காதல் 12.1

காதல் 12:

“ம்மா இது ம்மா அது” என்று எழில் ஒவ்வொரு உடையாக எடுத்து காண்பிக்க,

பையில் உடையை அடுக்கி கொண்டிருந்த மகிழ்,

“போதும் டா பட்டு. டூ டேஸ்க்கு தானே. இதுவே போதும்” என்று கூற,

“ம்ஹூம் மா‌ பத்தாது. விஷாலிக்கா அங்க பால்ஸ் இருக்கும்னு சொன்னாங்க அதுல குளிச்சிட்டு சேஞ்ச் பண்ண ட்ரெஸ் வேணும்” என்று கர்ம சிரத்தையாக கூற,

“ம்ம் ஆமா என்கு த்தெத் வேதும்” என்று கவினும் தன் பங்கிற்கு எடுத்து கொடுக்க, மகிழுக்கு புன்னகை முகிழ்ந்தது.

“டேய் போதும் நான் தான் சொல்றேன்ல. போங்க போய் வெளியே விளையாடுங்க” என்று கூற,

“சரிம்மா நாம எப்போ ஊருக்கு கிளம்புறோம்” என்று எழில் பத்தாவது முறையாக வினவ,

“நாளைக்கு காலையில” என்று சலிப்பில்லாது பதில் மொழிந்தாள்.

“கார்ல தான போறோம்” என்று வினவ,

“ஆமா கார்ல தான்” என்று பதில் மொழிய,

“அப்பாவோட கார் தான அது பிக் சைஸ் கார்” என்று சந்தேகம் வர,

“ஆமா பிக் சைஸ் கார் தான்” என்றவளுக்கு உன்னுடைய அப்பா என்ற வார்த்தை கூற மனது வரவில்லை.

“ஹ்ம்ம்” என்று பத்தாவது முறையாக மகிழ்ச்சி அடைந்தவன்,

“சரிம்மா நானும் கவினும் போய் விளையாட்றோம்” என்று கூற,

மகிழ் சரியென தலையசைத்துவிட்டு தன்னுடைய உடைமைகளை எடுத்து வைக்க துவங்கினாள்.

போன வேகத்திலே மூச்சு வாங்க ஓடி வந்த எழிலை கண்டு,

“என்னாச்சு எழில் ஏன் இப்படி ஓடி வர்ற?” என்று வினவ,

“அது அப்பா எப்போ வருவாரும்மா?” என்று மூச்சு வாங்கியபடியே பதில் வினா தொடுக்க,

“அப்பா அவங்க” என்று இவர் பதில் மொழிகையிலே அறைக்குள் அழுத்தமான‌ காலடிகளுடன் உள்ளே நுழைந்தான் குரு.

அவனை கண்டதும் தரையில் அமர்ந்து துணிகளை மடித்து கொண்டிருந்தவள் வழக்கம் போல பட்டென்று எழுந்து நின்று விட்டாள்.

எழிலும் கவினும், “அப்பா…” என்று ஓடிச் சென்று அவனது காலை கட்டி கொள்ள,

இருவரையும் கையில் தூக்கி கொண்டவன்,

“என்னடா செல்லங்களா? அப்பாவ தேடுனிங்களா?” என்றபடி உள்ளே வந்து நீள்விருக்கையில் அமர்ந்தவன் தன்னெதிரே நின்றவளை கேள்வியாக பார்க்க,

“உங்க‌ அம்மா ஊருக்கு போக ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சுக்க சொன்னாங்க” என்று பதில் மொழிந்தாள்.

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவன் இளையவர்களிடம் திரும்ப,

“ப்பா இவ்ளோ நேரம் எங்க போயிருந்திங்க?” என்று எழில் வினவ,

குரு பதில் மொழிவதற்குள்,

“ப்பா என்கு சாக்கி” என்று கவின் வினவியிருந்தான்.

குரு கவின் புறம் திரும்ப,

“ப்பா எனக்கு சாக்லேட்” என்று எழிலும் கேட்டிருந்தான்.

அதில் லேசாய் இன்ப சலிப்புடன்,

“டேய் ஒவ்வொன்னா கேளுங்கடா?” கூற,

“ப்பா நான் பர்ஸ்ட்” என்று எழில் மெழிய,

“ப்பா நா பத்ட்” என்று கவின் கூறினான்.

