அவன் அடித்ததை அவ்வளவு எளிதில் அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்போது மீண்டும் சந்திக்க நேர்ந்தால் வார்த்தைகளைக் கொட்டிவிடுவோம் எனப் புரிந்து, இந்த சூழ்நிலையில் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என அமைதியைக் கடைபிடித்தாள்.
இருந்தும் இதை அப்படியே விட்டுவிடும் எண்ணமில்லை. திருமணம் முடிந்து பார்த்துக் கொள்ளலாம் என தற்போதைய திருமண சூழ்நிலையில் லயித்துப் போனாள். ரங்கா எதிலும் தலையிடவில்லை என்ற குறையத் தவிர பெரிதாய் எந்தக் குறையும் திவாகர் வைக்கவில்லை. அவளுக்கு என்னென்ன வேண்டும் எனப் பார்த்து பார்த்து செய்தான். அவனது அன்பில் மனோஹரி திக்குமுக்காடிப் போனாள்.
ஏனோ தந்தையின் தலையீடு இல்லயென தங்கை எங்கும் வருந்திவிடக் கூடாது என திவா அவளது முகம் பார்த்து அனைத்தும் செய்ய, இவளுக்கு கண்கள் கலங்கிப் போனது. சிறு வயதிலிருந்தே திவாகருக்கு மனோ மீது அத்தனைப் பிரியம். ஆனால், அதையெல்லாம் பெரிதாய் வெளிப்படுத்த
மாட்டான். இப்போது இந்தக் அக்கறையில் இவளுக்கு நெஞ்சம் நனைந்து போனது.
ராதா முன்பே நிச்சயம் வேண்டாம் நேரடியாய் திருமணத்தை நடத்திவிடலாம் என சிந்துவிடம் பேச, அவரும் சரியென்றுவிட்டார். நிச்சயத்திற்கும் சேர்த்து திருமணத்தை சிறப்பாக செய்திட வேண்டும் என முடிவெடுத்து, அதன்படி அனைத்தையும் செய்தனர்.
ஊரிலுள்ள அத்தனைப் பேருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. ராதா செல்லுமிடமெல்லாம் ரங்காவை முன்னிருத்திக் கேள்விகள் எழ, முதலில் தடுமாறியவர் பின் கணவருக்கு வேலைகள் அதிகம் இருப்பதால் அவரால் வர இயலாது போய்விட்டது, அதனாலே மகன் முன்னிருந்து அனைத்தையும் கவனித்துக் கொள்வதாக அனைவரிடமும் ஒரே மாதிரி உரைத்துவிட்டார்.
அடுத்ததாய் குமரனின் ஜாதிப் பற்றியும் அவனுடைய பொருளாதார நிலைப்பற்றியும், சொக்கநாதன் மகனுக்கு எப்படி ரங்கா பொண்ணைத் தர சம்மதித்தார்? என்பதைப் பற்றியும் ஒருவர் விடாது கேள்விகளால் துளைக்க, நிறைய இடங்களில் திக்குமுக்காடிப் போனார். பதில் சொல்லாது விடமாட்டார்கள் என்பது புரிய, மகளின் விருப்பமே எங்களுக்குப் பெரிது, அவள் நன்றாய் வாழ்ந்தால் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி என முடித்துவிட்டார். இன்னும் சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்படாமல் இல்லை. அனைத்தையும் சமயோகிதமாய் பேசி சரிகட்டியிருந்தார் ராதா.
திருமணநாள் அத்தனை மகிழ்ச்சியாக விடிந்திருந்தது. காலையிலே மனோஹரி குளித்துமுடித்து பட்டு சேலை உடுத்தி கண்ணாடி முன்பு அமரவைக்கப்பட்டிருந்தாள். செபாவும் அக்ஷயாவும் அவளை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.
“அக்கா, ஏற்கனவே நீ அழகு. இப்போ மேக்கப் போட்டதும் ரொம்ப அழகா இருக்க!” அக்ஷயா இவளது கன்னத்தைக் கிள்ளவும், மனோ மெலிதாய்ப் புன்னகைத்தாள். மனம் தந்தையைச் சுற்றி வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னே தொழில் நிமித்தம் வெளியூர் செல்வதாகக் கூறி அவர் கிளம்ப, இவள் அவரை மறைத்தவாறு நின்றாள்.
