என் உள்ளம் கேட்குமே – 17.1

மனோவின் பார்வையை சளைக்காது எதிர் கொண்டான் குமரன். அவனருகே செல்ல விழையாது தூரத்தே கைக்கட்டி நின்றவள், “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க?” எனக் கேட்டாள் சீற்றத்துடன். குரலில் கோபம் கொட்டிக் கிடந்தது.

‘என்ன?’ எனப் புரியாது பார்த்தான் குமரன். அவனுக்கு இவளது கோபமோ ஆதங்கமோ பெரிதாய் தெரியவில்லை. காலையில் அழுதுகொண்டே சென்ற ஷெண்பாவும் முறைத்தவாறே சென்ற விக்ரமும்தான் சிந்தையை நிறைத்திருந்தனர்.‌ மனம் அதிலே உழன்று கொண்டிருக்க, எதற்காக இவள் இப்படியொரு பார்வை பார்க்கிறாள் என நோக்கியவன் முகத்தில் எரிச்சலின் சாயல் படர்ந்திருந்தது.

“ஸ்டேஜ்ல வச்சு நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்னு எதுக்காக சொன்னீங்க? ஏன் பின்னாடியே வர்றவ தானே, உதாசீனப்படுத்துனாலும் எங்கப் போய்டப் போறான்ற எண்ணமா? ரோட்ல வச்சு அடிச்சும் அதைப் பெருசுபடுத்தாம நீங்தான் வேணும்னு வந்துட்டான்ற எளக்காரமா?” என மனோ பல்லைக் கடித்து வினவ, குரல் லேசாய் இடறியது. கலங்கப் பார்த்த விழிகளை சிமிட்டி அவனை முறைத்தாள்.

ஏனோ இந்தக் குமரனின் ஒரு நொடி உதாசீனத்தைக் கூட அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிகமாகப் பாதித்துத் தொலைத்தான். வார்த்தையில் கொட்ட முடியாத ஆதங்கத்தை விழிகளில் தேக்கி அனல் தெறிக்க அவனை உருத்து விழித்தாள் பெண். குமரன் எரிச்சல் மேலிட அவளைப் பார்த்தான்.

“பேசாம படு மனோ!” என்றவனுக்கு உத்தமமாய் அவளிடம் வாதிட மனநிலை இல்லை. ஏற்கனவே தங்கைப் படுத்தியபாட்டில் கோபமான மனநிலையில் இருந்தான். மேலும் இவளிடம் பேசினால், வார்த்தையை விட்டுவிடுவோம் என அவன் தழைந்து போனான். அவனது கைகள் தன்னியல்பாய்
படுக்கையை சரி செய்ய விழைந்தது. அதிலிருந்த பூவையெல்லாம் தட்டிக் கீழே உதறினான். ஆனால், மனோஹரிக்கு அப்படித் தோன்றவில்லை. இவன் தன்னுணர்வுகளை மதிக்கவில்லையோ என்ற எண்ணம் குமிழிட்டதும் மனதில் சுருக்கென்று வலி எழுந்தது.

அது கோபமாய்ப் பொங்க, அவனுக்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் நுழைந்தவள், “காலைல முகத்தை ஏன் அப்படி வச்சிருந்தீங்க?” என ஆதங்கமாய்க் கேட்டாள்.

“எப்படி வச்சிருந்தேன்!” குமரன் சீற, “பிடிக்காத கல்யாணத்துல பிடிச்சு உக்கார வச்ச மாதிரி முகத்தை வச்சிருந்தீங்களே!” என உதட்டைச் சுழித்தாள் மனோஹரி. காலையில் தன்னருகே நின்றவனின் வதனம் இப்போதும் கண்முன்னே தோன்றி மறைந்தது.

அவளை ஆழப்பார்த்தவன், “போடி…” எனத் தலையணையை எட்டி எடுக்க, “என் கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க!” என்று அவன் கையைப் பிடித்தாள். பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றொரு பாவனையும் தீவிரமும் பெண் முகத்தில்.

