அவளை போலவே அந்த குழந்தையும் கூட அலாதியான இனிப்பு ரசிகராம். மேலும் அவள் பார்த்தவரை அந்த குழந்தை ஒரு இடத்தில் நிற்காமல் துறுதுறுவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருப்பதால் அவனுடைய புன்னகையும் அவன் அடிக்கும் லூட்டிகளும் அவளுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. ஆரம்பித்ததில் தான் இவையெல்லாம் என்னவென்று தெரியாமல் பிருந்தா குழம்பி பயந்து போனாள். ஆனால் அதன் பின்பு அவர்களோடு தானும் ஒரு அங்கமாய் மாறும் அளவிற்கு அவள் தன் கனவுகளோடும் அவர்களோடும் மிகவும் நெருக்கமாக ஒன்றி போய்விட்டாள்.
கல்லூரியில் இணைந்து கொண்டதற்கு பின்னான நாட்களில் வர துவங்கிய கனவுகள் என்பதால் அவற்றை பிருந்தா முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பலவிதமான வரலாற்று மற்றும் தொல்லியல் பொருட்களை கண்டுபிடிப்பதாலும் அதனையே தன் சிந்தையில் பதித்து அவற்றை பற்றிய கட்டுரைகள் வரைவதாலும் இவை எல்லாம் ஓய்வில்லாமல் உழைக்கும் மூளையின் கற்பனைகள் என்று தான் எளிதாக நினைத்திருந்தாள். ஆனால் காலங்கள் பல ஓடியதே அன்றி அவளுடைய கனவுகளில் துளியும் மாற்றமில்லை.
இது போன்ற கனவுகளின் பிறப்பிடம் என்னவாக இருப்பினும் அதற்கு காரணம் எதுவாக இருப்பினும் அதை அவள் ரசிக்கவும் செய்தாள். அவனை போல ஒரு குட்டி வாண்டு தன்னுடன் இருந்தால் தன் கவலைகளை எல்லாம் மறந்து தான் நன்றாக மகிழ்ந்திருக்க கூடும் என்று எண்ணும் அளவிற்கு அவளை சிரிக்கவும் ரசிக்கவும் வைத்திருக்கிறான். அவனுக்கு தாயாக அறிமுகமான பெண்மணியின் பின்னே தானும் ஓடி ஓடியே அனைவரின் மனதையும் ஏராளமாக கொள்ளை கொண்ட சிரிக்கும் பட்டாம்பூச்சி அவன்.
சில சமயங்களில் தன் கைகளால் அவனை தூக்கி கொஞ்சவும் ஏக்கம் கொண்டிருக்கிறது பெண் மனது. அவளுடைய தாய்மை உணர்வுகளை தட்டி எழுப்பி இருக்கிறது அவன் மீதான அவளுடைய பாசமும் குறும்பும். எப்போதும் சிரிக்க சிரிக்க இளக வைப்பவன் இன்று முதல் முறையாக அவள் கலங்கி போகும் அளவிற்கு செய்துவிட்டான். ‘எங்கே இருப்பான் அவன்? யார் அவனை கடத்தி சென்றது?’ என்றெல்லாம் மருகி அவனை மீண்டும் நல்லபடியாக காணும் எதிர்பார்ப்போடு துடித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா.
வெகு நேரமாக சுற்றுப்புறத்தை உணராமல் மிகவும் பயந்து போய் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அமர்ந்திருந்தவளின் தோளை தொட்டு உலுக்கிய பல்லவி, “ஹே! பிந்து நான் பேசுறது உனக்கு கேக்குதா இல்லையா? ரொம்ப நேரமா ஏன் இப்படி வெறிக்க உட்கார்ந்து இருக்க?” என வினவினாள்.
வறண்ட தன் இதழ்களை தண்ணீர் அருந்தி ஈரபடுத்தி கரகரத்து போயிருந்த தன் தொண்டையை லேசாக கனைத்துக் கொண்டு தன்னை சரி செய்த பிருந்தா, “ஒன்னுமில்ல லவி! ஃபர்ஸ்ட் டைம் இல்லையா அதான் ஒரு மாதிரி தலையெல்லாம் வலிக்குது.” என்று சமாளிக்கும் சாக்கில் கூறவும்,
“அடப்பாவி! பொய் சொல்லலாம் ஆனாலும் இவ்ளோ சொல்ல கூடாது. நாம ஃப்ளைட் ஏறி கிட்டத்தட்ட த்ரீ ஹார்ஸ் ஆகுது. இன்னும் கொஞ்ச நேரத்துல லேண்ட் ஆகவே போறோம். இப்ப தான் உனக்கு சிக்னஸ் தெரியுதா?” என பிருந்தா கூறியதை கொஞ்சமும் நம்பாத குரலில் வினவினாள் பல்லவி.
