என் உள்ளம் கேட்குமே – 18.2

இவன் இருவருக்குமிடையே இருக்கும் பிணக்குகளை தீர்க்க வழி தேட, அவளோ தள்ளி தள்ளியே சென்று கொண்டிருந்தாள். அந்தக் கோபத்தைதான் காலையில் இருசக்கர வாகனத்தில் காண்பித்ததாக மனதை ஏமாற்றினான். ஏன் அவளே சுயமாக வேலைக்கு சென்று வருவதில் அவனளவில் எந்த தடையும் விதிக்கத் தோன்றவில்லை. ஏன், அதுதான் அவளுக்கும் நல்லது. அனைத்தையும் அவளாகப் பழக வேண்டும் எனக் கூட எண்ணி இருக்கிறான். ஆனால், அதெல்லாம் ரங்கராஜனின் மகளாக. இப்போது தன் மனைவியாகிவிட்டப் பிறகு எதோ உரிமையுணர்வு.

தான்தான் செய்ய வேண்டுமென அது தலையை சிலுப்பி முன்வந்து நிற்க, மனமுவந்து அதை தட்டிவிட மனதில்லை. இந்தப் பெண் அவனை ஈர்த்தாள். ஏனோ இடைவெளியைக் குறைத்து சகஜமான பேச்சிற்குத் தாவ வேண்டும் என மனதின் உந்துதல். ஆனால், அதை எப்படி அவளிடம் பேசுவதென பெருந்தயக்கம். முதலிரவில் இருந்த மனநிலையில் தான் பேசியது தவறு என நியாய மனம் கூற, புரிந்ததும் இறங்கி வந்திருந்தான். தாய், தமக்கைக்கு அடுத்து இந்தப் பெண்ணிடம் இறங்கியிருந்தான்.

மனோஹரி போல அவனில்லை. படபடவென பட்டாசு போல பொரிந்து தள்ளுவது அவளது வழக்கம். அமைதியாய் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் குணம் குமரனுடையது. எப்படி இந்த இரண்டு குணமும் ஒரே பாதையில் பயணிக்கப் போகிறதென அவனுக்குமே தெரியவில்லை.

இன்னுமே திருமணத்தன்று மனோஹரி பார்த்த பார்வை அவனை லேசாய் குறுகுறுக்கச் செய்யும். அவளது முறைப்பை சளைக்காது எதிர் கொண்டவனால் நேசம் ததும்பும் பார்வை ஏதோ செய்தது. அதை நினைத்து இப்போது இதழ்களில் இளம்புன்னகை முகிழ்த்தது. தலையைக் கோதிக் கொண்டவனின் விழிகள் முன்னே அலட்சியமாய், திமிராய், அசட்டையாய், ஏக்கமாய், பாவமாய், காதலாய், அவ்வப்போது திக்கித் திணறிப் பார்த்தப் பார்வைகள் இப்போது உதட்டில் புன்னகை பூக்கச் செய்தன. என்னவோ காலையிலே சேலை கட்டி பதுமையாய் வீட்டில் வலம் வந்த மனோஹரியிலே பார்வையும் மனதும் நிலைத்துவிட்டிருந்தது.

ஆனாலும் அவளிடம் சண்டையிட்டிருந்தான். காரணமே இல்லாது சிறுபிள்ளைத் தனமான தன் செய்கையில் குமரனுக்கு இப்போது சிரிப்பு வந்தது. இதமான மனநிலையில் இவன் பணிக்கு வந்திருக்க, மனோஹரி அங்கே கடுப்புடன் அமர்ந்திருந்தாள்.

காலையிலே தன் மனநிலையை முற்றிலும் மாற்றிவிட்டிருந்த கணவனை மனதில் அர்ச்சித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தாள். மாலை வேலை முடிந்து இவள் வெளியே காத்திருக்க, குமரன் வரவில்லை.

நேரத்தைப் பார்ப்பதும் வாயிலைப் பார்ப்பதுமாயிருந்தவளை, “மேம், இன்னைக்கு அழகா இருக்கீங்க. காலைல சாரோட வரும்போது பார்த்தேன். உங்க ஜோடிப் பொருத்தம் நல்லா இருந்துச்சு!” என்ற வரவேற்பாளினியின் குரல் கலைத்தது. அந்தப் பேச்சில் மனோவின் இதழ்களில் புன்னகை.

“தேங்க் யூ மா!” தலையை இவள் அசைக்க,

“எனக்கு முன்னாடியே டவுட் இருந்துச்சு மேம், உங்களுக்கு சாரை ரொம்ப நாளா பிடிக்கும் தானே?” அந்தப் பெண் ஆர்வமாய் வினவ, இவள் சங்கடமாய் தலையாட்டினாள்.

“செம்ம மேம், எப்போ ப்ரபோஸ் பண்ணுனீங்க? சார் என்ன சொன்னாரு? அவர் கொஞ்சம் விரைப்பா தெரியுறாரே!” தனது இடத்திலிருந்து எழுந்து இவளருகே அவள் வந்துவிட, மனோஹரிக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

லேசாய் திணறி என்னக் கூறலாம் என யோசித்துக் கொண்டிருந்தவளின் பார்வை வாயிற்பக்கம் சுழல, குமரன் வந்துவிட்டான். அவனைக் கண்டதும் நொடியில் இருக்கையிலிருந்து எழுந்தவள், “அவர் வந்துட்டாரு மா. இன்னொரு நாள் உங்களுக்கு நான் சொல்றேன்!” என்றாள் சமாளிப்பாய்.

