.
பதில் சொல்ல நா எழவில்லை. இருந்தும் பதிலை கூறியாக வேண்டிய கட்டாயமே,
“இல்லை எனக்கு தெரியாது. நான் இதுக்கு முன்னாடி இதை யூஸ் பண்ணது இல்லை” என்று உள்ளே சென்றுவிட்ட குரலில் கூறினாள். என்ன முயன்றும் குரல் சற்று தழுதழுத்துவிட்டது.
மகிழினிக்கு இது போல திட்டுக்கள் எல்லாம் புதிது. தாய் தந்தையர் இருந்த வரை ஒற்றை பெண் என்று எதற்கும் அவளை திட்டியதில்லை. மகியும் அது போல நடந்து கொண்டது இல்லை.
அவர்கள் மறைந்த பிறகும் அவளுக்கு இழப்பினால் துன்பம் சேர்ந்ததே தவிர யாரிடமும் மனது புண்படும்படி பேச்சு வாங்கியது இல்லை. அகிலனும் மகியிடம் நிறைய பாசத்துடன் தான் இருப்பான்.
என்னதான் அவள் இத்தனை நாட்கள் இளையவர்களை பார்த்து கொண்டு இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் தாய் தந்தையர் விட்டு சென்ற இடத்திலே தான் இருந்திருந்தாள்.
இப்போது இந்த திடீர் கோபத்தில் நொடியில் மனது கலங்கிவிட்டது. அவள் தனியாக இளையவர்களுடன் இருந்த போது கூட அவளுக்கு இதை போல நிகழ்வு நடந்ததில்லை. வேலையிலும் மகிழ் கெட்டி என்பதால் எந்த திட்டுக்களோ சுடு சொற்களோ வாங்கியதில்லை.
அவ்விடத்தை விட்டு எழுந்து செல்ல கால்கள் பரபரத்தது. இருந்தும் செல்ல முடியவில்லை. இவனுடைய இந்த கோப முகத்தை காணும் போதெல்லாம் மனது கலங்கி நிற்கிறது.
அவளது தழுதழுத்த குரலும் முகமும் அவளது நிலையை உணர்த்தியது.
அந்த கைப்பெட்டி குரு வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்தது. தன் தாய்க்கே தான் தான் அதனை உபயோகப்படுத்தும் முறையை சொல்லி கொடுத்தோம் என்பது நினைவிற்கு வந்தது.
தனது தாய்க்கும் தங்கைக்குமே இதனை உபயோகப்படுத்த தெரியவில்லை இந்த பெண்ணிற்கு எப்படி தெரியும் என்று அப்போது தான் அவனுக்கு புரிந்தது.
ஒரு கணம் அவளது முகத்தையே பார்த்தவன் பின் தான் அமர்ந்திருந்த நீள்விருக்கையில் இருந்து இறங்கி அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவன் ஒரு காலை முட்டியிட்டவாறு அமர்ந்து அந்த கைப்பெட்டியை கையில் எடுத்து திறந்து காண்பித்தவன்,
“இதோ இப்பிடி தான் திறக்கணும். இந்த நாப்பை அழுத்தி ப்ரெஸ் பண்ணா இந்த சைடு லாக் ஓபன் ஆகும். தென் இந்த நாப்பை ப்ரெஸ் பண்ணா இந்த சைடு ஓபன் ஆகும். க்ளோஸ் பண்ணும் போது இரண்டு நாப்பையும் ஓரே டைம்ல ப்ரெஸ் பண்ணனும்” என்று இரு முறை செய்து காண்பிக்க,
புரிந்தது என்று சம்மதாக தலையசைத்தவள் பின்னர் குருவினது அலமாரியில் இருந்து அவன் கூறிய உடைகளை எடுத்து அப்படியே மடிப்பு கலையாது அடுக்கி வைத்தவள் மற்றும் அவனுக்கு தேவையான சீப்பு சோப்பு என அனைத்தையும் அவனது மற்றொரு அலமாரியில் இருந்து எடுத்து அடுக்கி குரு கூறியது போலவே அதனை மூடினாள்.
