என் உள்ளம் கேட்குமே – 17.3

“அக்காவை நல்லா பார்த்துக்கோங்க மாமா!” கிளம்பும் தருவாயில் அக்ஷயா குமரனிடம் கிசுகிசுத்துவிட்டு செல்ல, இவனது இதழ்களில் மெலிதான புன்னகை. அக்ஷயா என்ன கூறியிருப்பாள் என ஊகிக்க முடியவில்லை எனினும், குமரனின் புன்னகையை மனோவின் மனம் வாரிச் சுருட்டி சேமித்துக் கொண்டது.

அனைவரும் விடைபெற, “சரி மனோ, நாங்களும் கிளம்புறோம்…” என ராதாமணி கூறினார். திவாகரும் எழுந்து நிற்க, மனோ அவனைப் பார்த்து தலையசைத்தாள்.

அவளருகே வந்தவன், “எந்தப் பிரச்சனைனாலும் நாங்க இருக்கோம்ன்றதை மறந்துடாத மனோ!” சின்னக் குரலில் கூறி தங்கையின் கையைப் பிடித்தவனைப் பார்த்தாள் மனோ. விழியோரம் அந்த அன்பில் ஈரம் கசிய, அவனை முறைத்தவள், “அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் திவா. நீ அப்பாவைப் பார்த்துக்கோ. பாவம் அந்த மனுஷன் ரூம்க்குள்ளே கிடக்கப் போறாரு” என்றவளின் குரல் தந்தையின் நினைவில் கனிந்து போனது.

“என் புருஷனை எனக்குப் பார்த்துக்கத் தெரியும். நீ உன் புருஷனைப் பார்த்து அனுசரிச்சுப் போடி!” என ராதா அவர்கள் அருகில் வந்தார். அவரை மகள் முறைக்க, “முறைக்காம நல்லா வாழப் பாரு டி. நீயா வேணும்னு கேட்ட வாழ்க்கை, சந்தோஷமா இரு!” என அவர் கூற, இருவரும் விடை பெற்றனர்.

நேற்றைய இரவைப் போல அல்லாது இன்று பேச்சுகளுக்கே பஞ்சமாகிப் போனது. மனோஹரி அவன் முகத்தைக் கூடக் காணாது படுத்துவிட, குமரன் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவனும் சிறிது நேரத்திலே உறங்கிப் போனான். மறுநாள் தன்னுடைய பொருட்களை எல்லாம் இங்கே வீட்டில் அடுக்கி வைத்திருந்தாள்.

இரண்டு நாட்கள் கழிந்திருக்க, அவன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்க, மனோவிற்கும் விடுப்பு முடிந்திருந்தது. இவளும் மருத்துவமனை செல்வதாய் சிந்துவிடம் முதல்நாளே கூறிவிட்டாள்.

மறுநாள் காலையில் எழுந்தவள் குளித்துமுடித்து தயாராகவும் குமரனின் பார்வை அவளைக் கேள்வியாய் நோக்கியது. அதை லட்சியம் செய்யவில்லை பெண்.

மூவரும் அமர்ந்து உண்டு முடிய, “நான் போய்ட்டு வரேன் அத்தை…” என மனோ கிளம்ப, குமரனுக்குப் புரிந்தது.

அவன் தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அவளுக்காக நிற்க, யாருக்கோ வந்த விருந்து என்பது போன்ற பாவனையைத் தாங்கியிருந்தவளின் பார்வை சாலையை நோக்க, அவளுடைய வண்டியை ஓட்டி வந்தார் ரங்காவின் ஓட்டுநர்.

“தேங்க்ஸ் அண்ணா…” என அவரிடம் புன்னகைத்து சாவியை வாங்கியவள் குமரனைத் திரும்பிக் கூடப் பார்க்காது கிளம்பியிருக்க, இவனது அழுத்தமானப் பார்வை அவளைத் தொடர்ந்தது.

“குமரா, என்னைப் போறப்போ வீட்ல இறக்கி விடுப்பா!” அவர் இவன் பின்னே ஏறினார். ஒரே வீட்டில் பணியிலிருந்ததால் இருவருக்கும் நன்கு பரிட்சயம். அவரை வீட்டில் இறக்கிவிட்டு சூளைக்குச் சென்றிருந்தான். இருவரையும் பணிச்சூழல் அமிழ்த்தியிருந்தது.

மாலை குமரன் வருவதற்கு முன்பே மனோ வீட்டிற்கு வந்துவிட்டாள். சிந்துவுடன் அவள் அமர்ந்துவிட, அவரும் பேச்சுத் துணைக்கு ஆள் அகப்பட்டதில அகம் மகிழ்ந்து போனார். மகன் வேலை வேலை எனச் சுற்ற, இவருக்குத் தொலைக்காட்சிதான் துணை. அக்கம் பக்கத்து வீட்டில் சிறிது நேரம் அமர்ந்து அளவளாவிவிட்டு வருவார். இப்போது மனோ அருகில் இருப்பது பிராயம் முதிர்ந்தப் பெண்மணிக்கு சற்று ஆறுதலாய் இருந்தது.

