இதே சமயம் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறித் தனது வீட்டிற்குக் கிளம்பப் போகும் செய்தியைத் தோழிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு அங்கேயிருந்து நடைபயணம் செய்து தனது வீட்டை அடைந்து உள்ளே சென்றிருந்தாள் மதுபாலா.
அதற்குப் பிறகுத் தனது தங்கைக்கும் தகவல் தெரிவித்து விட்டுத் தன் உடையை மாற்றிக் கொண்டுத் தரையில் ஆசுவாசமாக அமர்ந்து தன்னை நினைத்து தானே பெருமைப்பட்டுக் கொண்டாள்.
ஏனென்றால், வெகு நாட்களுக்குப் பிறகுத் தன்னுடைய திறமையைச் சரியான இடத்தில், சரியான மனிதர்களிடம் வெளிப்படுத்தி விட்டோம் என்ற மன நிறைவுடன் இருந்தாள் மதுபாலா.
அதிலேயும் அங்கே இருந்த ஒருவர் கூடத் தன்னை ஏளனமாகப் பார்க்கவும் இல்லை!
அதேபோல் அவர்கள் தன்னல முகச் சுளிப்புடன் நடத்தவும் இல்லை என்பதை நினைத்தே அந்த அலுவலகத்தில் தனக்கு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டாள் மதுபாலா.
ஆனால் அடுத்த நிமிடமே,”இதையெல்லாம் ரொம்ப ஆழமாக யோசிச்சு ஆசையை வளர்த்துக்கக் கூடாது! அப்பறம் அந்த வேலைக் கிடைக்கலைன்னா ரொம்ப மனசுக் கஷ்டப்படும்! அதனால் அடக்கியே வாசிப்போம்”என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டு விட்டு காலையில் விட்டுச் சென்ற மீதமுள்ள வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
மாலை ஆனதும் அவளுக்குத் தோழியிடம் இருந்து அழைப்பு வர அதை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“ஹலோ! பாலா! நீ பாட்டுக்கு வீட்டுக்குக் கிளம்பிட்டேன்னு மெசேஜ் அனுப்பிட்டு அப்போவே ஆஃபீஸில் இருந்து நடந்தே போயிட்டியா? எனக்கு அப்போவே கால் செஞ்சி சொல்லி இருந்தால் நான் பர்மிஷன் போட்டுட்டு வந்து உன்னை ஸ்கூட்டியில் வீட்டில் டிராப் பண்ணி இருப்பேனே?”என்று அவளைக் கடிந்து கொண்டாள் பிரேமா.
“ஹேய்! உனக்கு எதுக்குச் சிரமம்ன்னு தான் நானே வந்துட்டேன் டி. அங்கேயிருந்து வீட்டுக்கு நடந்து வர்ற தூரம் தானே? அதான். அதே மாதிரி நான் இனிமேல் இதையெல்லாம் பழகிக்கனும்! அதனால் தான், நாம ஃப்ரண்ட்ஸா இருந்தாலும் அங்கே எல்லாத்தையும் நானே பார்த்துப் புரிஞ்சுக் கத்துக்கனும்னு உங்கிட்ட எந்த உதவியும் வேண்டாம்னு முன்னாடியே சொல்லி வச்சேன்! அதனால் நீ இனிமேல் என்னைப் பத்திக் கவலைப்படாமல் அங்கே நான் எப்படி நடந்துக்கிறேன்? வேலை பார்க்கிறேன்றதை மட்டும் பார்த்துச் சொல்லு. போதும்”என்று அவளிடம் நிதானமாகச் சொல்லிப் புரிய வைத்தாள் மதுபாலா.
“ம்ஹ்ம். என்னமோ சொல்ற! சரி. உன்னோட டெமோ சூப்பராக இருந்துச்சு டி! அனுதாபமாகப் பேசாமல் தன்னம்பிக்கையோட பேசின!”என்று தோழியைப் பாராட்ட,
அதற்கு,“ரொம்பத் தேங்க்ஸ் டி”என்றவளிடம்,
“இதுக்கு மேலே உன் விஷயத்தில் என்ன நடக்கும்ன்னு என்னால் சொல்ல முடியாது சாரி பாலா”என்றாள் தயக்கத்துடன்.
