உடனே தோழியிடம் தங்களது நட்பைப் பற்றித் தெரிந்து கொண்ட முதலாளி தன்னிடம் கூறிய அறிவுரைகளை எல்லாம் அவளிடம் சொல்லி முடித்து விட்டிருந்தாள் மதுபாலா.
அதைக் கேட்டு விட்டு,”அப்படியா விஷயம்? அப்படின்னா, நம்மால் இனிமேல் ஆஃபீஸில் ஒன்னாக உட்கார்ந்து, பேசிக்க முடியாதா? ப்ச்! இதை நினைச்சா எனக்குக் கஷ்டமாகத் தான் இருக்கு! ஆனால், இதனால் நம்ம ரெண்டு பேரோட வேலைக்கும் பாதிப்பு வரக் கூடாது தானே? அதனால் நாம அவரோட கண்டிஷன்ஸூக்கு எல்லாம் சம்மதம் சொல்லித் தான் ஆகனும்”என்று அவளிடம் வருத்தமாக உரைத்தாள் பிரேமா.
“ஆமாம் டி! அதனால் தான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவருக்கு நான் கொடுத்த அந்த நம்பிக்கையை உடைக்க வேண்டாம்னு உங்கிட்ட எதுவுமே சொல்லிக்காமல் அங்கேயிருந்து கிளம்பி வந்துட்டேன்! சாரி டி”என்று மனதார மன்னிப்புக் கேட்கவும்,
“ஹேய்! நமக்குள்ளே சாரி எல்லாம் எதுக்கு டி? உனக்கு நம்மக் கம்பெனியில் எல்லாமே பிடிச்சு இருக்குத் தானே? ஏதாவது குறை இருந்தால் நம்ம எம். டி இல்லைன்னா, வெற்றி சார் கிட்டே சொல்லிரு. அவங்கப் பார்த்துப்பாங்க!”எனத் தோழிக்கு அறிவுறுத்த,
“எனக்கு அங்கே எந்தக் குறையும் தெரியலைடி. நான் வேலைக்குச் சேர்ந்து ஒருநாள் தானே ஆகிருக்கு? அதனால் போகப், போக எல்லாத்தையும் நானே கத்துக்கிறேன்”என அவளிடம் தெரிவித்தாள் மதுபாலா.
“அப்போ ஓகேடி. சுதா எப்படி இருக்காள்? ரெண்டு பேரும் என்னப் பண்ணிட்டு இருக்கீங்க?”என்று அவளிடம் விசாரித்தாள் பிரேமா.
அதற்குத் தானே பதிலளிக்கும் விதமாக,”நான் நல்லா இருக்கேன்க்கா. நாங்க ரெண்டு பேரும் டீ குடிச்சிட்டு இருக்கோம்”என்றவுடன்,
“ஓஹோ சரிம்மா. அப்படின்னா மொபைல் ஸ்பீக்கரில் இருக்குதா?”எனக் கேட்கவும்,
“ஆமாம்க்கா. அக்காவும், நீங்களும் பேசுறதைக் கேட்கிறதுக்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அதனால் தான் மொபைலை ஸ்பீக்கரில் போட்டுச் சிரிச்சிட்டு இருந்தேன்”என்று அவளிடம் கூறி நகைத்தாள் சுதா.
“ஆஹான்! மது! உன் தங்கச்சி சொன்னதைக் கேட்டியா?”என்று தோழியிடம் வினவினாள் பிரேமா.
“ம்ஹ்ம். அவளுக்கு நாம தான் பொழுதுபோக்கே!”எனத் தானும் புன்னகைத்து விட்டு,
“சரி. நீங்க ரெண்டு பேரும் டீ குடிங்க. நானும் போய் வீட்டில் வேலையைப் பார்க்கிறேன்”என்றவளோ,
அந்த அழைப்பைத் துண்டித்து விட்டதும், தாங்களும் தங்களது தேநீரைப் பருகி முடித்தனர் மதுபாலா மற்றும் சுதா.
அதற்குப் பிறகு இரவு உணவைச் சமைக்கும் வேலையில் இறங்கி விட்டார்கள்.
இதே நேரத்தில் தனது வீட்டில் இருக்கும் அலுவலக அறைக்குள் அன்றைய வேலைகள் அனைத்தும் செய்து முடித்தாயிற்றா? என்பதையும்,
யாராவது, ஏதாவது குற்றம், குறைகளைச் சொல்லி இருக்கிறார்களா? என்பதையும் அன்றைய நாள் முழுவதும், தான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளில் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் புகழேந்தி.
அப்போது அவனது அறைக் கதவுத் தட்டப்பட்டு,”சார்! நான் உள்ளே வரலாமா?”என்றக் குரலைக் கேட்டதுமே,
தனது கன்னக்குழிப் புன்னகையுடன் அறைவாயிலைப் பார்த்து,”அக்கா! இதென்னப் புதுசாக அனுமதி கேட்டுட்டு இருக்கீங்க? உள்ளே வாங்க!”என்றிருந்தான்.