மறுநாள் காலையில் வேலைக்குக் கிளம்பிய மனோ வெளியே வந்து பார்க்க, அவளது இருசக்கர வாகனம் அங்கில்லை. யோசனைப் படிந்த முகத்துடன் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தவளைத்தான் குமரன் பார்த்திருந்தான்.

“அத்தை, என் ஸ்கூட்டீயைக் காணோமே. பார்த்தீங்களா?” இவள் வாயிலில் நின்றவாறே எட்டிக் குரல் கொடுக்க, “காலையிலேயே திவாகர் தம்பி சொன்னதா சொல்லி ஒருத்தர் வண்டி சாவியை வாங்கிட்டுப் போனாரு மனோ!” அறையிலிருந்து வெளியே வந்து பதிலளித்தார் சிந்து.

“அப்படியா அத்தை, நான் திவாகிட்டே பேசிக்கிறேன்!” என்றவள் அவனுக்கு அழைப்பை விடுத்தாள்‌.

“சொல்லு மனோ!” திவா மறுமுனையில் பேசினான்.

“ஸ்கூட்டீயை எதுக்கு எடுத்துட்டுப் போன திவா?”

“குமரன்தான் எடுத்துட்டுப் போக சொன்னான். அவனோட பைக்லயே நீ ஹாஸ்பிடல் போற, சோ அது தேவையில்லைன்னு சொன்னான்… ஏன், என்னாச்சு. எதுவும் பிராப்ளமா?” அவன் பதிலில் மனோவின் கனல்பார்வை குமரனைச் சுட, ஆடவன் அசட்டையாய் அமர்ந்திருந்தான்.

அவனது சுண்டு விரலில் இருசக்கர வாகனத்தின் சாவியை வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து மேலும் எரிச்சலானவள், “பிராப்ளம் ஒன்னுமில்லை திவா. அவர் ஏதோ தெரியாம சொல்லி இருப்பாரு. நீ இப்போ மூர்த்தி அண்ணாகிட்டே ஸ்கூட்டீயைக் கொடுத்துவிடு!” என அழைப்பைத் துண்டித்தாள்.

குமரன் சென்று தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அவளைப் பார்த்து, “வண்டியில ஏறு மனோ!” என்றான் அதட்டலாய்.

அவனை நிமிர்ந்து முறைத்தவள்,
“பிடிக்காத பொண்டாட்டி கைப்பட்டாலும் குத்தம், கால் பட்டாலும் குத்தமாச்சே! நான் எதுக்கு உங்கக் கூட வரணும்!” அவன் பேசியதை பெண் விடுவதாய் இல்லை.

அவள் பேச்சில் குமரன் கோபத்தில் வாகனத்தை முறுக்கினான். அது கொடுத்த சத்தம் செவிப்பறையைக் கிழித்தப் போதும் அசராது நின்றாள்.

‘நீ ஏறினால்தான் நகருவேன்!’ என அவனும் ‘ஏற முடியாது!’ என அவளும் பார்வையை வீச, மனோவின் வாகனத்தோடு ஓட்டுநர் மூர்த்தி வந்துவிட்டார்.

குமரனை எள்ளலாகப் பார்த்தவாறு அந்த வாகனத்தில் சென்றவளை அனல் தெறிக்கப் பார்த்தான். அதன் விளைவு மறுநாள் எதிரொலித்தது.

அடுத்த நாள் காலையில் மனோஹரி உண்டுவிட்டு பணிக்குக் கிளம்பினாள்.

“வரேன் அத்தை…” என அவரிடம் உரைத்துவிட்டு வெளியே சென்றவள் அதிர்ந்து போனாள்.
வீட்டின் வாயிலில் நிறுத்தியிருந்த வாகனத்தின் கண்ணாடி உடைந்திருக்க, டயர்கள் காற்றின்றி அமிழ்ந்திருந்தன. மொத்தத்தில் அதை இப்போது இயக்க முடியாது என வாயைப் பிளந்திருந்த முகப்பு பகுதி சிந்தையில் உரக்கக் கத்தியது.
இது யாருடைய வேலை என அவளுக்குப் புரிய கோபம் சுறுசுறுவெனப் பொங்கியது‌.

‘எத்தனை திமிர், எத்தனை ஆங்காரம் இவருக்கு?’ எனப் பல்லைக் கடித்தாள் மனோஹரி. அதற்கு காரணமானவனோ அலட்சியமாக வீட்டிற்குள் அமர்ந்திருந்தான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top