என் உள்ளம் கேட்குமே – 11.2

தாங்கள் உயர்ஜாதியிலிருக்கும் போது மனோ தாழ்ந்த ஜாதியில் ஒருவரனைக் கரம் பிடிப்பதா என்ற ஆதங்கமும் கோபமும்தான் காரணம். ஆனால், மூன்று நாட்கள் முன்பு கண்ட மகளின் தோற்றத்தில் மனதில் குவிந்திருந்த சாக்கடை எண்ணமெல்லாம் தூய நீர் அடித்துச் சென்றிருந்தது. அவளது உயிருக்கு முன்னே அனைத்தும் துச்சமாகிப் போயிருந்தன. இனி எது நடந்தாலும் கணவர் பார்த்துக் கொள்ளட்டும். அவரது முடிவு எதுவாயிருந்தாலும் பரவாயில்லை என தன்னிலையிலிருந்து பெண்மணி இறங்கி வந்திருந்தார்.

‘உயிருக்கு மதிப்புக் கொடுத்தால் தானே வாழ்க்கை. அந்த உயிரே இல்லாது போனால், வாழ்ந்தென்ன பயன்?’ என எண்ணி மற்ற எண்ணங்களைக் கிடப்பில் போட்டுவிட்டார்.

காலை கண்விழித்த மனோவின் தலையை ஒரு கரம் தடவிக் கொண்டிருந்ததது. ராதாமணியின் வருடல்தான் என உணர்ந்தவள், அப்படியே எட்டி தலையைத் தாயின் மடியில் வைத்தாள். நான்கு நாட்களும் தாய்க்கும் மகளுக்குமிடையில் பெரிதாய் பேச்சு வார்த்தை இல்லை. இருவருக்கும் இடையில் முகாமிட்டிருந்தப் பிணக்குகள் அப்படியே இருந்தாலும் அன்பெனும் வேலி அவர்களைப் பிணைத்திருந்தது.

“ம்மா, நான் ஹாஸ்பிடல் போறேன். நிறைய அப்பாயின்மெண்ட்ஸ் பெண்டிங்ல இருக்கு!” என இவள் கூற, அவர்
“சரி, நீ கிளம்பு மனோ!” என்றுவிட்டு சமையலைக் கவனிக்கச் சென்றார்.

அவள் குளித்து முடித்து தயாராகி வெளியேவர, ராதா சமைத்து முடித்திருந்தார். இவள் உண்டு முடிய மதியத்திற்கும் உணவை டப்பாவில் அடைத்து அவளது கைப்பையில் திணித்தார்.

“மனோ, ஸ்கூட்டில போக வேணாம். நானே ட்ராப் பண்றேன்!” என திவாகர் வந்து நிற்க, “திவா, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. ஐ யம் பெர்பெக்ட்லி ஆல்ரைட். என்னை பேஷண்ட் மாதிரி ட்ரீட் பண்ணாத டா. நான் ஸ்கூட்டில போய்ட்டு வரேன்!” என நீண்ட நாட்களுக்குப் பின்னான மலர்ந்த புன்னகையுடன் மனோ கூறவும், திவாருக்கு அப்படியொரு நிம்மதி மனதில் பிறந்தது.

“பத்திரமா போய்ட்டு வா. எதுனாலும் எனக்குக் கால் பண்ணு!” அவன் பதிலளிக்க, தங்கை விடைபெற்றாள்.

நீண்ட நெடிய நாட்களுக்குப் பின்னர் வீட்டிலிருந்து உவகையான மனநிலையில் மருத்துவமனைக்குக் கிளம்பினாள் மனோஹரி.

நான்கு நாட்கள் விடுமுறை எடுத்ததற்கும் சேர்த்து வேலை இருக்கும் என இவள் நினைக்க, அத்தனை பணிச்சுமை இல்லை. உடன் பணிபுரியும் பெண் ஒருவர் வேலையைப் பகிர்ந்தளித்ததில் இவளுக்கு சுமை குறைந்திருந்தது. அதற்கொரு நன்றியை அவளிடம் நவில்ந்திருந்தாள்.

கடைசி நோயாளியைப் பார்த்து அனுப்பியவள் நேரத்தைப் பார்க்க, மதிய உணவு நேரம் நெருங்கியிருந்தது. சாப்பிடலாம் என மனோ கையைக் கழுவிவிட்டு வர, “மேம், உங்களைப் பார்க்க சார் வந்திருக்காரு!” என வரவேற்பாளினி உரைக்கவும், இவளது முகம் யோசனையாய் சுருங்கியது.

“இந்த நேரத்துல யாரு மாலினி?” பெண் கேட்க, “உங்களைப் பிக்கப் அண்ட் ட்ராப் பண்ணுவாரே, அவர்தான் வந்திருக்கது மேம்!” என மாலினி பதிலளிக்கவும், மனோஹரி பட்டென அமர்ந்த இடத்திலிருந்து எழுந்துவிட்டாள்.