“ப்ச்! என்னடி நீ எங்கிட்ட இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கிற? எனக்கும் புரியுது! ஃப்ரீயாக விடு”என்றுரைத்து விட்டாள் மதுபாலா.
அப்போது வீட்டின் கதவுத் தட்டப்படும் சத்தம் கேட்கவும்,
“சுதா வந்துட்டாள்னு நினைக்கிறேன். நான் அப்பறம் பேசுறேன் பிரேம்”எனத் தோழியிடம் கூறி அழைப்பை வைத்து விட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள் மதுபாலா.
“அக்கா!”என்ற உற்சாக கூவலுடன் வீட்டினுள் நுழைந்தாள் தங்கை.
“என்னடி நீ இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிற?”
“ஆமாம்! ஏன்னா, எங்க அக்கா முதல் தடவையாக நிறையப் பேர் முன்னாடி டெமோ எடுத்து இருக்காளே? அப்போ நான் சந்தோஷமாகத் தானே இருப்பேன்?”என்றிருந்தாள் சுதா.
“ஆஹான்!”என்றவளோ,
“சரி. நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. நாம டீ குடிச்சிட்டே அதைப் பத்திப் பேசலாம்”என்று கூறி அவளை அனுப்பி வைத்து விட்டுத் தேநீரைத் தயாரித்து எடுத்து வந்தாள் மதுபாலா.
அப்போது சுதாவும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்து விடத் தேநீரைப் பருகத் தொடங்கினர் இருவரும்.
“இப்போ சொல்லுக்கா. ஆஃபீஸில் என்ன நடந்துச்சு?”எனக் கேட்டாள் சுதா.
“ம்ஹ்ம்”என்று காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் தங்கையிடம் கூறி முடிக்க,
“வாவ்! அக்கா! இதைக் கேட்கும் எனக்கு உன்னை நினைச்சா பெருமையாக இருக்கு! நம்ம அப்பா, அம்மா உயிரோட இருந்திருந்தால் உன்னை நல்லா படிக்க வச்சு இருப்பாங்கள்ல?”என்று வருத்தமாக மொழிய,
அதில் தனக்கும் வருத்தம் உண்டாலும்,”ம்ஹ்ம். பரவாயில்லை விடு”என்றுரைத்துப் பேச்சை மாற்றி விட்டாள் மதுபாலா.
“நான் இன்னைக்கு உனக்கு டிரெஸ் வாங்காமல் வந்துட்டேன்க்கா. சாரி!”என்றவளிடம்,
“ஹேய்! இருக்கட்டும் டி!”என்க,
“நாம ஞாயிற்றுக்கிழமை லீவ் நாளில் கண்டிப்பாக கடைக்குப் போய் உனக்கு டிரெஸ் எடுத்துட்டு வருவோம்க்கா”என்று தமக்கைக்கு வாக்களித்தாள் சுதா.
இதே சமயம் தனது அலுவலக வேலை முடிந்து வீட்டை அடைந்த போது அங்கே தனது தமக்கை மட்டுமின்றி அவளுடன் வந்திருந்த அவளது கணவன் மித்ரனைப் பார்த்ததும் தனது இதழ்களில் புன்னகையைப் படர விட்டுக் கொண்டு,
“ஹாய்க்கா, ஹாய் மாமா”என்றான் புகழேந்தி.
“ம்ஹூம்”எனத் தனது முகத்தை திருப்பிக் கொண்டாள் வெண்பா.
அதைப் பார்த்து நகைத்து,”என்ன மாமா உங்களுக்குள்ளே ஏதாவது சண்டையா? அக்கா ஏன் இவ்வளவு கோபமாக இருக்காங்க? முகத்தைப் பார்க்கவே கொடூரமாக இருக்கே!”என்று போலியானப் பயத்துடன் தன் மாமாவிடம் கேட்க,
அதில் அவனை மேலும் கொடூரமாக முறைத்துப் பார்த்தாள் வெண்பா.
