என் உள்ளம் கேட்குமே – 15.2

‘நீங்க வேணாம்! எனக்கு நீங்க வேணாம்!’ எனத் திக்கித் திணறி முகம் பார்க்காது கூறி தான் அழைத்தப் போது வரமாட்டேன் என மறுத்தவளின் மீதிருந்தக் கோபத்தை இப்போது குரலில் கொட்டினான்.

ஏனோ தந்தையைக் காரணம் காட்டி தன்னைவிட்டுக் கொடுத்தவளை அத்தனை எளிதாக மனம் மன்னிக்கத் தயாராக இல்லை.

குமரன் பேச்சில் பாவனையில் அவனை உருத்துவிழித்தவள், “என்னை இத்தனை வருஷம் பெத்து வளர்த்து இன்னைக்கு வரைக்கும் நல்லா பார்த்துக்குற அந்த மனுஷனை எப்படி தூக்கிப் போட்டுட்டு வர சொல்றீங்க? ஹம்ம்… அன்னைக்கு நான் சொன்னதுதான். என் அப்பாவுக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும். அதுக்கு இடையில நீங்க வரக் கூடாது. நீங்க ரெண்டு பேருமே எனக்கு முக்கியம்!” என்றாள் அழுத்தமாய்.

“பெரிய அப்பா… அந்த மனுஷன்தான் பெத்த பொண்ணு செத்தாக் கூடப் பரவாயில்லைன்னு ஜாதி மயிரைத் தூக்கிப் பிடிச்சுட்டு நிக்கிறாரு!” குமரன் அன்றைய நிகழ்வின் சூடு குறையாமல் கோபத்தில் வார்த்தைகளை உமிழ்ந்தான்.

“என் அப்பாவைப் பத்தி உங்களுக்கென்ன தெரியும். ஒரு மகளா இன்னைக்கு வரைக்கும் என் விஷயத்துல எந்தக் குறையும் அவர் வச்சதில்லை. எல்லா அப்பாவும் உங்கப்பா மாதிரி இருக்க மாட்டாங்க! பெத்த புள்ளை பதினேழு வயசுல வெளியப் போய்க் கஷ்டப்பட்டதைப் பார்த்தும் சும்மா இருக்க!” என்றவளின் கன்னம் தீயாய் எரிய, ஒரு நொடி மனோஹரி ஸ்தம்பித்துப் போனாள். குமரன் கோபத்தைக் கட்டுப்படுத்தாது கைநீட்டியிருந்தான்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்துவிட்டாளே என்று கண்மண் தெரியாது கோபம் பிரவாகமாகப் பொங்க, இத்தனை நாட்கள் இழுத்துப் பிடித்த பொறுமை இன்று காற்றில் கரைந்திருந்தது. பொது வீதி என்றும் பாராது மனோவை அடித்துவிட்டான்.

அவன் அடித்த அடியிலே மனோஹரி சமைந்து போனாள். சில கணங்கள் பிடித்தது அவளுக்கு புறத்தூண்டல் உறைக்க. அவன் அடித்த அடியின் வீரியத்தில் புசுபுசுவென கன்னம் வீங்க, விழிகளில் நீர் உருண்டு திரண்டு நிற்க, அதை வெளியே வராது இமை சிமிட்டி அவனைப் பார்த்தவளின் பார்வையில் உஷ்ணம் பொங்கியது. ‘எப்படி நீ என்னைக் கைநீட்டி அடிக்கலாம்?’ என ஆதங்கமும் கோபமுமாய் அவனைப் பார்த்தாள்.

“இன்னொரு வார்த்தைப் பேசுன, சாவடிச்சுடுவேன் டி!” குமரன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

“ஏன் நீங்க என் அப்பாவைப் பத்தி பேசும்போது, நான் உங்கக் குடும்பத்தைப் பத்தி பேசக் கூடாதா? பேசுவேன்!” மனோஹரி அவன் கொடுத்த அடியிலிருந்து மீண்டு சீறினாள். எந்த எண்ணத்தில் இவன் என் மீது கைநீட்டினான் என்ற கோபம் தொண்டையை அடைத்தது.

