,
ஒரு விநாடி அழுத்தமாக பார்த்தவன்,
“ஹனி உன்கிட்ட பேசணுமாம் பேசு” என்றிட,
“நானா? என்கிட்டயா?” என்று அதிர்ந்து வினா எழுப்ப,
“ஹ்ம்ம் உன்கிட்ட தான்” என்று மீண்டும் அழுத்தி கூறினான்.
அதில் சட்டென்று நகர்ந்து அவனது கையில் இருந்த அலைபேசியை வாங்கியவள் திரையில் தெரிந்த ஹனிகாவை பார்த்தாள்.
பார்த்தவுடன் மகிழினியின் விழிகள் பெரிதாக விரிந்தது. காரணம் ஹனிகாவின் அழகு. அதுவும் இயற்கை எழில்.
ஸ்ட்ராபெரியில் தேனை குழைத்தது போல ஒரு ரோஸ் நிறத்தில் களையான வட்ட வடிவ முகம். தோள்பட்டை வரை நீண்ட கூந்தல். குண்டு குண்டு விழிகள் கூர்மையாகவும் இல்லாமல் அமுங்கியும் இல்லாது நடுத்தரமான நாசி. அவளது நிறத்திற்கு போட்டி போட்டு சிவந்திருந்த இதழ்கள் என்று பொம்மை படங்களில் வரும் பார்பி போல இருந்தாள்.
பெண்ணான மகிக்கே அவளது அழகு வியக்க செய்தது. சிறிது நேரத்திலே அவளை அளந்திருந்தாள் மகிழ்.
ஹனி புன்னகையுடன், “ஹாய் மகிழினி” என்க,
சிரிப்பு கூட இத்தனை அழகாக இருக்கிறதே என்று எண்ணியவள்,
“ஹாய்…” என்று எண்ண கூறி அழைப்பது என்று தெரியாது நிறுத்திவிட,
“எப்படி இருக்கிங்க?” என்று வினவ,
குரலில் கூட எத்தனை இனிமை மென்மை இவளை மட்டும் கடவுள் எப்படி இத்தனை அழகாய் படைத்தார் என்று நினைத்துவிட்டு,
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்று வினவ,
“உங்களால தான் பிராப்ளம் சால்வ் ஆகி நல்லா இருக்கேன்” என்றாள்.
“நா நான் என்ன பண்ணேன் நீங்க எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணிங்க. நானும் பதிலுக்கு ஒரு வேலை பாக்குறேன்” என்று மகி கூற,
“மணி கொடுத்தாலும் அதை செய்ய ஓகே சொல்லணுமே. நீங்க அக்சப்ட் பண்ணிக்கிட்டிங்கல்ல” என்று கூறி புன்னகைக்க,
தானும் மென்னகை புரிந்த மகிழ்,
“நீங்க அழகா இருக்கிங்க?” என்று கூற,
“ரியல்லி?” என்று சிரிப்புடன் ஹனி கேட்க,
“ஆமா அப்படியே கார்டூன்ஸ்ல வர்ற பார்பி டால் மாதிரி அவ்ளோ அழகா இருக்கிங்க” என்று மனம் திறந்து கூற,
“ஆவ்… தாங்க் யூ டியர்” என்று சிறிது வெட்கப்புன்னகையுடன் கூறினாள்.
அந்த சிரிப்பில் கவரப்பட்ட மகிழ்,
“உங்க ஸ்மைல் கூட க்யூட்டா இருக்கு” என்று மகிழ் மொழிய,
“போதும் என்னை ப்ளஷ் ஆக வைக்காதிங்க. இதை அப்படியே அங்க இருக்க உங்க பாஸ்க்கிட்ட சொல்லுங்க” என்க,
மகியின் பார்வை குருவிடம் நிலைத்தது. இத்தனை நேரம் கணினியில் பார்வை பதித்தபடி இவர்களது உரையாடலை கேட்டவன் திரும்பி,
‘என்ன?’ எனும் விதமாக புருவம் உயர்த்த,
“ம்ஹூம்…” என்று சடுதியில் மகியிடமிருந்து பதில் வந்தது.
மகியின் முகத்தை கவனித்த ஹனி,
“என்ன கேட்டார் உங்க பாஸ். இப்படி பயப்பட்றிங்க. அவ்ளோ பயமா அவர் மேல. ரொம்ப பயம் காட்டி வச்சிருக்காரா? கொடுங்க மொபைலை நான் கேக்குறேன்” என்று சிரிப்புடன் கூற,
“சார் மொபைல்” என்று அவனிடம் கொடுத்தவள் மீண்டும் பால்கனிக்கு செல்ல விழைய,
“எங்க போற போய் படு” என்ற குருவின் குரலுக்கு சம்மதமாக தலையசைத்தவள் மெத்தையின் ஓரத்தில் படுத்து கொண்டாள்.
“என்ன ஓவரா மிரட்றிங்க அவங்களை?” என்ற ஹனியின் குரல் செவியை அடைய போர்வைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு ஹனியினது முகம் தான் வந்து போனது.
எப்படி இவ்ளோ அழகாக இருக்கிறார்கள். நான் என் வாழ்வில் இத்தனை அழகாய் யாரையுமே கண்டதில்லை. பெண் எனக்கே இப்படி தோன்றுகிறது என்றால் இவருக்கு இந்த பெண்ணை பிடித்ததில் ஆச்சரியம் இல்லை.
அதுவும் இப்படி ஒரு அழகான பெண்ணிற்காக ஒரு பொய் என்ன எத்தனை பொய் வேண்டுமானாலும் கூற தோன்றும்.
சட்டென போர்வையை விலக்கியவளது விழிகள் குருவை அளக்க மனது,
‘ஹ்ம்ம் இவரும் அழகில் குறைந்தவரில்லை. இருவருக்கும் ஜோடி பொருத்தம் நிச்சயமாக நன்றாக இருக்கும்’ என்று நினைத்தபடி இருந்தவள் குருவின் பார்வை தன்னை நோக்கி திரும்புவதை உணர்ந்து விழிகளை மூடி கொண்டாள்.
மனதில் கடவுள் சரியாக தான் ஜோடி சேர்ந்துள்ளார். இத்தனை அழகான பெண்ணுக்கு தன்னுடைய முதலாளி மிகவும் நல்ல பொருத்தமாக தான் இருப்பார் என்று சிந்தித்தபடியே உறங்கி போனவளுக்கு அந்த கடவுளின் விளையாட்டு அப்போதைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…