இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. நாட்கள் அதன்போக்கில் செல்ல ஆரம்பிக்க, கடமைக்கென ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருந்தாள் மனோஹரி.
தந்தையையும் விட முடியாது நேசித்தவனையும்விட்டுக் கொடுக்க இயலாது துடித்தக் கணத்தில், ‘உன்னுடன் வர முடியாது!’ என வாய் மொழியாய் உரைக்காது விழியின் மூலம் பதிலளித்தவளை அழுத்தமாய்ப் பார்த்த திருக்குமரன் கடந்து சென்றுவிட, இவள்தான் ஒவ்வொரு நாளும் அந்நொடியைக் கடக்க முடியாது துடித்துக் கொண்டிருந்தாள்.
கடைசிவரை ரங்கராஜன் இறங்கி வராது போய்விட, மனோ தன் தோல்வியை மனம் வலிக்க வலிக்க ஒப்புக் கொண்டிருந்தாள்.
‘போ… எல்லாம் முடிந்துவிட்டது!’ என்றொரு விரக்தி மனநிலையில் உயிர்ப்பில்லாது வெறும் உடலாகச் சுற்றினாள். மருத்துவனை சென்று வீடு திரும்பினாள், அறைக்குள்ளே அடைந்து கிடந்தாள். தந்தையிடம் அறவே பேச்சைக் குறைத்திருந்தாள். ஒடுங்கிப் போய்விட்ட மகளைப் பார்த்து ராதாமணி பதறிப் போனார். அவளிடம் பேச்சைக் கொடுத்து மீண்டும் பழைய மனோஹரியைப் புதுப்பிக்க முயன்றார். ஆனால் அவர் முயற்சி அனைத்தும் தோல்வியையே தழுவின. மனோஹரி மொத்தமாய்த் தனக்குள்ளே அடங்கி ஒடுங்கி மீட்க முடியாது போனாள். அவளது உலகம் இன்னுமே சுருங்கிப் போனது. யாரிடமும் கூறி அழ முடியாத தூக்கத்தையும் வலியையும் தனக்குள்ளே வைத்து அழுத்திக் கொண்டாள். அழக்கூடாது என்றொரு வைராக்கியம் மனதில் பிறந்திருக்க, ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட சிந்தவிடவில்லை. எல்லோரிடமும் இயல்பானத் தோற்றத்தைப் பிரபதிலித்தவளின் உள்ளக்கிடங்கில் பொதிந்திருந்த வலியையும் வேதனையும் யாரும் அறியாது போயினர்.
திவாருக்கு தங்கையைப் பார்க்க பார்க்க ஆற்றாமை நிரம்பி வழிந்தது. அவள் ஒரு வார்த்தைக் கூறினால் போதும், அண்ணனாய் அவனால் முடிந்ததை செய்து அவளது வாழ்வை சுகிக்க வைக்கத் தயாராய் இருந்தான். இவள் பிடிகொடுக்கவே இல்லை. குமரனைப் பற்றி எதாவது பேச முயன்றாலே முடிந்தளவுக்கு அந்தப் பேச்சை தவிர்த்துவிட்டாள். அப்படியும் விடாது இவன் அழுத்திக் கேட்க, ‘குமரன் எனக்கு வேண்டாம்!’ என்ற ஜெபத்தையே மாறி மாறி வேறு வேறு வார்த்தைகளில் உரைக்க, இவன் வெறுத்துப் போனான்.
வீடே களையிழந்து போய்விட, ஒருவர் முகத்தைக் கூட மற்றொருவர் பார்க்க மனமில்லாது போனது. அனைவரது வாழ்வும் ஏதோ காலத்தின் பிடியில் சிக்கி சுழன்று நாட்களை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தது.
இப்படியெல்லாம் நாட்கள் வேம்பை விழுங்கிய கசப்புடன் நகருமென தெரிந்திருந்தால், திவாகர் குமரனைத் தங்கள் வாழ்வில் அனுமதித்திருக்கவே மாட்டோமே என காலங்கடந்து எண்ணிப் புழுங்கினான்.
