மனது ஒரு முறை அந்த நிகழ்விற்கு சென்றது. கவினை காக்க சென்று வழுக்கி நீருக்குள் விழுந்த கணமே நீரில் போக்கில் கடகடவென அடித்து சென்றிருந்தாள்.
சலசலவென சத்தத்துடன் சுழற்றியடித்த நீருக்குள் மூழ்கி மூழ்கி எழுந்தவளது மனதிற்குள் வரிசையாக பலவித எண்ணங்கள்.
மனத்திரையில் கவின் எழில் அகிலன் என்று மூவரது முகமும் மாறி மாறி வந்தது. தான் தப்பிக்க வழியில்லை. நிச்சயமாக பிழைக்கமாட்டோம். இந்த நீரில் மூச்சிரைத்து இறந்துவிட போகிறோம்.
அதன் பிறகு தன்னை நம்பி இருந்தவர்களது கதி என்ன. தான் இல்லாவிட்டால் அவர்களை யார் பார்த்து கொள்வது நீரோடு சேர்த்து எண்ணங்களும் சுழற்றியடித்தது.
நொடிகள் கடக்க கடக்க அவளுடைய எண்ணங்களும் வலுத்தது. ம்ஹூம் நான் போக மாட்டேன். எனக்கானவர்களை தவிக்கவிட்டு தான் எங்கும் சென்றிட மாட்டேன். நான் பிழைக்க வேண்டும் என்று நீரோடு போராட நீச்சல் தெரியாத பாவையவளால் அந்த சுழற்றியடிக்கும் நீரில் தாக்குபிடிக்க இயலவில்லை.
நொடிகள் கடக்க நீர் வாய் மற்றும் மூக்கினுள் சென்றதில் இவளுக்கு மூச்சடைக்க மெதுவாக விழிகள் மங்க துவங்கியது. அவளது எண்ணங்களும் மங்க துவங்கிய நேரம் சட்டென்று ஒரு கரங்கள் நீண்டு அவளை பிடித்திருந்தது.
அது குரு பிரசாத் தான். அவன் தான் மகிழ் நீருக்குள் அடித்து செல்லப்பட்டதும் ஒரு கணம் அதிர்ந்து நின்றவன் என்ன செய்வது என்று யோசித்துவிட்டு வேறு வழியில்லை என்று தானே நீருக்குள் குதித்திருந்தான்.
நீச்சலில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தவனால் அந்த சுழலை தாக்கு பிடிக்க முடிந்திருந்தது. வேகமாக நீந்தி சென்றவன் மகியை கையை பிடித்து இழுத்திருந்தான்.
தனியாக நீந்தியவனால் மயக்கத்தில் இருந்தவளை இழுத்து கொண்டு எதிர்நீச்சல் அடித்து வர இயலவில்லை. இருந்தும் வேறு வழியில்லை ஒரு கணம் தளர்ந்தாலும் இருவரும் நீரோடு சென்றுவிடுவோம் என்று உணர்ந்து வெகு சிரமப்பட்டு அவளுடன் நீந்தி வர விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்திருந்தவர்களும் இருவரையும் தூக்கி இருந்தனர்.
இதற்குள் எழிலும் கவினும்,
“அம்மா அப்பா…” என்று உதடு பிதுக்கி அழுது கொண்டிருந்தனர்.
விஷாலியும் ஷர்மியும் தான் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்து கொண்டிருந்தனர். ஆனால் முடியவில்லை.
இவர்களுக்குமே பயமாக தான் இருந்தது. அந்த அருவியின் ஆழம் மிக அதிகம் கவனமாக இருங்கள் என்று ஒவ்வொரு முறையும் காசிநாதன் கூறி அனுப்புவாரே.
இருவரும் மேலே வந்ததும் தான் இருவருக்கும் உயிர் வந்தது. இளையவர்களை கையில் பிடித்து கொண்டு அவர்கள் அருகில் செல்ல குரு சுயநினைவில் தான் இருந்தான்.
மகிழ் தான் மயங்கி இருந்தாள். விஷாலி வந்ததும், “மகிக்கா மகிக்கா” என்று அவளது கன்னத்தை தட்டினாள்.
