அவளைப் பார்த்து தனது விழிகள் மின்னப் புன்னகைத்து,”ஹாய் டி!”என்றிருந்தாள் மதுபாலா.
அதற்கு அவளோ,”ம்ஹ்ம். ஹாய்! நீ இப்போ தான் என் பேச்சைக் கேட்டு அதன்படி நடந்துக்கிற! குட் கேர்ள்!”என்று அவளை ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பாராட்டவும்,
அதில் உச்சிக் குளிர்ந்து விட்டதைப் போன்றதொரு பாவனையைக் காட்டி விட்டு,”நன்றி தோழியே! நான் இப்போ உள்ள வண்டியில் ஏறலாமா? இல்லைன்னா, இப்படியே பொடி நடையாக நடந்தே ஆஃபீஸூக்குப் போயிடவா?”என அவளிடம் பவ்யமாக வினவ,
“கொல்லப் போறேன் உன்னை! ஒழுங்காக வண்டியில் ஏறுடி எருமை!” என்று அவளுக்குக் கட்டளையிட்டாள் பிரேமா.
“சரிங்க தோழி!”என்றுரைத்து விட்டு அவளது இருசக்கர வாகனத்தில் ஏறி இரண்டுப் பக்கமும் தன் கால்களைப் போட்டு நன்றாக அமர்ந்து கொண்டாள் மதுபாலா.
“என்னை நல்லா உறுதியாகப் பிடிச்சுக்கோ!”என அவளுக்கும் ஒரு தலைக் கவசத்தைக் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்து விடவும்,
தங்களது அலுவலகத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர் அவர்கள் இருவரும்.
அதே சமயம் தங்களது வீட்டிலிருந்து தயாராகிக் கொண்டிருந்தார்கள் புகழேந்தி மற்றும் அவனது அக்காவும், மாமாவும்.
தாங்கள் மூவரும் சாப்பாட்டு மேசைக்கு வந்து அமர்ந்து விட்டு,
“நீங்க ரெண்டு பேரும் சாயந்தரம் வரைக்கும் ஆஃபீஸில் இருப்பீங்களா? இல்லைன்னா, அங்கே வந்து கொஞ்ச நேரம் மட்டும் இருந்துட்டுக் கிளம்பிடுவீங்களா?”என்று மற்ற இருவரிடமும் விசாரித்தான் புகழேந்தி.
அதற்கு,”நான் அங்கே சாயந்தரம் வரைக்கும் இருப்பேன்டா”என அவனுக்குப் பதிலளித்தாள் வெண்பா.
“நானும் அப்போ வரைக்கும் இருக்கிறதுக்கு முயற்சிப் பண்றேன். ஆனால், எனக்கு முதல்ல அந்த துணிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து விட்ரு மாப்பிள்ளை”என்று தன் மனைவியின் தம்பியிடம் அறிவுறுத்தினான் மித்ரன்.
“சரிங்க மாமா. நான் அதை மறக்கவே மாட்டேன்! போதுமா?”என்று அவனுக்கு வாக்களித்து விட்டிருந்தான் புகழேந்தி.
அப்போது அவர்களுக்கான உணவுகளைப் பரிமாறப்பட்டதும்,
“உங்களுக்குப் பிடிச்ச சாப்பாட்டைத் தான் செய்யச் சொல்லி இருந்தேன். இதை முதல்ல சுவைப் பார்த்துடுங்க. அதுக்கப்புறம் நாம மூனுப் பேரும் கிளம்பி ஆஃபீஸூக்குப் போகலாம்”என அவர்களுக்கு அறிவுரை வழங்கினான் புகழேந்தி.
அவனது பேச்சைத் தட்டாமல் கேட்கும் விதமாக உணவை உண்ணத் தொடங்கினர் அவனது அக்காவும், மாமாவும்.
தானும் ஒரு கவளத்தை வாயில் வைத்துச் சுவைத்து விட்டு,”சாப்பாடு உங்களுக்குப் பிடிச்ச விதத்தில் இருக்கா?”எனத் தங்கள் இருவரிடமும் கேட்டவனைப் பார்த்துப் புன்சிரிப்பை உதிர்த்து,
“சூப்பராக இருக்குடா!”எனக் கோரஸாக கூறினார்கள் வெண்பா மற்றும் மித்ரன்.