இதில் குருவிற்கு சிரிப்பு வந்துவிட,

“டேய் இதுலேயுமா?” என்று வினவிட,

இங்கே நடப்பவற்றை காதில் வாங்கி கொண்டிருந்தபடியே துணிகளை மடித்து வைத்த மகிழுக்கும் இவர்களது அலப்பறையில் சிரிப்பு வந்தது.

“சரி ரெண்டு பேரும் ஒன்னாவே சாக்லேட்ஸ் தர்றேன்” என்று இரண்டு இனிப்புகளை கையில் வாங்கி கொண்ட இருவருக்கும் முகமெல்லாம் புன்னகை.

தினமும் இனிப்பை வாங்கி வந்து கொடுக்கிறாரே குழந்தைகளின் பற்கள் என்ன ஆவது என்று கவலை பிறந்தது மகிழுக்கு. ஆனால் அவனிடம் கூற முடியாதே கூறினால் ஏற்கவும் மாட்டான்.

இதுவே தொடர்ந்தால் கண்டிப்பாக அவரிடம் கூறிவிட வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

“ப்பா திறந்து கொடுங்க”

“ப்பா திததந்து தா” என்று இருவரும் ஒரே போல மீண்டும் அவனிடமே கொடுக்க,

சிரிப்புடன் இனிப்புகளை பிரித்து கொடுத்தவன்,

“சமத்தா சாக்லெட்ஸ சாப்பிட்டு இருங்க. நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வந்திட்றேன்” என்று கூற,

சரியென்று தலையசைத்த இருவரும் இனிப்பில் மூழ்கிவிட்டனர்.

கழுத்து பட்டையை கழற்றியவன்,

“மகிழினி” என்று குரல் கொடுத்தான்.

அவனது குரலில் சிந்தையில் இருந்தவள் சடுதியில் நினைவை அடைந்து அடித்து பிடித்து எழுந்தவள்,

“ஹான் சொ… சொல்லுங்க சார்” என்றிட,

இவன் தான் அவளது பதற்றத்தை விழிகள் சுருக்கி பார்த்துவிட்டு,

“எனக்கு ஒரு காஃபி எடுத்துட்டு வா” என்றான்.

“சரிங்க சார்” என்றவள் விறுவிறுவென வெளியேறி வந்ததும் தான் சற்று மூச்சு சீராக வந்தது.

ஏதோ சிந்தனையில் இருந்தவள் திடீரென அவனது குரல் அழுத்தமாக காதில் வந்து விழவும் பதறி எழுந்துவிட்டாள்.

அதன் பிறகும் அவனது அழுத்தமான விழிகள் சுருக்கி பார்க்கும் பார்வையில் உள்ளுக்குள் அச்சம் எழத்தான் செய்தது.

என்னவோ அவன் வீட்டில் இல்லாத சமயம் நன்றாக தான் நடமாடுகிறாள். அவள் வீடு வந்துவிட்டால் என்னவோ அசௌகரியம் அதுவும் அவன் அறையில் இருக்கும் போது தான் அதிகமாக இருந்தது.

‘அதற்காக அவரை என்ன இங்கு வர கூடாது என்றா கூற முடியும் இது அவர் வீடு’ என்று தன் போக்கில் மனதிற்குள் பேசியபடி இருந்தவள் சமையலறைக்குள் நுழைய,

அங்கு இரவு சமையலுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த கோதை,

“என்னம்மா அவன் காஃபி கேட்டானா?” என்று வினவ,

“ஆமாத்தை” என்று தலையசைத்தாள் மகிழ்‌.

“அவன் வந்தவுடனே காஃபி போட பாலை வச்சிட்டேன். காஃபி தூளை போட்டு கலக்கி எடுத்துட்டு போ” என்றவரிடம் சம்மதமாத தலையசைத்தவள் குளம்பியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட,

“என்னம்மா ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” என்று வினவ,

“ஆங் வச்சிட்டேன் த்தை”

“சரிம்மா. குருவுக்கு அவனுக்கு என்ன ட்ரெஸ் வேணும்னு தான கேட்டு வச்ச?” என்று வினவ,

மகிழினிக்கு அப்போது தான் குருவும் தன்னுடன் தானே வருவான் அவனுடைய உடைகளையும் எடுத்து வைக்க வேண்டும் என்று நினைவு வந்தது.

“ஆங் கேட்டு எடுத்து வச்சிட்டேன்த்தை” என்று சட்டென்று மொழிந்தவளுக்கு அவனுடைய எடுத்து வைக்க வேண்டும் என்பதே கோதை கூறிய பிறகு தான் தோன்றியது.

error: Content is protected !!
Scroll to Top