ஆம்! அங்கே நின்றிருந்தது வேறு யாருமல்ல அவனது தமக்கை வெண்பாவே தான்!
தானும் புன்னகைத்துக் கொண்டே அறையினுள் நுழைந்து அவனுக்கு எதிராக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
“என்னடா நிறைய வேலைகள் இருக்கா? நான் உன்னைத் தொந்தரவு செய்ய விரும்பலை! அதனால் நான் வேணும்னா ஹாலில் உட்கார்ந்து காத்திருக்கவா?”என அவனிடம் அக்கறையுடன் கேட்கவும்,
“அதிகமான வேலை எல்லாம் இல்லக்கா. இன்னைக்கு ஒரு புதுப் பொண்ணு நம்ம ஆஃபீஸில் வேலைக்குச் சேர்ந்து இருக்காங்க. அவங்களைப் பத்திக் குறிப்புகள் வந்திருந்துச்சு. அதை தான் பார்த்துட்டு இருக்கேன்க்கா”என்று அவளுக்குப் பதிலளித்தான் புகழேந்தி.
“அப்படியா? அந்தப் பொண்ணுப் பேரு என்ன?”என்றாள் வெண்பா.
“மிஸ். மதுபாலா”என்றவனிடம்,
“ஓஹ் ஓகேடா! அந்தப் பொண்ணு எங்கேயிருந்து வர்றாங்க? என்னப் படிச்சு இருக்காங்க? டெமோ எப்படி பண்ணாங்க?”என அடுக்கடுக்காக விசாரிக்க,
“அவங்க நம்ம ஆஃபீஸூக்குப் பக்கத்துல தான் இருக்காங்க அக்கா. நம்மளை மாதிரியே அவங்களுக்கும் அப்பா, அம்மா கிடையாது. அதே மாதிரி, அவங்க அவ்வளவாகப் படிக்கலை! ஆனால் ரொம்பத் திறமைசாலியானத், தன்னம்பிக்கையானப் பொண்ணுக்கா!”என மதுபாலாவைப் பற்றிய இன்னும் சில விவரங்களைத் தமக்கையிடம் தெரிவித்தான் புகழேந்தி.
“ம்ஹ்ம். நீ சொல்லச், சொல்ல அந்தப் பொண்ணை நானும் நேரில் பார்க்கனும்னு ஆசையாக இருக்குடா. அதனால் நானும், உங்க மாமாவும் நம்மக் கம்பெனிக்கு ஒருநாள் வர்றோம்”என்று அவனிடம் தெரிவித்தாள் வெண்பா.
அதற்கு,”சரிக்கா. நீங்க எப்போ வேணும்னாலும் அங்கே வரலாம்”என்றவனோ,
“ஆமா, நீங்க மாமாவைப் பத்திப் பேசுனதும் தான் ஞாபகம் வந்துச்சு, அவர் எங்கே ஆளைக் காணோம்?”எனக் கேட்டிருந்தான் புகழேந்தி.
“அவர் இன்னும் ஆஃபீஸில் இருந்தே வரலைடா. அங்கே வேலை முடிஞ்சதும் இங்கே தான் நேரடியாக வந்துடுவார்”என்று அவனுக்குப் பதிலளித்தாள் வெண்பா.
“அப்போ சரி. நாம ஹாலுக்குப் போகலாம் வாங்க”என்றதுமே,
அவர்கள் இருவரும் சேர்ந்து வரவேற்பு அறைக்குப் போனார்கள்.
அங்குச் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டு,”மாமா வர்ற வரைக்கும் வெயிட் பண்ணலாம். அவர் வந்ததும் மூனு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்”எனத் தமக்கையிடம் கூறி விட்டு அவளுடன் அளவளாவத் தொடங்கி விட்டான் புகழேந்தி.
சிறிது நேரத்திலேயே வெண்பாவின் கணவனான மித்ரனும் அங்கே வந்து விடவும்,
அவனை வரவேற்றும் விதமாக,“வாங்க மாமா! கடையில் ரொம்பக் கூட்டமா?”என அவனிடம் அக்கறையாக வினவினான் புகழேந்தி.
“ஆமாம் மாப்பிள்ளை! கணக்கை முடிச்சிட்டு வர்றதுக்குள்ளே போதும், போதும்ன்னு ஆயிடுச்சு!”என்று மிகவும் சோர்வுடன் பதிலளித்தான் மித்ரன்.
“ரொம்பக் களைப்பாகத் தெரியுறீங்களே!”என்றவனோ,
அவனுக்காகப் பழச்சாற்றை வரவழைத்துக் குடிக்க வைத்தான் புகழேந்தி.