“எங்களுக்குள்ளே எந்தச் சண்டையும் இல்லை மாப்பிள்ளை! எல்லாம் உன் கல்யாணத்தைப் பத்திப் பேசத் தான் என்னையும் இங்கே இழுத்துட்டு வந்திருக்கிறாள்! போன தடவை வந்தப்போ நீ சரியாகப் பதில் சொல்லலையாம். அதான், கோபமாக இருக்காள்”என்று அவனுக்கு விளக்கம் அளித்தான் மித்ரன்.
அவனுக்கும் சொந்தமாக ஒரு பிரபலமான துணிக்கடை இருக்கிறது.
மித்ரன் மற்றும் வெண்பாவின் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே வெண்பா மற்றும் புகழேந்தியின் பெற்றோர் இறந்து விடவே அதற்குப் பிறகுத் தன்னுடைய திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை புகழேந்தி.
அதே நேரத்தில், வெண்பா மற்றும் மித்ரன் தம்பதிக்கு இன்னும் குழந்தைப் பிராப்தம் கிடைக்கவில்லை.
அதனாலேயே, தனது தம்பிக்குத் திருமணம் செய்து வைத்து அவனுக்குப் பிறக்கும் குழந்தையையாவது வளர்த்து மகிழலாம் என்றும், அதை விட முக்கியமாக அவன் தனியாளாக இருக்கக் கூடாது, அவனுக்கும் ஒரு துணை வேண்டும் என்று உறுதியாக எண்ணித் தான், புகழேந்தியைத் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறாள் வெண்பா.
ஆனால் அவனோ தனக்கு முப்பத்தி மூன்று வயதாகி விட்டதால் இனிமேல் திருமணம் செய்து என்ன செய்யப் போகிறேன்? என்று அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டுள்ளான்!
“நீ இப்போ முடிவாக என்ன தான் சொல்ற?”எனத் தம்பியிடம் தீர்க்கமாக கேட்டாள் வெண்பா.
அவனோ,“அதான், நான் என்னோட முடிவை எப்பவோ சொல்லிட்டேனேக்கா!”என்றான்.
“ப்ச்! புகழ்!”என்றாள் இயலாமையுடன்.
“எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்க்கா. நான் ஒரு பத்து நாள் யோசிச்சுப் பார்த்துட்டு அப்போ எனக்குக் கல்யாணம் பண்ணிக்க ஆர்வம் வந்துச்சுன்னா உங்ககிட்ட சொல்றேன். நீங்க எனக்குப் பொண்ணுப் பாருங்க!”என்று அவர்கள் இருவரிடமும் கூறி விடவும்,
அதைக் கேட்டு மித்ரனும், வெண்பாவும் நிம்மதி அடைந்தனர்.
“சரி. நீ டைம் எடுத்து யோசிச்சிட்டு நேர்மறையானப் பதிலைச் சொல்லுவன்னு நம்புறேன்”என்றிருந்தாள் அவனது தமக்கை.
அதற்குப் பிறகு அவ்விருவரும் அங்கே அவனுடன் சேர்ந்து இரவு உணவை முடித்துக் கொண்டுத் தங்களது வீட்டிற்குச் சென்று விட்டனர்.
தனது படுக்கை அறைக்குள் வந்து கட்டிலில் படுத்து விட்டு, அன்று மதியம் நடந்த செயல்பாட்டு விளக்க நிகழ்ச்சியைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தான் புகழேந்தி.
அதில் தன்னை மிகவும் பாதித்த மதுபாலாவின் தோற்றமும், அவளது பெரிய விழிகளும், சிவந்த இதழ்களும், அவளது குண்டுக் கன்னங்களும் தன்னை இன்னுமே பித்தம் கொள்ளச் செய்வதை உணர்ந்தவனோ,
“எனக்கு இதுக்கு முன்னாடி எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் இந்த மாதிரியான உணர்வு வந்ததே இல்லை! ஆனால் உன்னை முதல் தடவைப் பார்த்ததில் இருந்து இப்போ வரைக்குமே என்னால் உன்னோட நினைப்பில் இருந்து மீளவே முடியலை! இதில் வேற நீ இதுக்கப்புறம் என்னோட கம்பெனியிலேயே வேலைப் பார்க்கப் போற! இனிமேல் என்ன நடக்கப் போகுதுன்னு என்னால் கூடக் கணிக்க முடியாது போலவே!”என்று மதுபாலாவிடம் மானசீகமாக குறைபட்டுக் கொண்டு உறக்கத்தை தழுவினான் புகழேந்தி.
