கருப்பு நிறத்திலான வுல்லன் ஹெட்கவர் கார்டிகனை அணிந்திருந்த அந்த கருப்பு உருவம் பக்கத்து பால்கனியில் எகிறி குதித்து தன் கையில் இருந்த டூஃப்பில் பேக்கில் எதையோ ஆராய்ந்து கொத்தாக நிறைய சாவிகள் இருந்த கீ செயின் ஒன்றனை எடுத்து ஒவ்வொரு சாவியாக பூட்டின் துளைக்குள் நுழைத்து அந்த அறையினை திறக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது.
பயத்தில் சட்டென்று தன்னை அறியாமல் கத்துவதற்காக திறந்த வாயை தன்னுடைய கைகளால் இறுக மூடியவள் வேகமாக தன்னுடைய அறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். எதிரில் தெரிந்த கதவை ஒரு சில நிமிடங்கள் யோசனையோடு வெறித்தவள் நேரமின்மையை உணர்ந்து அந்த அறை கதவை மெதுவாக தட்டினாள். ஐந்து முறைகளுக்கு மேல் தட்டிப் பார்த்து ஓய்ந்து போனவளுக்கு சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பக்கம் இருந்து பதில் வந்தது.
“கமிங்… ஜஸ்ட் அ மினிட்!” என்று சத்தமாக ஒலித்த ஆண் குரலில் பிருந்தாவால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் பதறிப் போய் விட்டாள்.
அந்த பக்கம் இருந்து வந்த இவருடைய பதிலில் பால்கனி வழியாக உள்ளே நுழைந்தவனுக்கும் இந்நேரம் இவள் வந்தது தெரிந்திருக்கும் தானே? ஒருவேளை அவன் இவர்களை எதிர்பார்த்து காத்திருந்து இவர்கள் உள்ளே வரவும் இவர்கள் இருவரையும் பிடித்து வைத்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்தால் பின்பு யார் வந்து அவர்கள் இருவரையும் மீட்பது?
கதவை ஒட்டியபடி நின்றிருந்தவள் சட்டென்று அது திறக்கப்படவும் அவர் கண்களுக்கு எட்டி விடாத வகையில் கதவுக்கு அடுத்திருக்கும் சுவர் பக்கமாய் மறைந்து கொண்டாள். பாடலொன்றை முணுமுணுத்தவாறு விசில்லிங் செய்தபடியே கதவை திறந்தவனை கவனிக்காமல் அவன் பாடிய விதத்தில் அவளுடைய பயம் சற்று குறைவதை உணர்ந்த பிருந்தா அப்போது தான் அது ஒரு தமிழ் பாடல் என்பதை அறிந்து மேலும் மனம் மகிழ்ந்து போனாள்.
திருட வந்தவன் இப்படி சாவகாசமாக பாடிக்கொண்டா இருப்பான்? ‘ஓ! அப்ப இவருக்கு தமிழ் தெரியுமா?’ என சில நிமிடங்கள் யோசனை செய்தவளுக்கு சரியான வழி ஒன்று புலப்பட்டு விட்டது. அவருக்கு தமிழ் தெரியும் என்பதால் அவரிடம் தமிழில் பேசியவாறே பால்கனி வழியாக வந்த கல்பிரிட்டை பற்றி அவருக்கு ஏதேனும் ஒரு குறிப்பு கொடுத்து விடுவோம், அடுத்து இருவரும் சேர்ந்து அவனை சுலபமாக பிடித்து விடலாம் என்று நினைத்து வைத்திருந்தாள்.
அதற்குள் என்ன அவசரமோ யாருமற்ற வாசலை இரு வினாடிகள் வெறித்திருந்தவர் தன் அறை கதவை மூடி விட்டு அந்த அறையின் உள்ளே சென்றும் விட்டார். மீண்டும் பிருந்தா சென்று அழைப்பு பொத்தானை அழுத்தவும் லேவண்டர் நிறத்தில் ஃபுல் ஸ்லீவ் டி ஷர்ட்டும் அதற்கேற்ற வெள்ளை நிற பேண்ட்டும் அணிந்திருந்த இளைஞன் ஒருவன் வந்து கதவை திறந்தான்.
ஆறடி உயரத்தில் மிகவும் நேர்த்தியான முக வடிவில் ஸ்டைலாக நின்றிருந்தவன் அப்போது தான் தன் தலையினுள் அவசரமாக சட்டையை நுழைத்து இருப்பான் போலும் தலை மட்டும் சற்று கலைந்து இருந்தது. அவன் முகத்தை கூர்ந்து பார்த்தபடியே எவ்வாறு அந்த திருடனை பற்றிய விஷயத்தை அவனிடம் பேச துவங்குவது என்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தவளின் முன்பு தன் ஒரு கையை மட்டும் தூக்கி இடவலமாக அசைத்தவன்,
“ஹலோ! ஹூம் டூ யூ வாண்ட்?” என்று சற்று மெதுவான குரலில் தான் என்றாலும் கடுமையாக வினவினான்.
“சார்! ப்ளீஸ் கொஞ்ச நேரம் என் கிட்ட தமிழ்லையே பேசுங்க…” தயங்கியவாறு அவன் முகம் பார்த்து நின்றவளுக்கு இப்போது அவன் விழிகளில் புதிதாக முளைத்திருந்த சுவாரஸ்யம் சற்று பயத்தைத் தந்தது என்பது தான் நிஜம்.
முதலில் அவளை சரியாக கவனிக்காமல் விட்டவன் இப்போது அவளை தலை முதல் கால் வரை அளவிட்டவாறே அவள் யாராக இருக்க கூடும் என்பதை தனக்குள்ளாக அனுமானித்து கொண்டிருந்தான். இரவு நேர உடையாக வெள்ளை நிறத்தில் ஒரு குர்தாவும் ரோஸ் வண்ண பட்டியாலாவும் அணிந்திருந்தவள் அவளுடைய தலை முடியை ஒரு க்ளிப்பில் கட்டிருந்தாள்.
“எஸ்! சொல்லுங்க மிஸ்… ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்று அவளோடு சரளமாக உரையாட துவங்கியவன் முன்பு அவள் பார்வை அவன் தலையை பார்த்து சில நிமிடங்கள் தேங்கி நின்றதை குறித்து வைத்திருந்ததை போலவே இப்போது அவளை பார்த்தபடியே வலது கையால் தன் தலையை கோதிவிட்டு அவனுடைய சிகையை சரி செய்தான்.