என் உள்ளம் கேட்குமே – 17.2

“சொல்றதை காது கொடுத்துக் கேட்க மாட்டீயா டி நீ?” என குமரன் அதட்ட, அவனை முறைத்தவள், “கேட்க முடியாது. உங்க இஷ்டத்துக்கு என்னால இருக்க முடியாது!” என சீற்றமாய் உரைத்துவிட்டு தலையணையில் முகம் புதைத்தாள். காயம்பட்ட மனது அதை வார்த்தைகளால் கொட்டியது.

“ம்ப்ச்… போடி!” என குமரனும் விட்டுவிட, இருவருமே நீண்ட நேரம் கழித்தே உறக்கத் தழுவினர்.

காலையில் இருவருக்கும் இடையேயிருந்த இடைவெளி குறைந்திருக்க, முதலில் கண்விழித்தது மனோஹரிதான். குப்பென நாசியை நிறைத்த வாசத்தில் நெற்றியை சுருக்கியவள்‌ திரும்பிப் பார்க்க குமரன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். நேற்றைய சண்டை நொடியில் நினைவை நிறைக்க, அவன் முகத்தைதான் பார்த்தாள். மீண்டும் விழிகள் கலங்கின. அவனை முறைத்தவள், எழுந்து குளித்துவிட்டு வெளியே சென்றாள்.

சிநேகாவும் கார்த்திக்கும் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், இவளைக் கண்டதும், “சித்தி…” என ஓடி வந்தனர். காலையிலே அனைவரும் கிளம்பி இங்கே வந்திருந்தனர்.

தேஜூ அழுது கொண்டேயிருக்க, சிந்துதான் அவனை வாங்கி சமாதானம் செய்தவாறு செபாவிடம் பேசிக் கொண்டிருந்தார். வனிதாவும் ராதாவும் இவளைக் கேள்வியாய்ப் பார்த்தனர். சிவந்திருந்த விழிகளும் வீங்கியிருந்த முகமும் அழுதத் தடயத்தைக் காண்பிக்கக் கூடாதென முகத்தை நன்றாய் தேய்த்து குளித்திருந்தாள். இருந்தும் அவளது வதனத்தைக் கூர்ந்து பார்த்துக் கவனித்திருந்தனர் தாய்மார்கள்.

யாருடையக் கண்ணையும் உறுத்தாத வகையில் அவளைத் தனியே அழைத்துச் சென்ற ராதா, “என்னடி, முகமெல்லாம் சிவந்த மாதிரி இருக்கு. அழுதியா?” என பதைபதைப்புடன் அவளது முகத்தை ஆராய்ந்தார். அவர் குரலில் தாயாய் தவிப்புக் கொட்டிக் கிடந்தது.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை மா. வந்ததும் வராததுமா என் முகத்தை நீ ஆராய்ஞ்சுட்டு இருக்காத!” மனோவின் குரலில் எதுவுமே நடவாத பாவனை.

“பொய் சொல்லாத டி. பெத்தவளுக்குத் தெரியாதா? என்ன நடந்துச்சு, அவனுக்கும் உனக்கும் பிரச்சனையா?” அவர் அழுத்திக் கேட்டார்.

“ச்சு… ஒன்னும் இல்ல மா!” என மனோ சலித்துக்கொள்ள, “அக்கா, விடுங்க. மனோ சமத்துதான். அவ எல்லாத்தையும் பார்த்துப்பா. நீங்க பதறாதீங்க!” என வனிதா ராதாவை சமாதானம் செய்தார்.

“உன் ஆசைப்படியே குமரனை உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம் மனோ. இனிமேல் அந்த வாழ்க்கையை கெட்டியா பிடிச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு. எல்லா விஷயத்திலும் விட்டுக்கொடுத்தே போகணும்னு இல்ல. அதே மாதிரி முறுக்கீட்டு சுத்தாத. குடும்பம்னா நாலும் இருக்கும் டா. உன் மாமியார் பார்க்க நல்ல மாதிரியாதான் தெரியுறாங்க. சந்தோஷமா இருக்க வேண்டியது உன் கைலதான் டி இருக்கு!” என்ற வனிதா அவளின் கையைத் தட்டிக் கொடுக்க, அவரை ஏறிட்டவளின் தலை சம்மதமாய் ஆடியது. மைதிலியும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

சிந்து அனைவருக்கும் காலை உணவைத் தயார் செய்ய, பெண்கள் அவருடன் இணைந்து கொண்டனர். குமரன் அப்போதுதான் அறையிலிருந்து வெளியே வந்தான்.

எப்போதுமே ஆழ்ந்த அமைதியிலிருக்கும் வீடு இன்று அத்தனை சலசலப்புடன் காணப்பட்டது. அவன் வந்ததை மனோஹரி கவனிக்கவே இல்லை. தேஜூவை மடியில் வைத்து அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இரவிலிருந்த மனநிலை இப்போது குழந்தையுடன் விளையாடியதும் சற்றே மட்டுப்பட்டிருக்க, அகம் முகத்தில் பிரதிபலித்தது. அவளது முகத்தைதான் இவன் பார்த்திருந்தான்.

“மனோ, குமரன் வந்துட்டான் பாரு. அவன்கிட்டே இந்தக் காபியைக் கொடுத்துட்டு வா!” ராதா அழைக்கவும்தான் சுற்றுப்புறம் அவளுக்கு உறைத்தது. தன்னைத் துளைக்கும் பார்வை அவனுடையதுதான் என்பதை உணர்ந்தாலும் தாயை நிமிர்ந்து பார்த்தவள், “ம்மா… காபி தானே? நீ போய்க் கொடு!” என்றாள் போலியான சலித்தக் குரலில்.

