என் உள்ளம் கேட்குமே – 13.2

சிந்து மகனின் நெற்றியில் விபூதியை வைத்தார். குமரனுக்கு பெரிதாய் கடவுள் நம்பிக்கை இல்லையெனினும் தாயிற்காக வருடத்தில் பிறந்தநாளன்று கோவிலுக்கு தவறாது வந்துவிடுவான்.

“வாங்க மா, வீட்ல விட்டுட்டு கிளம்புறேன்!” குமரன் நேரத்தைப் பார்த்தான். சூளைக்குச் செல்ல இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.

“நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வீட்டுக்குப் போறேன் குமரா. நீ வேலைக்கு கிளம்பு!” சிந்து கூற,

“சரிம்மா, பத்திரமா போங்க…” என இவன் விடை பெற்றான். பத்து நிமிடத் தொலைவு கூட இராது குமரன் வீட்டிலிருந்து கோவிலுக்கு. அதனாலே அவன் கிளம்பியிருந்தான்.

செல்லும் அவனையே மனோஹரி விழிகளில் நீருடன் பார்த்தாள். மனம் அந்த முகத்திலிருந்து மீள முடியாது தவித்தது. அவன் அகன்றதும் கண்ணைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளின் முன்னே சிந்து நிற்கவும், ஒரு நொடி அதிர்ந்து போனாள். இவளது அழுத முகத்தைதான் பெரியவர் பார்த்திருந்தார்.

“எப்படி இருக்க மா மனோ, நல்லா இருக்கீயா? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” அவர் இயல்பாய் வினவ, மனோவுக்கு பேச நா எழவில்லை. குமரன் தன் தாயிடம் தங்களுக்கிடையே நடந்த பிணக்குகள் எதையும் தெரிவித்திருக்கவில்லை எனப் புரிந்தது இவளுக்கு.

ஒரு நொடித் தயங்கியவள், “ந.. நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்க, அப்புறம்…” எனத் திணறியவள், “உங்கப் பையன் எப்படி இருக்காரு ஆன்ட்டி!” என்று வினவினாள்.

‘அத்தை’ என்னும் விளிப்பு ‘ஆன்ட்டி’ என மாறியிருந்ததை சிந்துவும் உணர்ந்தார்.

“அவனுக்கென்ன மா, ரொம்ப நல்லா இருக்கான். நீதான் பார்த்தீயே!” அவளது முகத்தை ஊன்றிப் பார்த்தவாறு சிந்து கூறவும், மனோவுக்கு மனம் வலித்தது. அவளும் குமரனைக் கவனித்தாளே.

‘நான் மட்டும்தான் அவனது இன்மையில் ஊனுருகி உறக்கமில்லாது உழன்றுக் கொண்டிருக்க, இவனுக்கு என் நினைவு வரவேயில்லையா? என் இன்மை இவனைப் பாதிக்கவில்லையா?’ ஏற்கனவே அவனைக் கண்ட நொடியில் மனம் கேள்வியெழுப்பியிருக்க, அக்கேள்வியில் இதயம் கனத்துப் போனது. அதையே சிந்துவின் வாய் மொழியாய்க் கேட்டதும், இன்னுமே வலித்து தொலைத்தது. மீண்டும் கண் இரைப்பைகள் நீரை உகுக்கத் தயாராகின. மேலும் அவரிடம் நின்று பேசினால் காயம்பட்டுவிடுவோமோ என மனம் அஞ்சி நடுங்க, “நான் வரேன் ஆன்ட்டி” என நகர முயன்றாள்.

“என்ன மா அவசரம், கொஞ்சம் நேரம் பேசிட்டு போகலாமே?” சிந்து கேள்வியாய் நிறுத்தினார்.

அந்தப் பேச்சுதான் வேண்டாமென மனம் அரற்ற, “இல்ல… அது வேலைக்கு டைமாகிடுச்சு ஆன்ட்டி!” என முயன்று மறுத்தாள்.

“சரிம்மா, எப்படி போவ?”

“ஸ்கூட்டீல வந்தேன் ஆன்ட்டி. அதுலயே போய்டுவேன்!” மனோவின் கால்கள் இரண்டெட்டு வைக்க, “குமரன் வேலையிருக்குன்னு கிளம்பிட்டான். என்னை வீட்ல இறக்கி விட்றீயா மனோஹரி. வயசாகிட்டதால நடக்க கஷ்டமா இருக்கு மா!” சிந்து உரைக்கவும், இவளால் மறுக்க முடியாது போனது.

எதையும் கூறி தப்பிக்க வழியில்லாது போக, அவரை அழைத்துக்கொண்டு சென்று வீட்டில் இறக்கிவிட்டாள் மனோ.

அவளது கையை இறுகப் பிடித்த சிந்து, “இவ்வளோ தூரம் வந்துட்டு வீட்டுக்குள்ள வராமப் போகலாமா மா. ஒரு ஐஞ்சு நிமிஷம் உள்ளே வந்துட்டு போ மா!” என அன்பாய் அழைக்க, மனோ அவரை வேதனையாய்ப் பார்த்தாள். கண்டிப்பாக உள்ளே சென்றால் அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமே என மனம் பதறியது.

‘என்னக் கூறுவாள்? ஏது உரைப்பாள்? நானே விரும்பி ஏற்ற உங்கள் மகனை நானே தூக்கியெறிந்து விட்டேன் என்றா!’ எந்த முகத்தை வைத்துக்கொண்டு கூறுவது என மனம் தவித்தது.

