உள்ளம் கேட்குமே – 9.3

எழுந்து நின்று அவனை எரிக்கும் பார்வைப் பார்த்தவளை உருத்து விழித்தவன், “இந்த ஸ்கூட்டியை தூக்குற அளவுக்குக் கூட உன் உடம்புல தெம்பு இல்லை?” என்றவனின் வார்த்தைகள் பல்லிடுக்கில் வெளிவந்தன.

“அதை பத்தி உங்களுக்கென்ன அக்கறை?” இவள் உதட்டைக் கடித்து கோபத்தை அடக்கியக் குரலில் வினவினாள். இப்போது விழிகள் முழுவதும் மங்கலாகத் தொடங்கின.

அவளது முகத்தைப் பார்த்து அவதானித்த குமரன், “கடைசியா எப்போ சாப்ட்ட?” என சரியாகக் கேட்டிருந்தான். அந்தக் கேள்வியில் அவன் பார்வையில், தான் கூறாமலே தன்னிலையை அறிந்தவனின் அக்கறையில் இவளுக்கு விழிகள் கலங்க, தொண்டை அடைத்துப் போன உணர்வு. முகத்தை வைத்தே அகத்தைக் கணித்திருந்தவன், மனோ முகத்திலிருந்த முககவசத்தை உருவியிருந்தான்.

இப்போது சிவந்து வீங்கியிருந்த கன்னமும் உதட்டோரம் காய்ந்து போயிருந்த காயமும் தெளிவாய் இவன் விழிகளுக்குப் புலப்பட்டன. பெண்ணுக்கு மெதுவாக விழிகளில் நீர் தளும்பத் துவங்கின.

“எப்போ சாப்ட்டேன்னு கேட்டேன் மனோ!” அவள் நின்றிருந்த நிலையைக் கண்டவனுக்குக் கோபம் சுறுசுறுவென வரத் துவங்கியது. அழுத்தமாய் அதட்டலாய்க் கேட்டவனின் குரல் நீ பதிலளித்தே ஆகவேண்டும் எனக் கட்டளையிட்டது.

“ரெண்டு நாளாச்சு சாப்ட்டு. போதுமா?” பல்லைக் கடித்தாள். நிற்க முடியவில்லை அவளால்.

“அறிவிருக்கா டி? ரெண்டு நாளா சாப்பிடாம இருந்து சாகப் போறீயா? வீட்ல ஒருத்தரும் உன்னைக் கேட்கலையா?” பொறுமை சுத்தமாய்ப் பறந்திருக்க, பொது வீதி என்று பாராமல் கத்தியிருந்தான்.

“இப்போ எதுக்கு கத்துறீங்க? நான் சாப்பிடாம செத்தா உங்களுக்கு என்ன வந்துச்சு! நீங்க உங்க முதலாளிக்குக் கடைசிவரை உண்மையா இருங்க. அதுதானே உங்களுக்கு முக்கியம்!” இதைக் கூறும்போதே மனோவின் தொண்டை அடைத்துப் போனது. விழியைத் தாண்டி கன்னத்தை நனைத்தக் கண்ணீரை மறைக்க முயன்றாள். நிற்க முடியாது தள்ளாடியவளின் கரத்தை நொடியில் பிடித்திருந்தான் குமரன்.

“மனோ, என்ன பண்ணுது டி?” என பதறிக் கன்னத்தைத் தொட்டவனின் கரத்தை அப்போது கூட தட்டிவிட முனைந்தவளை நினைத்து இவனுக்கு அத்தனைக் கோபம் வந்தது.

“ஹாஸ்பிடல் போகலாம். ஒழுங்கா இப்போ என்கூட வர்ற நீ!” வந்தே ஆகவேண்டும் எனக் கையைப் பிடித்து தன் வாகனத்தருகே இழுத்துச் சென்றவனிடம் போராட இவளிடம் சுத்தமாய்த் திராணியில்லை.

“என்னைவிடுங்க. நான் எங்கேயும் வரலை. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்!” ரோஷமாய்க் கூறியவளின் குரல் கூட அவனது செவியைச் சென்றடையவில்லை. அத்தனை பலவீனமாய் குரல் நலிந்து வந்தது.

“எப்படி, இப்படி தள்ளாடிகிட்டே வீடு போய் சேருவீயா?” பல்லைக் கடித்தவன், “இப்போ பைக்ல ஏறி உக்கார்ற!” என தன் வாகனத்தை இயக்கினான். அவனை முறைத்தவளுக்கு அந்நொடி வேறு வழி ஏதும் அகப்படவில்லை. அதைவிட இன்னும் சற்று நேரத்தில் கீழே சரிந்துவிடுவேன் என உடல் எச்சரித்ததில் பயம் கவ்விக் கொண்டது.

“என் ஸ்கூட்டீயை அப்படியே விட்டுட்டு வர முடியாது!” என்றாள் சின்னக் குரலில். தன்னை வேண்டாம் என உதறிச் சென்றவனிடம் உதவியைப் பெறுகிறோமே என்று மனம் அவமானத்தில் குறுகியது. காதலே என்றாலும் சுயமரியாதையை எந்நிலையிலும் அவளால் இழக்க முடியவில்லை. குமரன் சென்று அவளது இருசக்கர வாகனத்தை நிமிர்த்தி சாலையோரம் நிற்க வைத்துவிட்டு சாவியைத் தன் கால்சராயில் வைத்துக்கொண்டே இவளிடம் விரைந்தான்.

அவன் வாகனத்தை இயக்கவும், ஏறி அமர்ந்தவள், பின்னிருந்த கம்பியைக் இறுகப் பிடித்தாளொழிய அவனைத் தொடவே இல்லை. கவனித்தவனின் முகம் கோபத்தில் சிவந்தது.