மகியிடம் அசைவே இல்லை. விஷாலிக்கு பயம் வர,
“அத்தான் அக்கா அழ மாட்றாங்க. எனக்கு பயமா இருக்கு” என்றிட,
“தண்ணிக்குள்ள விழுந்ததுல தண்ணீர் வாய்க்குள்ளயும் மூக்குலயும் போயிருக்கும். காலையும் கையையும் சூடுபறக்க தேச்சு விடுங்க” என்றவன் வயிற்றில் கையை வைத்து அழுத்தினான்.
அவள் குடித்திருந்த நீர் அனைத்தும் வெளியே வர சில நிமிடங்களில் அனைவரையும் அச்சப்படுத்திவிட்டு விழிகளை திறந்திருந்தாள் மகிழினி.
கண்களை திறந்து சுயம் உணர்ந்தவள் எழுந்தமர்ந்து அடுத்த விநாடியே அருகில் அழுதபடி இருந்த இளையவர்களை கட்டிக்கொண்டாள்.
“ஒன்னுமில்லை டா. அம்மா வந்துட்டேன்” என்று அவர்களுக்கு ஆறுதல் கூறியவளுக்கும் விழிநீர் பெருகியது.
எத்தனை பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து வந்திருக்கிறோம் என்று எண்ணி விழிகள் நீரை உகுத்தது.
அழுதவர்களை சமாதானம் செய்தவள் ஷர்மி மற்றும் விஷாலிக்கும் ஆறுதல் கூறிவிட்டு தான் குருவின் புறம் திரும்பினாள். ஆனால் அவனது பார்வையோ இவள் கண்விழித்தில் இருந்து இவள்புறம் தான்.
அவனது அழுத்தமான பார்வையின் குற்றச்சாட்டை எதிர்கொள்ள இயலாது தலையை திருப்பி கொண்டாள்.
பொதுவெளியில் எதுவும் பேச வேண்டாம் என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரு உதவியவர்களுக்கு நன்றிகூறிவிட்டு அவர்களை அழைத்து கொண்டு மகிழுந்தில் வீடு நோக்கி சென்றான்.
இன்னும் நிறுத்தாத அழுகையுடன் இருந்த கவினை தான் மகிழ் சமாதானம் செய்தபடி வந்தாள்.
இவர்கள் வந்ததும் விடயத்தை அறிந்த காசிநாதனும் கோமதியும் பதறிவிட்டனர்.
கோமதி, “வந்ததும் வராததுமா அருவிக்கு கூட்டிட்டு போகாதிங்கன்னு இவளுககிட்ட அப்பவே சொன்னேன் கேக்கலை” என்று மகள்களை திட்ட,
குரு, “அத்தை அவங்களை எதுக்கு திட்றிங்க. அவங்களுக்கு என்ன இப்படி நடக்கும்னு தெரியுமா?” என்று அத்தையை சமாளித்தான்.
காசிநாதன், “கோமு பிள்ளைங்க எப்படி நனைஞ்சு நிக்கிதுங்க. அப்படியே பேசிட்டு இருக்க” என்றவர்,
குருவிடம், “நீங்க போய் உடைய மாத்திட்டு வாங்கப்பா” என்றார்.
சமாளித்தாயிற்று என்று குரு மகியுடன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டது தான் தாமதம்,
“யு டோன்ட் ஹேவ் பிரைன். இடியட் அதான் நான் பக்கத்துல இருக்கேன்ல நான் அவனை பாத்துக்க மாட்டேனா? காப்பாத்துறேன்னு வந்து தண்ணிக்குள்ள குதிச்சிட்ட ஸ்டுப்பீட. நான் மட்டும் வரலைனா அப்படியே தண்ணியோடயே போயிருப்ப…” என்று ஆரம்பித்தவன் வாய்க்குள் நான்கு ஆங்கில கெட்ட வார்த்தைகளை உதிர்த்தான்.
ஆனால் அது அவளுக்கு கேட்கவில்லை. கோபத்தில் சிவந்த முகத்துடன் அதீத கோபத்தில் கத்தி கொண்டிருந்தவனை கண்டு இவள் தான் பயத்தில் நின்றிருந்தாள்.
