“மனோ, எங்கடி போய்ட்ட? வீட்டுக்கு வர இவ்வளோ நேரமா? ஃபோன் பண்ணா எடுக்க மாட்டீயா? அறிவிருக்கா டி உனக்கு?” ராதா படபடவென பொரிந்தார்.
“நான் குமரன் பேசுறேன்!” இவனது பதிலில் ஒரு நொடி அவரது வாய்ப் பூட்டுப்போட்டுக் கொண்டது. மறுநொடியே மடைத் திறந்த வெள்ளம் போல பேச்சைத் தொடர்ந்திருந்தார்.
“டேய், நீ எதுக்கு டா அவ ஃபோன்ல பேசுற. மனோ எங்க, ரெண்டு பேரும் ஒன்னாதான் இருக்கீங்களா? அதான் காலையிலே மினிக்கீட்டு கிளம்புனாளா அவ?” ராதா பொரியத் தொடங்கினார்.
“ஒரு நிமிஷம் அமைதியா இருங்க!” இவன் அதட்டல் போடவும், அவரது பேச்சுத் தடைபட்டது.
“பெத்தப் புள்ளை சாப்பிட்டாளா? இல்லையான்னு கூடப் பார்க்க அக்கறை இல்லை. ஆனால், திட்ட மட்டும் உரிமை இருக்கா?” பல்லைக் கடித்தான்.
“அவ எங்கப் பொண்ணு. அவளை எப்படி பார்த்துக்குறதுன்னு எங்களுக்குத் தெரியும் குமரா!” கோபமாக அவர் பதிலளிக்க,
“நீங்க பார்த்துக்கிட்ட லட்சணம்தான் தெரியுதே!” என வேற ஏதோ கூற வந்தவனின் பேச்சை மனோ தடை செய்திருந்தாள். அவனது கையை இறுகப் பிடித்தவள், ‘வேணாம்… ப்ளீஸ்!’ வார்த்தையில்லாது உதட்டை அசைக்க, இவனது பேச்சு நின்றிருந்தது.
“வீட்டுக்குத்தான் வரோம்!” எனப் பட்டென அழைப்பைத் துண்டித்தவன், திரும்பி அவளை முறைத்துவிட்டு, “பைக்கை எடுத்துட்டு வரேன். வெயிட் பண்ணு!” என பத்து நிமிடங்களில் திரும்பியிருந்தான்.
மனோஹரி அவன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தவள், பின்னிருந்த கம்பியைப் பற்ற, குமரன் பல்லைக் கடித்தவாறே வாகனத்தை இயக்கவே இல்லை. அவனுடைய பார்வைக் கண்ணாடி வழியே இவளைத்தான் எரித்தன என்பதை உணர்ந்தாள். தான் கம்பியிலிருந்து கையை எடுக்காது நகர மாட்டான் என உணர்ந்தவள், தயக்கமாய்க் கம்பியிலிருந்த கரத்தை அவன் தோளுக்கு மாற்ற, வாகனத்தை இயக்கி வீட்டை நோக்கிப் பயணித்தான்.
இவர்கள் வருவதற்குள் ராதாமணி கணவருக்கும் மகனுக்கும் அழைத்து நடந்ததைக் கூறியிருக்க, இருவரும் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்குக் கிளம்பினர்.
திவாகருக்கு எரிச்சலாய் வந்தது தந்தை மீதும், தங்கை மீதும். இருவரில் யாராவது ஒருவர் இறங்கி வரக் கூடாதா? என்ற எண்ணம் அவனுக்கு உதித்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் அதைப்பற்றி யோசிப்பதாய் தெரியவில்லை. தினமும் இப்படி வீட்டில் ஒரு பிரச்சனையா என்ற ஆயசத்தோடு வீட்டை நோக்கிப் பயணித்தான்.
குமரனும் மனோஹரியும் வீட்டிற்குள்ளே நுழைந்தனர். அவள் நடக்க முடியாது தடுமாற, “மனோ!” என அவளை இழுத்துத் தன் கைவளைவில் இருத்தியபடி நடத்திச் சென்றான் குமரன்.
ராதாமணி அவர்கள் இருவருக்காகத்தான் காத்திருந்தார். குமரனுடன் ஒட்டிக்கொண்டு வரும் மகளைக் கண்டவருக்கு ஆத்திரம் பிரவாகமாகப் பொங்கியது.
“மனோ…” பல்லைக் கடித்துக்கொண்டு அவளின் கையை ராதா பிடித்திழுக்க, இதை எதிர்பாராத குமரனின் கைவளைவிலிருந்த மனோஹரி அவரின் கோபத்திற்கு இரையாகிப் பெத்தென தரையில் சரிந்திருந்தாள்.
என்ன நடக்கிறது எனக் குமரன் உணரும் முன்னே அப்பெண்மணி மகளைப் பிடித்திழுத்திருக்க, அவனும் கைநழுவி அவளைவிட்டிருந்தான். அவரது செய்கையில் இவனுக்குக் கோபம் கரைக் கடந்திருந்தது.
