“வீட்டுக்குப் போய்ட்டு, அம்மா அப்பாவோட வா மா!” சிந்துவின் சாந்தமான குரல் இவளது செவியை அடைந்தது. நொடியில் எப்படி இவரால் பாவனையை மாற்றி மாற்றி பேச முடிகிறது என்ற ஆச்சர்யம் பொதிந்த பார்வையுடன் அவரருகே சென்றாள்.
“முன்ன பின்ன தெரியாத பொண்ணை மகன் கூட்டீட்டு வந்து கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னா, யாரா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும் அத்தை. ஆனால் நீங்க உங்கப் பையனோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்தாலும் என் அப்பா, அம்மாவைப் பத்தி கேட்டப்போ எனக்கு ஆச்சர்யம்தான். ஒன்னு கோபப்படுவீங்க, திட்டுவீங்கன்னு எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான்…”
“ஒரு பெத்தவங்களோட மனசு இன்னொரு பெத்தவங்களுக்குப் புரியும்னு சொல்லுவாங்க. அதை இப்போதான் நான் பார்க்கிறேன். கண்டிப்பா என் அப்பா, அம்மா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ற ஐடியா எனக்கு இல்லை. அவங்க சம்மதம் வேணும்ன்ற மாதிரி உங்களோட விருப்பமும் எங்களுக்கு ரொம்ப முக்கியம். உங்கப் பேச்சுல இருந்தே தெரியுது, உங்கப் பையன்தான் உங்களுக்கு எல்லாம்னு. அவர் உங்ககிட்ட நடந்த எதையும் சொல்லி இருக்க மாட்டாரு…” என்றவள் சில நொடிகள் நிறுத்திவிட்டு அவர் முகம் பார்த்துப் பேச்சைத் தொடர்ந்தாள்.
“நான் தான் உங்கப் பையனைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்டேன். முதல்ல அவர் வேணாம்னுதான் சொன்னாரு. அப்புறம் தான் சம்மதிச்சாரு. உங்ககிட்ட அவர் முன்னாடியே ஏன் சொல்லலைன்னு வருத்தம் இருந்தா, எங்களை மன்னிச்சிடுங்க அத்தை. முதல் முதல்ல நம்ம உறவு ஆரம்பிக்கறப்போ மனக்கசப்பு எதுவும் வேணாம்! உங்கப் பையன் தங்கம், எந்தக் காலத்திலும் தப்பு செய்யமாட்டாரு!” என்றவளின் முகம் தான் பேசியது அவருக்குப் புரிந்ததா எனத் தவிப்பாய் பெரியவரை நோக்கியது.
அவள் பேச்சில் பெரியவருக்குப் புன்னகை. பெற்றவர்களையும் விட்டுக் கொடுக்காது, குமரனையும் எங்கேயும் இறக்கி விடக்கூடாது என பார்த்துப் பார்த்துப் பேசிய இந்தப் பெண்ணை அவருக்கு நிமிடத்தில் பிடித்துப் போனது. அதைவிட தான் என்று எந்த இடத்திலுமே தன்னை முன்னிறுத்தாது நாங்கள் என இருவரையும் ஒன்றிணைத்துப் பேசியதில் அப்படியொரு ஆச்சர்யம் அந்தப் பெரியவருக்கு. தன் மகனைப் பற்றி தன்னிடமே இவள் விளக்குகிறாள் என்பதில் அவர் உதட்டிலிருந்த புன்னகை மேலும் பெரிதாய் விரிந்தது.
அவளது தலையைப் பரிவாய்த் தடவியவர், “அப்பா, அம்மாவோட வந்து பேசு மா!” என்றார் சின்ன சிரிப்புடன். அந்த வருடலில் இவளுக்கு பெரிய நிம்மதி பிறந்தது.
“தேங்க் யூ அத்தை, நீங்க எங்களைப் புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்!” என்றவளின் குரல் துள்ளியது. எங்கே தன் வீட்டைப் போல இவரும் தங்களைப் புரிந்து கொள்ளமல் போய்விடுவாரோ என்ற தவிப்பு இப்போது விடை பெற்றிருந்தது. அகம் மகிழ அவரிடம் புன்னகைத்து விடைபெற்றாள் மனோஹரி.