அடுத்த நாள் காலை சகோதரிகள் இருவரும் உணவுண்டு கொண்டு இருந்தனர்.
“இன்னைக்குத் தானே முதல் நாள்க்கா? இன்னும் ஒரு நாள் இருக்குல்ல?”என்று தமக்கையிடம் ஆவலாக வினவினாள் சுதா.
அதில் புன்னகைத்து விட்டு,”ஆமா டி. என்னை விட நீ ரொம்ப ஆர்வமாக இருக்கியே?”என்றாள் மதுபாலா.
“இந்த வேலை உனக்குக் கிடைச்சா நம்மப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் வரும்ன்றது உண்மை தான். ஆனால் அதை விட உனக்கு ஒரு அங்கீகாரம், அடையாளம் கிடைக்கும்க்கா! அதுக்காகத் தான், இந்த விஷயத்தில் நான் உன்னை விட ரொம்ப ஆர்வமாக இருக்கேன்!”என்க,
அதைக் கேட்டுத் தனது தங்கையைப் பெருமிதமாகவும், பாசமாகவும் பார்த்து,”நம்ம அப்பா, அம்மாவுக்கு அப்பறம் என்னை நினைச்சுக் கவலைப்பட்ற ஜீவன்கள் நீயும், பிரேமாவும் தான் டி! உங்க ரெண்டு பேருக்காகவே எனக்குக் கண்டிப்பாக வேலைக் கிடைக்கனும்னு நான் கடவுள்கிட்டே வேண்டிக்கிறேன்”என்றவுடன்,
“உனக்குக் கிடைக்காமல் வேற யாருக்குக் கிடைக்கும்க்கா? நம்பிக்கையோட இரு”என்றிருந்தாள் சுதா.
அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் உணவை உண்டு முடித்து விட்டதும், தங்கையை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டுத் தனது தையல் இயந்திரத்தில் சில புதிய தையல்களைப் பழக ஆரம்பித்து விட்டாள் மதுபாலா.
இங்கே புகழேந்தியின் அலுவலகத்தில் அவனது தனிப்பட்ட அறையில் முந்தைய நாள் மதியம் நடைபெற்ற மதுபாலாவின் செயல்பாட்டு விளக்கத்தைப் பற்றி அவனும், அதில் பார்வையாளர்களாக இருந்தவர்களும் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது.
“அவங்களோட டெமோ ரொம்பவே இம்ப்ரஸிவாக இருந்துச்சு சார்!”என்றார் இளம்பெண் ஒருவர்.
“அதே மாதிரி எனக்கு அவங்களோட அறிமுகப்படலம் ரொம்பவே பிடிச்சு இருந்தது சார்”என்றிருந்தார் ஒரு நடுத்தர வயது ஆண்.
“எனக்கு அவங்களோட தையல்கள், அப்பறம் அதைக் கையாண்ட நேர்த்தி இது எல்லாம் பிடிச்சு இருந்துச்சு சார்”எனக் கூறினாள் பிரேமா.
அப்போது,”நீங்களும், அவங்களும் ஃப்ரண்ட்ஸ்ஸா? நீங்க சொல்லித் தான் அவங்க நம்மக் கம்பெனியை அப்ரோச் பண்ணாங்களா?”என்று அவளிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்தான் புகழேந்தி.
அதைக் கேட்டதும் அவள் மட்டுமின்றி அங்கேயிருந்த அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டு விட்டிருந்தது.
ஏனெனில் இந்த விஷயம் அங்கிருக்கும் யாருக்குமே தெரியாது! வெற்றிச்செல்வன் உட்பட!
அதனாலேயே அனைவரும் தங்களது கூரியப் பார்வைகளால் பிரேமாவை நோக்கினர்.
- தொடரும்