அதில் திருப்தி அடைந்து போய்த் தானும் உணவை உண்டு முடிக்கும் வேலையில் இறங்கினான் புகழேந்தி.
தங்களது அலுவலகத்தை அடைந்ததுமே,”நான் ஸ்கூட்டியைப் பார்க் பண்ணிட்டு உள்ளே வர்றேன். நீ இங்கே நின்னு எனக்காக காத்திருக்காமல் உள்ளே போ”என்று தோழிக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்து விட்டுத் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தச் சென்றாள் பிரேமா.
அலுவலகத்தினுள் நுழைந்ததும் அங்கே தனது கண்களில் அகப்பட்ட வரவேற்புப் பணியாளப் பெண்ணை முகிழ்நகையுடன் ஏறிட்டு,”குட் மார்னிங் மேம்”என்றிருந்தாள் மதுபாலா.
அதில் தானும் அவளைச் சிநேகப் பார்வையுடன் நோக்கி,”குட் மார்னிங் மேம்”என்று அவளுக்குக் காலை வணக்கத்தை தெரிவித்து விடவும்,
அதைக் கேட்ட பெண்ணவளுக்கோ மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது எனலாம்!
அது மட்டுமில்லாமல், தான் இங்கே வேலை செய்யப் போவதை இவளுக்கும் தெரியப்படுத்தி இருப்பார்கள்! அதனால் தான் தனக்கு இந்த மரியாதைக் கிடைத்து உள்ளது என்பதைப் புரிந்து கொண்டாள் மதுபாலா.
அதே சமயம் இந்த வேலையும், இவர்கள் கொடுக்கும் மரியாதையும் தனக்கு இனாமாக கிடைக்கவில்லை என்பதையும், இதற்குத் தன்னுடைய திறமைத் தான் முழுக்க, முழுக்கக் காரணம் என்பதையும் இவள் மறக்கவில்லை!
அதனாலேயே, தனக்கு இந்த மதிப்பும், மரியாதையும் எப்பொழுதும் கிடைக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டு அதற்கானக் கல்வித் தகுதிகளையும், நடத்தைகளையும், இன்னும் பல திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தன்னுடைய வழிகாட்டியைச் சந்தித்து அவருக்கு வணக்கம் வைத்தாள் மதுபாலா.
“வா, ம்மா! நேத்தே உங்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லனும்னு நினைச்சேன்! நீங்கச் செய்ற வேலையில் ரொம்பவே ஆர்வமாக இருந்தீங்க! அதே மாதிரி, உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பத்தி தெரிஞ்சிக்கிறதில் ரொம்பவே முனைப்போட இருக்கிற! இங்கே எப்போ பயிற்சி வகுப்பில் சேரப் போற?”என அவளிடம் வினவினார் வினோதினி.
அதற்கு அவளோ,”நான் முதல்ல இங்கே இருக்கிற என்னோட வேலையை எல்லாம் சரியாகச் செஞ்சிட்டு அதில் நிலையாகிட்டு அதுக்கப்புறம் பயிற்சி வகுப்பில் சேர்ந்துக்கலாம்னு முடிவெடுத்து இருக்கேன் மேம். ஏன்னா, இந்தச் சம்பளத்தை வச்சுத் தான் நான் என்னோட மேற்படிப்பைத் தொடர்ந்து ஆகனும்! அதான்”என்று அவருக்கு விளக்கம் அளிக்கவும்,
“ஓஹோ! சரிம்மா. உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையைப் பத்தியும், அதில் நடக்கிற முக்கியமான விஷயங்களைப் பத்தியும் உனக்கு மட்டும் தான் தெளிவாகத் தெரியும்! அதனால் உனக்கு என்னத் தோணுதோ அதைச் செய்! இப்போ உனக்கான வேலையைச் சொல்லவா?”என்றதுமே,
“சரிங்க மேம்”என்றவளோ,
உடனே செயல்பட்டுத் தனது கைப்பையில் இருந்த குறிப்பேடு மற்றும் பேனாவை எடுத்துக் கொண்டு அவர் கூறப் போவதைக் குறித்துக் கொள்ளத் தயாராகி விட்டிருந்தாள் மதுபாலா.