இப்போது அதைக் காண்பிக்க நேரமில்லை என்றுணர்ந்தவன் விரைந்து வாகனத்தை மருத்துவமனை நோக்கிச் செலுத்தினான். சில நிமிடங்கள் கடக்கவும், பொத்தென மனோவின் முகம் அவனது முதுகில் படர, அவளது கைகள் அவன் இடையிலிருந்த சட்டையைப் பற்றியிருந்தன. ஒரு நொடி குமரன் நிதானம் தப்பியிருந்தான். முதுகு உணர்ந்த அவள் உடலின் வெம்மை, அந்த ஸ்பரிசம், “சாரி, என்னால முடியலை குமரா!” என்றவளின் உடைந்திருந்த குரல் என அனைத்திலும் ஸ்தம்பித்துப் போனான்.

அவளின் விழிநீர் இவனை நனைக்கத் துவங்கியது. “என்னால முடியலை குமரா!” என மீண்டும் மீண்டும் உளறலாய் உரைத்தவளின் குரல் விசும்பலாய் தேம்பியபடி வந்தது. முற்றிலும் உடலும் உள்ளமும் தளர்ந்து போக, நினைவிழக்கத் தொடங்கினாள் மனோஹரி. ‘இதற்கு மேலும் என்னை வதைக்காதே! தாங்கிக் கொள்ள மாட்டேன்!’ என்ற குரலில் இவனது மொத்தமும் சரணடைந்திருந்தது.

இவ்வளவு நேரம் முடியும் என்றிருந்த வைராக்கியம் குமரனைக் கண்டதும், அவன் பேச்சைக் கேட்டதும் மொத்தமாய் அமிழ்ந்திருக்க, மனோவின் உடைந்த இதயம் மேலும் உடைந்து போனது. அவள் குரலில், அதிலிருந்த வேதனையில், இயலாமையில் இவனுக்குள்ளே பெருமழையும் பேரிரைச்சலும் உண்டானது. இதயத்தில் யாரோ ஓங்கியடித்த உணர்வு.‌

நிமிடத்தில் தன்னை மீட்டுக்கொண்டவன் வலதுகையை பின்னோக்கி எடுத்துச் சென்று, இடையோடு மனோஹரியை கீழே விழாதவாறு தன் மீது சாய்த்துப் பிடித்திருந்தான்.இடையில் பதிந்த கரத்தில் அதுக் கொடுத்த ஸ்பரிசத்தில் அவன் கையைத் தட்டிவிட முயன்றாள் மனோஹரி. “கொஞ்ச நேரம் அமைதியா இரு மனோ!” இவன் குரல் அதட்டலாய் ஒலிக்க, அவளது கைகள் தளர்ந்தன. சட்டையை மேலும் இறுக்கிப் பிடித்தாள். குமரன் வாகனத்தை நிறுத்தி சில நொடிகள் கடந்திருந்தன.

இப்படியே மருத்துவமனைக்கு இவளை அழைத்துப் போக முடியாது எனத் தோன்ற, வழியில் செல்லும் தானியை மறைத்து, கைத்தாங்கலாக அவளை அமர வைத்து தானும் அமர்ந்திருந்தான்.

“அண்ணா, பக்கத்துல எதுவும் ஹாஸ்பிடல் இருந்தா போங்க!” இந்தப் பெண்ணிற்கானத் தவிப்பு குரலில் கொட்டிக் கிடந்தது. முடியாது என முயன்று உள்ளே சுவாதீனமாய் உரைத்துக் கொண்டிருந்த குரலை அந்நொடி மரிக்கச் செய்திருந்தான். ஒரு வார்த்தையில் செய்கையில் அவனை அசைத்திருந்தாள் மனோஹரி. ஏனோ இந்த அன்பை இனிமேலும் நிராகரிக்க முடியும் என தோன்றவில்லை குமரனுக்கு.

‘எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்!’ என்ற முடிவிற்கு வந்திருந்தான்.

இப்போது அருகில் அமர்ந்திருந்தவளை குமரனது விழிகள் சுட்டன. இருவருக்கும் இடையில் அத்தனை இடைவெளி, தள்ளி அமர்ந்திருந்தாள். குமரனின் நிழல் கூட மனோவின் மீதுபடவில்லை. தானியில் முகத்தை சாய்த்திருந்தாள். கொஞ்சமே கொஞ்சம் மூளை விழித்ததில், சுயநினைவு சிறிது சிறிதாக வந்திருந்தது.

‘கல்யாணம் பண்ணா, என்னைத்தான் பண்ணுவேன்னு சொல்றது. இப்போ கிட்ட வந்தா என்னக் குறைஞ்சு போய்டுவாளாம்!’ மனதில் கோபம் வெகுண்டெழுந்து கனன்றத் தொடங்க, அது கொடுத்த உந்துதலில் கண நேரத்தில் அவளை இழுத்து தன் தோளில் சாய்த்திருந்தான்.

அதை உணர்ந்து மனோ அவனிடமிருந்து பிரியப் போராட, “அமைதியா இரு டி!” அதட்டலாய் உரைத்தவனின் கரங்கள் அவளை இறுக அணைத்திருந்தன. அந்தக் குரலில், அந்த அணைப்பில், அருகாமை கொடுத்த இதத்தில், ஸ்பரிசத்தில் அவளுக்கு அழுகைத் தொண்டையை அடைத்தது. அவன் தோளில் முகத்தையும் கண்ணீரையும் சேர்த்துப் புதைத்திருந்தாள் பெண்.

உள்ளம் கேட்டுவிட்டது 😎😌

error: Content is protected !!
Scroll to Top