“ம்ம் சரிம்மா” என்றவனது முகத்தில் பெரிய சிரிப்பு மிளிர்ந்தது. காரணம் மகி வாங்கி வருவதாக கூறிய இருந்த இனிப்பு தான்.
இருவரையும் அனுப்பிவிட்டு வந்தவள், “அகி மதியத்துக்கு தக்காளி சாதமும் உருளைகிழங்கும் பண்ணி வச்சிருக்கேன். மறக்காம சாப்பிடு” என்றிட, “ஹ்ம்ம் சரிக்கா உனக்கு நேரமாச்சு நீ கிளம்பு” என்று மொழிந்தான்.
“இதோ கிளம்பிட்டேன். தூக்கம் வந்தா தூங்கி ரெஸ்ட் எடு” என்று கூறியவள் வெளியே வந்து தனது கருப்பு நிற வெஸ்பாவில் அலுவலகத்தினை நோக்கி சென்றாள்.
சுவாமிநாதன் அம்பிகா தம்பதியினருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். முதலாவதாக செழியன் இரண்டாவது மகிழினி மூன்றாவது அகிலன்.
சுவாமிநாதன் அம்பிகா தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவர்களது குடும்பம் அவர்களை ஏற்று கொள்ளவில்லை. அதற்காக அவர்கள் வருந்தினாலும் காதல் கைக்கூடிய மகிழ்ச்சியில் நன்றாக தான் வாழ்ந்தனர்.
சுவாமிநாதன் ஒரு தனியார் பள்ளி தமிழாசிரியராக பணியாற்றினார். அவரது தமிழ் பற்றுக்கு சான்று தான் பிள்ளைகளின் பெயர்.
சுவாமிநாதன் மிகவும் நேர்மையான நல்ல மனிதர். செய்யும் வேலையை நேர்த்தியாக செய்பவர். அம்பிகாவும் குணவதி தான்.
சட்டம் பயின்றுவிட்டு பணி செய்து கொண்டிருந்த சமயம் செழியன் உடன் பணி புரியும் சுசியுடன் காதல் என்று வந்து நின்ற போதும் அதனை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து வைத்தனர்.
அவர்களது வாழ்வும் நன்றாயிருக்க கவினும் எழிலும் அடுத்தடுத்து பிறந்தனர்.
மகிழினியும் கல்லூரியில் முதலாமாண்டு அடி எடுத்து வைத்திருந்த சமயம் தான் அந்த கொடூரம் நிகழ்ந்தது.
மகிழினி இளையவர்களுடன் வெளியே சென்றிருந்த சமயம் வீட்டில் எரிவாயு உருளை வெடித்து சுவாமிநாதன், அம்பிகா, சுசி மற்றும் செழியன் நால்வரும் உலகைவிட்டு சென்றிருந்தனர்.
நடந்த நிகழ்வினால் உடைந்து தட்டுத்தடுமாறி அழுது கரைந்த மகி ஒரு கட்டத்தில் தேறி கொண்டாள்.
சொந்தங்கள் யாரும் உதவ முன்வரவில்லை. தங்களுக்கு தாங்கள் மட்டும் தான் என்று புரிந்தது.
இளையவர்களை தான் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்று புரிந்தது. அகிலனும் அப்போது எட்டாம் வகுப்பு தான் படித்து கொண்டிருந்தான்.
சுவாமிநாதன் பிள்ளைகளை படிக்க வைக்கவென சம்பாத்தியத்தை கரைத்திருந்தாலும் அம்பிகாவின் சாமர்த்தியத்தால் அவர்களுக்கு குடியிருக்க சொந்த வீடும் சிறிதளவு சேமிப்பும் இருந்தது.
இருந்த சேமிப்பை கரைத்து வீட்டை சீர் செய்து அங்கிருக்க முயற்சிக்க அது முடியவில்லை.
மேலும் கவினுக்கு அப்போது ஒரு வயது தான். குழந்தைகளை வைத்து துன்பப்படுபவளை கண்டு வருந்திய சுவாமிநாதன் பணி செய்த பள்ளியின் முதல்வர் அவருடைய தூரத்து சொந்தமான பிறைசூடனிடம் உதவி கேட்டு மகிழினியை ஊட்டிக்கு அனுப்ப முன்வந்தார்.
மகிழினிக்கும் ஒரு இடமாறுதல் தேவைப்பட சரியென்று கையில் இருந்த சிறிதளவு பணத்துடன் ஊட்டிக்கு இடம் பெயர்ந்தாள்.
மகிழினி கல்லூரியில் முதல் வருடம் மட்டுமே படித்திருந்தாலும் அவளுக்கு கணினி அறிவு இருந்ததால் அவளுக்கு ஒரு வேலையும் இருக்க இடமும் கொடுத்தார் பிறைசூடன்.
மகிழினி முதலில் திணறினாலும் பின்னர் சமாளித்து தொலை தூர கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்று இப்போது முதுகலையும் பயின்று கொண்டிருக்கிறாள்.
பட்டப்படிப்பு மற்றும் தனது திறமையாலும் அந்த தொழில்சாலையின் கணக்கு வழக்கு பார்க்கும் வேலைக்கு முன்னேறி இருந்தாள்.
