என் வானில் ஏனிந்த காதல்…
காதல் 1:
“கீச் கீச்…” விடாது ஒலித்த குரலில் சயனம் கலைந்த மகிழினி படுத்தவாக்கிலே திரும்பி பார்க்க, மஞ்சளும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் ஒற்றை கைக்குள் அடங்கிவிடும் அளவில் இருந்த இரு குருவிகள் தான் அந்த ஒலிக்கு காரணம்.
அந்த சிறிய கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த நீரை பருகுவதில் தான் இரண்டிற்கும் ஏதே சண்டை போல. ஒன்றையொன்று இடித்து கொள்வதை கண்டு அவளது இதழ்களில் மென்னகை பூத்தது.
ஊட்டி வந்த நாட்களில் இருந்தே இவைகளின் ஓசையில் தான் மகிழினி கண்விழிப்பதே.
படுக்கையில் இருந்து எழுந்து தன்னுடைய கூந்தலை அள்ளி கொண்டையிட்டவள் அருகில் வைக்கப்பட்டிருந்த நீர் குவளையை எடுத்து கொண்டு எழுந்து வெளியே வந்து சாளரத்தின் அருகே நின்றாள்.
ஊட்டியின் காலை நேரத்துக்கு குளிர்காற்று உடலை இதமாக வருடி சென்றது. அவளை கண்டதும் அவைகள் இரண்டும் வேக வேகமாக படபடவென இறக்கைகளை அடித்து கொண்டு சற்று தள்ளி சென்றது.
அந்த கிண்ணத்தை எடுத்து அதில் இருந்த நீரை கீழே ஊற்றிவிட்டு அதனை நன்றாக கழுவியவள் மீண்டும் நீரை நிரப்பி அதனிடத்தில் வைத்துவிட்டு அதற்கு அருகில் இருந்த கிண்ணத்தினை எடுத்து பார்த்தாள்.
அதில் அவள் நேற்று வைத்து சென்ற நவதானியங்கள் முக்கால்வாசி மீதமிருந்தது.
இதுவே இன்னும் மூன்று நாட்களுக்கு வரும் என்று எண்ணியவள் அதனை வைத்துவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தாள்.
உள்ளே சென்றதும் அவளது விழிகள் படுக்கையில் ஒருவர் மேல் ஒருவர் கையையும் காலையும் போட்டு நன்றாக உறங்கி கொண்டிருந்த கவின் மற்றும் எழில் மீது விழுந்தது.
சீராக ஏறி இறங்கும் மார்புக்கூடு அவர்களது ஆழ்ந்த உறக்கத்தினை உறுதி செய்ய சத்தமின்றி அலமாரியில் இருந்து தன்னுடைய உடையை எடுத்துகொண்டு அடுத்த அறைக்குள் செல்ல அங்கு அகிலன் சாளரத்தின் புறம் திரும்பியவாறு துயில் கொண்டிருந்தான்.
அங்கும் ஓசை எழுப்பாது குளியலறைக்குள் நுழைந்து குளித்து விட்டு தன்னுடைய அறைக்கு வந்தவள் சுவற்றின் முன் மாட்டப்பட்டிருந்த தனது தாய் தந்தையர் புகைப்படம் முன்பு விழி மூடி நின்றாள்.
மனதில் எந்த வித வேண்டுதலும் இல்லை. அமைதியாக சில நொடிகளை கடந்தவள் தாய் அம்பிகா தோள் மீது கையை போட்டபடி புன்னகைத்திருந்த தந்தை சுவாமிநாதனை விழியகற்றாது கண்டாள்.
மனைவியின் மீது கொண்ட அளவுகடந்த நேசம் அவரது முகத்தில் பெருகி வழிய இங்கு அம்பிகா முகத்தில் காதல் தந்த பெருமிதம் தான்.
இருவர் முகத்திலும் அத்தனை இளமை. திருமணமான புதிதில் எடுத்தது. இது மட்டுமே தான் அவளுக்கு அவர்களது நினைவாக எஞ்சி நின்றது.
“ப்ச்…” என்று சிணுங்கலுடன் தள்ளிப்படுக்க விழைந்த கவின் மீது எழில் கையை அழுத்தி போட்டான்.
அதில் சுயம் பெற்று திரும்பி அவர்களருகில் வந்து இருவரையும் பிரித்து படுக்க வைத்துவிட்டு சமையலறை சென்று குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்து தேநீரை தயாரிக்க துவங்கியவள் பக்கத்து அடுப்பில் காலை மற்றும் மதிய உணவையும் தயார் செய்ய முனைந்தாள்.
தேநீர் கொதித்ததும் வடிக்கட்டிவிட்டு தனக்கொரு கோப்பையில் ஊற்றி பருகியபடியே வேலையை தொடர, “அக்கா எனக்கும் ஒரு டீ…” என்று பின்னிருந்து அகிலனிடமிருந்து குரல் வந்தது.
