என் உள்ளம் கேட்குமே – 19.1

குமரனின் கேலிச் சிரிப்பில் மனோஹரி அவனை முறைக்க, தொண்டையைக் கணைத்தான் அவன். இவள் அந்தப் பணத்தை எடுத்து உள்ளே வைக்க, “பக்கா பிளான்…” என்றவனின் சிரிப்பு செவியை அடைந்தது.

மனைவி அவனை முறைத்துவிட்டு வெளியே செல்லப் பார்த்தாள். ஏனோ அவனது குறுகுறு பார்வை புதிதாய் இருந்து தொலைத்தது. எப்போதும் கோபமும், எரிச்சலுமாய் பார்த்த பார்வையின் வேறுபாட்டில் அவள் வயிற்றில் ஏதோ உணர்வு படபடக்கச் செய்தது. அதை மறைக்க அவனை முறைத்துவிட்டு தப்பிக்க முயன்றவளின் கரத்தை நொடியில் குமரன் பிடித்திருக்க, இவள் திகைத்துப் போனாள்.

“என்ன… என்ன பண்றீங்க?” படபடப்பாய் வினவியவள் கரங்களை உருவப் பார்க்க, “நான் உன்கிட்ட காசு கேட்கலையே! ஏன் கொடுத்த?” என வினவியவனின் குரலில் என்ன இருந்தது என அவளால் அறிய முடியவில்லை. ஆனால், அரிதிலும் அரிது இந்தக் குரல். அடர்ந்து தழைத்தக் குரலில் இவளுள்ளே ஏதோ மாற்றம்.

அதைப் புறக்கணிக்க முயன்று தோற்றவள், “உங்களுக்கு வேணா நான் புடிக்காத பொண்டாட்டியா இருக்கலாம். ஆனால், எனக்கு நீங்க அப்படியில்லை!” வெட்டுவது போல பேசினாள். குமரன் கோபம்கொண்டு ஏதாவது உரைத்து கையை விடுவான் என இவள் எதிர்பார்க்க, மாறாக உதட்டைக் கடித்துப் புன்னகையை அடக்கினான் அவன். இவளுக்கு ஏக ஆச்சர்யம். அதை முகத்தில் வெளிப்படுத்தினாள்.

அந்தப் பாவனையை மொத்தமாய் உள்வாங்கியவன், “ஆமா! பிடிக்காத பொண்டாட்டிகிட்டே காசு வாங்க எனக்கு விருப்பம் இல்ல. அதான் திருப்பிக் கொடுத்துட்டேன்!” என்ற பதிலில் இத்தனை நேரமிருந்த மாயவலை அறுபட, கையை ஒரே உதறில் அவனிடமிருந்து இழுத்திருந்தாள் மனோஹரி.

“நினைச்சேன்…” எனப் பல்லைக் கடித்துவிட்டு வெளியேறியவளுக்கு காலையில் கணவன் பேசியது நினைவில் வந்து தொலைக்க, அதற்கும் சேர்த்து அவனை மனதில் சரமாரியாக திட்டித் தீர்த்தாள்.

ஆனால், குமரனுக்கு அப்படியில்லை. முறைத்துக்கொண்டு செல்லும் மனோஹரியை இந்நொடி பிடித்து தொலைத்தது. அவளது விருப்பத்தின் பெயரில் திருமணம் என்றானப்பின், இவன் அதற்கு சம்மதம் மட்டுமே தெரிவித்திருந்தான். ஆனால், இப்போது அவளது அனைத்திலும் தான் மட்டுமே பிரதானமாய் இருக்கிறோம் என்ற நினைப்பே அத்தனை போதையளித்தது. அவளது பேச்சு என்ன உணர்வை இவனுள்ளே கடத்தியது எனத் தெரியாது சுகமாய் அதை சுகித்தான். மனைவியையும் சுகிக்க, உணர, நுகர, தன்னை அவளுக்குப் பழக, உணர்த்த, தான் அவளுக்குப் பழக, அவளை ஒருவழிப்படுத்த என பேரவா எழுந்தது. அது வெறும் உடல் தேவையன்று… மனதின் அவாவை அவளிடம் கொட்ட வேண்டும் என்ற உந்துதல். ஆனால், எதையும் வெளிப்படுத்தவில்லை குமரன்.