அதில் அவளை மெச்சி விட்டு அவளுக்கான வேலையைத் தெளிவாக, விளக்கமாகக் கூறி முடித்தார் வினோதினி.
அவர் கொடுத்தக் குறிப்புகளை வைத்துப் பார்க்கையில் இன்று அவளுக்குத் தைக்கும் வேலை இல்லை!
அவளது வரையும் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது!
அதனால் தானும் அதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு அவர் சொன்னக் குறிப்புகளுக்கு ஏற்றவாறான வரைபடத்தை உருவாக்கும் வகையில் அவர்கள் தனக்கென்று பிரத்தியேகமாக கொடுத்திருந்த வரைபடங்களை வரையும் குறிப்பேட்டில் பென்சிலை வைத்து வரையத் தொடங்கி விட்டிருந்தாள் மதுபாலா.
அப்போது அந்த அலுவலகத்தின் வாயிலில் வந்து நின்றது அதன் முதலாளியின் மகிழுந்து!
அதிலிருந்து இறங்கி அலுவலகத்தின் நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றனர் புகழேந்தி, வெண்பா மற்றும் மித்ரன்.
தன்னுடன் சேர்த்து தனது அக்காவும், மாமாவும் மறுநாள் அலுவலகத்திற்கு வருகைப் புரிய இருக்கிறார்கள் என்பதை முன்னரே காரியதரிசியிடம் தகவல் தெரிவித்து விட்டிருந்தான் புகழேந்தி.
அதனால் அவனுக்கு முன்பாகவே அலுவலகத்திற்கு வந்து விட்டிருந்த வெற்றிச் செல்வனோ, முதலாளியின் அறையில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்வையிடும் வேலையில் இருந்ததால் அவனால் மதுபாலாவைச் சந்திக்க முடியாமல் போயிற்று.
அதனுடன் சேர்த்து மறுநாள் காலையில், தான் அலுவலகத்திற்கு வந்ததும் தன்னை மதுபாலா வந்து சந்திக்க வேண்டும் என்பதை அவளுக்குத் தெரிவித்து விடுமாறு புகழேந்திக் கூறியதை முற்றிலுமாக மறந்து போயிருந்தான் வெற்றிச்செல்வன்.
தனது முதலாளியும், அவரது தமக்கையும், அவரின் கணவனும் அலுவலகத்திற்குள் வந்து விட்டதைக் கேள்விப்பட்டதும் இன்னும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது அவனுக்குள்!
ஆனால் தங்களது அலுவலக அறைக்குள் தன்னுடைய காரியதரிசி இருப்பதைக் கண்டு கொண்டு,”மிஸ்டர். வெற்றிச்செல்வன்!”என்று வெளியே நின்று கொண்டு அவனை அழைத்தான் புகழேந்தி.
அதில் அடித்துப் பிடித்துப் பதட்டத்துடன் அறையில் இருந்து வெளியேறித் தனது முதலாளிக்கும், அவனது இரண்டுக் குடும்ப உறுப்பினர்களுக்கும் வணக்கம் வைத்தான் வெற்றிச்செல்வன்.
“நீங்க உள்ளே என்னப் பண்ணிட்டு இருந்தீங்கன்னுத் தெரிஞ்சிக்கலாமா?”எனக் கேட்கவும்,
“சார்! உங்க அக்காவும், மாமாவும் வர்றாங்கன்னு நீங்க எனக்குத் தகவலைச் சொல்லி இருந்தீங்க! அதனால் உங்க ரூமில் எல்லாமே சரியாக இருக்கான்னு மேற்பார்வைப் பார்க்கிறதுக்குத் தான் உள்ளே போனேன்! சாரி சார்”என்றுரைத்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டவனிடம்,
அதில்,”நாங்களும் இங்கே ஒவ்வொரு தடவையும் வர்றப்போ எல்லாம் எங்களுக்கு இந்த மாதிரியான அதிகப்படியான கவனிப்பு வேண்டாம்! உங்களோட முதலாளியை எப்படி கவனிப்பீங்களோ, அப்படியே எங்களையும் கவனிங்கன்னு உங்களுக்குத் தெளிவாகச் சொல்லிட்டோம். அதுக்கு அப்பறமும் நீங்க இப்படி பண்ணினால் எங்க வார்த்தைக்கு உங்ககிட்ட என்ன மரியாதை இருக்கு மிஸ்டர். வெற்றிச்செல்வன்?”என்று அவனிடம் சற்றுக் கடுமையான குரலில் வினவினாள் வெண்பா.