பின்னர் இரண்டு பைகளை எடுத்து ஓரம் வைத்தவள் அவன் புறமே திரும்பாவது எழுந்து சென்றுவிட்டாள்.
அவளது செய்கைகளை கவனித்தாலும் அவன் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. அதுதான் தான் எப்படி பயன்படுத்துவது என்று கூறிவிட்டாயிற்றே பிறகு என்ன செய்ய முடியும் என்றுவிட்டான்.
வெளியே சென்றவள் அங்கு மாமியாரிடம் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அதன் பிறகு இரவு உணவு அமைதியாக சென்றது. வெகுநேரம் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை இழுத்து பிடித்து உறங்க வைக்க அழைத்து வர,
எழில், “ம்மா ஸ்டோரி சொல்லு” என்க,
“ஆமா ஆமா ஸ்தோதி வேதும்” என்று கவினும் குதித்தான்.
அவள் இருந்த மனநிலையில் கதை சொல்ல விருப்பம் இல்லாததால்,
“இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு ஸ்டாரி சொல்றேன். இப்போ தூங்குங்க” என்க,
“நோ எனக்கு ஸ்டோரி வேணும்” என்று எழில் அடம்பிடித்தான்.
“ப்ச் சொன்னா புரிஞ்சுக்க எழில். எனக்கு ஹெட் ஏக்கா இருக்கு. நாளைக்கு ரெண்டு ஸ்டோரி சொல்றேன்” என்றிட,
“சரி நீ தூங்கு நான் அப்பாட்ட கேக்குறேன்” என்றான்.
எதாவது முக்கியமான வேலையில் இருப்பான். தொந்திரவு செய்து தன்னை போல திட்டு வாங்கிவிட போகிறார்களோ என்று அஞ்சியவள் விநாடியில்,
“இல்லை அவங்களுக்கு வேலை இருக்கு. ஒழுங்கா வந்து தூங்குங்க” என்றாள்.
“நோ நான் அப்பாட்ட கேட்பேன்” என்றவனது அப்பா என்ற சொல் ஏனோ அவளுக்கு பிடிக்காது போக,
“ப்ச் சொல்றேன்ல ஏன் சும்மா அடம் பண்ணிட்டு இருக்க. இப்போ வந்து படுக்க போறீயா இல்லையா?” என்று அதட்டிவிட,
இளையவர்கள் இருவரும் உதடு பிதுக்கி அழ தயாரானர்கள். இத்தனை நேரம் இவர்களது உரையாடலை கேட்டபடி கணினியில் பார்வை பதித்திருந்த குரு,
“மகிழினி ஏன் உன் கோவத்தை அவங்ககிட்ட காட்டுற” என்று அவளை அதட்டியவன்,
“நீங்க ரெண்டு என்கிட்ட வாங்க. நான் ஸ்டோரி சொல்றேன்” என்று அவர்கள் இருவரையும் அறைக்கு வெளியே அழைத்து சென்றுவிட்டான்.
மகிக்கும் எங்கேயோ இருந்த கோபத்தை இவர்கள் மீது காண்பித்துவிட்டேனே என்று வருந்தி அவர்களை எதிர்பார்த்து இருந்தவள் அப்படியே படுத்து உறங்கியும் போயிருந்தாள்.
மறுநாள் விரைவாகவே எழ வேண்டும் நினைத்துவிட்டு படுத்ததால் அதிகாலையே எழுந்து விட்டாள்.
கண்விழிக்கும் சமயம் அருகில் இளையவர்கள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
இரவு அவர்களை திட்டியது நினைவு வர வருந்திய மனதுடன் கேசத்தை கோதியவள் எழுந்து சென்று குளித்து வந்தாள்.
மணியை காண இன்னும் நிறைய நேரங்கள் இருந்தது. வழக்கம் போல தாய் தந்தையர் புகைப்படத்தை பையில் இருந்து எடுத்து வைத்து விழிகளை மூடி வணங்கியவள் மீண்டும் அதனிடத்திலே வைத்துவிட்டு பால்கனியில் நின்று தலையை உலர்த்த துவங்கினாள்.