காய்ச்சல் கண்ட உடம்பு ஒரு கனமான போர்வைக்குள் கணநேரத்தில் சுருண்டு குளிரை விரட்டிக் கதகதப்பூட்டும் சுகத்தை போல உணர்வொன்றை அனுபவித்தவனுக்கு உடலெல்லாம் ஏதோ சிலிர்ப்பு. மனைவிக்கு அதெல்லாம் புரியவில்லை. அவன் கூறிய வார்த்தையிலே தேங்கிவிட்டவளுக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரியாது போனது. அவளுக்கு இவனது எண்ணம் புரிந்திருந்தால் என்ன செய்திருப்பாள், கூறியிருப்பாள் என நினைத்ததும் மனமெல்லாம் மனையாள் நிறைந்து போனாள். அவளுடைய கோபம் தணியட்டும் என இவனும் விட்டுவிட்டான். அவளாக வரவேண்டும், அவள்தானே தான் வேண்டுமென அடம்பிடித்து திருமணம் செய்தது. அப்போது அவளாகவே கொஞ்சம் இணங்கி இறங்கி வரட்டும் என தன் முனைப்பு துண்டிவிட்டதில், இவன் மேற்கொண்டு எதையும் பேசவில்லை. அந்த சுகமான மனநிலையை மனதில் சுருட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான்.

நாட்கள் அதன்போக்கில் கடந்தன. மனோ வார இறுதியில் தாய் வீட்டிற்குச் சென்று வந்தாள். திவாகர் இரண்டு நாளுக்கு ஒரு முறை அழைப்பு, வாரம் ஒரு முறை தங்கையைக் காண இங்கே வந்தான். ராதாவும் வந்து சிந்துவுடன் அளவளாவிவிட்டுச் சென்றார்.

ரங்கராஜன் முன்பு போலில்லாது சுருண்டு போய்விட்டார். அதீத சுறுசுறுப்பாய் இருப்பவர், இப்போது ஏனோ தளர்ந்து போயிருந்தார். மகளின் செய்கை மட்டுமல்ல காரணம். தொழிலையும் சரிவர அவரால் கவனிக்க முடியவில்லை. குமரனின் இழப்பு பேரிடிதான் அவருக்கு‌.

எங்கே வெளியே சென்றாலும் மகளின் திருமணத்தை முன்னிறுத்தி அவரைத் தாழ்த்திப் பார்ப்பது போல அவருக்கு எண்ணம் பிறந்தது. உண்மையில் அப்படி நடந்ததா என்றால், ரங்காவிடமே பதிலில்லை. ஜாதி என்ற வஸ்து மனிதரது ரத்தத்திலே ஊறியிருக்க, அது அவரை துரத்திக் கொண்டே இருந்தது. அதனிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அரசியலிலிருந்த பத்து வருடங்களும் தன் ஜாதிசங்கத்தில் முதன்மை வகித்தவரை இப்போது சங்கத்து உறுப்பினர்கள் எள்ளி நகையாடினர். ஓய்ந்து போனார் மனிதர். ராதாவிற்கு கோபமும் வருத்தமும் ஒரு சேரப் பொங்கியது. நடந்ததை மாற்ற முடியாது எனத் தெரிந்தும் இவர் முடங்கிக் கிடப்பதை கண்டு மனைவிக்கும் வலிதான். அவரும் திவாகரும் ரங்காவை மீட்கத்தான் போராடிக் கொண்டிருந்தனர்.