“ஹம்ம்… தப்பிச்சுட்டீங்க மேம். இன்னொரு நாள் கண்டிப்பா மாட்டுவீங்க!” அவள் நமுட்டுச் சிரிப்பை உதிர்க்க, மனோ தப்பித்து வெளியேறியிருந்தாள். அவள் வருவதைக் கண்ட குமரனும் வாகனத்தை உயிர்ப்பிக்க, இவள் ஏறி அமர்ந்தாள். இத்தனை நேரமிருந்த இலகுபாவம் தொலைந்து காலையில் அவன் செய்கையில் உண்டான கோபத்தில் முகம் மீண்டும் முறைப்பைத் தத்தெடுத்தது.

அவன் அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.
அவளை வீட்டில்விட்டவன் மீண்டும் சூளைக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான். ஒரு வாரம் கழிந்திருக்க, அவர்களது உறவில் முன்னேற்றம் இல்லாது போனது. மனோஹரி மனதில் அவனுடைய குற்றப்பத்திரிகை வெகுவாய் நீண்டு கிடந்தது. அவள் இறங்கி வரத் தயாராக இல்லை. குமரனும் போ என விட்டேற்றியான மனநிலையில் சுற்றினான்.

அன்று வேலை முடிந்து அத்தனை சோர்வாய் வீட்டிற்கு வந்தவனை மனோ கண்டும் காணாதும் பார்த்து வைத்தாள்‌. சிந்து தேநீரை அவன் கையில் திணித்தவர், “என்னாச்சு குமரா?” எனக் கேட்டு

மகனருகே அமர்ந்தார்‌.

“லோன் கிடைக்கலை மா!” என்றவனின் குரல் சோர்ந்து வந்தது. சொந்தமாக செங்கல் சூளை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்கானப் பணத்தை திரட்டிக் கொண்டிருந்தான். கையிருப்பிலிருந்த பணம், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியது என பாதியளவு பணம் சேர்த்துவிட்டான். மீதிக்காக வங்கியில் கடன் கேட்டிருக்க, அது கிடைக்காது போயிருந்தது.

“குமரா, நான் சொல்றதை கேட்கவே மாட்ற நீ. அந்த நிலத்தை விக்கலாம் டா!” சிந்து கூற, “ம்மா… அது உங்கப் பேர்ல முதமுதலா வாங்குனது. அதை விக்க வேணாம் மா!” உறுதியாய் மறுத்தான்.

“இந்த வயசுல என் பேர்ல நிலத்தை வச்சு நான் என்ன டா பண்ணப் போறேன். நிலம் நகையெல்லாம் ஆத்திரம், அவசரத்துக்கு விக்கதான் டா!” சலிப்பாய் அவர் கூற, “ம்மா… வேற எங்கேயும் ட்ரை பண்றேன். கிடைக்கலன்னா பார்த்துக்கலாம்!” என்று அப்பேச்சை கத்தரித்தவன், அறைக்குள் நுழைந்தான்.

மனோஹரி இவர்களது உரையாடலைக் கேட்ட வண்ணம்தானிருந்தாள். பேச்சின் சாரம்சம் பாதி புரிந்து, மீதி புரியவில்லை.
சிந்து சமையலறையிலிருக்க இவள் உள்ளே நுழைந்தாள்.

“வா மனோ, என்ன வேணும்?” என அவர் வினவ, “ஒன்னும் வேணாம் அத்தை…” எனத் தயங்கியவள், “லேண்ட், பணம் அதுன்னு ஏதோ பேசிட்டு இருந்தீங்களே!” என வினவினாள்.

அவள் தயக்கத்தைப் பார்த்துப் புன்னகைத்தவர், “இதை கேட்க ஏன் இத்தனை தயக்கம் மனோ! இந்த வீட்ல உனக்கும் எல்லா உரிமையும் இருக்கு. தெரிஞ்சுக்க கடமையும் இருக்கு…” என்றவரின் கரங்கள் சட்னிக்குத் தேங்காயை லாவகமாக வெட்டின.

“தனியா செங்கல் சூளை ஆரம்பிக்க லோன் போட்டிருந்தான் மா குமரன். அது கிடைக்கலை. நான் என் பேர்ல இருந்த நிலத்தை விக்க சொல்லி சொன்னா, வேணாம் வேற பார்த்துக்கலாம்னு இந்தப் பையன் தட்டிக் கழிச்சுட்டே இருக்கான்!” என அவர் குறைபட்டார். கேட்டுக் கொண்டாலும் மனோ எதுவும் பதில் பேசவில்லை. மனம் என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருந்தது.

இரண்டு நாட்கள் கழிந்திருக்க, வேலைவிட்டு வந்த மனோஹரி உடைமாற்றி தன்னை சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்தாள். அவளது கையில் ஒரு நெகிழிப்பை இருந்தது.
சிந்து தொலைக்காட்சியில் ஏதோ பழைய பாடலை ஒலிக்கவிட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.

“அத்தை, என்ன பண்றீங்க?” என அவரருகே அமர்ந்தவள், அந்தப் பையை அவர் கையில் வைத்தாள். பாடலின் சத்தத்தைக் குறைத்தவர்,

“என்ன மனோ இது?” எனத் திறந்து பார்த்தார். அதில் கட்டு கட்டாய் பணமிருந்தன.

“எதுக்கு மா இவ்வளோ பணம்?” அவர் கேள்வியெழுப்பினார்.

error: Content is protected !!
Scroll to Top