால் எல்லாம் குரு மகிழ் திருமண விடயம் தெரியும் முன்பு தான்.
அதன் பிறகு அவனுக்குள் அப்படி ஒரு ஆசுவாசம். குரு எல்லாவற்றையும் பார்த்து கொள்வான் என்று நம்பிக்கை பிறந்தது. ஏனோ குருவின் மீது அபரிமிதமான நம்பிக்கை அவனுக்கு இருந்தது. காரணம் தெரியவில்லை. அந்த நம்பிக்கை இந்த நொடி வரை அதிகரித்ததே தவிர குறையவில்லை.
“அகி…” என்ற தமக்கையின் அழைப்பில் நினைவை அடைந்தவன்,
“ஹான் என்னக்கா?” என்று வினவ,
“என்ன யோசனைடா. ரொம்ப நேரமா கூப்பிட்டு இருக்கேன்” என்று மகி பதில் வினா தொடுத்தாள்.
“ஒன்னுமில்லைக்கா” என்று அகில் கூற,
“ஹ்ம்ம்..” என்று தலையசைத்த மகி,
“வா ஹாஸ்டல் அட்மிஷன் போடலாம்” என்று அழைத்தாள்.
“சரிக்கா” என்று தலையசைத்தவன் அவர்களை பின் தொடர,
முதலில் வர்ஷினியை விடுதியில் சேர்த்துவிட்டு பிறகு அகிலனுக்கு விடுதியில் சேர்க்கைக்கு சென்றனர்.
அங்கும் குரு தான் எல்லா படிவத்திலும் கையெழுத்திட்டு அவனது பொறுப்பை ஏற்றிருந்தான்.
பிறகு இருவரையும் ஒரு பெரிய வணிக வளாகத்திற்கு அழைத்து சென்று உடைகளை வாங்கி கொடுத்தான்.
அகிலன் மறுத்த போதும்,
“உங்க அக்கா வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியா? என்னையும் உன் அக்காவையும் பிரிச்சு பாக்குறியா?” என்று வினாவை கேட்டு அகிலனது வாயை அடைத்துவிட்டான்.
அதன் பின்னர் அகிலனுக்கு ஒரு விலை உயர்ந்த அலைபேசியை வாங்கி கொடுக்க அதில் அதிர்ந்த அகிலன்,
“மாமா எனக்கு எதுக்கு இவ்ளோ காஸ்ட்லி மொபைல்” என்று வினவிட,
“மெடிக்கல் காலேஜ்ல படிக்க போற அகில். அதுவும் பெரிய காலேஜ் உனக்கு இது கண்டிப்பாக தேவப்படும். இருக்க இடத்துக்கு தகுந்த மாதிரி வாழ பழகிக்கணும்” என்று முடித்துவிட அகிலன் எதுவும் கூறவில்லை.
இறுதியாக அவனுக்கு வெள்ளை அங்கியும் இதய துடிப்பு மாணியும்(ஸ்டெத்தெஸ்கோப்) வாங்கி கொடுக்க அதனை கையில் வாங்கிய போது அவனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
விழிகள் கூட கலங்கிவிட்டது. இமை சிமிட்டி அதனை மறைத்துவிட்டான்.
இறுதியாக அகிலனை அவனுடைய விடுதியில் விட்டுட்டு வர்ஷினியை அவளுடைய விடுதியை விட்டுவிட்டு கிளம்ப முடிவு செய்தனர்.
இரு விடுதிக்கும் ஒரு சுவர் தான் இடையில் இருந்தது.
கிளம்பும் சமயம் குரு அகிலனிடம்,
“அகில் டேக் கேர். உனக்கு புக்ஸ் ஆர் அதர் திங்க்ஸ் எதாவது வாங்கணும்னா என்கிட்ட கேளு. இல்லைனா உன் அக்காகிட்ட கேளு” என்றவன தன்னுடைய பர்ஸில் இருந்து சில பண தாள்களை எடுத்து அவனது கையில் கொடுக்க,
“எனக்கெதுக்கு மாமா. இவ்ளோ பணம். அதான் ஏற்கனவே எல்லாத்துக்கும் பே பண்ணிட்டிங்களே. இதுக்கு மேல எனக்கு என்ன செலவு இருக்க போகுது” என்று மறுத்தான்.
“ப்ச் பிடி. ஃப்ரெண்ட்ஸ் கூட வெளிய போறது அது இதுன்னு நிறைய செலவு வரும்” என்று அவனது கையில் பணத்தை திணிக்காத குறையாக கொடுத்துவிட்டு,