“அப்பா, ப்ளீஸ் பா... எனக்காக ஒரு பத்து நிமிஷம் கல்யாணத்துல வந்து நின்னுட்டு கிளம்புங்கப்பா! உங்களோட ஆசிர்வாதம் எனக்கு வேணும் பா!” விழிகள் தளும்ப இறைஞ்சினாள்.
அவளை ஒரு பார்வைப் பாரத்த ரங்கா, “அதான் என் பேச்சை மீறணும்னு முடிவு பண்ணீட்டிங்க. அப்புறம் என்ன என்னோட ஆசிர்வாதம் வேணும் உனக்கு!” என முறைப்பாய்க் கூறியவரின் கைகள் ஒரு நொடி உயர்ந்து மகளின் தலையைத் தடவிப் போனது. குரலிலிருந்த கடுமை இல்லை அந்த ஸ்பரிசம் அவளை வருடிப் போனது.
“அப்பா…” என அவர் கையைப் பிடித்தாள் மகள்.
“எங்க இருந்தாலும் நல்லா இரு மனோ. என்னால அங்க வந்து நிக்க முடியாது!” என்றவர் வெளியேறிவிட்டர்.
“இருந்தாலும் இந்த மனுஷனுக்கு இவ்வளோ ஆகக் கூடாது. பெத்தப் புள்ளையைவிட வைராக்கியம் பெருசா போச்சுல்ல!” ராதாமணியின் வாய் ஓயாது கணவரை வசைபாடத் தவறவில்லை. மனோ நடந்ததை நினைத்துப் பார்க்க, “அக்கா! அக்கா… என்ன யோசிச்சுட்டு இருக்க?” என அக்ஷயா இருமுறை அழைத்தப் பின்பே அவளுக்கு புறத்தூண்டல் உறைத்தது.
“என்ன அக்ஷூ?” இவள் வினவ,
“தம்பி உன்கிட்ட வரேன்னு சொன்னான். நீ பார்க்கவேயில்லை!” சின்னவள் குறைபட, ஹரியின் மகன் இவளிடம் தாவ கையை நீட்டினான்.
“தேஜூ குட்டி!” எனக் குழந்தையை வாங்கி முத்தமிட்டாள். அவன் இவளது முடியை பிடித்திழுத்து, கன்னத்தை எச்சில் செய்ய முயன்றான்.
“மனோ, குழந்தையைத் தூக்காத. சேலை கசங்கிடும் டி! கல்யாணம் முடியிற வரை கொஞ்சம் மேக்கப் கலையாம இருந்தாதான் நல்லா இருக்கும்…” என்ற மைதிலி குழந்தையை வாங்கிக்கொண்டு சென்று செபாவிடம் கொடுத்தாள்.
“நேரமாச்சு, எல்லாரும் கிளம்பலாம்!” என ராதா அனைவரையும் விரட்டினார்.
மகளின் முகத்தைப் பார்த்தவர், “மனோ, இது உன்னோட கல்யாணம். யாருக்கோன்ற மாதிரி முகத்தை வச்சிருக்க நீ. வைராக்கியம்தான் பெருசுன்னு போன மனுஷனுக்காக நீ இவ்ளோ படணும்னு ஒன்னும் அவசியம் இல்ல!” என அதட்டியபடி கதவைப் பூட்டினார்.
சிறிது நேரத்திலே அனைவரும் மண்டபத்தை அடைந்தனர். வெளியே வண்ண வண்ண பதாகைகள் தொங்கிக் கொண்டிருக்க, உறவினர்கள் வருகைத்தர ஆரம்பித்திருந்தனர்.
மனோவுடன் அக்ஷயாவும் மணப்பெண் அறையில் அமர்ந்து கொள்ள மற்றவர்கள் உறவினர்களைக் கவனிக்க ஆரம்பித்தனர்.
ராதாமணி கணவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப படாதபாடுபட வேண்டியதாய் இருந்தது. வந்திருந்த உறவினர்கள் அனைவருமே ரங்காவை விசாரிக்க, “அவர் உள்ள இருக்காரு… சமையல் நல்லா இருக்கான்னுப் பார்க்க அங்கப் போய்ருக்காரு… இதோ இப்பதான் கடைக்குப் போனாரு!” என தற்காலிக பொய்யை உரைத்து சமாளித்தார். திவாகருக்கே தாயைப் பார்த்து பரிதாபம் மேலிட, தந்தையின் மீது கோபம் வந்தது.