குமரனுக்கும் கோபம் தாறுமாறாகப் பொங்க, இழுத்துப் பிடித்தப் பொறுமையைப் பறக்கவிட்டவன், “ஆமா டி, பிடிக்காமதான் உக்கார்ந்து இருந்தேன். அதுக்கென்ன இப்போ?” என எரிச்சலாய்க் கேட்டு அவளது கையை உதற, மனோஹரி ஒரு நொடி தடுமாறிப் போயிருந்தாள். அருகிலிருந்த கட்டிலின் விளிம்பைப் பிடித்துத் தன்னை நிலைப்படுத்தியவளுக்கு அந்தப் பதிலில் அவன் முகத்திலிருந்த எரிச்சலில் ஒருநொடி நெஞ்சடைத்துப் போனது.

குமரனின், ‘பிடிக்கவில்லை!’ என்ற வார்ததையிலே மனம் தேங்கிவிட, அடிவயிற்றிலிருந்து சொல்ல முடியாத உணர்வு மேலெழும்பி அவளது சிந்தையைத் தடை செய்திருக்க, ஏனோ துடித்துப் போனாள் மனோஹரி.

“ஆமா! நான்தானே நீங்க வேணும் வேணும்னு உங்கப் பின்னாடியே வந்தேன்.‌ உங்களுக்கு நான் வேணாம் தானே?” எனக் கேட்டவளின் குரல் கமறிப் போனது. ஏற்கனவே நடந்தப் பிரச்சனைகளை மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தவள், அவன் பதிலில் மேலும் உடைந்து போனாள். ஏனோ யாருக்குமே பிடிக்காத திருமணத்தை தன்னுடைய விருப்பம் மட்டுமே பிரதானமாய் இருந்து தொலைத்த காதலுக்காக அத்தனை மெனக்கெடலுடன் இவனைக் கரம் பிடித்திருக்க, ஒரே வார்த்தையில் மொத்தத்தையும் உடைத்துவிட்டானே என குமரனைப் பார்த்தவளுக்கு, மனதில் சுமக்க முடியாத பாரம் அழுத்தியது.

‘இவனுக்கு தன்னைப் பிடிக்கவில்லை!’ என்ற வார்த்தையே அவளை உடைக்கப் போதுமானதாய் இருந்தது.

கழிவிரக்கமும் சுயபட்சாதாபமும் மேலிட்டதில் மனோஹரி விழிகள் தளும்ப குமரனைப் பார்க்க, அவனும் இவளைத்தான் பார்த்தான். அவன் முன்னே அழக்கூடாது என உதட்டைக் கடித்தாள்.

அவள் முகத்தைக் கண்டவனுக்கு தன் வார்த்தையின் வீரியம் உரைக்க, “ச்சு… ஏன் டி?” எனக் கேட்டு அருகே வர முயன்றவனின் முன்னே கையை நீட்டியவள், “பேசாதீங்க… நீங்க இப்போ பேசுனதே போதும்! மனசு நிறைஞ்சு போச்சு!” எனக் கோபமாய் உரைத்தவள், படுக்கையில் சென்று படுத்துவிட்டாள்.

மனம் ஆற மறுத்தது. ‘இவனுக்கு கோபம் வந்தால் கை நீட்டி அடிப்பான், தங்கைக்காக ஏற்றுக்கொண்டு என்னை எடுத்தெறிந்து பேசுவான்! கேட்டால் விருப்பமில்லாத திருமணம் எனக் கூறி மனதை உடைப்பான். அத்தனையும் கேட்டுக் கொண்டு அமைதியாய் இருக்க வேண்டுமோ?’ மனம் குமுறியது.

‘போடா… போ. நானாக உன் பின்னால் வருவதால் என்னுடைய அன்பு உனக்கு அற்பமாகப் போய்விட்டதோ? இனி எந்நிலையிலும் நான் இறங்கி வரத் தயாராய் இல்லை! இவனை விரும்பிய காரணத்திற்காக எந்த இடத்திலும் என் சுயமரியாதையை இழக்க முடியாது!’ என மனதிற்குள்ளே அழுத்தமாய் உரைத்தாள்.
குமரன் எதுவும் கூறாது அவளை வெறித்தவன், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான். ஏற்கனவே ஷெண்பா மூளையை அரித்துக்கொண்டிருக்க, இப்போது இவளும் சேர்ந்து கொண்டாள். இரண்டு பெண்களும் சேர்ந்து அவனது நிம்மிதியை மொத்தமாய் குலைத்துவிட்டிருந்தனர்.

