காதல் 11.1

காதல் 11:

“அப்பா…” என்ற வார்த்தையை உச்சரித்தவளுக்கு உடலோடு சேர்த்து உள்ளமும் நடுங்கியது.

மகிழியின் தந்தை சுவாமிநாதன் அவளை சிறு வயதில் இருந்தே மகிம்மா மகிம்மா என்று தான் அழைப்பர்.

அதனை பார்த்து வளர்ந்த எழிலும் அத்தை என்று அழைக்காமல் மகிம்மா என்று அழைத்து பழகியிருந்தான்.

குழந்தை தானே என்று யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பெரியவர்கள் இறந்த பிறகும் அவனது அழைப்பு அப்படியே தொடர்ந்தது.

எழிலை கண்டு கவினும் அவ்வாறே அழைக்க தாய் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு மகிழினி தாயாகி போனாள்.

மகியும் அவர்களை பெற்ற பிள்ளைகளை போல தான் வளர்த்தாள்.

தாய் தந்தை நினைவு வர கூடாது என்று எண்ணி தானே யாவுமாகியிருந்தாள்.

இப்போது திடீரென புதிதாக ஒரு உறவு தந்தை என்று அதுவும் எந்த உறவும் இல்லாத ஒரு அந்நியரிடம் வந்ததால் அதிர்ந்துவிட்டாள்.

எல்லாவற்றிற்கும் மேல் இங்கிலாந்து சென்ற பிறகும் அவர்கள் இந்த உறவை எதிர்பார்த்தால் தான் என்ன செய்வேன் என்று பயம் நெஞ்சை கவ்வியது.

இருந்தும் மனதின் ஒரு ஓரம் நம்பிக்கை இருந்தது குரு இதற்கு நிச்சயமாக சம்மதிக்க மாட்டார் என்று.

முகத்தில் அப்பிய கவலையுடன் குருவை கண்டாள்.

இளையவர்கள் இருவரும் குருவிடம் ஓடினார்கள்.

முதலில் எழில், “நீங்க எனக்கு அப்பாவா?” என்று வினவ,

இங்கே மகிழுக்கு மனதிற்குள் முரசு கொட்டியது.

அவன் முகத்தில் எந்தவித அதிர்வும் இன்றி மென்னகையுடன்,

“ஆமா” என்றிட,

இவளுக்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

குருவின் பதிலை கேட்ட இளையவர்கள் இருவரது முகத்திலும் தான் எவ்வளவு ஆனந்தம்.

எழில், “ரியல்லி?” என்று நம்பாது கேட்க,

“ரியல்லி” என்று குருவும் அதே போல பதில் அளித்தான்.

“வாவ் சூப்பர். அப்போ இனிமேல் நான் உங்களை அப்பான்னு கூப்பிடலாமா?” என்று வினவ,

“கண்டிப்பா கூப்பிடலாம்” என்றான் குரு.

“ஓகேப்பா. எனக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்குப்பா” என்று எழில் குதிக்க,

குரு, “எதுக்கு இந்த திடீர் ஹாப்பினெஸ்” என்று அவனை அருகில் இருத்தியபடி வினா தொடுக்க,

“அது என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அம்மா அப்பா இருக்காங்க. ஆனால் எனக்கு அம்மா மட்டும் தான இருக்கா. அதுனால அவங்க எல்லாரும் உனக்கு அப்பா இல்லை இல்லைன்னு கிண்டல் பண்ணுவாங்க. அப்போ எனக்கு கஷ்டமா இருக்கும்” என்றிட,

மகிழ் எழிலை அதிர்ந்து பார்த்தாள். இவனுக்கு தந்தை இல்லை என்ற ஏக்கமா? இதுவரை தன்னிடம் இதனை கூறியது இல்லையே என்று எண்ணியவளுக்கு அகில் தான் தன்னிடம் கூற கூடாது என்று சொல்லியிருந்தான் என்று தெரிய வாய்ப்பில்லை.

குருவும் இந்த சிறுவனது ஏக்கத்தினை கண்டு வாய் பேசாது தான் போனான்.

இந்த சிறு வயதிலே இவர்களுக்கு ஏன் இந்த இழப்பு என்று மனம் எண்ணியது.

தான் இவர்களை சரியாக பார்த்து கொள்ளவில்லையோ என்று மகிழுக்கு முதல் முறையாக கவலை வந்தது.

எழில், “அப்பா நீங்க என் ஃப்ரெண்ட்ஸ்ஸோட அப்பா மாதிரியே ஸ்கூல்ல ட்ராப் பண்ணுவிங்களா? அவங்க அப்பா எல்லாம் கார்ல வந்து ட்ராப் பண்ணிட்டு ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி கொடுப்பாங்க?” என்று ஆசையும் ஏக்கமுமாக கேட்க,

குருவிற்கு முதன் முதலாக உள்ளுக்குள் என்னவோ நழுவியது. அந்த பிஞ்சின் ஏக்கம் என்னென்னவோ செய்ய,

“கண்டிப்பா ட்ராப் பண்றேன். நிறைய ஸ்நாக்ஸ் வாங்கி தர்றேன்” என்று புன்னகையுடன் கூற,

“அப்போ எந்ந?” என்று கைகளை உயர்த்தினான்.

கவினது மழலை மொழியிலே குருவின் புன்னகை இமை நீள,

“உன்னையும் தான்டா நீயில்லாம அண்ணனை மட்டும் எப்படி அழைச்சிட்டு போவேன்” என்று அவனை மடியில் தூக்கி அமர்த்தி கொள்ள,

“ப்பா நானு உங்க மடியில உட்கார்றேன்” என்று எழிலும் குதித்தான்.

சிரிப்புடன் கவினை ஒரு புற காலில் அமர வைத்துவிட்டு மறுகாலை காண்பிக்க வேகமாக ஏறி அமர்ந்தான் சிரிப்புடன்.

மகிழ் தான் தன்னை மீறி நடந்து கொண்டிருந்தவற்றை அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.

தான் என்னதான் நன்றாக பார்த்து கொண்டாலும் இவர்களுக்கு தந்தை என்ற‌ உறவின் மீது நிறைய ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் ஆசைகள் இருந்துள்ளது.

தன்னால் ஒரு போதும் அதனை நிறைவேற்ற இயலாது. சரி இருந்துவிட்டு போகட்டும். என்னவோ இறங்கிவிட்டேன் இந்த விதி என்னை வைத்து ஏதோ விளையாடுகிறது.

தந்தை அன்பு என்ற ஒன்றை உணராமலே போவதற்கு சிறிது காலம் இந்த அன்பை அனுபவித்து போகட்டும்.‌ தான் தடுக்க நினைத்தாலும் எதையும் செய்ய இயலாது.

ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டோம் நீந்தித்தான் ஆக வேண்டும் என்று மனதை என்னென்னவோ கூறி தேற்றி கொண்டாள்.

ஆனால் உள்ளத்தின் ஓரத்தில் தன்னால் தன்னுடைய அன்பால் அவர்களை திருப்திபடுத்த இயலவில்லை என்பது உறுத்தி கொண்டே இருந்தது.

இங்கு எழிலும் கவினும்,

“ப்பா ப்பா ” என்று அவனை கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒரு வழி செய்து கொண்டிருந்தனர்.

எழில், “ப்பா அவங்க அப்பா வீக் எண்ட்க்கு மூவிக்கு பீச்க்கு எல்லாம் அழைச்சிட்டு போறாங்க. நீங்களும் அழைச்சிட்டு போறீங்களா?” என்று வினவ,

error: Content is protected !!
Scroll to Top