அவர்கள் இப்போது தங்கியிருக்கும் இடம் ஊட்டி குன்னூர் நெடுஞ்சாலையில் தான் இருந்தது.
சரியாக முப்பது நிமிட பயணத்தில் ஊட்டி சாக்லேட்ஸ் என்று பெரிதான பெயர்ப்பலகை தாங்கியிருந்த தொழிற்சாலையின் வாகன நிறுத்துமிடத்தில் தனது வெஸ்பாவை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்.
அந்த தொழிற்சாலை ஊட்டி அவலாஞ்சி நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது. முதலில் நுழைந்தவுடன் இனிப்புகளை நேரடியாக விற்பனை செய்யும் விற்பனையகமும் அடுத்ததாக தொழிற்சாலையும் அதனை தொடர்ந்து இறுதியில் தொழில்சாலையின் அலுவலகமும் அமைந்திருந்தது.
இரண்டினயும் கடந்து தன்னுடைய அலுவலகத்திற்குள் நுழைந்தவள் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து அன்று தான் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட தொடங்கினாள்.
“ஹாய் மகி வந்தாச்சா குட் மார்னிங்” என்ற அவந்திகாவின் குரலில் திரும்பி புன்னகையுடன் காலை வணக்கத்தை தெரிவித்துவிட்டு தனது பணியை தொடர்ந்தாள்.
இதுதான் மகிழினி. வீட்டில் குழந்தைகளுடனும் அகிலனுடனும் நன்றாக பேசினாலும் வெளியே அவள் அமைதி தான்.
அப்படி ஒரு அமைதி. இயல்பிலே சற்று அமைதியான சுபாவம் கொண்டவள் வாழ்வில் ஏற்பட்ட அடுத்தடுத்த அடிகளால் முற்றிலும் அமைதியாகி போனாள்.
தனக்கென ஒரு வட்டத்தை அமைத்து அதற்குள் தங்கள் நால்வரை தவிர வேறு யாரையும் சேர்த்து கொள்ள அவள் பிரியப்படவில்லை.
முகத்தில் எப்போதும் உறைந்திருக்கும் புன்னகை அமைதியான குணம் இதுதான் அவளை பற்றி கேட்டால் மற்றவர்கள் கூறும் கருத்து.
“அம்மு டைம் பத்தாச்சு இன்னும் தூங்கிட்டு இருக்க. எழுந்திருடா” என்ற தாய் பூங்கோதையின் குரல் செவியின் எங்கோ ஒரு மூலையில் கேட்க, “ப்ச்…” என்று சிணுங்கலுடன் மறுபுறம் திரும்பி படுத்தாள்.
இரவு நண்பர்களுடன் கேளிக்கை விருந்திற்கு சென்றுவிட்டு இரவு தாமதமாகத்தான் வந்திருந்தாள் அம்மு என்று அழைக்கப்படும் அமிர்த வர்ஷினி.
“அம்மு நான் கூப்பிட்றது கேட்குதா இல்லையா?” என்ற தாயின் குரலுடன் அவர் கதவை தட்டும் ஓசையும் படபடவென கேட்டதில் அவளது உறக்கம் கலைந்திட, “ப்ச் ம்மா எதுக்கு இப்படி கதவை உடைக்கிற மாதிரி தட்டிக்கிட்டே இருக்கிங்க. எனக்கு தூக்கம் வருது கொஞ்சம் நேரம் கழிச்சு வர்றேன்” என்று பாதியில் விட்ட உறகத்த்தை தொடர முயற்சித்தாள்.
“என்னது இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறியா? இப்பவே மணி பத்தரை ஒழுங்கா எழுந்து குளிச்சிட்டு சாப்ட வா” என்று கடிய, “ம்மா தொல்லை பண்ணாம போம்மா நான் இப்போதைக்கு எழுந்துக்கிற ஐடியாவுல இல்லை” என்று உரக்க கூறிவிட்டு போர்வையை சுகமாய் போர்த்தி கொண்டு உறங்க விழைந்தாள்.
“அம்மு இப்போ நீ வர்றியா இல்லை பிரசாத் கிட்ட சொல்லவா?” என்று கூறி முடிக்கும் முன் கதவை திறந்து தாயை முறைத்து, “ம்மா உனக்கு அப்படி என்ன என்மேல கோபம்” என்றாள்.
“உன்மேல எனக்கு என்னடி கோபம். பொம்பளை பிள்ளை பத்து மணி வரை தூங்குனா குடும்பம் விளங்குமா? போ போய் குளிச்சிட்டு சாப்பிட வா” என்றுவிட்டு அகன்றார் பூங்கோதை. “ஆவ்…” என்று கோபத்தில் பல்லை கடித்தவள் குளித்து வர சென்றாள்.
பதினைந்து நிமிடத்தில் குளித்து கீழே அம்மு வர, “குளிச்சிட்டியா வா வந்து சாப்பிடு” என்று கீழே வந்தவளை கண்டு கோதை அழைக்க, “உன் சாப்பாடு ஒன்னும் வேணாம் எனக்கு” என்று தாயிடம் முறைப்பை காண்பித்துவிட்டு தனது தாத்தா பிறைசூடனது அறைக்குள் நுழைந்தாள்.