வீட்டிற்கு வந்ததிலிருந்து அத்தனை முறை ஷெண்பாவிற்கு அழைப்பைவிடுத்து குறுஞ்செய்திகள் அனுப்பியிருக்க, அவள் அதற்கெல்லாம் எதிர்வினையாற்றவில்லை. சிறிது நேரத்தில் இவனது இலக்கத்தை கருப்பியிருந்தாள். விடா முயற்சியாய் குமரன் விக்ரமுக்கு அழைக்க, அவனிடமும் பதில் இல்லாது போனதில் எரிச்சல் மண்டிப் போனது. அந்நேரத்தில் வந்து மனோஹரி அதற்குத் தூபம் போடுவது போல பேசவும் வார்த்தையைவிட்டிருந்தான். மனதிலிருந்து எதையும் பேசவில்லை. என்னவோ இந்தப் பெண்ணிடம் மட்டும் அவனால் இயல்பாகப் பேச முடியவில்லை. என்னப் பேசினாலும் அது கடைசியில் சண்டைக்கு வித்திடுகிறதே என மனம் ஆற்றாமைப்பட்டது. தங்கை சற்றே மூளையிலிருந்து பின்னகர்ந்திருக்க, அருகிலிருக்கும் மனைவி இப்போது பிரதானமாய் தெரிந்தாள்.

மேடையில் அவள் தனக்காகத்தான் ஷெண்பாவிடம் அப்படி பேசினாள் என்பது மூளைக்கு உறைத்தாலும், மனது கேட்கவில்லை. விக்ரமையே ஷெண்பாவை ஒரு வார்த்தைப் பேச விடமாட்டான். அப்படியிருக்கையில் இவள் பேசவும் நொடி நேரக் கோபத்தில் கத்தியிருந்தான். பொறுமை என்னும் வார்த்தை இவளிடம் மட்டுமே எப்போதுமே இடறித் தொலைகிறது. ஏனோ இவளிடத்தில் மொத்தமும் தடுமாற்றம்தான்.

அமைதியாய் படுத்திருந்த மனோவின் விழிகளிலிருந்து வழிந்தக் உவர்நீர் தலையணை நனைத்தன. மனம் வலித்தது, குமரன் பேச்சில் அவளது சுயமரியாதையும் அடிபட்டுப் போனது போலொரு எண்ணம். தான் அத்தனை நேசித்த தந்தையை உதறித்தள்ளி, அவர் பேச்சை மீறி இவன்தான் வேண்டுமென வந்ததற்குத் தக்க சன்மானம் கொடுத்துவிட்டான் என ஆற்றாமை கண்ணீராய் வழிந்து தொலைத்தது.

‘தன்னுடைய அன்பு வெறும் ஒரு வழிப்பாதை தானா?’ என்ற எண்ணம் தோன்றி வதைக்க, மெல்லிய விசும்பல் இவளிடம்.
எதையும் வேண்டாம், இவன் மட்டுமே வேண்டுமென ஜெபம் செய்த காதல் மனது துவண்டு போயிருந்தது. இவ்வளவு நாட்கள் தன் குடும்பத்தாரிடம் போராடி அந்தப் போராட்டத்தில் ஒரு வழியாய் இவனைக் கரம் பிடித்தாகிற்று. அடுத்ததாய் இவனுடன் மீண்டுமொரு போரட்டமா? மனம் அதை எதிர்கொள்ள உடலில் திராணியில்லை எனக் கதறியது.

விழிகளை மூடி கைகளை தலைக்குமேல் வைத்துப் படுத்திருந்த குமரனின் செவிகளில் மனோ தேம்பியழுவது கேட்க, பெருமூச்சைவிட்டு எழுந்து விளக்கை உயிர்ப்பித்தவன் அவளருகே சென்று நின்றான்.

காலையில் தன்னை ஆசைத் ததும்ப, நேசம் பொங்கப் பார்த்தவள் இந்தப் பெண்தான் எனப் புத்திக்கு உறைக்க, “மனோ, அழறதை நிறுத்திட்டு முத கண்ணைத் தொறந்து என்னைப் பாரு டி!” என வலக்கரத்தை உயர்த்தி அவளது கன்னத்தைக் தட்டினான்.

அதில் விழிகளை மலர்த்தி அவனை முறைத்தவளின் முகம் உவர் நீரால் பிசுபிசுத்துப் போயிருந்தது. “பிடிக்காத பொண்டாட்டியை எதுக்கு தொட்டுப் பேசுறீங்க?” என அவன் கையை பலங்கொண்டு தட்டிவிட்டாள்.

error: Content is protected !!
Scroll to Top