காதல் 14.1

காதல் 14:

“அவளுக்கு எப்படி இருக்கு டாக்டர்?” என்று குரு வினவ,

“டெம்ப்ரேச்சர் ஹையா தான் இருக்கு.‌ இன்ஜெக்ஷன் போட்ருக்கேன்.‌ மார்னிங் வரைக்கும் பாருங்க. அப்பவும் குறையலைனா ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு வந்து அட்மிட் பண்ணிடுங்க” என்று மருத்துவர் பதிலளித்தார்.

“ஓகே” என்று குரு பதில் மொழிய,

“அப்படி டெம்ப்ரேச்சர் குறைஞ்சிட்டா. நாளைக்கு ஒரு நாள் மட்டும் இந்த டேப்லெட்டை கொடுங்க” என்று மாத்திரை அட்டையை நீட்ட,

குரு பெற்று கொண்டதும் காசிநாதன்,

“நான் டாக்டரை அனுப்பிட்டு வந்திட்றேன்பா” என்று மருத்துவருடன் வெளியே செல்ல,

கோமதி, “என்னப்பா உடம்பு இப்படி சுடுது” என்று மகியின் நெற்றியை தொட்டு பார்த்துவிட்டு கவலையுடன் கூறினார்.

“அவ பயந்ததுனால தான் பீவர் வந்திருக்கு. நீங்க கவலைப்படாதிங்க அத்தை. போய் தூங்குங்க” என்று குரு மொழிய,

“சரிப்பா எதாவது வேணும்னா தயங்காம‌ என்னை கூப்பிடு பிரசாத்” என்று கோமதி பதில் அளிக்க,

“சரிங்கத்தை” என்று தலையசைத்தான்.

மருத்துவரை அனுப்பி வைத்துவிட்டு காசிநாதனும் வந்துவிட அவரையும் சமாதானம் கூறி அனுப்பியவன் கதவை சாற்றிவிட்டு பொத்தென்று இருக்கையில் அமர்ந்தான்.

பார்வை எதிரில் போர்வையை சுகமாய் போற்றி கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகிழினியின் மேல் படிந்தது.

‘இந்த பெண் என்ன என்னை இப்படி படுத்துகிறாள்’ என்று எண்ணம் வர,

“ஊஃப்…” என்று பெருமூச்சை வெளியிட்டான்.

கண்கள் வேறு உறகத்திற்கு கெஞ்சியது. விழிகள் தரையில் சற்று முன்பு வரை மகிழ் படுத்திருந்த போர்வை இருந்த இடத்தில் பதிந்தது.

‘ப்ச்…’ என்று சலித்து கொண்டவனுக்கு அந்த போர்வையில் படுக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை.

அதற்காக அவளருகே அந்த மெத்தையிலும் படுக்க எண்ணமில்லை.‌ அந்த சிறிய மெத்தையில் படுத்தால் நிச்சயமாக கைக்கால் பட்டுவிடும்.

வேறுவழியில்லை நீ இந்த இருக்கையில் தான் இரவு முழுவதும் அமர்ந்திருந்தபடி உறங்க வேண்டும் மூளை கூற சிறிது நேரத்தில் அமர்ந்தபடியே அவள் படுத்திருந்த மெத்தையில் தலையை சரித்தபடி உறங்கி போனான்.

அந்த சாதாரண சிறிய இருக்கையும் அவனுக்கு வசதியாக இல்லை போலும் சிறிது நேரத்திலே உறக்கம் கலைய தலையை நிமிர்த்தியவனது கரம் அருகில் இருந்தவளின் நெற்றியில் படிந்தது.

உடலின் சூடு சிறிதளவு குறைந்திருந்தது. இப்போது தான் அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது.

இவளுக்கு ஒன்று என்றால் இளையவர்கள் இருவரும் அழ தொடங்கிவிடுகின்றனரே. அவர்களை சமாளிப்பது தான் பெரும்பாடாக இருக்கிறது.

சிந்தையுடன் குரு கையை எடுக்க முயல மகிழினிக்கு அந்த கரத்தின் கதகதப்பு தேவைப்பட்டிருக்கும் போல அவனது கையை பிடித்து கன்னத்தில் வைத்து கொண்டாள்.

அவளது செயலில் அதிர்ந்த குரு மகியின் முகம் பார்க்க அவள் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தாள்.

தூக்கத்திலே பிடித்திருப்பாள் போல என்று கையை எடுக்க முயற்சிக்க எடுக்க இயலவில்லை. நன்றாக அழுத்தி பிடித்திருந்தாள்.

சட்டென்று நேற்றைய நினைவு வந்தது. நேற்று இவள் எழுப்ப முயலும் சமயம் தானும் இப்படித்தான் கையை பிடித்திருப்போம் என்று தோன்றியது.

அதன் பிறகு அச்சத்தில் வெளுத்து நின்ற மகியின் முகமும் மனக்கண்ணில் மின்னி மறைந்தது.