அதைக் கேட்டதும் மிரண்டு போய்,”என்னை மன்னிச்சிருங்க மேடம் க்ஷ இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது!”என்று அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டவனைக் கனிவுடன் பார்த்து விட்டு,
“அவங்க ரொம்ப மனசுக் கஷ்டப்படுத்துற மாதிரிப் பேசிட்டாங்கன்னு நினைச்சு ஃபீல் பண்ணாதீங்க மிஸ்டர்! ஏற்கனவே உங்களுக்குத் தலைக்கு மேலே வேலை இருக்கும்! இதில் எங்களைக் கவனிப்பது உங்களுக்குக் கூடுதல் வேலை தானே? அதனால் தான், அவங்க அப்படி சொல்லிட்டாங்க! இந்த ஆஃபீஸில் எப்பவும் போல் நடக்கிறது இன்னைக்கும் நடக்கட்டும்! எங்களைப் பார்த்து நீங்களும் பதட்டப்பட வேண்டாம்! மத்தவங்களையும் பதட்டப்பட வேண்டாம்ன்னுச் சொல்லிடுங்க. இப்போ எனக்கு நீங்க ஒரு உதவிச் செய்யனும்! செய்யத் தயாராக இருக்கீங்களா?”என்று அவனிடம் தன் பேச்சுத் திறமையைக் காட்டிக் கேட்டான் மித்ரன்.
“தயாராக இருக்கேன் சார்!”என்று அவனுக்கு உறுதி அளித்தான் வெற்றிச்செல்வன்.
“அப்போ இப்போவே என் கூட வாங்க”என்றதுமே,
தன் முதலாளியிடம் அனுமதியை வேண்டி நிற்கவும்,
“போயிட்டு வாங்க சார். மித்ரன் சார் கேட்கிற உதவிகளைச் செஞ்சிக் கொடுங்க”எனக் கூறி அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் புகழேந்தி.
உடனே,“ஓகே சார்”என்று அவனிடம் சொல்லி விடவும்,
அதற்கடுத்த நிமிடம் தாங்கள் இருவரும் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார்கள் மித்ரன் மற்றும் வெற்றிச்செல்வன்.
“நீங்க உள்ளே வாங்க அக்கா. நான் மதுபாலாவை சிசிடிவி கேமராவில் உங்களுக்குக் காண்பிக்கிறேன்”என்றவனோ,
தனது தமக்கையை அறைக்குள் அழைத்துச் சென்று அங்கே இருந்த நாற்காலியில் அமர வைத்து விட்டு அப்போதைய சிசிடிவி கேமராக்களில் நேரலையாகப் பதிவாகிக் கொண்டிருந்த ஒவ்வொரு பிரிவின் காட்சிகளை எல்லாம் தனது மடிக்கணினியில் பார்வையிடத் தொடங்கியவனோ,
அதில் மதுபாலாவின் அறைக்குள் இருந்த சிசிடிவி கேமராவில் அவளது முகம் நன்றாகத் தெரியுமாறு இருப்பதை இடைநிறுத்தி வைத்து விட்டு,
“அக்கா! இதோ! இவங்க தான் மிஸ். மதுபாலா!”என்று பெண்ணவளைத் தனது தமக்கைக்கு அடையாளம் காட்டினான் புகழேந்தி.
உடனே அந்தப் பிம்பத்தை உற்றுப் பார்க்கத் துவங்கி விட்டாள் வெண்பா.
அதை அறியாத அவர்களின் அந்த உரையாடலிற்குச் சம்பந்தப்பட்டவளோ, தனது படம் வரையும் வேலையை மிகுந்த ஆர்வத்துடன் செய்து கொண்டிருந்தாள்.
- தொடரும்