கனவெங்கும் தித்தித்தாய் – 2.2

“தேங்க்ஸ் சார்! ப்ளீஸ் உள்ள போய் பேசலாமே…” என்று கேட்டவளுக்கு வழி விட்டு நின்றவன் அவள் உள்ளே நுழையவும் அவனும் சற்று இடைவெளி விட்டு அவளை பின் தொடர்ந்தான்.

நல்ல விஸ்தாரமாக இருந்த பெரிய வரவேற்பறைக்கு இடது புறமாக ஒரு பெரிய படுக்கை அறையும் மற்றும் ஒரு சிறிய டிரெஸ்ஸிங் ரூம் வலது புறத்தில் பால்கனியை ஒட்டியவாறு சின்ன ஓய்வறை ஒன்றும் இருந்தது. பார்ப்பதற்கு அவள் தங்கி இருக்கும் அறை போலவே இருந்தாலும் இது அதை விடவும் பிரமாண்டத்திலும் அளவிலும் பெரியது என்று பார்க்கும் போதே அவளுக்கு புரிந்தது.

விரைந்து சென்று பால்கனி கதவை மூடி விட்டு வந்தவளை நோக்கி கேள்வியாக வளைந்த அந்த புதியவனின் முகத்தை பார்த்தவாறே மற்ற அறைகளையும் சாற்றி விட்டு வந்தவள்,

“சார்! நான் சொல்றதை கொஞ்சம் நிதானமா கேளுங்க. நான் உங்களுக்கு ஆப்போசிட் ரூம்ல தான் தங்கி இருக்கேன். தூக்கம் வராம பால்கனியில நடந்துட்டு இருக்கும் போது பிளாக் கலர் ஓவர் கோட் போட்டிருந்த கல்பிரிட் உங்க பால்கனி பக்கம் ஏறி குதிச்சு வந்து இருட்டுல மறைஞ்சதை பார்த்தேன்!” என அவள் கூறியதை கேட்டு பீறிட்டு வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியவன்,

“ஐயோ! என்ன சொல்றீங்க மிஸ்… நீங்க சொல்ற மாதிரி ரூம்க்குள்ள யாரும் வரலையே எனக்கு யாராலையும் எந்தவித டிஸ்டர்பன்ஸும் இல்ல. நீங்க எதையோ தப்பா…” என்று கூற துவங்கியவனை மறுத்து பேச வாய் திறந்தவள் அங்கிருந்த டேபிளுக்கு அருகே தொங்கிக் கொண்டிருந்த கருப்பு நிற பிளேஸரை கண்டதும் அதிர்ந்து போய் தன் பாக்கெட்டில் இருந்த கத்தியை வேகமாக வெளியில் எடுத்து அவனுக்கு முன்பு நீட்டினாள்.

“ஹே! ஜஸ்ட் வெயிட்… யூ ஆர் அட் சம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்… லெட்ஸ்…” பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் கைகளை தன் ஷாலினாலும் பின்பு சோபாவிலும் சேர்த்து கட்டி இருந்தாள்.

“ஷட் அப்! யூ ரெடிகுலஸ் மிஸ்சீஃப். அப்பவே எனக்கு ஒரு டவுட் இருந்தது நீ எகிறி குதிச்சு இவ்வளவு நேரம் ஆகியும் எந்த ஒரு சத்தமும் கேட்கலையேனு நினைச்சேன். சொல்லு என்ன பண்ண நீ? இந்த ரூம்ல இருந்த பெர்சன் எங்க? எதுக்கு அவசரமா ஷர்ட்லாம் சேன்ஜ் பண்ணிருக்க? உன்னோட பிளான் தான் என்ன?” என்று அவனுக்கு இரண்டடி தள்ளி அமர்ந்திருந்த பிருந்தா அவனை கேள்விகளால் துளைக்கவும் அவன் இதழ்களில் சின்ன புன்னகை ஒன்று வந்தமர்ந்தது.

“பரவால்லை இந்தியன் வுமென்ஸ் ஆர் ஸ்ட்ராங் இனாஃப்னு சும்மாவா சொன்னாங்க வாவ்! இன்னைக்கு நிஜமாவே நான் அதை பார்த்துட்டேன். தட்ஸ் எக்ஸ்ட்ரீம்லி ட்ரூ!”

அவன் கூறியதை கேட்டு அவனை வினோதமாக பார்த்த பிருந்தா ‘ஒருவேளை இவன் நல்லவன் தானோ?’ என்று அவளுக்குள் முளைத்த திடீர் சந்தேகத்தால் பால்கனியில் எகிறி குதிக்கும் போது அவன் கொண்டு வந்திருந்த உருளை வடிவில் இருந்த ஸ்போர்ட்ஸ் பேக்கை ஆராயவும் அவன் தான் கல்பிரிட் என்பதை உறுதியே செய்து விட்டாள் அவள்.