அதைப் பருகி விட்டு,”உங்க ஆஃபீஸில் புதுசாகத் துணிகள் எதுவும் டிசைன் செஞ்சித், தைச்சு வச்சு இருக்கீங்களா?”என்று அவனிடம் கேட்டிருந்தான் மித்ரன்.
உடனே,”ம்ஹ்ம். இப்போதைக்குக் கொஞ்சம் ரெடி செஞ்சி வச்சிருக்கோம் மாமா! ஏன்?”என விசாரிக்கவும்,
அதற்குத் தானும்,“எங்க கடையில் புதுசாக ஸ்டாக்ஸ் எடுக்க விருப்பப்பட்றோம். அதனால் முதல்ல உங்க கம்பெனியில் கேட்டுப் பார்க்கலாம்னு தான் கேட்டேன்”என்று விடையளிக்க,
“இது நமக்குள்ளே எப்பவும் நடக்கிறது தானே மாமா? நாளைக்கே கூட நீங்க ரெண்டு பேரும் நம்மக் கம்பெனிக்கு வாங்க”என்று தன் மாமா மற்றும் அக்காவிடம் தெரிவித்து விட்டிருந்தான் புகழேந்தி.
அதைக் கேட்டதுமே,”நீயும் எங்க கூட வரப் போறியாம்மா?”என மனைவியிடம் வினவினான் மித்ரன்.
“ஆமாங்க. புகழோட ஆஃபீஸில் புதுசாக ஒரு பொண்ணு வேலைக்குச் சேர்ந்து இருக்காங்களாம்”என்றவளோ,
தனது தம்பித் தன்னிடம் அந்தப் பெண்,’மதுபாலா’ – வைப் பற்றிக் கூறியதை அவனிடம் விவரித்து விட்டு,
“அந்தப் பொண்ணுக்கும் எங்களை மாதிரியே அப்பா, அம்மா இல்லைங்க. அதைக் கேட்டதுமே எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு! அதனால் தான், எனக்கு அவங்களைப் பார்க்கனும்னுக் தோணுச்சு! அதான் ங்க”என்று நெகிழ்வாக கூறியவளைக் கனிந்த பார்வையுடன் நோக்கி,
“எனக்குப் புரியுதும்மா. நாம நாளைக்குக் கண்டிப்பாக ஆஃபீஸூக்குப் போகலாம்”என்றுரைத்து விட்டான் அவளது கணவன் மித்ரன்.
“சரிங்க”என்றிருந்தாள் வெண்பா.
“அப்போ நீங்க ரெண்டு பேரும் நைட் இங்கேயே தங்கிடுங்க. நாளைக்குக் காலையில் கிளம்பி என்னோட சேர்ந்து நம்ம ஆஃபீஸூக்கு வந்துடுங்க”என அவர்கள் இருவருக்கும் யோசனையைக் கூறினான் புகழேந்தி.
“ஷூயர். நான் அப்பா, அம்மாகிட்டே இதைப் பத்தி தகவலைச் தெரிவிச்சிட்றேன்”என்று தன் மனைவி மற்றும் அவளது தம்பியிடம் உரைத்து விட்டுத் தன் செல்பேசியில் தனது பெற்றோருக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னான் மித்ரன்.
அதற்கு,”சரிடா. எவ்வளவு நாள் வேணும்னாலும் நீயும், மருமகளும் அங்கே தங்கிட்டு வாங்க. புகழை இங்கே வந்து தங்கச் சொன்னால் வர மாட்டான்! அதனால் நீங்களாவது அவன் கூட இருந்துட்டு வாங்க”எனக் கூறி விட்டார்கள் அவனது பெற்றோரான ஜோதி மற்றும் கபிலன்.
“சரிம்மா, ப்பா. நாங்க நாளைக்குச் சாயந்தரம் இங்கேயிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துட்றோம்”என்றுரைத்து விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு மற்ற இருவரிடமும் வந்து விஷயத்தை தெரிவித்தான் மித்ரன்.
அதைக் கேட்டதும்,”அப்படின்னா ஓகேங்க”என்றவளோ,
தனது கையாலேயே தாங்கள் மூவருக்கும் உணவைச் சமைத்து விட்டிருந்தாள் வெண்பா.
தங்களது உணவை உண்டு முடித்து விட்டுத் தத்தமது அறைகளுக்குச் சென்று உறக்கத்தை தழுவினர் மூவரும்.
மறுநாள் காலையில் மதுபாலாவும், சுதாவும் மிகவும் புத்துணர்ச்சியுடன் கண் விழித்தனர் எனலாம்!
ஏனெனில், அன்று தாங்கள் இருவருமே வேலைக்குச் செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை அந்தச் சகோதரிகளுக்கு!