“ச்சு… அப்படியெல்லாம் சொல்லக் கூடாது மனோ. நீதான் டி இதையெல்லாம் செய்யணும்!” வனிதா மெல்லிய குரலில் இவளை அதட்ட, அவர்கள் இருவரையும் நிமிர்ந்து ஆதங்கமாய்ப் பார்த்தவள், எதுவும் பேசாது குளம்பியை வாங்கிச் சென்று அவன் முகத்தைப் பார்க்காது நீட்டினாள். இருக்கையில் சாய்ந்து அமர்ந்த குமரன், பக்கவாட்டில் திரும்பியிருந்த அவள் முகத்தை ஆழப்பார்க்க, மனோ அவனைப் பார்க்கவேயில்லை.

‘முகத்தைப் பார்த்துக் கொடுத்தால்தான் வாங்குவேன்!’ என்பது போல குமரன் அமர்ந்திருக்க, பல்லைக் கடித்தாள் மனைவி.

“நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்துக் குடு மனோ!” அடிக்குரலில் அதட்டலிட்டவனின் பேச்சு அவளது செவியை மட்டும் தீண்டுவதாயிருந்தது. ஒரு நொடி பொறுமையை இழுத்துப் பிடித்து அவனைப் பார்த்தவளின் பார்வையில் உஷ்ணம் பறந்தது.

கோபமிகுந்த கண்ணை, விடைத்து சிவந்திருந்த மூக்கை, அழுந்த மூடியிருந்த உதட்டை, குவிந்திருந்த நாசியை என குமரனின் பார்வை மெதுவாய் அவளை அளந்தபடியே கீழிறங்க, அது கொடுத்த உணர்வில் குப்பென அடிவயிற்றில் ஏதோ தாக்கியதை உணர்ந்து பல்லைக் கடித்து குளம்பியை அவன் கையில் திணித்துவிட்டு நகர்ந்திருந்தவளின் பார்வையில் அத்தனைக் கண்டனம்.

இவன் அலட்சியமாகத் தோளைக் குலுக்கிக் கொண்டு குளம்பியைப் பருகினான். பின்னர் குமரன் குளித்து முடித்து அனைவருடனும் அமர்ந்து உண்ண, கோவிந்தனின் மொத்தக் குடும்பமும் சிறிது நேரத்தில் விடைபெறுவதாய் இருந்தனர்.

“சித்தப்பா, இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாம் இல்ல. என்ன அவசரம் இப்போ? கல்யாணம் முடிஞ்ச மறுநாளே கிளம்பணுமா?” மனோ அவரிடம் குறையாய்க் கேட்டாள். நான்கு வருடம் கழித்து வந்திருந்தவர்களை அத்தனை எளிதில் பிரிய மனம் வரவில்லை.

அது மட்டுமன்றி என்றோ ஒருநாள் பார்த்து நேசம் வளர்த்த உறவுகள் என்றாலும் தனக்கு ஒன்று என்றவுடன் மொத்த குடும்பமும் இங்கே பிரவேசித்திருந்ததில், அந்த அன்பில் மனோ நெகிழ்ந்து நனைந்து போனதென்னவோ உண்மை. வெறும் வாய் வார்த்தைக்காய் உரைக்காது திவாருடன் இணைந்து தமையன் ஸ்தானத்தில் வேலைகளை இழுத்துப் போட்ட ஹரி, தங்கைப் பெண்ணை தன் பெண்ணாய் பாவித்த கோவிந்தன், வனிதா, மைதிலி, லோகேஷ் என அத்தனைப் பேரும் மனதை நிறைத்துவிட்டிருந்தனர்.

“இல்ல மனோ, நிறைய வொர்க் பெண்டிங்ல இருக்கு. எல்லாருமே இங்க வந்துட்டோம் இல்ல. அடுத்த தடவை வரும்போது ஒரு மாசம் தங்குற மாதிரி வரோம் டா!” கோவிந்தன் பதில் இயம்பினார்.

“அடுத்து குழந்தையைப் பெத்துட்டு ஃபோன் போடு மனோ. பேரக் குழந்தையைப் பார்க்க ஓடி வந்துட்றோம்” வனிதா அவளது முகத்தைக் கிள்ளினார். அவரைப் பார்த்து சிரிப்பொன்றை உதிர்த்தாள் இவள்.

“அக்கா, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்!” அக்ஷயா மனோவை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட, இவளின் இதழ்கள் மெலிதாய் விரிந்தன. பதிலுக்கு அவள் கன்னத்தில் முத்தமிட்டவள், “சீக்கிரம் பார்க்கலாம் அக்ஷூ. நல்லா படிக்கணும்!” என்றாள்.

“மனோ, வி மிஸ் யூ…” செபா கூற, “மீ டூ மிஸ் யூ ஆல் அண்ணி…” எனக் கூறி அவள் கையிலிருந்த குழந்தையை வாங்கி இரண்டு கன்னத்திலும் அழுத்தமாய் முத்தமிட்டாள். தேஜுவும் இவளிடம், “ஆங்… ஊ…” என ஏதோ மழலை மொழியில் மிழற்றினான். இத்தனை நாட்கள் உடனிருந்ததில் மனோ அவனுக்குப் பரிட்சயமாகிப் போயிருந்தாள்.

சிநேகாவையும் கார்த்திக்கையும் கொஞ்சியவள், ஹரியிடம் தன் அண்ணியை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதட்டல் போட்டாள்.

மைதிலியும் லோகோஷூம் இவளைக் கேலி செய்ய, புன்னகையுடன் அவர்களை வழியனுப்பி வைத்தாள்.

error: Content is protected !!
Scroll to Top