“ம்மா, என்ன மா?” இவன் வினவ,“விடு திவா, என்னைக் கட்டுன மனுஷன் சரியில்லை. அதுக்காக அவரை விட்டுக்கொடுக்கவும் முடியலை. போ, ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்றாங்க. நான் ஒரே ஒரு பொய்தானே சொல்றேன். விடு பார்த்துக்கலாம்…” என்றவரின் குரலில் கணவரின் மீதான அதிருப்தி தெறித்தது. இருந்தும் முகத்தை சிரித்தது போல வைத்துக்கொண்டு வருபவர்களை உபசரிக்க ஆரம்பித்தார்.
குமரனும் சிந்துவும் வந்துவிட, அவர்களுடன் உறவினர்கள் சிலரும் வந்திறங்கினர். திவாகர் சென்று அவர்களை வரவேற்று, குமரனை மணமகன் அறையில் அமரவைத்துவிட்டு வந்தான்.
நேரம் செல்ல ஐயர் மணமக்களை மேடையில் அமர வைத்து மந்திரங்களை ஓத ஆரம்பிக்க, அனைவரும் உள்ளே வந்துவிட்டிருந்தனர்.
குடும்பத்து உறவினர்கள் மேடையில் நிற்க, மற்றவர்கள் கீழே நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.
மனோ குமரனருகில் வந்து அமர்ந்ததிலிருந்து அவனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. தந்தை இல்லையென்ற வருத்தம் ஒருபுறமும் அவனின் மீதான கோபம் ஒருபுறமிருக்க, முகம் வாடியிருந்தது. குமரனும் முகத்தை இறுக்கமாகத்தான் வைத்திருந்தான்.
“இந்தாங்கோ, பொண்ணு கழுத்துல மாங்கல்யத்தைக் கட்டுங்க மாப்பிள்ளை!” என ஐயர் தாலியைக் குமரன் கையில் கொடுக்க, அதை வாங்கியவன் மனோஹரியின் முகத்தை அப்போதுதான் பார்த்தான். அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் பெண். அந்த முகத்தை மனதில் ஆழப்பதிந்தவாறு அவளது கழுத்தில் இரண்டு முடிச்சை இட்டவனின் மனம் வாழ்வின் எந்தக் கணத்திலும் அவளைக் கைவிட்டுவிடக் கூடாது என எண்ண, அவன் கையை ஓங்கித் தட்டிவிட்ட மற்றொரு ஜோடிக் கைகள் நாத்தனார் முடிச்சைப் போட்டன.
குமரன் எதிர்பார்ப்பாய் நிமிர, விழிகளில் மெல்லிய நீர்ப்படலத்துடன் அவனை முறைத்தவாறு மூன்றாவது முடிச்சையிட்டு நிமிர்ந்தாள் ஷெண்பா. இத்தனை நேரமிருந்த இறுக்கம் அவனிடம் விடை பெற்றிருக்க, அவளருகே யாருக்கு வந்த விருந்தோ என்பது போல விக்ரம் நின்னிருந்தான். குமரன் பார்வையை உணர்ந்தவன், முகத்தைத் திருப்பிக்கொள்ள இவனது இதழ்களில் மென்னகை. தனக்காகவென அனைத்தையும் மறந்து, மன்னித்து வந்திருந்த இந்த இரண்டு உள்ளங்கள் அவனை நிறைக்கப் போதுமாய் இருந்தன. முகத்தில் ஒரு நிறைவு தானாய் அமர்ந்தது.
தன் கழுத்திலேறிய மாங்கல்யத்தைப் பார்த்த மனோவுக்கு விழிகள் கலங்கின. ராதா குனிந்து மகளின் மாலையை சரிசெய்துவிட, குமரன் அவளது நெற்றியில் குங்குமத்தை இட்டான். அவனது விழிகளை ஆழப்பார்த்தவாறு மனோ பார்வையைத் திருப்ப, கூட்டத்தில் ரங்கா நின்றிருந்தார். தன் கற்பனையோ என எண்ணி இவள் விழிகளை சிமிட்டிவிட்டுப் பார்க்க, அவரது உருவம் மறையவே இல்லை என்றதும் நொடியில் இவளுக்கு விழிகள் வேகவேகமாய் நனைந்தன.
உள்ளம் கேட்கும்…