எல்லாவற்றிற்கும் காரணக்கர்த்தாவான ரங்கராஜன் அனைத்தையும் கவனித்தாலும் எதற்கும் எதிர்வினையாற்றவில்லை. கணவரின் செயலில் ராதா ஆற்றாமையில் அவர் முன்னிலையில் அத்தனைப் பேச்சுப் பேசினார். பேசிப் பேசி கணவரைக் கரைக்க முயன்றார்.
ஆனால், ரங்கா அசைந்து கொடுக்கவில்லை. தினமும் ராதா ஜெபம் போல மகளின் உயிர்ப்பற்ற நிலையைக் கணவருக்கு உணர்த்த, அனைத்தையும் உணர்ந்தாலும் கல்லாய் சமைந்த நிலையில்தானிருந்தார் மனிதர். மனைவிக்கு மனதே விட்டுப் போனது. எங்கிருந்தாலும் மகள் நன்றாய் வாழ்ந்தால் போதுமென அவரது மனம் தன்முனைப்பை முற்றிலும் விட்டுக் கொடுத்திருக்க, பெற்றவர் துளியேனும் கூட தன்னிலையிலிருந்து இறங்கிவர முனைப்பைக் காட்டவில்லை என்ற எண்ணமே அவரை தினம் தினம் வதைத்தது.
குமரன் என்ன நினைக்கிறான் என ஒருவருக்கும் தெரியவில்லை. எப்போதும் போல வேலை வீடு என்றிருந்தவன் முகத்தை வைத்து சிந்துவால் வேறுபாட்டைக் கண்டறிய முடியாது போனது. அவ்வப்போது நினைவு வந்தராக மனோஹரியைப் பற்றி அவனிடம் வினவ, அந்தப் பேச்சை முற்றிலும் தவிர்த்த மகனைக் கவலையாய் நோக்கினார் பெண்மணி.
“ஏன் குமரா, எதுவும் பிரச்சனையா? அம்மா வேணா அந்தப் பொண்ணு வீட்டுல போய் பேசவா?” என அவர் அக்கறையாய் வினவ, “வேணாம் மா… விடுங்க!” என்றுவிட்டான் குமரன். ஏனோ அந்தப் பேச்சே இனி வேண்டாம் என அவன் முகம் சொன்ன செய்தியில் சிந்துவுக்கு ஏதோ புரிவது போலிருந்தது.
அந்தம் வைத்தவளே ஆதிப்புள்ளியையும் வைத்து கோலத்தை முடித்திருக்க, இவனுக்கு மீண்டும் அதை புதுப்பிக்க எண்ணமில்லை. தான் அத்தனை தூரம் கூறியும் முடியாது என்று வர மறுத்தவளை மீண்டும் வற்புறுத்த இவன் மனம் இடம் கொடுக்கவில்லை. இனிமேல் நானாக வரமாட்டேன். உனக்கு வேண்டுமென்றால், நீதான் வரவேண்டுமென குமரன் இறுமாப்பாய் இருந்துவிட்டான். ஆனால், உடமைப்பட்டவளோ வீட்டிலிருந்து நகரமாட்டேன் என்றிருந்துவிட, இவன் இறுகிப் போனான்.
‘போடி… போ. உன் இன்மை என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை’ என்றொரு பாவனையில் குமரன் தேங்காது வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டான். சுயமாய் செங்கல் சூளை ஆரம்பிக்க வேண்டும் என்ற முனைப்பு அதிகமாக, அதற்காகத்தான் இரண்டு மாதங்களாக ஓடிக் கொண்டிருக்கிறான்.
மனோஹரி தேங்கிவிட்டாள். மொத்தமாய் தேங்கியிருந்தவளுக்கு, வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு நகரும் எண்ணமோ சுவாரஸ்யமோ இல்லாது வாழ்க்கை வெறும் சுழியமாக நகர்ந்து கொண்டிருந்தது. உயிர்ப்பில்லாது வாழ்க்கையை உயிர்ப்பிக்கும் எண்ணமின்றி குமரனின் நினைவுகளோடு அவளது நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. முன்பு போல அலட்சியமான பாவனை, திமிரானப் பேச்சு, அலட்டிக் கொள்ளாத குணம் என அவளுடைய பிறவிக்குணம் மொத்தமும் அமிழ்ந்து போக, அமைதிக்குப் பெயர் போனவளாகியிருந்தாள் மனோஹரி.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையிலிருக்க, விதி வலியது என ஒரு வாரத்திலே அனைவருக்கும் புரியும் நாளும் நேரமும் காலம் கூடிய விரைவில் கனியக் காத்திருந்தது.