“உள்ளே வாம்மா!” சிந்து முன்னே நடக்க, எதுவும் கூறாது உள்ளே நுழைந்தாள். இன்றைய நாள் எப்படி இருக்க வேண்டும் என விதியிருக்கிறதோ அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்றொரு எண்ணம் உதித்தது பாவைக்கு.

“உட்காரு மா!” என மனோவை அமர வைத்து மின்விசிறியை சுழலவிட்டவர், அடுக்களைக்குள் சென்றார். சில நிமிடங்களில் ஒரு தட்டில் இட்லி, சட்னி, கேசரி, வடை, பொங்கல் என நிரப்பி அவள் முன்னே மேஜையை நகர்த்திப் போட்டவர், “சாப்பிடு மனோ, இன்னைக்கு என் பையனுக்கு பிறந்தநாள். அதான் அவனுக்குப் பிடிக்குமேன்னு இவ்வளவும் சமைச்சேன். அப்புறம் பேசலாம்!” என பாசமாய் உரைத்தவரைப் பார்த்து இவளுக்கு விழியோரம் ஈரம் கசிந்தது. முகம் பார்த்து பசியறிந்த இந்தப் பெண் தாயிற்கு அடுத்ததாய் மனதில் நின்றிருந்தார்.

அவர் மகனை வேண்டாமென தூக்கியெறிந்துவிட்டது தெரிந்தால் இது போல சிந்து பேசுவாரா? என்ற கேள்வி தொக்கி நின்றது. அவரையே வெறித்தாள் மனோஹரி.

“சாப்பிடு மனோ, என்னோட சமையல் எப்படி இருக்குன்னு சாப்பிட்டுட்டு சொல்லு மா!” என்றவர் தானும் ஒரு இருக்கையை இழுத்துப்போட்டு அமர, அமைதியாய் உண்ணத் துவங்கினாள்.‌ உணவு தொண்டைக்குள்ளே சிக்கிக்கொண்டு உள்ளே இறங்க மாட்டேன் என சண்டித்தனம் செய்ய, கடினப்பட்டு விழுங்கினாள்.

“ரொம்ப நல்லா இருக்கு ஆன்ட்டி…” என உதட்டில் ஒட்டாத புன்னகையுடன் உண்டு முடித்திருக்க, சிந்து அவளைத்தான் பார்த்தார்.

“முதல்முறை சந்திச்சப்போ அத்தைன்னு கூப்பிட்ட மனோவைக் காணோம். இதென்ன ஆன்ட்டி, நல்லாவே இல்லை மா!” சிந்து புன்னகைத்தார். அந்தக் கேள்விக்கு மனோவிடம் பதிலில்லை.

“என்னாச்சு? ஏன் இப்படி இருக்கன்னு நான் கேட்டு, நீ நடந்ததை எல்லாம் மறுபடி ஞாபகப்படுத்தி சொன்னா, உனக்கு கஷ்டமா இருக்கும்னு எனக்குப் புரியுது மனோ. காலைல நீ குமரனைப் பார்த்து கண்கலங்கி நின்னப்போ உனக்கும் அவனுக்கும் இடையில ஏதோ சரியில்லைன்னு தோணுச்சு. அதை சரி பண்ற எண்ணம் எனக்கில்லை. ஆனால், உங்களால் அதை சரி பண்ண முடியும். கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பேசுனாலே, எல்லா பிரச்சனையும் இருந்த இடம் தெரியாமப் போய்டும்…” என்றவரை விழிகள் கலங்கப் பார்த்தாள் மனோஹரி.

அவளது தலையை ஆதுரமாகத் தடவியவர், “நம்ம என்ன நூறு வருஷமா வாழப் போறோம். இப்படி நீ ஒரு பக்கம் அழுதுட்டு, அவன் ஒரு பக்கம் முறுக்கீட்டு திரியுறீங்களே! இந்த வயசுல பிரச்சனை வரத்தான் செய்யும். ஆனால், அது உங்க உறவைப் பலப்படுத்துறதா இருக்கணும். இப்படி ரெண்டு பேரும் வேற வேற பக்கம் போறதா இருக்கக்கூடாது. அன்னைக்குப் பேசுனதோட, குமரன் என்கிட்ட எதையும் சொல்லலை. எனக்கும் புரிஞ்சது. அதுவுமில்லாம நடந்ததை அவன் சொல்லி, அதை நான் தப்பா எடுத்துகிட்டா, உனக்கும் எனக்கும் கசப்பு வந்துடக் கூடாதுன்னு கூட சொல்லாம இருப்பான். அதான்
அவனா சொல்லுவான்னு நான் காத்திருக்கேன். என்னைக்கு என் உதவி தேவைப்படுதோ, நான் அந்த இடத்துல நிக்கணும்னு நினைக்கிறானோ, அப்போ என் புள்ளை என்கிட்ட சொல்லுவான்!” என்று மென்னகையை உதிர்த்தார் சிந்து.

அவரது புரிதலில் இவளுக்குக் கண் கலங்கியது. தன்னை எங்கேயும் குமரன் இறக்கி விடவில்லை என்ற எண்ணத்தில் மனதினோரம் சிறு மகிழ்ச்சி கீற்றுப் படர்ந்தது.

error: Content is protected !!
Scroll to Top