“ச்சு… போடி!” என்றவன் கோபத்தைக் கட்டுப்படுத்தி தன் வாகனத்தை எடுத்துக்கொண்டு நகர, மனோ போகும் அவனை கோபமாய்ப் பார்த்தாள். இத்தனை நேரம் இமையைத் தொட்டுக் கொண்டிருந்த நீர் இப்போது கீழிமையில் படர்ந்து கன்னத்தை நனைக்க ஆரம்பித்தன.

பாதி தூரம் சென்ற குமரன் இப்போது நிதானத்திற்கு வந்திருந்தான். கோபத்தில் கை நீட்டியது தவறு எனப் புரிந்தாலும், அவள் பேசிய பேச்சுக்கள் இன்னுமே அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘என்னைப் பற்றி என்ன தெரியும் இவளுக்கு? அத்தனை எளிதில் வார்த்தைகளை வீசிவிட்டாளே!’ என்ற கோபம் தணியவில்லை. ஆனாலும் அவளை அப்படியே சாலையில்விட்டுச் செல்ல மனமும் இல்லை. ஒற்றையடிப் பாதைவேறு. நிதானமனம் சூழ்நிலையை எடுத்துரைக்க, புத்திக்கு கொஞ்சமாய் தன் செயலின் வீரியம் புரிந்தது.

‘இவளை விடவும் முடியாது அருகில் வைத்துக் கொள்ளவும் முடியாது போல!’ மனதிற்குள் பல்லைக் கடித்தவன் மீண்டும் மனோஹரியை நோக்கிச் செல்ல, அதே இடத்தில் அசையாது நின்றிருந்தாள்.

அவனைக் கண்டதும் ஏனோ இன்னும் விழி நீர் பொங்க, முகத்தை வேறுபுறம் திருப்பினாள் மனோ. குமரன் சில நொடிகள் அவளது வீங்கியிருந்த கன்னத்தை வெறித்தவன், “வண்டில ஏறுடி!” என்றான் அதட்டலாய்.

அந்தப் பேச்சு தன்னை அடையவில்லை என்பது போல அவள் நிற்க, “மனோ, உன்கிட்டதான் பேசுறேன்!” என்றான் குமரன். குரல் உயர்ந்திருந்தது.

“ஏன், மறுபடியும் கூட்டீட்டுப் போய் இந்தக் கன்னத்துலயும் அடிக்கிறதுக்கா?” இவள் குரல் சீறலாய் வந்தது. இன்னுமே அவன் அடித்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குமரன் எதுவும் பேசாது அவளை வெறிக்க,

“எந்த எண்ணத்துல நீங்க கைநீட்டி அடிச்சீங்க? நீங்கதான் வேணும்னு பின்னாடியே வர்றதால வந்த எளக்காரமா? இல்ல, என்னைப் பெத்த அப்பா, அம்மா உங்க முன்னாடியே என்னை அடிச்சதால வந்த அலட்சியமா? எவ்வளோ சொல்லியும் நீங்கதான் வேணும்னு நான் வந்தேன் இல்ல? அதுக்கு நீங்க கொடுத்தப் பரிசு ரொம்ப நல்லா இருக்கு!” என்ற மனோஹரியின் குரல் கமறிப் போனது. ஏனோ குமரன் கைநீட்டி அடித்ததை அவளால் இந்நொடி கூட நம்ப இயலவில்லை. கன்னத்தின் காயத்தை விட மனதில் அப்படியொரு வலி எழுந்தது.

‘ஆண் என்ற அகம்பாவத்தில் கை நீட்டி விட்டானா?’ என மூளை விழித்தெழுந்து கேள்வியெழுப்பியது. அந்த கசங்கிய முகத்தையும் பாவனையும் உளவாங்கிய குமரன், “நீ பேசுனது சரியா மனோ, என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசணும்…” என அழுத்திக் கூற, “ஓஹோ… அப்போ என் அப்பாவை நீங்கப் பேசுனப்போ நல்லா யோசிச்சுதானே பேசுனீங்க? நான்தான் தப்பா பேசிட்டேன் இல்ல?” எக்களிப்புடன் கேட்டாள்.