“மனோ…” ராதா பதறிப் போய் மகளைத் தூக்கச் சென்றார். அவள் கீழே விழுந்ததில் இவர் நொடியில் கலங்கிவிட்டிருந்தார்.
“அவளைத் தொட்டீங்க, நடக்குறதே வேற!” பெருங்குரலெடுத்து கத்தியவன், மனோவைத் தூக்கியிருந்தான்.
ராதாமணிக்கு அவன் குரலெல்லாம் அந்நொடி பெரிதாய் தோன்றவில்லை. மகள் திடீரென மயங்கி விழவும் சித்தமும் கலங்கிப் போனது அப்பெண்மணிக்கு.
அவளைத் தூக்கி நீள்விருக்கையில் குமரன் அமர வைக்கவும், ஓடிச்சென்று தண்ணீரை எடுத்து வந்து மகள் முகத்தில் தெளித்தார். “மனோ… எழுந்திரி டி. என்ன பண்ணுது, அம்மாவைப் பாரு டி!” என்றவரின் விழிகளில் நீர் கோர்த்தது. அத்தனை சீராட்டி பாராட்டி வளர்த்த மகளைத்தானே இப்படியாக்கிவிட்டோமே என்ற குற்றக் குறுகுறுப்பு முதல் முதலாய் அவரைக் கூனிக் குறுகச் செய்திருந்தது.
“மனோ, எழுந்திரி…” எனக் குமரன் அவளது கன்னத்தை அழுத்தமாய்த் தட்டவும், அவளுக்கு விழிப்பு வந்தது. மங்கலாகத் தெரிந்த கண்ணை ஒருமுறை சிமிட்டி தன் மீது சாய்த்து அமர வைத்திருந்த குமரனையும், அழுகையுடன் நின்றிருக்கும் தாயையும் பார்த்தாள்.
“மனோ… என்னாச்சு டி? ஏன் டி?” என்ற ராதாவின் கண்ணீர் அவளது முகத்தில் பட்டுத்தெறிக்க, அவரது கைகள் மகளது முகத்தை வேக வேகமாக தடவின. அவரின் பரிதவித்த முகத்தில் இவளது கோபம் கரைந்திருந்தது.
“எனக்கு ஒன்னும் இல்லை மா, நான் நல்லா இருக்கேன்!” என குமரனிடமிருந்து பிரிந்து நீள்விருக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்தாள்.
“எல்லாம் நடிப்பு!” குமரன் வெறுப்பாய் வார்த்தையை உமிழ்ந்தான். ராதா அவனை முறைத்தார். மனோ, பேசாதே என்பது போல அவன் கையைப் பிடிக்க, அதைத் தட்டிவிட்டு கோபமாய் எழுந்து நின்றான்.
“இப்போ இந்த அழுகை எல்லாம் வெறும் நடிப்புதான். அக்கறை இருக்குறது போல பேசத் தெரிஞ்சவங்களுக்கு, பெத்த மக ரெண்டு நாளா சாப்பிடலைன்னு கூடத் தெரியாதா? அப்படித்தான் இருக்கீங்களா? உங்களுக்கு உங்களோட அந்தஸ்து வெறிதானே முக்கியம். அவ செத்தா கூட உங்களுக்குப் பிரச்சனை இல்லை தானே?” குமரன் பெருங்குரலெடுத்து கத்தினான். ராதாமணிக்குப் பேச்சே வரவில்லை. மனோ படுத்திருந்ததைப் பார்த்தே அவரது உயிர் வரை பயம் கவ்வியிருந்தது. குமரன் பேசப் பேச தாயாய்த் துடித்துப் போனார்.
‘இருபத்தி மூன்று வருடம் மகளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்ட என்னை இப்படியொரு கேள்வி கேட்கிறானே!’ என உள்ளம் பரிதவித்தது அந்தத் தாய்க்கு. கோபம்தான் மனோ மீதும், அவளது செய்கைகள் மீதும்.
ஆனால், அது இந்தளவிற்கு மகளை இட்டுச் செல்லுமென கனவிலும் நினைக்கவில்லை. நேற்று உணவுண்ணாது படுத்துவிட்டவளைக் கோபத்தில் திட்டியிருந்தாலும் காலையில் திவாகரிடம் கூறி சாப்பிட அழைத்தார் பெண்மணி. அவள்தான் மருத்துவமனை பணிமனையில் உண்டு கொள்கிறேன் எனக் கிளம்பியிருந்தாள்.