இரண்டு செட் மாற்றுடைகள், தலையில் அணியும் சில கேப் வகைகள், ஒட்டு தாடி மற்றும் மீசை, கூலர்ஸ், பவர்லெஸ் ஸ்பெக்ஸ், லென்ஸ், வாட்ச்செஸ், ஓவர் கோட்ஸ் போன்ற சிலதும் கூடவே ஒரு சில மருந்துகள் மற்றும் இரண்டு வாட்டர் பாட்டில் போன்றவை அந்த பையில் இருந்தது. இதையெல்லாம் பார்த்தவளுக்கு இவன் மாறுவேடம் அணிந்து ஏமாற்றுபவன் தான் என்பது அவன் சொல்லாமலே புரிந்துவிட்டது.

“எவ்வளவு பெரிய கல்பிர்ட்டா இருக்க நீ? இதெல்லாம் கூடவே எடுத்துட்டு வருவியா? உன்ன சும்மா விட கூடாது” என கூறிவிட்டு அறையில் இருந்த தொலைபேசியை நோக்கி சென்றவளை பார்த்து மீண்டும் சிரித்தவன்,

“நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க மிஸ்… என்னோட நேம் தில்ஷத். நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பால்கனில பாத்ததும் என்னை தான். பட் இது என்னோட ரூம். சில சமயம் பச்! பல சமயம் நான் இப்டி தான் வர வேண்டியது இருக்கும். அதை எப்படி இப்ப நான் உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்றது?”

அவன் கூறியதையெல்லாம் நம்பாமல் பார்த்தவளை நோக்கி விழித்தவன், “என்னோட வாலெட்ட வேணும்னா செக் பண்ணி பாருங்க. அதுல என்னோட ஐடி ப்ரூப்ஸ் இருக்கும்!” என தன் கண்களால் அந்த அறை முழுவதும் துழாவி தன்னுடைய பணப்பையை தேடினான்.

அந்த அறையில் எங்குமே அவன் கண்களுக்கு அது தென்படவில்லை என்றான பின்பு தான் அவனுடைய வாலெட் மற்றும் ஃபோன் இரண்டையும் அவனுடைய மகிழுந்திலையே வைத்துவிட்ட நினைவு வந்தது. அதையும் கூட அவளிடம் கூறி பார்த்து விட்டான் ஆனால் அவள் எதற்கும் மசியவதாக தெரியவில்லை. அவனை பற்றி அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் தகவல் சொல்லியே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றாள்.

“பச்! சொன்னா புரிஞ்சுக்கோங்க மேடம். இன்னும் ஒரு ஒன் ஹார்ல நான் இங்கிருந்து கிளம்பணும். அதுனால தான் என்னுடைய வாலெட்டையும் ஃபோனையும் கார்லையே வச்சுட்டு வந்தேன். நீங்க இப்டி பண்ணா எப்டி? அட்லீஸ்ட் என்னோட பாஸ்போர்ட் பார்த்தாவது நம்புங்க டிராவல் பேக்ல என்னோட பாஸ்போர்ட் இருக்கும் அதை செக் பண்ணி பாருங்களேன் ப்ளீஸ்” என்றவனின் கூற்றை கேட்டு அதை திறக்க முயற்சி செய்தவள் அது கேட்டு நின்ற நான்கு இலக்க எண்களை கண்டு அவனை முறைத்து பார்த்தாள்.

“என்னாச்சு? டிஜிட்ஸ் கேட்குதா? ஃபோன்ல தான் மெசேஜ் ரீட் பண்ண முடியும்” சற்றும் குறையாத விளக்கங்கள் வந்து கொண்டே இருந்தது அவனிடம் இருந்து. இவ்வளவு தூரம் அவன் தன்னை நிரூபிக்க முயன்றதில் அவள் சற்று மனம் இறங்கினாலும் அவன் சொல்லியவை அனைத்தும் உண்மை என்று உறுதியாக தெரியாத பட்சத்தில் அவன் சொல்லியதை எல்லாம் அவளால் உண்மை தான் என்று முழுதாக நம்பவும் முடியவில்லை.

“சரிங்க தில்ஷத்! நான் உங்களை நம்புறேன். ஆனாலும் நீங்க சொல்றது உண்மைனு தெரியிற வரைக்கும் இப்படியே தான் நீங்க இருந்தாகணும். இல்லனா நான் கீழ போய் ரிசெப்ஷன்ல உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து செக் பண்றேன். அதுவரை கொஞ்சம் அமைதியா இருங்க” என பிருந்தா கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் இருந்த அந்த அறையின் பால்கனியில் இருந்து ஏதோ சத்தம் வந்தது.

error: Content is protected !!
Scroll to Top