சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் ப்ரவுன் நிறங்களில் மாறியிருந்த இலைகள் தங்களை பிடித்து வைத்திருந்த கிளைகளின் கிடக்குபிடிகளை சற்று விளக்கி அவற்றை சுதந்திரமாக செயல்பட இந்த மரங்கள் அனுமதித்தால் கீழிறங்கி வந்து பூமியை தொட்டு தழுவி முத்தமிட்டு மோட்சம் பெற்று விட தயாராக காத்திருந்த அந்த காட்சியை பார்ப்பதற்கு வெகு அழகாக இருந்தது.
இலையுதிர் காலத்தின் விடுமுறைகள் முடிவு பெற்று ஸ்வீடன் நாட்டு மக்கள் தங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக வெகு மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருக்க பிருந்தாவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை செய்து விட அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி அன்றைய தன் பயணத்தை துவங்கினாள். அப்போது தான் இது போன்ற வண்ணமயமான காட்சிகள் பலவற்றை காண கிடைக்கவும் அந்த இலையுதிர் காலத்தில் பிருந்தாவின் மனம் லயித்து போனது.
சென்னையின் அதிக பட்ச குளிரான 21°C வரை மட்டுமேயான குளிரை உணர்ந்து வைத்திருப்பவளுக்கு இன்னும் குளிர் காலமே வந்திராத ஸ்வீடனின் 12°C வானிலை ஃபால் சீசனையும் அடர் குளிர்காலமாக தோன்ற வைத்திருந்தது. அவசரமாக தன் கைபேசியை எடுத்து டிசம்பர் முதல் பெப்ரவரி வரையிலான குளிர்காலத்தின் தட்பவெப்ப நிலையை ஆராய்ந்து பார்த்தாள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் வார துவக்கத்தில் இருந்து நிச்சயம் மிகவும் குறைவான வெப்பநிலை(- 1.5°C) ஸ்டாக்ஹோமில் நிலவும் என்று சுட்டிக் காட்டியது அவள் கைபேசி. இதையெல்லாம் அவள் முன்பே பார்த்து வைத்திருந்தது தான் ஆனாலும் இப்போது அதை உணரும் போது தானே அதன் உண்மை நிலவரம் அவளுக்கு புரிகிறது. அதற்கும் முன்பாகவே அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என முடிவு செய்து கொண்டாள் பிருந்தா.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பில் பயிலும் (M.A. Ancient History and Archaeology) இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் தான் இவர்கள் மூவரும். இறுதி ஆண்டின் இன்டெர்ன்ஷிப் செய்வதற்காகவும் கிழக்காசிய நாடுகளின் பாரம்பரியத்தை பற்றி விரிவாக கற்றுக் கொள்வதற்கும் தான் அவர்கள் இங்கு வந்திருப்பது.
ஸ்வீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோமின் கிழக்காசிய அருங்காட்சியகமான ஸ்டசியட்டிஸ்கா முசேட் (Ostasiatiska Museet) என்று ஸ்வீடன் நாட்டினரால் அழைக்கப்படும் ஸ்கெப்ஸ்ஹால்மென் (Skeppsholmen) என்னும் தீவில் இருக்கும் மியூசியம் ஆஃப் ஃபார் ஈஸ்டர்ன் ஆன்டிக்விடீஸ் (Museum of Far Eastern Antiquities) என்ற அருங்காட்சியகத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கான பயிற்சி பணிக்காக அவர்களின் கல்லூரி அனுமதித்ததன் பெயரில் பிருந்தா, பல்லவி மற்றும் ஜெய்தீஷ் மூவரும் ஸ்வீடன் வந்திருக்கிறார்கள்.
அருங்காட்சியகத்தின் முதல் நாளான இன்று முன்பே அவர்கள் முடிவு செய்து வைத்திருந்ததை போல அங்கு செல்வதற்காக கிடைத்த மூன்று வழிகளிலிலும் அவர்கள் மூவரும் பிரிந்து ஒவ்வொரு பாதையிலும் அவர்கள் தனித்தனியாக பயணித்து தினமும் சென்று வருவதற்கு சுலபமான வழி ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவின்படி மூவரும் தங்களுடைய பயணத்தை துவங்கினர்.
புது நாடு என்றெல்லாம் அவர்களுக்குள் எந்தவித பயமும் இருக்கவில்லை. மூவரும் கான்ஃப்ரென்ஸ் காலில் தங்களுக்குள் பேசியவாறே அவரவர் வழிகளில் துவங்கிய பயணத்தை மியூசியம் வந்தடையும் வரை தொடர்ந்தனர்.. டன்னல் பனா என்னும் மெட்ரோ ரயில் வழியாக ஜெய்யும், 65 ஆம் எண் பேருந்து வழியாக பல்லவியும் பயணம் செய்து கொண்டிருக்க பிருந்தா தனியாக ஸ்கெப்ஸ்ஹால்ஸ்பிரான் என்ற ப்ரிட்ஜின் வழியாக நடக்க துவங்கினாள்.