இருந்தும் அவருக்கு மனம் கேட்கவில்லை. சிந்தை முழுவதும் அவளைச் சுற்றியிருக்க, அழைத்துப் பேச தன்முனைப்பு தடுத்துவிட்டது. அந்த எண்ணத்தில்தான் நாள் முழுவதும் உழன்றுக் கொண்டிருந்தார். மாலை அவள் வர தாமதமானதும் கணவருக்கும் மகனுக்கும் அழைத்துப் பதறிப் போய்விட்டிருந்தார் பெண்மணி. கோபம் ஒருபுறமிருந்தாலும், மகளைக் கவனித்துக்கொண்டு தானே இருந்தார் ராதா. இத்தனை வருட தன்னுடைய அன்பையும் நேசத்தையும் ஒரு நொடியில் தூக்கியெறிந்து பேசியிருந்தவனைப் பார்த்து ராதாமணிக்கு வார்த்தை வரவில்லை.
“குமரா, போதும்… என் அம்மாவைப் பேசாதீங்க…” விழிகள் மூடியிருந்தாலும், சுவாதீனக் குரலில் மனோஹரி பேசினாள்.
“குமரா, யார் வீட்ல வந்து என்னப் பேசுறன்னுத் தெரிஞ்சுதான் பேசுறீயா?” அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் ரங்கராஜன். அவரது குரல் வீடே எதிரொலித்தது. திவாகரும் வந்துவிட்டிருந்தான்.
அவரை அனல் தெறிக்கப் பார்த்தவன், “எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன் சார்!” என அழுத்திக் கூறினான்.
“குமரா, உன் பேச்சு சரியில்லை!” திவாகர் சீறினான்.
“என்ன சரியில்லாததைக் கண்டீங்க நீங்க?” எனக் கோபமாய் அவனை உருத்து விழித்தவன், ரங்கராஜனின்புறம் திரும்பினான்.
“என்ன வேணும், என்ன வேணும்னு கேட்டீங்க இல்லை. எனக்கு உங்க மகதான் வேணும். அவளை எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்க!” என ஒரே வார்த்தையில் அவரை அதிரச் செய்திருந்தான் குமரன். அவனது பேச்சில் மற்ற மூவரும் ஸ்தம்பித்துப் போயினர்.
“குமரா, என்ன கேட்குற நீ!” திவாகர் அதிர்ச்சி விலகாது வினா தொடுத்தான்.
“உங்களோட ஜாதிவெறி, அந்தஸ்து வெறி, குடும்பப் பகையெல்லாம் சேர்த்து வச்சு உங்களை மகளைக் கொன்னுடாதீங்க. ஏற்கனவே அரை உயிராகிட்டா அவ. இருக்குற மீத உயிரை எடுத்துடாதீங்க…” என ரங்கராஜனிடம் இரைந்தவன், “உங்கப் பொண்ணு எனக்கு வேணும். அவளைதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். நீங்க சம்மதிப்பீங்க, சம்மதிச்சே ஆகணும். சம்மதம் கொடுத்தா உங்க முன்னிலைல அவ என் பொண்டாட்டியாவா. இல்லை ஊர் முன்னிலை என் பொண்டாட்டியாவா. அது உங்களுக்குத்தான் அசிங்கம். உங்கப் பொண்ணோட உயிர் முக்கியமா, இல்ல ஜாதியும்தான் அந்தஸ்தும் முக்கியமான்னு நீங்கதான் முடிவு பண்ணணும்!” உறுதியாய் உரைத்தவனின் வார்த்தையில் சொன்னதை செய்துவிடுவேன் என்ற தீர்மானமிருந்தது. குமரன் சொன்னால், சொன்னதை எந்த எல்லைக்கும் சென்று முடித்துவிடுவான் என ரங்காவிற்குத் தெரியுமே. வாயடைத்துப் போய் நின்றார் அந்த மனிதர்.
எப்போதும் துள்ளிக் குதித்துக்கொண்டு பேசும் ராதா கூட இன்று அமைதியாக மகளருகே அமர்ந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டார். அவரது விழிகளும் உள்ளமும் கலங்கிவிட்டிருந்தது மகளின் நிலையைப் பார்த்து.
“என் அப்பா சம்மதம் இல்லாம என் கல்யாணம் நடக்காது. அவரை மீறி இந்த வீட்டைவிட்டு நான் வர மாட்டேன்!” உளறலாய் உரைத்தாலும் மனோஹரியின் குரலில் உறுதியிருந்தது. நடக்கும் அனைத்தையும் செவி உள்வாங்கினாலும், அவளால் விழிகளைத் திறக்க முடியவில்லை. தாயின் மடியில் படுத்திருந்தாள். அந்நிலையில் கூடத் தந்தைக்காகப் பேசியவளைப் பார்த்து பெற்றவர் உள்ளம் துடித்துப் போனது.
அவளது பேச்சைக் கேட்ட குமரன், ‘பாருங்க உங்கள் மகளை!’ என்றொரு பார்வை ரங்காவிடம் வீசியவன் மூவரையும் அனல் தெறிக்கப் பார்த்தவாறே நகர்ந்திருந்தான்
மறுநாள் ரங்காவின் முடிவைக் கேட்ட மனோ கொதித்துப் போனாள்.
உள்ளம் கேட்கும்…