குமரன் அதில் அவளை முறைக்க,‘போடா… போ!’ என்றொரு பார்வை பார்த்தவள், நடக்க ஆரம்பித்தாள். ஒற்றையடிப் பாதையைக் கடந்து பிரதான சாலையில் நுழைந்தவள், ஒரு தானியிலேறி மருத்துவமனைக்குச் சென்றாள். அவளையே பார்த்திருந்தவன் பெருமூச்செறிந்துவிட்டு கிளம்பிச் சென்றான்.

வேலைக்குச் செல்லும் மனநிலை முற்றிலும் இல்லையெனினும் இந்தக் காயத்தோடு வீடு சென்றால் என்ன ஆகிற்று என அத்தனைக் கேள்வி வரும். அதையெல்லாம் சமாளிக்க முடியாது. அதுவுமின்றி கோவிந்தனுக்கு ஆண்பிள்ளைகள் பெண்களின் மீது கைநீட்டுவது அறவே பிடிக்காது. ஹரி சிறுவயதில் இவளை அடித்தால் கூட, அவனை திட்டுவார். அப்படியிருக்கையில் கன்னத்தில் காயத்தோடு சென்று நின்றால், திருமணத்தை நிறுத்தக் கூட தயங்க மாட்டார் எனத் தோன்ற, வேறு வழியின்றி மருத்துவமனைக்கு விரைந்திருந்தாள்.

கன்னத்தில் இருந்த தடயத்தை பனிக்கட்டியை வைத்து ஓரளவிற்கு சரிசெய்து மாலை வீட்டிற்கு சென்றாள். கல்யாண பரபரப்பில் ஒருவரும் இவளைக் கண்டு கொள்ளாது விட்டுவிட, நிம்மதி பிறந்தது.‌ அப்படியும் அக்ஷயா கவனித்துவிட்டு என்னவென வினவ, இவள் சமாளித்துவிட்டாள்.

ராதாமணி மகளின் திருமண ஏற்பாட்டில் அத்தனை முனைப்புடன் இருந்தார். பத்திரிக்கை அச்சடிக்க கொடுப்பது, உடை, அணிகலன்கள் எடுப்பது என நாட்கள் உருண்டோடின.

இருவீட்டினருக்கும் சேர்த்து ஒரே பத்திரிக்கை அடித்துவிட, திவாகர் சென்று சிந்துவிடம் பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு வந்தான்.

பின்னர் இருவீட்டினரும் திருமணத்திற்கு உறவுக்காரர்களை அழைக்கத் தொடங்கினர். கோவிந்தனும் வனிதாவும் ஒரு பக்க உறவினரை அழைக்க, ராதாவும் திவாகரும் மற்ற சாரரை அழைக்கச் சென்றனர்.

மைதிலியும் லோகேஷூம் திருமணத்திற்கு மண்டபம் பார்ப்பது, சமையலுக்கு ஆட்களை நியமிப்பது என தங்களுக்கென்று வேலையை ஒதுக்கிக் கொண்டனர். ஹரி திவாகருடன் இணைந்து அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தான். வேலையைப் பிரித்துக் கொண்டதில் ஓரளவிற்கு அது எளிமையாக இருக்க, அனைத்தும் சிறப்பாய் நடந்து கொண்டிருந்தன.

மனோஹரி மறுவாரத்திலிருந்து மருத்துவமனையில் விடுப்பைக் கேட்டு வாங்கியிருந்தாள். அவளது திருமண விஷயம் கேள்விப்பட்டு சக ஊழியர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க, புன்னகையுடன் நன்றி கூறி விடை பெற்றாள். திருமணம் முடிந்து வேலைக்கு வருவது போல பத்து நாட்களுக்கு மேலே விடுப்பைக் கேட்டு வாங்கியிருந்தாள். வீட்டில் மைதிலியின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள, செபாவுடன் பேச என அவளுக்கும் நேரம் பறந்தது.

அன்றைய சந்திப்பிற்கு பிறகு இருவரும் பார்த்துக்கொள்ளவே இல்லை. அமைந்த சந்தர்பத்தை கூட இவளாகத் தட்டிவிட்டிருந்தாள். குமரன் அடித்த அடியின் காயம் மறைந்திருந்தாலும், மனதில் இன்னும் அதன் தாக்கம் கடுகளவு கூட குறையவில்லை.

error: Content is protected !!
Scroll to Top