நேரம் சென்றது குரு இன்னும் விழிக்கவில்லை எப்போதும் இந்த நேரத்திற்கு எழுந்துவிடுவான். இன்று ஏனோ எழவில்லை. இரவு தாமதமாக உறங்கினாரா என்று தெரியவில்லை.
ஆனால் இப்போது எழுந்து ஆக வேண்டுமே நல்ல நேரத்தில் தான் வீட்டிலிருந்து புறப்பட வேண்டும் என்பது கோதையின் கட்டளை. இன்னும் சிறிது நேரம் சென்று எழுந்தாலும் நல்ல நேரம் தவறிவிடும்.
வேறு வழியில்லை எழுப்பி விடுவோம் என்று முடிவு செய்தாள். இருந்தும் நேற்று போல உறகத்தில் இருந்து எழுப்பியதற்கு கோபப்பட்டு திட்டிவிட்டால் என்ன செய்வது என்று மனது வெகுவாக தயங்கியது.
எல்லாம் இரண்டு நொடி தான் பின் எழுப்பவில்லை என்றாலும் ஏன் என்று கேள்விவரும் என்று நினைத்தவள் அருகில் சென்று,
“சார்…” என்று அழைத்தாள். அவனிடம் அசைவில்லை.
பிறகு, “குரு சார்…” என்று சற்று உரக்க அழைத்தாள் இருந்தும் பதிலில்லை.
‘ப்ச்’ என்று சலித்தவள்,
“குரு சார்” என்று அவனது தோளில் லேசாக தட்டினாள். எந்த உபயோகமும் இல்லை.
“சார் குரு சார் எழுந்திடுங்க டைம் ஆச்சு” என்று சற்று அழுத்த கூற, குருவிடம் லேசான அசைவு தெரிந்தது.
‘ஹப்பாடா எழுந்துவிடுவார்’ என்று மகி நினைத்திருக்க,
“ப்ச்” என்ற முணங்கலுடன் திரும்பி படுத்தவன் அவளது கையை பிடித்து கன்னத்தில் வைத்து கொண்டான்.
அவனது செயலில் அதிர்ச்சி போனது இவள் தான். இரண்டு நாட்களாக மழிக்கப்படாத அவனது தாடி மகியின் கையை கூச செய்ய மகிழ் கையை இழுக்க முற்பட்டாள்.
‘ம்ஹூம் முடியவில்லை’ போதாதற்கு குருவின் சூடான மூச்சு காற்றின் வெம்மை கரங்கள் உணரந்தது.
விழுக்கென்று கையை பலம் கொண்ட மட்டும் இழுக்க முயற்சிக்க அவன் பட்டென்று விழித்து கொண்டான்.
குரு எழுந்துவிட்டதில் அதிர்ந்தவள் அவனை நோக்க அவனது பார்வை தன்னுடைய கன்னத்தில் இருந்த மகியின் கரத்தை நோக்கியது.
அதில் சுயம் உணர்ந்தவள் படக்கென்று கையை எடுத்து கொண்டாள். இருந்தும் இதயம் படபடவென அடித்து கொண்டது.
எங்கே தன்னை எதாவது தவறாக எண்ணி விடுவாரோ என்று அஞ்சியவளுக்கு கண நேரத்தில் முகம் பயத்தில் வெளுத்துவிட,
“அது நான் உங்களை டைம் ஆச்சுனு எழுப்ப தான் கூப்பிட்டேன். நீ நீங்க எழவே இல்லை. அதான் கையை வச்சு எழுப்ப வந்தேன். நீங்க தான் தூக்கத்தில என் கையை கன்னத்தில வச்சிங்க. நா நான் எதுவும் பண்ணலை சார்” என்று உளறி கொட்டியவளது இதயம் மத்தளம் வாசிக்க உச்சபட்ச அச்சத்தில் தான் அவனை நோக்கினாள்….