“என்ன அகி ஏன் இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட. நைட் லேட்டாதான வந்த. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே” என்றவளது பார்வை ஹாலில் இருந்த சுவர் கடிகாரத்தில் பதிந்தது.
நேரம் ஐந்து நாற்பத்தைந்து
தான் ஆகியிருந்தது.
“தூக்கம் வரலைக்கா. அதான் எழுந்து வந்துட்டேன்” என்று அவள் கொடுத்த தேநீரை பருகினான்.
தமையனது விழிகளை சுற்றியிருந்த கருவளையத்தை கண்டவளுக்கு வருத்தம் மேலோங்க, “கண்ணை சுத்தி கருவளையமே வந்திடுச்சு அகி. உனக்கு இந்த வேலை அவசியமா?” என்று வினவினாள்.
தமக்கையின் வருத்தம் புரிந்தாலும் ‘அவளது சுமையை குறைக்க தானே இந்த வேலைக்கு செல்கிறோம் அதுவும் இந்த சில நாட்களாகத்தானே’ என்று மனதிற்குள் எண்ணியவன்,
“ப்ச் க்கா கருவளையம் தானே நல்லா தூங்கி எழுந்தா சரியாகிடும் இதுக்கு போய் பீல் பண்ணிட்டு இருக்க. போ போய் சமையலை கவனி” என்று அவளது தோள் மீது கையை வைத்து தள்ள, “ப்ச் என் பேச்சையே நீ கேட்கிறது இல்லை” என்று முணுமுணுப்புடன் சமையலை கவனிக்க சென்றவளுக்கு தமையனின் எண்ணமும் பாசமும் புரிந்தது.
மகிழினி தந்தையை போல மாநிறம் அகில் தாயை போல நல்ல சிவந்த நிறம் அதனால் அவனது கருவளையம் நன்றாக தெரிந்தது.
மகிழ் சமையலை முடிக்கும் சமயம், “மகிம்மா…” என்ற கூவலுடன் அவளது காலை கட்டிக்கொண்டான் கவின்.
“கவின்குட்டி அதுக்குள்ள எழுந்தாச்சா?” என்று வினவியபடி அவனை கைகளில் வாரிக்கொள்ள, “ம்ம் கவி எவுந்தாச்சு கவி குத் பாய்” என்று மழலையில் மிழற்றினான்.
“ஹ்ம்ம் கவின் குட் பாய் தான்” என்று அவனது கன்னம் கிள்ளி முத்தமிட, “அப்போ நானு” என்று பின்னாடியே வந்து நின்றான் எழில்.
“நீயும் குட் பாய் தான் குட்டி” என்று குனிந்து அவனது கன்னத்திலும் முத்தமிட்டவள், “ரெண்டு பேரும் சமத்தா குளிச்சு ஸ்கூலுக்கு கிளம்பணும்” என்க, “ம்ம்…” என்று பலமான தலையசைப்பு இருவரிடமும் இருந்து வந்தது.
“க்கா நான் இவங்க ரெண்டு பேரையும் ரெடி பண்றேன். நீ குக்கிங்க முடிச்சிட்டு ஆபிஸ்க்கு ரெடியாகு” என்று குளித்துவிட்டு வந்த அகில் கூற,
சம்மதமாக தலையசைத்துவிட்டு சாப்பாட்டை செய்து எல்லோருக்கும் டப்பாவில் அடைத்தவள் மாடியில் நேற்று மாலை காயப்போட்ட துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்துவிட்டு தானும் கூந்தலை பின்னலிட்டு சுரிதாரின் துப்பட்டாவை ஒரு புறம் மடித்தும் மறுபுறம் விரித்துவிட்டவாறும் ஊக்கை வைத்து குத்திவிட்டு நெற்றியில் சிறிய பொட்டிட்டு தயாராகி வெளியே வர அகிலன் சிறியவர்கள் இருவரையும் குளித்து தயார் செய்திருந்தான்.
நன்றாக குளிரை தாங்கும் வகையில் இருவருக்கும் கம்பளியிலான உடையை இழுத்து போட்டுவிட்டு அழைத்து வந்தான்
வெளியே வந்தவர்களை உண்ண வைத்து தானும் சாப்பிட்டு முடிக்க சிறியவர்களின் பள்ளி வாகனம் வரும் நேரம் வந்திருந்தது.
அவர்களது பேச்சை எல்லாம் தலையசைத்து கேட்டவாறு இருந்தவள் கேட்டின் அருகே வாகனத்தின் ஒலி கேட்டதும் அழைத்து சென்று வாகனத்தில் ஏற்றிவிட்டு, “ரெண்டு பேரும் சமத்தா இருக்கணும். கவின் உனக்குத்தான் அழக்கூடாது ஈவ்னிங் உனக்கு பிடிச்ச வைட் சாக்லேட் வாங்கி தர்றேன்” என்றாள்.