“நீங்க போங்க, நான் பேசிக்கிறேன்…” என்ற மனோவுக்கு இந்நேரத்தில் குமரன் வரக்காரணம் என்னவென்ற கேள்வி எழுந்தது. ஏதும் பிரச்சனையாக இருக்கக் கூடுமோ? எனப் படபடப்புடன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

தன்னை நோக்கிவரும் மனோஹரியைத்தான் பார்த்திருந்தான் குமரன். முகம், கழுத்து, கை என முழுவதுமாக ஒரு நொடி அவனது பார்வை பாவயைக் கூறு போட்டிருந்தது.
நான்கு நாட்களுக்கு முன்னே பார்த்திருந்த ஓய்ந்த தோற்றம் இப்போது மறைந்திருந்தது. முகத்தில் தெளிவு பிறந்திருக்க, இயல்புக்கு வந்துவிட்டாள் என்பதை உணர்ந்தான்.

அருகே வந்தவள், “என்னாச்சு, இந்த நேரத்துல ஏன் வந்திருக்கீங்க?” என குரலில் படபடப்பு மேவ வினவினாள். குமரனின் செவியில் அவை விழுந்தாலும் அவனது விழிகள் அவள் கழுத்தில் அணிந்திருந்த கழுத்தணியில் நிலைத்தன. முருகன் உருவமிருந்த டாலர் கழுத்தில் மின்ன, இப்போதுதான் அது இவன் கருத்தில் பதிந்தது. முருகனையும் குமரனையும் மனம் தன் போல இணைத்துப் பாலமிட, எப்போது இவள் இதை அணிந்தாள் என யோசனை கடந்தக் காலத்தை சமீபித்தது.

நினைவில் எங்கோ ஒரு மூலையில் பதிந்திருக்க, முதல் மாத சம்பளத்தில் வாங்கிய கழுத்தணி இது என மனம் உறைத்தது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் இதை மனோ அணிந்திருக்கிறாள் என சிந்தை உரைக்க, தன் மீதான பிடித்தம் எப்போது உண்டானது என்ற கேள்வி ஆடவனுக்குத் தொக்கி நின்றது.

தன் கேள்விக்குப் பதிலளிக்காது என்னப் பார்க்கிறான் இவன் என்ற மனோ அவன் பார்வை புறம் திரும்ப, அவள் கழுத்தைதான் குறுகுறுவென பார்த்தான். அதில் ஒரு நொடி அதிர்ந்தவளின் முகம் லேசாய் செம்மைப் படர தொடங்க, “என்ன, எதுக்காக வந்தீங்க?” என திக்கித் திணறலாய்க் கேட்டு முகத்தை வேறுபுறம் திருப்பினாள். முதன் முதலில் மனதிற்குள் அப்படியொரு படபடப்பும் குறுகுறுப்பும் பிறந்தது. அதெல்லாம் குமரனின் பார்வையில் அகப்படவில்லை.

சிந்தனையிலிருந்து கலைந்து, “உன்னைப் பார்க்கலாம்னுதான் வந்தேன்!” என்றவனின் பதிலில் மனோ முகம் புரியாத பாவனையைக் காட்டியது.

“என்னை இந்த நேரத்துல எதுக்காகப் பார்க்கணும்?” மனோ யோசனையாய் வினவ,

“இல்லை, எப்படி இருக்கன்னு பார்க்கலாம்னு வந்தேன். சரி கிளம்பு, வீடு வரைக்கும் போய்ட்டு வரலாம்!” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் மனோ.

“வீட்டுக்கா, என்ன… எதுக்கு திடீர்னு?” இவள் குரலில் ஏகத் தயக்கம்.

“அம்மாவைப் பார்த்துட்டு வரலாம். பெர்மிஷன் போட்டுட்டு கிளம்பு!” என்றவன் அவ்வளவுதான் பேச்சு என்பது போல இருக்கையில் அமர்ந்துவிட, மனோ அவனை முறைத்துப் பார்த்தவள், குனிந்து தன்னைப் பார்த்தாள்.

துமிர நிறத்திலொரு சுரிதார் அணிந்திருந்தாள். பெரிதாய் ஒப்பனை எதுவும் செய்யவில்லை. முன்பே கூறியிருந்தால் சேலை அணிந்து வந்திருக்கலாம் எனத் தோன்றாமல் இல்லை. இப்படி திடீரென அழைக்கிறானே என ஒரு நொடி அவனை முறைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள். அவள் பார்வை உணர்ந்தாலும் இவன் சட்டை செய்யவில்லை.

error: Content is protected !!
Scroll to Top