தலையணையில் அழுந்த முகத்தைப் புதைத்திருந்த மனோஹரி எழும் மனநிலையிலே இல்லை. அலைபேசியை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாய் இருந்தாள். இன்று திருக்குமரனுடைய பிறந்தநாள். அழைத்துப் பேசச் சொல்லி ஆயிரம் உந்துதல் இந்த நேசம் கொண்ட மனது உந்த, அசையவில்லை மூளை. வேண்டாம் என்று கூறிவிட்ட பிறகு எந்த முகத்தோடு எந்த உரிமையோடு அவனுக்கு வாழ்த்தை தெரிவிக்க என உள்ளம் கேட்க, சத்தியமாய் அவளிடம் பதிலில்லை. அவளுடைய உள்ளமே கேட்காது குமரனுக்காக துடிக்க, அதை முகத்தில் காட்டாது எழுந்து குளித்து கிளம்பியவள், காதல் சொல்லி கரம் பிடித்து திருமணம் முடிந்து குமரனுடைய இந்தப் பிறந்தநாளில் எப்படியெல்லாம் நினைவுகளை சேமிக்க எண்ணியிருந்தாள். ஆனால், அனைத்தும் கானல் நீராய் போனதில் விரக்திப் புன்னகை குமிழிட்டது.
அவனுக்குப் பரிசளிக்க எண்ணிய கைக்கடிகாரம் அவளைப் பார்த்து எள்ளி நகையாடுவது போலொரு எண்ணம். அதையே வெறித்தவள், கைப்பையில் எடுத்து வைத்தாள். நிச்சயமாகக் கொடுக்கும் எண்ணமில்லை.
குமரனைக் கண்டால் இந்த இருமாதப் பிரிவுத் துயரில் வார்த்தைகள் கண்டிப்பாய் வற்றிவிடுமே! அவனை இன்று காண்பாளா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு அற்ப ஆசையில் கைகடிகாரத்தை எடுத்துப் பத்திரப்படுத்தினாள்.
“ம்மா, கோவிலுக்குப் போய்ட்டு ஹாஸ்பிடல் போறேன் மா. அங்கேயே சாப்பிட்டுக்கிறேன்!” என நொடியில் தன் வாகனத்தை இயக்கிப் பறந்திருந்தாள் மனோ. ராதா செல்லும் மகளைக் கவலையுடன் பார்த்தார். என்று தீருமோ அவளின் வலியும் வேதனையும் என பெற்றவராய் உள்ளம் பரிதவித்தது.
பத்து நிமிடத் தொலைவிலிருந்த கோவிலை அடைந்த மனோவின் விழிகள் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது யாரையோ தேடித் துழாவி தோல்வியைத் தழுவின. மனம் கண்டிப்பாகக் குமரனும் சிந்துவும் இந்தக் கோவிலுக்கு வருவார்கள் என உள்ளுணர்வு மூலம் உணர்த்த, அதை நம்பிதான் வந்திருந்தாள். அவர்கள் வீட்டிற்கருகே உள்ள கோவில் என்பதால் சிந்து இங்கே அடிக்கடி வருவது வழக்கமென அவளுக்குத் தெரியும்.
கடவுளைத் தரிசித்துவிட்டு அங்கிருந்த மரத்தடியில் அமரச் சென்றவளின் விழிகளை நிறைத்தான் குமரன். அவனும் சிந்துவும் சந்நிதானத்தில் நின்று கடவுளைத் தரிசிக்க, இரண்டு திங்கள் கழித்து அவனைக் கண்டதும் இவளுக்கு விழிகள் மெல்ல கலங்கின. அமைதியாய் இருவரையும் பார்த்தவாறு ஒளிந்து நின்றாள்