“பச்! நான் தூங்கிட்டேன் அதுனால எனக்கு அப்ப தெரியல லவி. ப்ளீஸ் கொஞ்ச நேரம் பேசாம வாயேன்”
“அதெப்படி என்னால முடியும்? நீ இன்னும் எனக்கு சுகர் ஸ்டோரி சொல்லவே இல்லையே. நேத்து என்ன பண்ணான் அந்த குட்டி வாண்டு?” அவள் எதையோ நினைத்து தனக்குள் கலங்குவதை புரிந்து கொண்டு அவள் மனநிலையை மாற்ற முயன்ற பல்லவி மறுபடியும் அவள் கனவின் நாயகனை அவளுக்கு ஞாபகப்படுத்தவும்,
“பல்லவி! கொஞ்ச நேரம் பேசாம வர மாட்டியா நீ? ஏன் இப்படி என் நிலமை தெரியாம என்னை டென்ஷன் பண்ற? ஸ்டாப் டூங் திஸ்!” என்று அவள் கடந்து வர நினைப்பதை பற்றியெல்லாம் பல்லவி தெரிந்து வைத்திருந்து வினவவில்லை என்பதை அவளும் உணர்ந்திருந்தாலும் இன்னமும் அதில் இருந்து வெளிவர முடியாத கோபத்தில் பல்லவியை கடிந்து பேசிய பிருந்தாவின் குரல் சற்று கடுமையான ஒலித்தது.
காதுகளில் ஹெட்செட்டுடனும் கைகளில் புத்தங்களுடமும் அந்த விமானத்தில் அமர்ந்திருந்தவர்களின் செவிகளில் அவர்கள் பேசியது சரியாக விழவில்லை என்றாலும் ஓரிருவர் பிருந்தா சத்தமாக பேசியதில் இவர்களை திரும்பி பார்க்க தான் செய்தார்கள். அப்போது தான் தன்னுடைய தவறை உணர்ந்த பிருந்தா தன் உடன்பிறவா தங்கையின் முகம் பார்த்து அவளுடைய தற்போதைய மனநிலையை அறிந்து கொண்டவள் பல்லவியை தேற்றும் வகையில்,
“சாரி லவி! ஐம் ரியலி ஃபீலிங் பேட். அந்த டைம்ல நீ கேட்டதும் எனக்கு என்னவோ… பச்! என்னோட தப்பு தான். அதான் சாரி கேக்குறேன்ல என்ன பார்த்தா உனக்கு பாவமா இல்லையா?” என்று பிருந்தா மன்னிப்பு யாசித்த போதிலும் தன் முகத்தை தூக்கி வைத்திருந்த பல்லவி மேலும் அவளிடம் எதுவும் பேசுவதாக தெரியவில்லை.
பல்லவியை சற்று கவலையுடன் பார்த்த பிருந்தா பல்லவிக்கு மறுபுறத்தில் அமர்ந்திருந்த தன் நண்பன் ஜெய்யின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவும் அவன் ‘தன்னால் முடியாது’ என்னும் வகையில் உதட்டை பிதுக்கி மறுத்துவிட்டான். சிறிது நேரத்திலே துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானத்தில் இருந்து இறங்கிய மூவரின் பயணமும் துபாய் விமான நிலையத்திலிருந்து ஸ்வீடன் நாட்டை நோக்கி தொடர்ந்தது.
சென்னையில் விடிகாலை நான்கு மணிக்கு துவங்கிய அவர்களின் பயணம் பதிமூன்று மணி நேரங்கள் நீண்டு நண்பகல் மூன்று மணியளவில் ஸ்டாக்ஹோமில் நிறைவடைந்தது. ஸ்வீடனின் அர்லாண்டா விமான நிலையத்தில் இருந்து இறங்கிய மூவரும் ஸ்டாக்ஹோமில் வெகு பிரபலமான பைவ் ஸ்டார் ஹோட்டலான ‘பேங்க் ஹோட்டலில்’ தங்க வைக்கப்பட்டனர்.
அவளுக்கென கொடுக்கப்பட்ட தனி அறையில் இன்னும் தன் கனவில் இருந்து மீளாமல் அதனை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த பிருந்தாவின் மனதில் ஏனோ பல சஞ்சலங்கள் நிறைந்திருந்தது. இடவலமாக நடைபயின்று கொண்டிருந்தவளின் நுரையீரலை தீண்டிய உயிர் காற்றை சுவாசித்து கரியமில வாயுவை வெளியேற்ற சிரமமாக உணர்ந்தவள் வேகமாக அவள் அறையின் பால்கனி கதவை திறந்து விட்டபடி ஆழமான பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.
முன்னால் நீண்டிருந்த கம்பியில் தன் இரு கைகளையும் அழுந்த பதித்து நின்றிருந்தவளின் கண்களின் முன்பு சட்டென ஒரு கருப்பு உருவம் தோன்றி மறைந்தது. அதை காட்சிப்பிழையாய் எண்ணி சலித்துக் கொண்டவளின் கவனத்தை அவளுடைய பால்கனிக்கு அடுத்திருக்கும் பால்கனியில் இருந்து வந்த சத்தம் மீண்டும் ஈர்த்தது. மற்றவருடைய அறையை நோட்டமிடும் அத்திருப்பதியுடன் தன் பார்வையை விலக்கி கொள்ள நினைத்தவளின் கண்கள் அங்கே அவள் கண்ட காட்சியில் அதிர்ச்சியாக விரிந்து போனது.