திவாகர்தான் இதில் அதிகம் இழுபட்டான். தந்தையும் மீட்டெடுத்து, தொழிலையும் கவனிக்க திணறிப் போனான். இதில் ரங்கா வேறு ஒருநாள் சூளைக்குச் சென்றால், மறுநாள் வராது வீட்டிலே இருந்தார். சூளை, குவாரி, கட்டிடப் பொருளகம் என சுற்றி சுற்றி கொஞ்சமல்ல அதிகம் இளைத்து களைத்துப் போனான். இடையிடையே ஷெண்பாவும் நினைவில் வந்து போனாள். அவளைப் பிடித்திருக்கிறது எனத் தெரிந்தாலும் இவனாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. விதியிருந்தால் பார்க்கலாம் என விட்டுவிட்டான்.

ரங்கராஜன் அதற்கு முழுமுதற் காரணம். தங்கை செயலிலே அவர் துவண்டு போயிருக்க, தானும் அவரை மேலும் வருத்த விரும்பவில்லை. அதற்காக ஷெண்பாவை மறக்கும் எண்ணமும் இல்லை. ஏதோ ஒரு திரிசங்கு சொர்கத்தில் நின்ற நிலைதான் அவனுக்கு. தற்போதைக்கு தொழிலை சரிவர செய்ய வேண்டும் என்ற முனைப்பு அவளின்புறம் சாயவிருந்த மனதை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தது.

தாயும் தமையனும் தந்தையைப் பற்றி வருத்தப்பட்டு உரைத்ததில் மனோவுக்கு கொஞ்சம் குற்றவுணர்ச்சி உண்டானது. வாரத்திற்கு ஒருமுறை அவரைப் பார்த்துப் பேசிவிட்டுதான் வருவாள். இருந்தும் முன்பு போல இருவரிடமும் ஒட்டுதல் இல்லை. இவள் நெருங்கிப் போக, அவர் பிடி கொடுக்கவில்லை. அதற்காக தளர்ந்து போகாது தங்களது உறவை இவள்தான் இறுக்கிப் பிடித்துவைத்திருக்கிறாள்.

அன்றும் அப்படித்தான் ஞாயிற்று கிழமையென சிந்துவிடம் கூறிவிட்டு இவள் தாய்வீட்டிற்கு சென்றிருந்தாள். ராதா மகள் வருவதை அறிந்து அவளுக்குப் பிடித்த உணவுகளை சமைத்துக் கொண்டிருந்தார்.

“வார வாரம் வந்துட்டு தானே மா போறேன். இப்போ எதுக்கு நீ இப்படி சமைச்சுட்டு இருக்க!” சலுகையாய் இவள் குறைபட்டாள்.

“ஏன்டி, வாரத்துல ஒருநாள் வர்ற. உனக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போட வேணாமா?” அவர் மகளிடம் பேசினாலும் கைகள் வேலையைப் பரபரவென செய்து கொண்டிருந்தன.

“ம்க்கும்… ரெண்டு தெரு தள்ளிதானே உம்மகளை கட்டிக் கொடுத்திருக்க… ரெண்டு ஊர் தள்ளி இல்ல மா!” சிரித்த மனோவின் பார்வைத் தந்தை அறையை மொய்த்தது.

“என்னம்மா, அப்பா ரூம்லதான் இருக்காரா?” இவளது பார்வை பாதி திறந்திருந்த கதவின் வழியே தந்தையைத் தேடியது.

“ஆமா! ஆமா. அந்த ரூம்ல புதையல் வச்சிருக்க பூதம் மாதிரி காவக்காத்துட்டு இருக்காரு…” ராதா சடைத்துக்கொள்ள, இவள் உள்ளே சென்றாள்.

கண்களை மூடிப் படுத்திருந்தார் ரங்கா. மகள் சென்று அவரருகே அமரவும், அந்த அரவத்தில்

error: Content is protected !!
Scroll to Top