தான் சென்று பத்து நிமிடங்கள் தாமதமாய் வந்தவளை குமரன் கேள்வியாய் நோக்க, அலட்டிக் கொள்ளாது அவன் பார்வையைத் தவிர்த்தவள், “போகலாம் வாங்க!” என்று அவன்பின்னே அமர்ந்தாள்.
சில நிமிடங்கள் பயணத்தின் அமைதியைக் கலைக்கும் விதமாக, “அதென்ன உங்கம்மாகிட்டே இந்தப் பொண்ணை பிடிச்சிருக்கான்னு ஒரு கேள்வி. அவங்களுக்குப் பிடிக்கலைன்னா, வேற பொண்ணைப் பார்ப்பீங்ளா?” மனோ குரல் கொஞ்சமே கொஞ்சம் கோபமாய் ஒலித்தது.
வாகனத்தின் கண்ணாடி வழியே அவள் முகத்தைப் பார்த்தவன், “ஏன் உங்கப்பா வேணாம்னு சொன்னதும் நீ என்னை விட்டுடலாம்னு நினைச்சீயா?” எனக் கேட்டான்.
அந்தக் கேள்வியில் ஒரு நொடி திகைத்தவள், “ஆமா! இப்போ எங்கப்பா நான் என் விருப்பத்தை சொன்னதும், சந்தோஷமா அடுத்த முகூர்த்தத்துல சம்மதிச்சிட்டாரு இல்ல?” எள்ளலாகக் கூறினாள் இவள்.
தன் கேள்விக்கு அது பதில் இல்லை என்ற போதும், “அந்த மாதிரிதான் இதுவும். எங்கம்மா வேண்டாம்னு சொன்னா, உன்னை விட்டுடுவேன்னு தோணுதா? இதுதான் நீ என் மேல, நீ என் வார்த்தை மேல வச்ச நம்பிக்கை இல்ல?” குரல் இறுகக் கேட்டான். ஒரு நொடி மனோஹரி பேச்சற்றுப் போனாள்.
‘இவன் மீது நம்பிக்கை இல்லாதுதான் இத்தனை தூரம் இவனுக்காகப் போராடுகிறேனா என்ன?’ என இவள் பல்லைக் கடித்தாள்.
“எங்கம்மா சம்மதிக்கலைன்னா, கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணுவேன். ஆனால், என் அம்மாவைப் பத்தி எனக்குத் தெரியும். என் நியாமான ஆசை எதுக்கும் அவங்க தடை போட்டதில்லை!” என்றவன், அவ்வளவுதான் பேச்சு என்பது போல சாலையில் பார்வையைப் பதித்தான்.
‘உனக்கான பதில் இதுதான்!’ என உரைத்தவனை இவள் கோபம் மிகப் பார்த்தாள்.
‘போ டா… போ!’ மனதுக்குள் குமரனைத் திட்டத் தவறவில்லை. வீடு வரை வந்தவன் வெளியே இறக்கி விட்டுவிடுவான் என நினைத்திருக்க, குமரன் யாரையும் சட்டை செய்யவில்லை.
உள்வாயிலில் வந்து வாகனத்தை நிறுத்தினான்.
“ஒரு நிமிஷம்!” கிளம்பச் சென்றவனை தடுத்து நிறுத்தியவள், “உங்க மேல நான் வச்ச நம்பிக்கையை யாராலும் வைக்க முடியாது!” என அழுத்தமாய் உரைத்துவிட்டு விறுவிறுவென படியேறிச் சென்றுவிட்டாள். குமரன் போகும் அவளையே பார்த்திருந்தான். மனோவுக்கு முனுக்கென கோபம் வந்துவிட்டது. இயல்பாய் சில நிமிடங்கள் அவனிடம் பேசலாம் என நினைத்திருந்தாள். ஆனால், அது சண்டையில் முடிந்திருந்த எரிச்சல் அவளிடம்.
