என் உள்ளம் கேட்குமே – 18.3

“அத்தை, இது என்னோட சம்பளப் பணம்தான்‌. ஒரு வருஷமா வேலைக்குப் போன பணம். நீ சம்பாரிச்சுதான் வீட்ல நிறையப் போறதுல்லன்னு அம்மா, அப்பா ரெண்டு பேருமே சொல்லிட்டாங்க. அதான் அதை அப்படியே பேங்க்ல போட்டு வச்சிருந்தேன், எப்பாவது தேவைப்பட்டா எடுக்கலாம்னு. இப்போ உங்கப் பையன் பிஸ்னஸ்க்கு யூஸ் ஆகட்டும்னு எடுத்துட்டு வந்தேன். நான் கொடுத்தா கண்டிப்பா அவர் வாங்கமாட்டார்னு தெரியும். அதான் உங்கக் கிட்டே தந்து கொடுக்க சொல்லலாம்னு இன்னைக்கு பேங்க்ல இருந்து எடுத்து வந்தேன்!” என்றாள். குரலில் கொஞ்சம் தயக்கமிருந்தது.

“அந்த நிலத்தை விக்க வேணாமே அத்தை. இந்த பணத்தோட சேர்த்து, அதை அடகு வச்சு யூஸ் பண்ணிக்கலாம்!” என்றவளுக்கு சிந்து ஏதேனும் நினைத்துக் கொள்வாரோ என்ற எண்ணம். வீட்டிற்கு வந்தவுடன் இந்தப் பெண் எல்லா விஷயத்திலும் தலையிடுகிறாளே என எண்ணிவிடுவாரோ என ஏகத்தயக்கம் குரலில் கொட்டிக் கிடந்தன.

“மனோ, அதெல்லாம் வேணாம் மா. இது உன்னோட பணம், நீ சம்பாரிச்சது டா!” என சிந்து மறுத்தார். அவருக்கு அவள் பேச்சில் அத்தனை மகிழ்ச்சி. மகனுக்காகவென இந்தப் பெண்ணின் மெனக்கெடலில் அவர் மனதில் நிறைவும் கூட.

மாமியாரை முறைத்தவள், “அதென்ன என் பணம். இந்த வீட்டுக்கு என்னைக்கு உங்கப் மகனோட பொண்டாட்டியா நுழைஞ்சேனோ, அப்போவே நான்னா அது அவரும் சேர்த்துதானே அத்தை? அப்போ இது அவரோட பணமும் கூட. நீங்க எங்களை பிரிச்சுப் பார்க்குறீங்களா என்ன?” செல்லக் கோபமாய் கேட்டாள்‌.

“மனோ மா, நான் அப்படியெல்லாம் சொல்வேனா? சரி, நான் என்ன சொல்லி இதை அவன்கிட்ட கொடுக்க. ஏதுன்னு கேட்டுத் துருவி எடுத்துடுவான்!” அவர் பாவமாய் விழித்தார்.

“வாட்ச் கொடுக்கும்போது என்ன சொல்லி கொடுத்தீங்க?” இவள் அமர்த்தலாய்க் கேட்டாள்.

“அது, அப்போ சமாளிச்சுட்டேன் மனோ. இப்போ முடியாதே!” அவர் மறுப்பாய் தலையை அசைத்தார்.

“ஏன் முடியாது அத்தை, அதெல்லாம் முடியும். நீ கொடுத்த சம்பளப் பணத்துல சீட்டுப் போட்டிருந்தேன். இப்போதான் அது முடிஞ்சு பணம் கைக்கு வந்ததுன்னு சொல்லி சமாளிங்க அத்தை. இதை திருப்பி வாங்குற எண்ணம் எனக்கில்லை!” என அவள் பேச்சு முடிந்தது என அறைக்குள்ளே நுழைந்தாள்.

“இந்தப் பெண்ணை…” என மனோவின் செய்கையில் பேச்சில் புன்னகைத்தவர், பணத்தை எடுத்து அலமாரியில் வைத்துப் பூட்டினார். இவர்கள் பேசும்போதே உள்ளே நுழைந்த குமரன் பேச்சைக் கேட்டு நின்றுவிட்டான். பாதி உரையாடல் செவியில் விழுந்தாலும் அதன் சாராம்சம் புரிந்தது. அதைவிட மனைவியின் பேச்சு, தன் மீதான அக்கறையில் இனித்து தொலைத்தது. ஏதோ தங்களுக்கு இடையேயுள்ள அனைத்து பிணக்குகளும் அகன்றது போல அவனது முகத்தில் புன்னகை பூத்திருந்தது. எதுவும் தெரியாதது போல உள்ளே நுழைந்தான்.

அவனைப் பார்த்த சிந்து, “என்ன டா, இப்போதான் கிளம்புன. மறுபடியும் வந்திருக்க?” என வினவினார்.

“அந்த நிலத்தை விக்கலாம்னு முடிவெடுத்துட்டேன் மா!” அவனுக்கு அந்த நிலத்தை விற்க வேண்டும் என்ற எண்ணம் துளியுமில்லை. இருந்தும் மனைவியின் பேச்சும் அதை சிந்து மறுத்த போது அவள் சமாளிக்க கூறிய பொய்யை அவர் வாய் வழி கேட்டு விளையாட வேண்டும் என்ற அவா. அதைவிட தான் அதை கண்டு பிடித்துவிட்டேன் எனும்போது மனோ திகைத்து விழிப்பதைப் பார்க்க மனம் முழுவதும் உந்துதல்.