எந்த வழியாக இருந்தாலும் பேங்க் ஹோட்டலில் இருந்து மியூசியம் வந்து சேர்வதற்கு பதினைந்து முதல் முப்பது நிமிடங்கள் வரை தான் நேரம் எடுக்கும். மூவரும் ஒருவர் பின் ஒருவராக அங்கு வந்தவுடன் உள்ளே சென்றவர்கள் குறிப்பிட்ட அந்த நபரை சந்தித்து அவர்கள் வந்ததிருப்பத்தின் முகாந்திரத்தை தெரிவித்து அவர்களை அறிமுகமும் செய்து கொண்டார்கள்.
அடுத்த இருபது நிமிடங்களில் அவர்கள் மூவருக்கும் அங்கு பணிபுரிவதற்கான ஊழியர் அட்டையுடன் அந்த மியூசியத்தின் டூஸ் அண்ட் டோண்ட்ஸ் பற்றிய குறிப்புகளும் மற்றும் மியூசியத்தின் மேப்பும் வழங்கப்பட்டது. மதியத்திற்கு மேல் மியூசியத்தின் கஃபேவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களின் முன் வந்து நின்ற மியூசியத்தின் அதிகாரி ஒருவர் அவர்கள் மூவருக்கும் பொதுவாக ஒரு அறிவிப்பை தெரிவித்து விட்டு அவர்களை கையோடு அழைத்து சென்றார்.
யாரோ ஒரு முக்கிய நபரை அவர்கள் மூவரும் சந்திக்க வேண்டுமாம். அவர்களை சந்திக்க விரும்புவதாக குறிப்பிட்ட அந்த நபரிடம் அவர்களை அந்த ஊழியர் அழைத்து சென்றால் நிச்சயமாக பிருந்தா அங்கு இந்த தில்ஷத்தை எதிர்பார்த்தாலமா என்ன? ஆனால் உள்ளிருந்தது அவனே தான். அதுவும் ஃபுல் ஃபார்மல்ஸில் படு பிசியாக ஃபோன் கால் பேசிக் கொண்டிருந்தான்.
“ஹேம்ஸ்! நானே உங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். வரவங்க கிட்ட இந்த மொத்த பொறுப்பையும் கொடுத்துட்டு நான் இன்னைல இருந்து எஸ்கேப் ஆக போறேன்”
“…”
“நோ நோ நோ! இனிமே நீங்க என்ன சொன்னாலும் இங்கிருக்க மாட்டேன். டாட் கிட்ட நீங்க தான் பெர்மிஷன் வாங்கி தரணும்!”
“…”
“ஹாஹா! ஓகே ஓகே பாய் ஹேம்ஸ்” என்று அவன் பேசிவிட்டு வைத்த பின்பு தான் அவர்கள் மூவரும் அந்த அறையின் உள்ளே வரவழைக்கப்பட்டனர்.
ஆனால் அதற்கும் முன்பே அவன் முகத்தை பார்த்து விட்ட பிருந்தாவின் வயிற்றுக்குள் ஒரு பிரளயமே வெடித்தது. அப்படியே அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பித்து சென்று விடலாமா என்று வரை கூட அவள் யோசித்து விட்டாள். மாட்டப்போவது திருடனான மந்திரவாதியின் குகைக்குள் உள்ளே அவளுக்கு கிடைக்கப்போவது விதவிதமான பல்ப்கள் அன்றி வேறு என்ன?
அவள் வாங்கிய பல்புகளை கூட பல்லவிக்கும் ஜெய்க்கும் தெரியாமல் அதன் உயிரை எடுத்து விட்டிருந்தாளே இப்போது மட்டும் மற்ற இருவருக்கும் அதெல்லாம் தெரிய வந்தால் அவள் நிலை படு மோசமாகி விடும். ‘பல்ப்களின் அரசி’ என்று அவளுக்கு புது பெயரையே அவர்கள் வைத்து விடுவார்கள். நினைக்க நினைக்க தவித்து போய் சூடான அனல் பரவியது பிருந்தாவிற்குள். அப்படியே அவளை தூக்கி கொண்டு போய் அண்டார்டிகாவில் வைத்தால் கூட இந்த அனல் தணியுமா என்றால் அதுவும் தெரியவில்லை.
இன்று காலையில் கூட அவள் நினைத்திருந்தது என்ன? இப்போது நடப்பது என்ன? ஒவ்வொரு முறையும் அவனிடம் அவள் தோற்று கொண்டே இருப்பதாய் நினைத்தாள் பிருந்தா. பல்லவியின் கைகளை சுரண்டியவள், “லவி! எதுக்கு இவர பார்த்துக்கிட்டு இப்படியே நிக்கணும் ப்ளீஸ் வாயேன் நாம போய் நம்ப வொர்க்கை செய்வோம்!” என்று அவளை அழைத்து பார்த்தாள்.
அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்த பல்லவி, “ஜெய்! அவங்களை கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லு. அவங்க என்ன பேசினாலும் நான் அவங்க கிட்ட பேசுறதா இல்லனு அவங்களுக்கு புரியும்படி அவங்க மண்டையில இரண்டு தட்டு தட்டி சொல்லு” என்றதும்,
“ஹே! கான்ஃபரன்ஸ் கால்ல என்கிட்ட பேசின தானே. அதுக்குள்ள நான் என்ன செய்துட்டேனு திரும்பவும் பேச மாட்டேன்னு சொல்ற லவி?” என்று அவளிடமாக வினவினாள் பிருந்தா.