குமரன் வாயிலைக் கடக்க, ரங்கராஜன் உள்ளே நுழைந்தார்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு வெளியேறினர். பேச்சும் இல்லை, சுமுகமான பாவமும் இல்லை.
“ஏன் டி சீக்கிரம் வந்துட்ட? வேலை முடிஞ்சதா?” ராதா மகளைப் பார்த்து வினவ, எதுவும் கூறாது நீள்விருக்கையில் பொத்தென அமர்ந்தாள்.
அவளது பையை ஆராய்ந்தவர், “மதிய சாப்பாடு அப்படியே இருக்கு. சாப்பிடலையா நீ?” எனக் கோபமாய் இரைந்தார்.
ரங்கராஜனும் அந்நேரம் சரியாய் உள்ளே நுழைந்தார்.
மகளின் பதில் என்னவாக இருக்கும் என யூகித்தவராய் அவர் அமைதி காக்க, “குமரனோட அம்மாவைப் பார்த்துட்டு வந்தேன் மா. அதான் ஹஃப் டே லீவ் போட்டுட்டு வந்துட்டேன். சாப்பிட டைம் கிடைக்கலை!” பெய்யேதும் உரைக்கவில்லை. நடந்ததை அப்படியே கூறியவள், அறைக்குள் உடை மாற்றச் சென்றாள்.
ராதாமணி எதுவுமே பேசவில்லை. கணவர் முகத்தைப் பார்க்க, ‘நான் பேசிக்கிறேன்’ என தலையை அசைக்கவும் அவர் அமைதி காத்தார். ரங்கராஜனுக்குத் தெரியும் மனோ பொய்க் கூற மாட்டாள் என்று. தான் செய்தது தவறு என்றாலும் சிறு வயதிலிருந்தே அதை நேர்மையாய் உரைத்துப் பழகியிருந்தக் குணம் அது. இப்போதும் அப்படியே பேசிவிட்டாள். குமரன் வீட்டிற்கு சென்று வரும்வரை விஷயம் கடந்தப் பிறகு இந்த அசாத்திய அமைதி தவறானது என மனது உணர்த்தியது ரங்காவிற்கு. மகளுக்காகக் காத்திருந்தார்.
“வந்து சாப்பிடுங்க, திவாகர் வரலயா?” ராதா மேஜைமீது உணவை எடுத்துக் வைக்க, “கொஞ்ச நேரமாகட்டும். அப்புறம் சாப்பிட்றேன்!” என அவர் இருக்கையில் அமர, திவாகரும் வந்துவிட்டான். மனோ அறையிலிருந்து வரவும், திவா அவளைக் கேள்வியாய்ப் பார்த்தான்.
“மனோ, இங்க வந்து உட்காரு. உன்கிட்ட பேசணும்!” ரங்கா குரலில் மற்ற இருவரின் கவனமும் இங்கே குவிய, அவரது முகத்தை வைத்தே அகத்தைக் கணிக்க முடிந்தது. இத்தனை நாட்கள் அமைதியாய் யோசித்திருந்தவர் இப்போது தன் முடிவை உரைக்கப் போகிறார் எனவும் மனோஹரிக்குப் பதற்றம் சூழ்ந்தது. முகத்தில் அதைக் காட்டாதவாறு தந்தைக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமர, திவாகர் ரங்கா அருகே அமர்ந்துவிட்டான். ராதாமணி கணவர் அருகே வந்து நின்றார்.
சில நொடிகளில் அமைதியாய்க் கழிய, “மனோ, நீ குமரனைக் கல்யாணம் பண்ணிக்கோ!” என்று அவர் கூறியதும் மனோவிற்கு இன்ப அதிர்ச்சி. நொடியில் விழிகள் பனித்துவிட, உதடுகளை அழுந்தக் கடித்தவளின் முகம் அடுத்து அவர் கூறிய வார்த்தையைக் கேட்டு கோபத்தில் சிவந்து போனது.
கோபம் கொண்டவள் தந்தையை ஏசிவிட்டு குமரனுக்கு அழைத்து தேம்பியழ, அந்த அழுகைப் பொறுக்காது துடித்துப் போய் நிமிடத்தில் இங்கு வந்திருந்தான்.
தொடரும்…