ஏகாந்த இரவின் நிசப்தத்தில் மேகங்களுக்கு இடையே அழகாக மின்னிய அந்த வெண்ணிற நிலவின் முகத்தை காணும் ஆவலில் தன் கண்களை திறந்து திறந்து மூடியவாறு கண்சிமிட்டி சிரித்துக் கொண்டிருந்தது அந்தி வானில் திரண்டிருந்த நட்சத்திர விண்மீன்கள். குளிர்ந்த வானின் வெறுமையையும் கரிய காரிருளை விரட்டிய மேகக் கூட்டத்தையும் அதில் கம்பீரமாய் நகர்வலம் வந்து கொண்டிருந்த வெண்ணிலவையும் தன்னுடைய குட்டி திராட்சை கண்களை விரித்து பார்த்தபடி அமைதியாக படுத்திருந்தது குழந்தை ஒன்று.
பகலெல்லாம் உறக்கத்தில் கழித்தாலோ என்னவோ இரவு நேரத்தில் பஞ்சு மெத்தையில் படுத்தவாறு உறக்கம் வராமல் விழித்திருந்த குழந்தை ஜன்னல் வழியாக வானில் தெரிந்த நிலவை தான் வெகு நேரமாக ரசித்துக் கொண்டிருந்தது. குழந்தைக்கு அருகில் சற்று ஒடிசலான உடல்வாகுடன் அவருக்கு ஏற்றார் போல மெல்லிய பருத்தி சேலையில் முப்பது வயதை எட்டியிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி நல்ல உறக்கத்தில் இருந்தார். அவர்கள் இருந்த அறையின் உள்ளலங்காரங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியை சேர்ந்தவர்கள் என்பதை தெரிவித்தது.
சற்று நேரம் வரை அமைதியாக படுத்திருந்த அந்த குழந்தை சட்டென்று தனக்கு அருகில் படுத்திருந்தவரின் புறமாக திரும்பி அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. பின்பு மெல்ல எழுந்து அவர் கன்னத்தில் தன் இதழ்களை லேசாக ஒற்றி, “ம்மா! ம்மா!” என்று அவரை கொஞ்சியபடியே தன்னுடைய மழலை குரலால் தன் தாயை அழைத்து அவருடைய தூக்கத்தை கலைக்க முயன்றது. குழந்தைக்கு அருகில் படுத்திருந்த அதன் தாய் மீளவே முடியாத ஆழ்ந்த உறக்கத்தில் சிக்கியது போல இவை எதையும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
வெகு நேரமாக தான் என்ன செய்தும் அவர் எழும்பவில்லை என்ற கோபத்தில் உதடுகளை மடித்து விம்ம துவங்கியது அந்த இளம் பிஞ்சு. குழந்தையின் அழுகை சத்தத்தில் அருகில் இருந்தவருக்கு லேசாக விழிப்பு தட்டவும் அவரை கண்டு புன்னகைத்த குழந்தையின் முகத்தை பார்த்து அந்த தாயின் இதழ்களிலும் புன்சிரிப்பு ஒன்று தோன்றி மறைந்தது. தன் குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்து அதன் முதுகில் தட்டிக் கொடுத்து குழந்தையை உறங்க வைத்தவர் மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.
தாயின் இசைவான தாலாட்டில் கண்ணயர்ந்த குழந்தை அவர் உறங்கிய பின்னர் மறுபடியும் விழித்து அவரை காணவும் அதன் உடம்பை சுற்றிலும் தன் ஒரு கரத்தையும் சத்தம் எழுப்பும் அதன் வாயில் தன் மறு கரத்தையும் பதித்திருந்த அந்த வலிமையான கரங்களுக்குரியவன் தன் முகத்தை மறைத்தவாறு முகமூடி ஒன்றை சட்டென்று அணிந்து கொண்டு தாயின் கைகளில் பாந்தமாய் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மெதுவாக தன்புறமாக இழுத்துக்கொண்டான்.
வியர்க்க விறுவிறுக்க காற்றிற்கு ஏங்கி தவித்து முழுதாக வியர்த்துப் போயிருந்த முகத்துடன் மூடியிருந்த தன் நீண்ட கயல் விழிகளின் இமைகள் நான்கும் படபடவென்று அடித்துக் கொள்ளவும் ஒரு நிமிடம் தான் எங்கு இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் சற்று முன்பு அவள் கண்ட காட்சியில் இருந்தும் வெளிவர இயலாமல் விதிர்விதிர்த்து இருக்கையின் பிடியை தன் இரு கைகளாலும் அழுத்தமாக பற்றியவாறு அமர்ந்திருந்தாள் பிருந்தா.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே பிருந்தாவின் கனவில் தோன்றும் அதே நபர்கள் தான் அவர்கள். இருவரையுமே அவள் இதற்கு முன்பு நேரில் சந்தித்ததே இல்லை. இன்று வரை அந்த தாய் மற்றும் குழந்தை யாரென்றும் அவளுக்கு தெரிந்ததில்லை. ஏன் மீண்டும் மீண்டும் அவர்கள் இருவரும் அவள் கனவில் தோன்றுகிறார்கள் என்பதும் அவளுக்கு புரியவில்லை. ஆனால் இருவரும் அவள் கனவுகளில் தோன்றி மறையும் நிழல் உருவங்களாக அறிமுகமாகி இன்று அவளுக்கு மிகவும் நெருக்கமாக மாறி இருந்தார்கள்.
பிருந்தாவின் கனவில் வரும் குழந்தை ஒரு ஐந்து வயதேயான சின்னச் சிறிய சிறுவன். அவளுடைய குடும்பத்திலும் அவளுக்கு முன்பான இரண்டு தலைமுறைகளிலும் யாருக்கும் ஆண் வாரிசுகள் கிடையாது. அதுவும் அவளுக்கு சாதரணமாகவே குழந்தை என்று யாராவது கூறினால் கூட அவளால் என்ன செய்தும் தவிர்க்க முடியாது அவள் கனவுகளில் இடம்பெறும் இந்த குழந்தையின் முகமே அவள் சிந்தனையில் முதலில் வந்து நிற்கும் அளவிற்கு பிருந்தாவின் மனதில் ஆழமாகவும் தெளிவாகவும் பதிந்து போயிருக்கிறது அச்சிறுவனின் முகம்.
இன்று வரையில் அக்குழந்தை யாரென்றும் அதன் பெயரும் கூட என்னவென்றும் அவளுக்கு தெரியாது. இவள் தான் அவன் விரும்பி சுவைக்கும் இனிப்புப் பொருட்களை அடிப்படையாக வைத்தும் கனவில் தோன்றும் அவன் அன்னை எப்போதும் அவனை ‘சக்கரக்கட்டி’ என்று கொஞ்சுவதை வைத்தும் அவளும் ஒரு சில சமயம் அவ்வாறே அழைப்பாள். அவன் ஐந்து வயதிற்கேற்ற தோற்றத்தை விடவும் சிறியதாக இருப்பதால் அவ்வப்போது அவனை சின்னுவெனவும் அழைப்பாள்.