அதனை ஒதுக்கியவன் கரத்தை முயன்று இழுத்துக்கொண்டு மீண்டும் உறகத்தில் ஆழ்ந்தான்.

எழுவதும் அவளது உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதும் பிறகு உறங்குவதும் என்று குருவிற்கு இரவு கழிந்தது.

அவ்வளவு நேரம் கோழித்தூக்கத்தில் இருந்தவன் விடியும் வேளையில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.

வழக்கம் போல ஆறு மணிக்கு மகிக்கு விழிப்பு வர தான் படுத்திருந்த மெத்தையை உணர்ந்தவள்,

‘தான் இரவில் தரையில் போர்வையை விரித்து தானே படுத்தோம் எப்படி மெத்தைக்கு வந்தோம்’ என்று எண்ணியபடி எழ முயற்சிக்க தலை பயங்கரமாக வலித்தது.

“ப்ச்” என்று தலையை பிடித்தபடி சாய்ந்தவாறு எழுந்து அமர்ந்தவளது விழிகள் கண்டது தனக்கு அருகே இருக்கையில் சாய்ந்தபடி உறங்கி கொண்டிருந்த குரு பிரசாத் தான். இமை தட்டி மீண்டும் பார்த்தாள்.

அது குரு பிரசாத் தான். அவன் தான் அமர்ந்த நிலையில் உறங்குகிறான் என்று புரிந்தது.

அப்போது தான் மூளையில் வரிசையாக நேற்றைய நிகழ்வு வரிசைக்கட்டி வந்தது.

நேற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதை நினைத்த போது உடல் பயத்தில் நடுங்கியது. குரு பிரசாத் மட்டும் இல்லையென்றால் தன்னுடைய நிலை என்ன.

நிச்சயமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்போம். அதன் பின்னர் எழில், கவின் மற்றும் அகிலனது நிலை நினைத்து பார்க்கவே பயம் நெஞ்சை கவ்வியது.
தான் இல்லை என்றால் யார் அவர்களை பார்த்து கொள்வது. யாருமில்லை நிராதரவாக தான் நின்றிருப்பார்கள் என்று எண்ணம் அவ்வளவு வேதனையை தந்தது.

அந்த யாருமில்லாத நிராதரவான நிலையின் துன்பம் அவளுக்கு தெரியும். தாய், தந்தை, அண்ணன், அண்ணி என எல்லோரும் இறந்த பின்னர் என்ன ஏது என்று எதுவும் கேட்க இயலாத நிலையில் அவள் பட்ட வேதனை அவளுக்கு தானே தெரியும்.

அஃது எத்தனை கொடுமையானது. சாப்பிட்டாயா? என்று கேட்க கூட யாருமில்லை. எல்லாவற்றையும் தான் தான் எடுத்து செய்ய வேண்டும். அகிலனுக்கு அப்படி ஒரு நிலை வர என்றும் தான் விட மாட்டேன். வர விட கூடாது என்று மனது ஒரு கணம் கூக்குரலிட்டது.

விழிகள் தன்னை காப்பாற்றிவிட்டு ஆழ்ந்த சயனத்தில் இருந்தவன் மீது பட்டது. ஒரு கணம் குருவின் மீது நன்றியுணர்வு பெருகியது.

தான் ஒரு உயிரை காத்தது மூலமாக மூன்று பேரை காத்து இருக்கிறோம் என்று இவருக்கு புரியாது. ஆனால் எத்தைகைய உதவி. தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாது என்னை காப்பாற்றியுள்ளார். யாருக்கு இப்படி செய்ய மனது வரும்‌.

இவ்வளவு பெரிய உதவியை செய்தவனுக்கு கண்டிப்பாக எதாவது கைமாறு செய்துவிட வேண்டும். முடிந்தால் தங்களது ஒப்பந்ததம் இரண்டு வருடங்கள் கழித்து முடிந்த பிறகு தானே கோதையிடம் உண்மையை கூறி மன்னிப்பை கேட்டு சமாதானம் செய்து அவர்கள் இருவருக்கும் திருமணத்தை செய்து வைத்துவிட வேண்டும்.

ஒப்பந்தத்தில் வந்த தனக்கே இவ்வளவு பெரிய உதவியை செய்துள்ளார் என்றால் காதலித்து கரம் பிடிக்கும் மனைவியை உறுதியாக கையில் வைத்து தாங்குவார். ஹனிகா மிகவும் கொடுத்து வைத்தவர் தான். ஹனிகாவும் மிகவும் நல்ல பெண் தான் இருவருக்கும் மிகவும் சரியான மனப்பொருத்தம். இருவரும் ஆண்டாண்டு காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் கடவுளை வேண்டி கொண்டவளுக்கு மீண்டும் நேற்றைய நிகழ்வு தான் வந்து போனது.

error: Content is protected !!
Scroll to Top