நனைந்த உடல் வேறு அவளை நடுங்க வைத்து கொண்டிருக்க நடுங்கும் இதழ்களை கடித்தபடி நின்றிருந்தாள்.
தமிழில் ஆரம்பித்தவன் கோபத்தின் உச்சியில் ஆங்கிலத்தில் ஏதேதோ திட்டி கொண்டிருந்தான். அதில் சிலவற்றிற்கு அவளுக்கு அர்த்தமே விளங்கவில்லை.
தன் கோபம் தீரும் மட்டும் திட்டி முடித்தவன்,
“இவ்ளோ திட்றேன்ல வாயை திறந்து பதில் சொல்லு” என்று கர்ஜிக்க,
“அது எனக்கு நான் உங்கமேல நம்பிக்கை இல்லாம அப்படி பிடிக்க வரலை. இத்தனை நாளா நான்தானே அவங்களை பாத்திட்டு இருக்கேன். அவங்களுக்கு எதுனாலும் நான் தான் செய்வேன். எங்களை என்னன்னு கேட்ககூட யாருமில்லை. அவங்களுக்கு நான் தான் எல்லாம் அவங்க என்னோட பொறுப்பு அவங்களை நான் தான் பாத்துக்கணும் அப்படின்னு என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. அதான் உண்மையும் கூட. திடீர்னு வந்த உங்களை சட்டுனு என் மனசு ஏத்துக்கலை. எனக்கு ஏத்துக்கவும் மனசு இல்லை. காரணம் நீங்க பாதில வந்தவரு இன்னும் கொஞ்ச நாள்ல போட்டுவிங்க. அதுக்கப்புறம் நான் தான் பாத்துக்கணும்”
“…”
“இப்போ நம்மளையும் பாத்துக்க ஒரு ஆள் வந்துட்டாங்கன்னு நான் கொஞ்சம் தளர்ந்து ஓய்வா இருந்துட்டா நீங்க போன பிறகு எனக்கு தான் கஷ்டம். எல்லாத்தையும் நான் தான் திரும்பி சுமக்கணும். அதுதான் நான் தான் அவங்களுக்குனு ஒரு எண்ணத்துல இருந்துட்டதால அந்த நேரத்தில யோசிக்காம ஓடி வந்து கவினை காப்பாத்து ட்ரை பண்ணிட்டேன்” என்று வெளிவரத்துடித்த அழுகையை கட்டுபடுத்தியவள்,
“சா… சாரி சார்” என்று கமறிய குரலில் கூறியிருந்தாள்.
அவள் கூறியதில் இருந்த நியாயம் அவனுக்கு புரிபட எந்த பதிலும் கூறாது,
“போ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணு” என்றுவிட்டான்.
மகிழும் அவன் முன் உடைய விரும்பாது உடைகளை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்துவிட்டாள். உள்ளே நுழைந்தவளுக்கு ஏனோ அழுகை பெருகியது.
உடை மாற்றி அழுகையை கட்டுபடுத்தி முகம் கழுவி வெளியே வர குருவும் உடை மாற்றி இருந்தான்.
இவள் வந்ததும்,
“மகிழினி இங்க வா” என்று குரு அழைக்க,
மகியும் அமைதியாக சென்று நின்றாள்.
ஒரு விநாடி அமைதியாக அவள் முகம் கண்டவன்,
“நீ சொல்றது எல்லாம் சரிதான். எப்போ இருந்தாலும் அவங்க உன்னோட ரெஸ்பான்சிபிலிட்டி தான் அது மாற போறது இல்லை. பட் இந்த டூ இயர்ஸ்க்கு நம்ம அக்ரீமெண்ட்படி நீங்க மூனு பேரும் என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி தான். நான் உங்களுக்கு எதுவும் ஆக விட மாட்டேன். காட் இட்” என்று அழுத்தமாக கூறிட,
“ஹ்ம்ம்…” என்று சம்மதமாக தலையசைத்தவள் இளையவர்களை காண வெளியேறி வந்துவிட்டாள்.
ஆனால் குருவிற்கு தான் அழுகையை அடக்கியபடி மகிழ் பேசிய வார்த்தைகள் எதிரொலித்தது.