பத்து நிமிடத்தில் விடுப்புக் கூறிவிட்டு மனோ வர, இருவரும் வீட்டை நோக்கிப் பயணித்தனர். இவளது கை அவனது தோளில் பதிந்திருந்தது. இல்லை என்றால் வாகனத்தை இயக்கமாட்டேனே என்று கரத்தை அவன் மீது வைத்தாலும், இவளுக்குள்ளே ஏதோ விவரிக்க முடியா உணர்வு பிறந்தது. இத்தனை நாட்கள் வேறு, இப்போது இவனுக்கு நான் வேறு என்ற எண்ணம் மனதில் மகிழ்ச்சியைப் பரவச் செய்தது.
வரும்போது தன்னுடைய இருசக்கர வாகனத்தை மருத்துவமனையிலே
வைத்துப் பூட்டிவிட்டாள்.
குமரன் அந்த சிறிய வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான். மனோஹரி முதன்முதலாக அவனுடைய வீட்டிற்கு வருகிறாள். வெளியே ஒரு சிறுதிண்ணை இருந்தது. பூஞ்சாய நிறம் பூசபட்ட வீட்டின் முன்பு கொன்றை மரமொன்றில் மஞ்சள் கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்கின.
இவளைப் பார்த்து தலையை அசைத்த குமரன், உள்ளே நுழைய மனோவும் நுழைந்தாள். சிந்து கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“வா டா…” என்றவரின் பார்வை மகனுடன் உள்ளே நுழையும் பெண்ணைக் கண்டதும் நின்று போனது.
மறுநொடி தன்னை சுதாகரித்தவர், “வாம்மா… உள்ள வா!” எனப் புன்னகைத்தார். மனோ ஓரிரு முறை அவரைக் கண்டிருக்கிறாள். ஆனால், பேச முனைந்தது இல்லை. அவசியமும் ஏற்படவில்லை என்பதே உண்மை.
சிந்துவுக்கு தன் மகனுடன் ஒரு பெண் வந்திருக்கிறாள் என்ற ஆச்சர்யம் மேவியிருந்தது. மனோவை சுத்தமாய் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. சிறு வயதில் பார்த்திருக்கிறார், அவ்வளவுதான். பெரிதாய் பரிட்சயம் இல்லை. அதனால் அவருக்கு அவளை இனம்காண முடியவில்லை.
மனோவின் விழிகள் வீட்டை அளவெடுத்தன. சிறிய கூடம், அதில் தொலைக்காட்சி பெட்டி, மற்றும் மேஜை இதரப் பொருட்கள் இருந்தன. இரண்டு அறைகள், அதையொட்டிய சிறிய பூஜை அறை, வலதுபுறமாகச் சிறிய சமையல் அறை. அளவாய் அழகாய் இருந்தது வீடு. அதைவிட குமரன் சுயமாய்க் கட்டிய இந்தக் கூடு கூட அவளுக்கு அத்தனைப் பிடித்தது. தங்கள் வீட்டை ஒப்பிடும்போது இது மிக மிகச் சிறியது. இப்போது ஏன் அவன் அப்படி கேட்டான் என்பது இவளுக்குப் புரிந்தது. குமரனின் பார்வையும் அவளது எண்ணத்தை உள்வாங்கியது.
“உட்காரு மா, நீயும் உட்காரு குமரா!” என்ற சிந்து இருவருக்கும் இருக்கையைக் காண்பித்தார்.
“இல்ல இருக்கட்டும் அத்த!” இவள் மறுப்பாய்ப் புன்னகையுடன் தலையை அசைத்தாள். அவளது அத்தை என்ற விளிப்பில் இவரது சுருங்கிய நெற்றி மேலும் யோசனையாய் சுருங்கின.
குமரன் அவரைத்தான் பார்த்திருந்தான். நெற்றி சுருக்கத்திற்கு பதிலளிப்பது போல, “ம்மா, இது மனோஹரி. என் முதலாளியோட பொண்ணு. அப்புறம் நம்ம வீட்டு மருமக கூட!” என்று இயல்பாய்க் கூற, இரண்டு பெண்களுக்குமே அதிர்ச்சிதான்.
‘இன்னும் இவர் அம்மாவிடம் தன்னைப் பற்றி கூறவில்லையா?’ மனோ அதிர்ந்து அவனை முறைத்தாள்.
சிந்து மகன் கூறியதின் சாரம்சம் உணர்ந்தவர், “குமரா… என்ன டா சொல்ற?” என ஏகமாய் அதிர்ந்தார்.
அவரருகே சென்றவன், “ஆமா மா, இவளை எனக்குப் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணணும்னு விருப்பப்பட்றேன்!” என்று அவரது முகத்தைப் பார்த்தான். சிந்து மகனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவர், “அந்தப் பொண்ணு வீட்ல சம்மதம் சொல்லிட்டாங்களா?” என அழுத்தமாய்க் கேட்டார்.
“சம்மதம் சொல்லுவாங்க மா.. இப்போ உங்களோட சம்மதம்தான் முக்கியம். உங்களுக்கு இந்தப் பொண்ணை பிடிச்சிருக்கா? நீங்க சொல்லுங்க!” என்றவனின் பேச்சு அசட்டையாய் இருந்தது. உங்களுடைய விருப்பமே பிரதானம் என்ற எண்ணம் அவனது பேச்சில் தெறித்தது.
“குமரா, முதல்ல அந்தப் பொண்ணை வீட்ல விட்டுட்டு வா! அவங்க வீட்ல சம்மதம் சொல்லட்டும். உன்னோட ஆசைக்கு நான் எந்த வகையிலும் தடை சொல்ல மாட்டேன். இப்போ அவளைக் கூட்டீட்டுப் போ!” என்றவருக்குப் பெண்ணை பெற்றவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என நிமிடத்தில் யூகிக்க முடிந்தது.
“ம்மா, உங்களோட விருப்பத்தை சொல்லுங்க!” குமரன் அடமாய் நிற்க, “குமரா, அவளைக் கூட்டீட்டுப் போய் வீட்ல விட்டுட்டு வர்ற!” என குரலை உயர்த்தி சிந்து அதட்டலிடவும், இவன் முகம் கடுவன் பூனை போலானது. எதுவுமே பேசாது விறுவிறுவென வெளியேறியிருந்தான்.
மனோ நடப்பதை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். யாருக்கும் அடங்காத குமரன் இந்த தாய்ப் பசுவிடம் அடிபணிந்து செல்வது அத்தனை அழகாய் இருந்தது. அவன் முகம் போன போக்கில் இவளுக்குப் புன்னகை அரும்பியது.