குமரனைப் பார்த்து சங்கடமாய்ப் புன்னகைத்த சிந்து, “குமரா, அம்மா நீ கொடுத்த சம்பளப் பணத்தை சேர்த்து வச்சு…” என அவர் முடிக்கும் முன்பே, “சீட்டு எதுவும் போட்டீங்களா மா?” என இவன் முடித்து வைத்தான்.

மகன் பேச்சில் சிந்து பேந்த பேந்த விழித்து, “அது… ஆமா டா! ஆமா. சீட்டுப் போட்டேன்!” என்றார் படபடவென.

“ஓ… யார்கிட்டே சீட்டுப் போட்டீங்க? எவ்வளோ காசு வந்துச்சு அதுல? என்ன சீட்டுமா அது?” உதட்டிலேறிய புன்னகையுடன் கேள்விகளை அடுக்கினான் இவன்.

அறையில் கண்ணாடி முன்பு அமர்ந்து எண்ணெய் வைத்து தலையை வாரித் தூக்கிக் கொண்டையிட்ட மனோவிற்கு அவன் பேச்சிலும் தொனியிலும் புரிந்து போனது, அவன் தங்கள் உரையாடலைக் கேட்டுவிட்டான் என.

‘பாவம் அத்தை, அவங்களுக்கு இன்னும் புரியலை போல!’ என எண்ணி இவள் வெளியே வந்தாள்.

“டேய், ஏன் இவ்வளோ கேள்வி கேட்குற நீ? அது ஒரு நாலஞ்சு லட்சம் பணம் இருக்கும் டா!” அவர் திணறலாய்க் கூறினார்‌.

“நாலா இல்ல ஐஞ்சா மா? கணக்கில்லாம பணம் வச்சிருக்கீங்களோ?” இவன் சன்ன நக்கலாய்க் கேட்க, அவனுக்குப் பக்கவாட்டாக நின்றிருந்த மனோ முறைத்து வைத்தாள்.

சிறிது நேரம் முன்பு அலமாரியில் வைத்தப் பணத்தை எடுத்து வந்து மகன் கையில் வைத்த சிந்து, “நீயே எண்ணிப் பார்த்துக்கோ டா. வயசாகிட்டதால எனக்கு கணக்குத் தெரிய மாட்டுது!” பாவமாய் முழித்து இருக்கையில் தளர்ந்து அமர்வது போல தப்பித்துவிட்டார்.

பொங்கி வந்தப் சிரிப்பை உதட்டுக்குள் அதக்கியவன், அந்தப் பணத்தை எண்ணினான். மூன்று லட்சத்து எண்பதாயிரம் இருந்தது.

“ம்மா, மூன்றரை லட்சத்துக்கு மேல இருக்கு மா. இது பத்தாதுதான், நான் வேற இடத்துல கேட்டேன்ல, அங்க கிடைச்சுடுச்சு. அதனால இதை நீங்களே வச்சுக்கோங்க!” என அவரிடம் திருப்பிக் கொடுத்தான் குமரன்.

“அப்படியா, அப்புறம் ஏன் நிலத்தோட பத்திரத்தைக் கேட்ட?” இன்னுமே சிந்து அவனது கேலி புரியாது அப்பாவியாய் வினவினார்.

அதில் சிரித்துவிட்டவன் அவரது கன்னத்தைக் கிள்ளிவிட்டு, “இதை நீங்களே வச்சுக்கோங்க!” என்றான். அவர் மகனை அதிசயித்துப் பார்த்தார். எத்தனை நாட்களுக்குப் பின்னே அவன் முகத்தில் புன்னகை.

பின்னர், மனோவின்புறம் திரும்பியவர், “மனோ, பணத்தை நீயே வச்சுக்கோ மா. அவனுக்கு வேணும்னா கொடுக்கலாம்!” எனக் கூற, “அத்தை…!” என இவள் பல்லைக் கடித்தாள். குமரன் சன்னமான சிரிப்புடன் அவளைப் பார்க்க, அவனை முறைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.

“ம்மா, அவகிட்ட ஏன் பணத்தைக் கொடுக்குறீங்க? இது உங்களோடது தானே?” மகன் கேள்வியில் திருதிருத்தவர், ‘ஒரு பொய்யைக் கூட ஒழுங்கா சொல்லத் தெரியலை எனக்கு!’ என நினைத்துவிட்டு, “டேய்! என் பணம் என் மருமககிட்டே இருக்கக் கூடாதா என்ன? அவதானே இனிமே எனக்கடுத்து எல்லாம் பார்க்கணும். அதான் கொடுத்தேன்… உனக்கு காசு கொடுத்தா, கேள்வி கேட்டு சாகடிப்ப!” எனக் கோபமாய் கூறிவிட்டு ஏதோ வேலை இருப்பது போல நகர்ந்துவிட்டார்‌ பெண்மணி.

பணத்தைக் கையிலெடுத்துக்கொண்டு தனதறைக்குச் சென்றவன் அறைக்கதவை அடைத்தான்.
அதை மேஜையின்மீது வைத்துவிட்டு கையைக் கட்டி நின்ற குமரனின் பார்வை குறுகுறுவென தன்னை ஆராய்வதை உணர்ந்து நிமிர்ந்து அவனைக் கேள்வியாய்ப் பார்த்தாள் மனோஹரி. அவன் கேலிச் சிரிப்பை உதிர்க்க, இவள் முறைத்தாள்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top