அதனாலேயே, தாங்கள் இருவரும் தங்களை ஒருவரையொருவர் நன்றாக அலங்கரித்து, தங்களது அலுவலகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர் மதுபாலா மற்றும் சுதா.
“அக்கா! இன்னைக்கு நான் சமைக்கிறேன். நீங்க ரிலாக்ஸ் ஆக கிளம்புங்க”எனத் தமக்கைக்கு அறிவுறுத்தி விட்டுக் காலைச் சமையலைத் தானே முடித்து விட்டு மதியத்திற்கும் சமைத்து அதை தங்களது இருவருக்குமான உணவுப் பாத்திரங்களில் அடைத்து வைத்து விட்டு,
“எல்லாம் முடிஞ்சதா? இப்போ கிளம்பலாமாக்கா?”என்றச் சுதாவிடம்,
“ம்ஹ்ம். கிளம்பலாமே!”என்ற மதுபாலாவின் புறத்தோற்றம் வெகுவாக மாறியிருந்தது என்று கூறலாம்.
உடனே தங்களது வீட்டை விட்டு வெளியே வந்து கதவைத் தாழிட்டச் சமயத்தில், மதுபாலாவின் செல்பேசி ஒலித்தது.
அதை அவதானித்து விட்டு,”எனக்கு என்னமோ பிரேமா அக்காவாகத் தான் கால் செஞ்சி இருப்பாங்கன்னுத் தோணுது!”என்றிருந்தாள் சுதா.
“அவளாகத் தான் இருப்பாள்”என்றுரைத்து விட்டுத் தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தவளோ,
“அவளே தான்!” எனப் புன்னகைத்து விட்டு அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து,
“ஹலோ! சொல்லுடி”என்றாள் மதுபாலா.
“என்னடி வீட்டிலிருந்து கிளம்பி இன்னைக்கும் நடக்க ஆரம்பிச்சிட்டியா?”என்று தோழியிடம் கறாராக கேட்டிருந்தாள் பிரேமா.
“இல்லடி. இப்போ தான் வீட்டைப் பூட்டவே செஞ்சிருக்கோம்! இன்னும் இங்கேயிருந்து நடக்கக் கூட ஆரம்பிக்கலை!”என அவளுக்குச் சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லிப் புரிய வைக்கவும்,
“அந்தப் பயம் இருக்கனும்! நீ என்னப் பண்ற சுதாவைப் பஸ் ஏத்தி விட்டுட்டு அங்கேயே வெயிட் பண்ணு. நான் வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கிறேன்”என்று அறிவுறுத்தி விட்டு அழைப்பை வைத்து விட,
அவள் கூறியதை தனது தங்கையிடம் தெரிவித்து விட்டாள் மதுபாலா.
உடனே அவளும்,”அப்போ சரிக்கா. நடக்கலாம் வாங்க”என்று அவளது கரத்தைப் பற்றிக் கொண்டு நடை போடத் துவங்கியதும்,
சில தூரங்கள் கடந்த பின்னர்,”என்னக்கா உங்க கை ரொம்ப ஜில்லுன்னு இருக்குது? பயமாகப், பதட்டமாக இருக்கா?”எனத் தமக்கையிடம் பரிவாக வினவினாள் சுதா.
“ஆமா டி! ஒரு மாதிரி ஆர்வமாகவும் இருக்கு!”என்று அவளுக்குப் பதிலளித்தாள் மதுபாலா.
“என்னக்கா நீ? நான் வேலைக்குச் சேர்ந்த அப்போ எனக்கு அவ்வளவு தன்னம்பிக்கைக் கொடுத்துட்டு நீயே இப்படி பேசினால் என்ன நியாயம்?”என்று குறைபட்டுக் கொள்ள,
“நீ கேட்கிறது எல்லாம் வாஸ்தவம் தான் டி! ஆனாலும் எனக்குள்ளே தோனுற விஷயங்களை என்னால் மறைக்கவும், மறுக்கவும் முடியலையே!”என அவளுக்கு விளக்கம் அளிக்கவும்,
“நீ இப்படியே பயந்துட்டுப், பதட்டம் ஆகிட்டு இரு! உனக்குப் பிரேமா அக்கா நல்லா மண்டகப்படி கொடுத்து உன்னை ஆஃபீஸூக்குக் கூட்டிட்டுப் போவாங்கப் பாரு!”எனத் தமக்கைக்கு எச்சரிக்கை விடுத்து விட்டுத் தனக்கான பேருந்து வந்ததும் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டுப் பேருந்தில் ஏறிக் கொண்டாள் சுதா.
சில நிமிடங்கள் கழித்து அங்கே தனது இரு சக்கர வாகனத்தில் பிரசன்னம் ஆனாள் பிரேமா.
- தொடரும்